சாதி ஆதிக்கம் கொண்டாடப்படுவதற்கு யார் காரணம்?

-சாவித்திரி கண்ணன்

ஆதிக்க சாதியாக தங்களை கருதுவர்கள் ”எங்க ஆளுடா இவர்! ” என ஏன் மாமன்னன் படத்தின் கொடூர வில்லன் பகத்பாசிலை கொண்டாடுகிறார்கள்!  இந்தக் கதாபாத்திரம் சமுதாயத்தில் ஆதிக்க சாதி உணர்வை மேலும் தூண்டி வலுப்படுத்தியுள்ளதற்கு என்ன காரணம்? உண்மையில் இந்தப் படம் எடுத்த மாரி செல்வராஜுன் நோக்கம் தான் என்ன..?

சாதி ஆதிக்கத்தின் குறியீடாக பகத்பாசிலைக் கொண்டாடும் இந்த மன நிலைக்கு என்ன காரணம்? பகத் பாசில் சிறப்பாக நடித்தது தான் காரணமா? பகத்பாசிலுக்கு இப்படி ஒரு கதாபாத்திரம் தந்ததன் மூலம் மாரி செல்வராஜுன் நோக்கமே திசைமாறிவிட்டது எனப் பலர் சொல்கிறார்கள்! இந்தக் கருத்தை நான் நிராகரிக்கிறேன்.

எதை விதைக்கிறோமோ அது தான் முளைக்கும். சுண்டைக்காயை விதைத்துவிட்டு, வெண்டைக்காய் முளைக்க வேண்டும் என யாரும் நினைக்க முடியுமா?

எந்த ஒரு நுட்பமான படைப்பாளிக்கும் ஒரு கதாபாத்திரத்தின் வெளிப்பாடு பார்க்கும் ரசிகர்களிடம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற புரிதல் இல்லாமல் போகாது. இயக்குனர் மாரி செல்வராஜ் விரும்பிய உடல் மொழியைத் தான் பகத்பாசில் முழுமையாகக் கொடுத்துள்ளார். அவரை காட்சிப்படுத்திய விதத்தில் சாதிய மேலாண்மை குறித்த கம்பீர உணர்வை பார்வையாளனுக்கு கடத்தியதில் இயக்குனருக்கு பொறுப்பு இல்லையா? பகத்பாசில் தொடர்பான ஒவ்வொரு ஷாட்டும் இயக்குனர் பார்த்துப் பார்த்து ரசித்து செதுக்கியதல்லாமல் வேறென்ன..?

ஜெய்பீம் படத்தில் வில்லன் வீட்டில் தொங்கும் ஒரு காலண்டரைக் கொண்டு, ”அந்த வில்லனை எங்கள் சமூகத்தின் பிரதியாகக் காட்டுகிறாயா..?” எனக் கேட்டு கொந்தளித்த நிகழ்வுகளையும் நாம் பார்த்தோம் தானே!

ஒரு வில்லன் கதாபாத்திரத்தை பதிவு செய்யும் போது, ‘இவனைப் போல சிந்திப்பதும், நடந்து கொள்வதும் தவறு’ என்ற புரிதலை பார்வையாளனுக்கு கடத்துவதில் தான் ஒரு படைப்பின் நோக்கமே வெற்றி பெறுகிறது. அந்த நோக்கம் மாரி செல்வராஜுக்கு இருப்பதாக உணரமுடியவில்லையே என்பது தான் படம் பார்த்த போதே எனக்கு ஏற்பட்ட எண்ணாமாகும்.

உதிரி பூக்கள் படத்தில் மிகக் கொடூரமான வில்லனான விஜயனை ஊர்மக்கள் தண்டிக்க கொதித்தெழுவார்கள்! அதற்காக நீச்சல் தெரியாத அவனை ஆற்றுக்குள் நடந்து போகச் சொல்வார்கள். ‘’போ நீயே செத்துமடி’’ என்பார்கள். அந்த மரண தண்டனையை தடுக்க, படித்த இளைஞர்கள் சிலர் தவித்துப் போராடுவார்கள். கடைசியில் அந்த வில்லன் ஒரு வசனத்தை சொல்வான்;

‘’இது நாள் வரை நான் கொடியவனாக இருந்தேன். இன்று உங்கள் அனைவரையும் என்னை போல கொடியவர்களாக மாற்றிவிட்டதைப் பார்க்கும் போது நான் செய்ததிலேயே பெரிய தவறு இது தான்’’

என்று சொல்லியபடி நீருக்குள் நடந்து சென்று மரித்துப் போவான். இந்தப் படம் ஒரு காவிய முக்கியத்துவம் பெற்றதற்கான காரணங்களில் இந்தக் காட்சியும் ஒன்றாகும். ஊர் மக்களின் கொந்தளிப்பு நியாயம் என்றாலும், ஒரு மனிதனைக் கொலை செய்யும் கொடூர உள்ளத்தையும் அவர்களுக்கு சுட்டிக் காட்டியது தான் பட இயக்குனர் மகேந்திரனின் சிறப்பாகும்..!

இந்தப் படம் பாதிக்கப்பட்டவர்களின் குரலாக இருந்திருக்க வேண்டும் என்றால், முதலில் இந்தப் படத்தின் கருவாக இருந்திருக்க வேண்டியது ஆரம்ப காட்சியில் ஊர் கிணற்றில் குளித்த தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் மூவர் கொல்லப்பட்டதற்கான நீதியை கேட்பதாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இத்தனைக்கும் படத்தின் கதாநாயகனே அந்த கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி தப்பி பிழைத்தவன் என்ற வகையில் அதற்கான நீண்ட நெடிய போராட்டமாக இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தால், அது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராடும் உணர்வை பெற்றுத் தந்திருக்கும். இந்தப் படமோ அந்தக் குழந்தைகள் கொல்லப்பட்ட கொடூரத்தை ’ஜஸ்ட் லைக் தெட்’ என ஒரு சில காட்சிகளில் கடந்து விடுகிறது.

எம்.எல்.ஏவான தன் அப்பாவிற்கு உட்கார ஒரு சேர் தரப்படவில்லை என்பதற்காக அனல் பறக்கும் வசனங்கள் பேசி, அடிதடியில் இறங்கும் கதாநாயகன், தன் பால்ய நண்பர்கள் கொலை செய்யப்பட்டதற்காக எந்த இடத்திலும் நீதி கேட்கவில்லை. எம்.எல்.ஏ என்ற அந்தஸ்து, செல்வ வளம்..எல்லாம் வந்த நிலையில் சரிசமமாக உட்காருவதற்கு மரியாதை கிடைக்காமல் போனதற்கு தான் அத்தனை அறச் சீற்றம் வருகிறது. இதற்காக கதாநாயகன் எத்தனை வன்முறைகள், அடிதடிகளில் ஈடுபடுகிறான்…! மரியாதை முக்கியம் தான்! ஆனால், அதைவிட கொல்லப்பட்ட குழந்தைகளுக்கான நீதி முக்கியமாகப்படவில்லையே படைப்பாளிக்கு, என்பது தான் என்னுடைய ஆகப் பெரிய வருத்தம்.

மகாத்மா காந்தி வைக்கம் போராட்டத்திற்காக தாழ்த்தப்பட்டவர்களுக்கான நியாயம் பேச நம்பூதரி பிராமணப் பெரியவர் ஒருவரை சந்திக்க அங்கே சென்ற போது, காந்தி வைசியர் என்பதால், வாசலில் வைத்தே பேசி அனுப்பினார் அந்த நம்பூதரி பிராமணர். அன்றைய தினம் காந்தியடிகள் இந்திய மக்களால் கடவுளுக்கு நிகராகக் கொண்டாடப்படும் ஒரு தலைவர் மட்டுமல்ல, மேற்கத்திய உலகமே ஏசு கிறிஸ்துவிற்கு பிறகு அவரது பிரதிபிம்பமாக அவரைப் பார்த்த நேரம். எனினும், தன்னை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து வாசலில் வைத்து பேசி அனுப்பியமைக் குறித்து காந்தி எந்த ஒரு வருத்ததையும் எங்குமே வெளிப்படுத்தவில்லை.

அப்படி வெளிப்படுத்தி இருந்தால், காந்திக்கு நியாயம் கேட்கும் இயக்கமாக அது திசைமாறியிருக்கும். காந்தியின் நோக்கம் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலய நுழைவு தான்! அது ஒரே நாளில் ஒரே பேச்சு வார்த்தையில் சாத்தியப்படாது என்பதை உணர்ந்து பல ஆண்டு பேச்சு வார்த்தைகள், கடித பரிமாற்றங்கள் நிகழ்த்தி சில அவமானங்களையும் தாங்கி, அந்த மக்களுக்கான நீதியை பெற்றுத் தந்தார்.

மாமன்னன் படம் எம்.எல்.ஏவான ஒரு தாழ்த்தப்பட்டவருக்கு சரிசமமாக உட்கார சேர் தரப்படாததால் எழுந்த இரு தனி நபர்களுக்கான பிரச்சினையாக சுருக்கி எடுக்கப்பட்டதே அல்லாமல், அதில் வேறென்ன இருக்கிறது..? பொது வாழ்க்கைக்கு வரும் லட்சிய நோக்கம் கொண்டவர்கள் தங்களுக்கு ஏற்படும் ஷண நேர அவமானங்களை பொருட்படுத்தமாட்டார்கள்! அவர்கள் தங்களைச் சார்ந்த பெருந்திரளான மக்களின் நலனையே பெரிதாக எண்ணுவார்கள்! அப்படி மக்களுக்காகச் செயல்படும் தலைவர்களாக இந்தப் படத்தில் உதயநிதியோ, வடிவேலு கதாபாத்திரமோ கட்டமைக்கப்படவில்லை.

இரண்டு கதாபாத்திரங்களுமே வீணடிக்கப்பட்ட நிலையில், சாதிவெறியனான வில்லனை மட்டும் மிக உயிர்ப்புள்ள முறையில், ரசனையோடு செதுக்கியுள்ளார் என்றால், படைப்பாளி மாரி செல்வராஜுன் தவறே அன்றி, வேறில்லை.

அதே சமயம் மாமன்னன் படத்தில் சாதி ஆதிக்கத்தின் கொடூர முகமாகக் காட்டப்படும் வில்லன் ரத்னவேலு என்ற கதாபாத்திரத்தை தமிழகத்தின் ஆதிக்க சாதியாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் பல சாதி இளைஞர்கள் கொண்டாடி வருவதைக் கொண்டு, அந்தந்தச் சாதியில் உள்ளவர்கள் எல்லாமே அப்படிக் கொடூரத்தை விரும்புவர்களாக நாம் நினைக்க வேண்டியதில்லை. சில இளைஞர்களின் முட்டாள்தனம் இதுவென்று கடந்துவிட வேண்டியது தான்! எல்லா சாதிக்குள்ளும் வெறியர்களும் உண்டு. மனிதநேயம் படைத்தோரும் உண்டு. அந்த மனிதநேயம் கொண்டோரை இன்னும் அதிகப்படுத்தும் படைப்பு தான் இன்றைய தேவை!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time