அண்ணாமலையின் படாடோப பாதயாத்திரை!

-சாவித்திரி கண்ணன்

அதிகார பலம், பணபலம் பெரும் நிதி திரட்டலையும், மக்கள் கூட்டத்தை விலைபேசி அள்ளி வருவதையும் சாத்தியப்படுத்துகிறது! அந்தந்த பகுதி சாதி முக்கியஸ்தர்களை அழைத்து மேடையேற்றுவது அரங்கேறுகிறது… அண்ணாமலையின் பாதயாத்திரையில் நடப்பவை என்ன? இந்த பாதயாத்திரை பாஜகவிற்கு பலனளிக்குமா..?

தமிழகத்தில் எப்படியாவது அதிகாரத்திற்கு வர வேண்டும் என பாஜக பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 110 நாள் பாத யாத்திரை திட்டத்தை அறிவித்து நடந்து வருகிறார். ஜுலை 28 தொடங்கி அவ்வவப்போது இடைவெளிகள் விட்டு ஜனவரி 11ல் முடிவது போல திட்டமிட்டுள்ளனர்.

இதன் தொடக்கம் மிகுந்த பொருட்செலவில் ஆடம்பரமாக ராமேஷ்வரத்தில் அமித்ஷா கலந்து கொண்டதாக அமைந்தது. இதற்காக ராமேஷ்வரம் முழுக்க பாஜக கட்சிக் கொடிகளும், பேனர்களுமாக அமர்க்களப்படுத்தி இருந்ததனர். ராமேஷ்வரத்தில் உள்ள சுமார் 750 விடுதி மற்றும் ஹோட்டல்களில் கணிசமானவற்றை பாஜகவினர் முன்னதாகவே பதிவு செய்துவிட்டிருந்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையை ஒட்டி சுமார் இரண்டாயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஊடகங்களும் இந்த பாதயாத்திரைக்கு அதிகமாகவே விளம்பர வெளிச்சம் தந்து வருகின்றனர்.

ராமேஷ்வரத்தில் பாதயாத்திரை தொடக்க கூட்டம்

அண்ணாமலையின் பாதயாத்திரையை கட்டமைத்துள்ள விதத்தைப் பார்க்கும் போது சமூகங்களுக்கு இடையிலான ‘சோஸியல் என்ஜினியரிங்’கில் அது ஆழமான நம்பிக்கை கொண்டு அந்தப்படியே இயங்கி வருகிறது. தென் மாவட்டங்களில் அதிகம் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமூகம், நாடார் சமூகம், முக்குலத்தோர் சமூகம் உள்ளிட்ட முக்கிய சமூகப் பிரதிநிதிகள் ஆங்காங்கே அண்ணாமலைக்கு வரவேற்பு கொடுப்பது போலவும், இணைந்து நடப்பது போலவும் திட்டமிட்டு நடத்தி வருகின்றனர். சுமார் இரண்டு முதல் மூன்று கி.மீ நடைபயண முடிவில் அண்ணாமலை பேசுகிறார். அதில் அந்த ஊரின் மற்றும் முக்கிய சமூகத்தவரின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களை தன் அருகே மேடையில் நிற்க வைத்து அங்கீகாரம் தருகிறார்.

மத்திய கட்சித் தலைமை பெரும் நிதி தந்துள்ள போதிலும், அண்ணாமலையின் பாதயாத்திரை தொடர்பான செலவுகளுக்கு அந்தந்த ஊரின் முக்கிய வர்த்தகர்களிடம் நிதி திரட்டிக் கொள்கின்றனர்! அவர்களும் மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியின் தயவு தேவை என்பதால் தாராளமாகவே நிதி உதவி செய்து வருகிறார்கள். அந்தந்த ஊர்களில் பேனர்கள், போஸ்டர்கள், கட் அவுட்கள்..என பல கோடிகள் பாத யாத்திரைக்கு செலவழிக்கப்பட்டு வருகின்றது. பல ஊர்களில் அண்ணமலை வரும் போது கட்டிடங்களில் இருந்து பெண்கள் பூக்களை வீச ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கும் பண விநியோகம் நடந்துள்ளது.

இன்றைய திமுக ஆட்சி மீதான அதிருப்திகளை அறுவடை செய்யவும், அவர்களின் ஊழல், மற்றும் குடும்ப ஆதிக்கம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை பிரச்சாரத்தில் முக்கியப்படுத்தி மத்திய பாஜக அரசு மற்றும் மோடியை பெருமைப்படுத்தும் விதமாகப் பேசி வருகிறார் அண்ணாமலை. அவரது நடை பயணத்தில் நல்ல இசைத் துடிப்புடன் கூடிய வீரதீரப் பாடல்களை அலறவிட்டு வருகின்றனர்! இதற்கான திட்டமிடல்களை சிறப்பாகவே செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்த தடபுடல்கல், விளம்பரம் காரணமாக அந்தந்த ஊர்களிலும் அண்ணாமலையை வேடிக்கை பார்க்க மக்கள் வீடுகளின் மாடிகளிலும், வராந்தாக்களிலும் நிற்கிறார்கள்! இவையெல்லாம் ஒரு நேரடி அறிமுகத்தை அண்ணாமலைக்கு தரலாம். ஆனால், ஓட்டுக்களாக மாறுமா? என்பது சந்தேகம் தான். மற்றபடி அவர் ஆங்காங்கே பேசும் கூட்டத்திற்கு லோக்கல் நிர்வாகிகள் மக்களுக்கு பணம் தந்தே அழைத்து வந்து கெத்து காட்டுகிறார்கள்.

பொதுவாக பாதயாத்திரைக்கு என்று சில நெறிமுறைகள் உள்ளன. திட்டமிடல்கள் உள்ளன. ஆனால், அண்ணாமலை பாதயாத்திரை அவர் மன நிலைப்படி நடக்கிறது. பொது ஒழுங்கிற்கு அவர் கட்டுப்படுவதில்லை என்ற புகார்கள் பாஜக தரப்பில் உள்ளது. பொதுவாக பாதயாத்திரை நடத்துபவர்கள் காலை எட்டு மணி வாக்கில் நடைபயணத்தைத் தொடங்கி வெயில் உக்கிரத்திற்கு வரத் தொடங்கும் 11 மணிக்கு நிறுத்திக் கொண்டு, மீண்டும் மாலை நான்கு மணிக்கு ஆரம்பித்து இரவு ஏழு அல்லது எட்டு மணிக்கு முடித்துக் கொள்வார்கள்!

அண்ணாமலை காலை பத்து மணிக்கு யாத்திரை தொடக்கம் என்கிறார். ஆனால், அதற்கும் உத்திரவாதம் இல்லை. முதுகுளத்தூரில் பத்து மணிக்கு தொடங்குவதாகச் சொன்ன யாத்திரைக்கு கட்சியினர், ஊர்மக்கள் எல்லாம் முன்கூட்டியே வந்து காத்து நிற்க, அண்ணாமலையோ மதியம் 12 மணிக்கு யாத்திரை தொடங்கும் இடத்திற்கு வந்துள்ளார். இதனால், போகும் வழியில் இன்னின்ன இடங்களில் இந்த நேரத்தில் பொதுக் கூட்டம் என அறிவித்தபடி நடத்த முடிவதில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் உழைப்பு, வலி ஆகியவற்றை அவர் உணர்ந்தாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது என்ற புலம்பல்கள் கட்சியினரிடையே உள்ளன.

அத்துடன் அவர் தனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கேட்டு பெற்றுள்ளதால், வீரர்கள் அவரை சூழ்ந்தபடி நடப்பதும், மேலும் லோக்கல் போலீஸ் பாதுகாப்பு எனச் சிலர் வளையம் அமைத்து வருவதால், அவர் எளிதில் உள்ளூர் பிரமுகர்களாலும், மக்களாலும் அணுக முடியாதவராக உள்ளார். மீறி அவரை நெருங்கினாலும் யாராவது இழுத்து வெளியே தள்ளிவிடுகிறார்கள் என்பதும் உள்ளூர் பாஜகவினரின் வருத்தமாக உள்ளது.

பாதயாத்திரை நடுவே தென் ஆப்பிரிக்கா ஐந்து நாட்கள் செல்லவும் திட்டமிட்டு உள்ளாராம் அண்ணாமலை. சென்ற ஆண்டு லண்டன் சென்று அங்குள்ள தமிழர்களிடம் ஆதரவு திரட்டி வந்ததைப் போன்ற திட்டமிடலாம். பாஜக தமிழகத்தில் வளர்கிறதோ, இல்லையோ, அண்ணாமலை என்ற தனி நபர் மிகவும் மெனக்கிடப்பட்டு வளர்த்தெடுக்கபடுகிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. இந்திய அளவில் மோடி என்ற தனி நபர் பிம்பத்தை கட்டமைத்தது போல, தமிழகத்தில் அண்ணாமலையை கட்டமைக்கிறார்கள். அவரோ சீரழிந்த அரசியலின் அடையாளமாகவே தன்னை வளர்த்து வருகிறார்.

அண்ணாமலைக்கு தமிழகத்தில் எங்கேங்கே எப்படியான பிரச்சினைகளோடு மக்கள் உழல்கிறார்கள் என்பது தெரியாது. அந்தந்த பகுதிகளில் என்ன பாதிப்புகள்? என்ன தேவைகள்? எனத் தெரியாது. அதைத் தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் இல்லை. அவருக்கான ஒரே இலக்கு அதிகாரம். அந்த அதிகாரத்தில் அங்கமாகிக் கொள்ள துடிக்கும் ஆதாய விரும்பிகள், அற்பர்கள்.. என்ற பெருந்திரளின் பேராசைக்கு தீனி போடத்தக்க தலைவனாக அவர் தன்னை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டால் போதுமானது. அதைத் தான் செய்து வருகிறார்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time