ஹரியானாவிலிருந்து வெளியேறும் இஸ்லாமியர்கள்!

-சாவித்திரி கண்ணன்

ஹரியானா கலவரம் குறித்து தற்போது வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. கலவரத்திற்கு பிறகு மாநில அரசாங்கமும், இந்துத்துவ அமைப்புகளும் களத்தில் இறங்கி செய்யும் அழிச்சாட்டியங்கள் அவர்கள் நோக்கத்தை புலப்படுத்துகிறது. இதற்காகத் தான் ஆசைப்பட்டார்களா…?

இந்துத்துவ அமைப்புகள் நடத்தும் கலவரத்திற்கு பின்னணியில் இந்து மதப்பற்று, இஸ்லாமிய வெறுப்பு என்பதைவிடவும் மிக முக்கியமாக நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பொருளாதாரத் திட்டமிடல்களே ஒளிந்திருக்கின்றன என்பது கலவரத்திற்கு முன்னும், பின்னுமான மாநில பாஜக நகர்வுகளில் இருந்த நாம் அனுமானிக்க முடிகிறது.

தற்போது நூஹ் என வழங்கப்படும் மேவாத் மாவட்டமும் சுற்றியுள்ள குர்காம், ரேவரி, பரிதாபாத், பல்வால் ஆகிய மாவட்டங்களும் மியோ (meo) எனப்படும் இஸ்லாமிய பழங்குடிகள் நிறைந்த பகுதியாகும். இவர்கள் ஒரு தனித்துவமிக்க இஸ்லாமியர்கள். முகலாய மன்னர்கள் ஆண்ட போது இஸ்லாமிய மதத்தை தழுவிய ஷத்திரிய மக்கள் என நம்பப்படுகிறது. இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை இவர்கள் காலம்காலமாக உழுது வருகிறார்கள். அத்துடன் நூக் உள்ளிட்ட நகர்புற இடங்களில் சிறு, சிறு வணிக நிறுவனங்கள், நடைபாதைக் கடைகள், தள்ளு வண்டிக் கடைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர். இவர்கள் மிகுந்த மனிதாபிமானம் கொண்டவர்கள். விவசாயம் மற்றும் வணிகம் செய்வதால் அனைத்து பிரிவினரிடமும் இணக்கமாக இருக்கிறார்கள். டெல்லி விவசாயிகள் போராட்டம் நடந்த போது அதில் முக்கிய பங்கேற்பாளர்களாகவும், பங்களிப்பாளர்களாகவும் இருந்துள்ளனர்.

மேவாத் பகுதியில் இஸ்லாமியர்கள் நடத்திடும் தொழுகை

ஹரியானாவில் உள்ள ஹிந்து வியாபாரிகள், மார்வாடிகளுக்கு இவர்களின் வணிக இடங்களின் மீதும், விவசாய நிலங்களின் மீதும் ஒரு கண் எப்போதுமே இருந்துள்ளது. இவர்களை எப்படியாவது இங்கிருந்து அப்புறப்படுத்தும் அஜந்தாவை அவர்கள் வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங்தள் அமைப்பாளர்களிடம் ஒப்படைத்து பெரும் நிதியும் தந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அத்துடன் ஆளும் பாஜக அரசும் இவர்களின் அஜந்தாவை நிறைவேற்றும் சூழலுக்காகவே காத்திருந்தது போலத் தான் தற்போது அங்கு நிகழ்வுகள் நடந்தேறிய வண்ணம் உள்ளன.

பசுப் பாதுகாவலன் என்ற பெயரில் மிகப் பெரும் வன்முறையாளனாக உருவெடுத்த மோனுமனேசருக்கு பெரும் நிதி வழங்கி அவனை துப்பாக்கி சகிதம் படை பரிவாரங்களுடன் திரியவிட்டவர்களும் இவர்களே!

மோனுமனேசரின் ஹிந்துத்துவ அடியாட்களின் வெறியாட்டம்

இந்த மோனிமேனசர் தான் இந்த கலவரத்தின் மூலநாயகனாவார். ஏனென்றால், இவர் எண்ணற்ற இஸ்லாமிய இளைஞர்கள் மீது வன்முறிஅயி நிகழ்த்தியுள்ளார். சில இஸ்லாமிய இளைஞர்களை கொலையும் செய்துள்ளார். ஹரியானா பாஜக அரசு இவர் என்ன செய்தாலும் இவரை ஒரு போதும் தண்டிப்பதில்லை. இப்படியான மோனுமனேசர் எல்லை தாண்டி ராஜஸ்தான் சென்று இரண்டு இஸ்லாமிய இளைஞர்களைக் கொன்ற  விவகாரத்தில் தேடப்படும் குற்றவாளியாக ராஜஸ்தானின் காங்கிரஸ் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆகவே மறைந்து வாழ்கிறான். அப்படி மறைந்து வாழும் மோனுமனேசர் இந்தப் பேரணியில் கலந்து கொள்வேன் என காணொளி வெளியிட்டான். தன் நண்பர்களை திரளாக வந்து பங்கேற்குமாறு சொன்னான்.

உடனே இஸ்லாமிய இளைஞர்களும், பல சமூக அமைப்புகளும் மாநில அரசுக்கும், காவல்துறைக்கும் மோனுமனேசரை முன்கூட்டியே கைது செய்து பதட்டத்தை தணிக்கும்படி கோரிக்கை வைத்தனர். ஆனால், மாநில பாஜக அரசு, இதை செவிடன் காதில் ஊதிய சங்காக புறந்தள்ளிவிட்டது. ஒரே ஒரு வார்த்தை ‘’மோனுமனேசர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. அவர் வந்தால் கைதாவார்’’ என மாநில அரசு அறிவித்திருந்தால் இந்த கலவரத்திற்கே வழியில்லை என்பதே உண்மை.

எரிக்கப்பட்ட இஸ்லமியர்களின் இருப்பிடங்கள்

ஆனால், மாநில அரசின் கள்ள மெளனத்திற்கு பின்னால் மிகப் பெரும் சதி வலைப் பின்னல் இருந்துள்ளது. இந்த இஸ்லாமிய பெருங்குடிகளின் நிலங்களையும், வணிக நிறுவனங்களையும் ஆக்கிரமிக்கும் விதமாகவே இந்த கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. இந்த இந்து அமைப்புகளின் பேரணிக்கு முன்பாக பிரபல வி.ஹெச்.பி தலைவர் நல்ஹர் மகாதேவ் என்பவர் இந்தப்படிக்கு பேசி ஒரு காணொளியை வெளியிட்டார்;

‘’இந்த மேவாத் மண் பகவான் கிருஷ்ணனின் தாய்வீடாகும்! இங்கு பசுவை கொல்பவர்களுக்கு இடமில்லை. ஹிந்து கொலையாளிகளை அனுமதியோம். முஸ்லீம் அகதிகளுக்கு இடமில்லை. மதமாற்றம் செய்பவர்களுக்கு இடமில்லை. இது இந்துக்களுக்கான மண்ணாகும்’’ எனப் பேசி பதட்டத்தை தூண்டிவிட்டுள்ளார்.

தற்போது ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா, ‘’பேரணி நடத்தியவர்கள் அரசுக்கு சரியான தகவல்களை தரவில்லை என்கிறார். மாநில உள்துறை அமைச்சரோ இந்தக் கலவரம் முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு ( இஸ்லாமியர்களால்) நடத்தப்பட்டுள்ளது’’ என்கிறார்.

‘’ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு நபரையும் போலீசாரால் பாதுகாக்க முடியாது’’ எனக் கூறியுள்ளார். இந்த பின்னணியில் தான் இந்துத்துவ அமைப்புகள் அமைதி ஊர்வலம் என மீண்டும் நடத்த அனுமதிக்கபடுகிறார்கள். கூட்டம், கூட்டமாக இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று மாநிலத்தைவிட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை தந்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்பின்மை கருதி இஸ்லாமிய மக்களில் கணிசமானோர் கண்ணீர் மல்க வெளியேறிய வண்ணம் உள்ளனர்.

ஏற்கனவே கலவரத்தின் போது இஸ்லாமிய கடைகள், வர்த்தக நிறுவனங்கள், இருப்பிடங்கள், மசூதிகள் போன்றவை எரிக்கப்பட்டுள்ளது போதாது என்று தற்போது மாநில அரசே முக்கிய நகர் பகுதியில் உள்ள இஸ்லாமியர்களுக்கு சொந்தமான ஏராளமான கடைகளையும், அவர்களின் குடியிருப்புகளையும் பெரிய, பெரிய புல்டோசர்களைக் கொண்டு இடித்து வருகிறது. அதற்கு சொல்லப்படும் காரணம், கலவரத்தில் தொடர்புள்ளவர்களின் மீதான நடவடிக்கையாம்!

புல்டோசர் முதல்வர் மனோகர்லால் கட்டார்

கலவரத்திற்கு பின்பு இஸ்லாமிய அடித்தட்டு மக்கள் மத்தியில்  மட்டுமின்றி, நடுத்தர வர்க்கத்தினர் மத்தியிலும் பெரும் அச்சம் குடிகொண்டுள்ளது. இவர்களில் பலர் இந்துக்கள் வாழும் பகுதியில் கலந்து வாழ்கிறார்கள். ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் இல்லத்தரசி ‘தி வயர்’ நிருபரிடம் கூறும் போது, ‘’எங்க அப்பார்ட்மெண்டில் ஒரு இஸ்லாமிய குடும்பம் இருந்தது. அந்தம்மா ஒரு டீச்சர். என்னுடைய மகனுக்கு நன்றாகப் பாடம் சொல்லித் தந்து பிரியமாக இருந்தாங்க. ஆனால், கலவரத்திற்கு பிறகு அவங்க எங்க போனாங்கன்னு தெரியலை’’ என்கிறார்.

இதன் சம்பவம் மூலம் தாங்கள் டார்கெட் செய்யப்பட்டுள்ளோம்..என்ற பய உணர்ச்சி இஸ்லாமியர்களிடம் உருவாகியுள்ளது தெரிய வருகிறது.

நூக் மாவட்டத்தில் இருந்து சுமார் 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள தவுரு நகரில் கடந்த நான்காண்டுகளாக உள்ள வங்கதேச அகதிகளின் கொட்டகைகளை புல்டோசர்களை கொண்டு மாவட்ட நிர்வாகம் நேற்று இடித்து தள்ளியது. கலவரத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லாத இந்த அன்றாடங்காய்ச்சிகளை அகற்ற இந்த சந்தர்ப்பத்தை பாஜக அரசு பயன்படுத்திக் கொண்டது. இதே போன்ற புல்டோசர் இடிப்பு சம்பவங்கள் சுமார் 50 இடங்களில் நடக்கிறது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time