சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த சித்த மருத்துவ மூலிகை இது! இருமல், சளி, மூக்கடைப்பு, தொண்டை வலி, அலர்ஜி, ஆஸ்துமா, டி.பி எனும் காச நோய்.. என எல்லா வித சளி சம்பந்தமான நோய்களுக்கும் இதுவே முதலுதவி மூலிகையாகும்!
ஆடு தொடாத இலை ஆடாதொடை எனப்பட்டது கிராமங்களில் வேலியோரமாக நட்டு பெரும்பாலும் வளர்க்கப்படுகிறது. இதன் இலை மாவிலை போன்று நீண்டது, அடர்த்தியாக புதச்செடியாக வளரும். நகர்புறங்களில் கூட சாலையோரம் பார்க்கலாம். அதிக நடமாட்டமில்லாத தெரு ஓரங்களில் சீண்டுவாரின்றி வளர்ந்து கிடக்கும்.
இதன் இலை, தண்டு, பட்டை, வேர் முதலிய அனைத்தும் மருந்தாகப் பயன்படுகிறது.
கொரோனா காலத்திற்குப் பின் ஏற்பட்ட நுரையீரல் தளர்ச்சி பிரச்சினைகளுக்கு, மூச்சு விட சிரமம், நெஞ்சில் கோழை கட்டுதல், தொடர் வறட்டு இருமல் போன்றவற்றிற்கு இதுவே சிறந்த மருந்தாக அமைகிறது.
இயல்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் சுவாச கோளாறு, நெஞ்சில் கபம் கட்டுதல், சளி போன்ற நுரையீரல் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது.
பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப் போக்குடன் கூடிய பிரச்சனைகளுக்கும் இது மிகச்சிறந்த மருந்து. மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், அதிக ரத்தப்போக்கு ஏற்படும் ரத்த மூலத்திற்கும் இது மிகச் சிறந்த பயனாக அமைகிறது.
கிராமங்களில் இப்பவும் இதற்கு மவுசு அதிகம்! ‘ஆடாதொடைக் கொண்டால், ஆடாத உடலும் ஆடும், பாடாத குரலும் பாடும்’ னு பாட்டிமார்கள் சொல்வார்கள்!

இத்தகைய ஆடாதொடை இலையை கொண்டு செய்யப்படும் சித்த மருந்துகள் சில உண்டு!
ஆடாதொடை மணப்பாகு
ஆடாதொடை மனப்பாக்கு செய்யும் முறையானது.
மணப்பாகு செய்முறை:
ஆடாதோடை இலை -100கி(காம்பு நீக்கப்பட்டது)
கருப்பட்டி-100கிராம்
பச்சைக் கற்பூரம்- ஒரு கிராம்.
100கிராம் ஆடாதோடை இலைகளைக் லேசாக தட்டி, 800மிலி நீர்விட்டு, அடுப்பேற்றி,சிறு தீயாக எரித்துக் கசாயமாகக் காய்ச்சவும்.100மிலியாகக் கசாயம் வற்றியவுடன், வடிகட்டி, 100கிராம் கருப்பட்டியைக் கலந்து, மீண்டும் அடுப்பேற்றி சிறு தீயாக எரிக்கவும். பாகுபதம் வந்தவுடன் பச்சை கற்பூரத்தை பொடி செய்து பாகில் சேர்த்து இறக்கி வடிகட்டி எடுத்துக் கொண்டால், ஆடாதோடை மணப்பாகு தயார்!
பயன்படுத்தும் அளவு:
குழந்தைகளுக்கு-5 மிலி-இருவேளை
பெரியவர்களுக்கு-10-15மிலி-இருவேளை(அ)மூன்றுவேளை வெந்நீரில் கலந்து கொடுக்கவும்.
இதனை வீட்டில் நாம் செய்வதால் நாள்பட கெட்டுப் போகாமல் இருக்க எந்த விதமான வேதிப்பொருளும் இதில் சேர்ப்பதில்லை, எனவே இதனை குளிர் சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்ளவும். காந்தி கிராம பல்கலை இதனை சிறந்த முறையில் தயாரித்து விற்பனை செய்கிறது.
உடனடி மருந்தாகவும் ஆடாதொடை பயன்படுகிறது.
ஆடாதொடை இலைகளை இடித்து பிழிந்த சாறு 10 ml உடன் தேன் கலந்து இரண்டு, மூன்று தடவை கொடுக்கும் போது, சிலருக்கு மூக்கிலிருந்து வெளிப்படும் குருதியானது படிப்படியாக குறைகிறது.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்திலும், பிரசவித்த பிறகும் ஏற்படும் அதிக குருதிப் போக்கு நேரங்களில் இதனை வழங்க மிகச் சிறந்த தீர்வினை தருகிறது. கர்ப்பபை வலுப்படவும் உதவுகிறது.
நாள்பட்ட புகை பிடிப்போருக்கு ஏற்படும் தொடர் வறட்டு இருமல், இளைப்பு, சுவாச தடுமாற்றம் போன்றவற்றிற்கு ஆடாதொடை மனப்பாகும் மிகச் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
ஆடாதொடைக் கசாயம் [ ஆடாதொடை தேனீர்]
ஆடாதொடை இலை -3
வெற்றிலை-3
தூதுவளை-5
திப்பிலி- 1/2 டீஸ்பூன்
அதிமதுரம்- 1 டீ ஸ்பூன
கருப்பட்டி- தேவையான அளவு.
இலைகளை அனைத்தும் இரண்டும் ஒன்றாக வெட்டிப்போட்டு மூன்று 300ml நீர் விட்டு மெல்லிய தீயில் 100ml ஆக கஷாயத்தை சுண்ட வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும் அதனுடன் தேவையான அளவு கருப்பட்டியோ அல்லது தேனோ கலந்து ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறை எடுத்துக் கொள்ளலாம். இது மிகச் சிறந்த திருவினை தருகிறது. குழந்தைகளுக்கு 30ml முப்பது எம் எல் போதுமானது. ஆடாதொடா இலைகளை தேடி எடுக்க முடியாதவர்கள் இதன் பொடியை தரமான சித்த மருத்துவ கடைகளில் வாங்கிப் பயன்படுத்தலாம்.
Also read
கொரோனாவிற்கு பிறகு இருமல் மருந்துகளில் தேவையும் பயன்பாடும் மிகப்பெரிய அளவிற்கு அதிகரித்துள்ளது, இதன் உலக சந்தை மதிப்பானது 6,200 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
பெரு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற இருமல் மருந்துகள் பெரும்பாலும் உறக்கம் உண்டாக்கி செய்கையுடன் வருகின்றன. குழந்தைகளுக்கு, சிறுவர்களுக்கு ஏற்படுகின்ற சாதாரண சளி, இருமலுக்கு கூட எவ்வகையான மருந்துகளை பெற்றோர் நேரடியாக கடைகளில் வாங்கி கொடுக்கின்றனர். இவை பெரும்பாலும் நிரந்தரத் தீர்வுகளை கொடுப்பதில்லை.
மூலிகளை கொண்டு தற்சார்புடன் நாமே செய்து கொள்ளும் ஆடாதோடை மணப்பாகு போன்ற மருந்துகள் மிகவும் நம்பகத்தன்மையுடன் இருப்பதுடன், மிகச் சிறந்த தீர்வுகளை கொடுக்கின்றன.
இதன் மூலம் தற்சார்பு மருத்துவ அறிவினை வளர்த்துக் கொள்வோம்.
கட்டுரையாளர்; விஜய் விக்ரமன் (MD Siddha)
சித்த மருத்துவ செயற்பாட்டாளர்
Leave a Reply