நம்மை போல சராசரியான வாழ்க்கை வாழ்பவர்களல்ல இவர்கள்! சதாசர்வ காலமும் பல்வேறு அநீதிகளை தட்டிக் கேட்டு, களம் காணும் போராட்டக்காரர்கள்! திமுக ஆட்சியில் இது வரை 20 க்கும் மேற்பட்ட முறைகள் கைதாகியுள்ள சகோதரிகள், தற்போது ஆர்.எஸ்.எஸை எதிர்த்ததற்காக ஜீலை 10 முதல் சிறையில் உள்ளதன் பின்னணி என்ன..?
நாமெல்லாம் ஒரு அநீதியான செய்தியைப் படித்தால் மனம் கொதிப்போம். ஒத்த கருத்துள்ள நண்பர்களோடு பகிர்ந்து கொண்டோ அல்லது முகநூலில் எழுதியோ மனதை ஆற்றுப்படுத்துவோம். என்னைப் போன்ற பத்திரிகையாளர்கள் அது குறித்த தகவல்களை திரட்டி, உண்மைத் தன்மையை மக்களுக்கு எடுத்துரைப்போம். ஆனால், ஆனந்தன், நந்தினி, நிரஞ்சனா ஆகியோர் சம்பந்தப்பட்ட அதிகார மையத்தை நோக்கி நேரடியாக களம் கண்டு போராடுவார்கள்! சிறை செல்வார்கள்! கடந்த 12 ஆண்டு கால போராட்ட வாழ்க்கையில் இது வரை நந்தினி நூறு முறைக்கும் மேலாக கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார்.
தாங்களே கைகளால் எழுதிய பேனரை எடுத்துக் கொண்டு வீதியில் ஓரிடத்தில் நிற்பது, தங்கள் போராட்டத்தின் நியாயத்தை துண்டு பிரசுரமாகத் தருவது, சில இடங்களில் வீதியில் நின்றபடி பேசுவது..இவ்வளவு தான் இவர்களின் போராட்டம். கொள்கை உறுதி, போராடும் விஷயங்களில் தெளிவு, சமூகத்தின் மீதான கரிசனம்..இவையே இவர்களின் தொடர் போராட்டங்களை சாத்தியப்படுத்துகிறது. குறிப்பாக மதுக் கொடுமைகளுக்கு எதிராக – அரசே டாஸ்மாக் நடத்துவதற்கு எதிராக மட்டும் இது வரை 50 முறை கைதாகி இருக்கக் கூடும்.
ஆர்.எஸ்.எஸ்., சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் கூட்டம், இந்த ஆண்டு ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஜுலை 10 ஆம் தேதி தொடங்கி ஒரு வார காலம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க, ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பாகவத், நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் ஊட்டியில் கேம்ப் போட்டு கடந்த ஓராண்டில் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் செயல்பாடுகள்; சாதனைகள்; எதிர் கொண்ட பிரச்னைகள் குறித்து விவாதித்தனர். மேலும், 2024ல் லோக்சபா தேர்தல் வருவதாலும், ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு துவங்க உள்ளதாலும், அதற்கான செயல் திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுத்தார்களாம்.
இதற்காக அந்த தனியார் பள்ளி ஒரு வார விடுமுறை அறிவித்திருந்தது. பொதுவாக இது போன்ற கூட்டத்தை ஏதாவது ஹோட்டலிலோ, கல்யாண மண்டபத்திலோ தான் நடத்துவார்கள். மாணவர்கள் படிப்பை சீரழித்து இப்படி நடத்தப்படுவது குறித்து சோசியல் மீடியாக்களில் விவாதம் வந்த பிறகு தான் தமிழக அரசுக்கு தெரிய வந்தது போல ஒரு நோட்டீஸ் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனுப்பட்டது அவ்வளவே! ஆனால், தமிழக காவல்துறை சுமார் 500 காவலர்களைக் கொண்டு தனியார் பள்ளியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டது.
தமிழகத்தில் இது போன்ற ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளுக்கு இடம் தருவதைக் கண்டித்து போராட்டம் நடத்த இந்த இரண்டு சகோதரிகளும் ஊட்டிக்கு வரும் வழியில் பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு கைது செய்தனர். இவர்கள் பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு, போலீஸ் வேனில் ஏற்றப்பட்ட நிகழ்வை தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பின. அதில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் சகோதரிகள் வேனில் ஏறி உட்காருகின்றனர். ஆனால், அவர்கள் ஒரு பெண் போலீசை கன்னத்தில் அறைந்ததாக ஊடகங்கள் செய்தி போட்டன. களத்தில் இருந்தே அறிந்திருந்தாலும் கூட, ஊடகங்கள் இப்படி உண்மைக்கு மாறாக போலீஸ் சொல்லுவதை அப்படியே கேள்வியின்றி போடுவது தொடர் வாடிக்கையாக இங்கு நடக்கிறது.
இது போன்ற கைதுகள் ஒரு நாள் அல்லது அதிகபட்சம் ஒரு வார சிறைப்படுத்தலுக்கு பிறகு விடுவிப்பதே வழக்கம். ஆனால், தமிழக அரசு தொடர்ந்து இன்னும் சிறையில் வைத்திருப்பது தமிழக அரசியல் செயற்பாட்டாளர்களையும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் மதுக் கடைகளை தமிழக அரசு மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி நந்தினி தனது தந்தையுடன் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தபோது, போலீஸாரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், போலீஸாரைத் தாக்கியதாகவும் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கில் 2019 ஆம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி அன்று திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நந்தினி தந்தையுடன் ஆஜர் ஆனார். அப்போது, சாட்சியளிக்க வந்த போலீஸாரிடம் நந்தினி சில கேள்விகளை எழுப்பினார். ”IPC 328-ன் படி போதைப்பொருள் விற்பது குற்றமில்லையா?..” எனக் கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ”நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசக்கூடாது” என எச்சரித்தார். அங்கிருந்த நந்தினியின் தந்தை ஆனந்தனும் மகள் எழுப்பிய கேள்வியில், ”தவறு ஏதுமில்லை” எனக் கூறவும் அதை நீதிபதி தன் பிரஸ்டீஸ் சம்பந்தட்டதாக எடுத்துக் கொண்டு இருவரையும் அவமதிப்பு வழக்கில் கைது செய்ய உத்தரவிட்டார். சிறிது நேரத்துக்குப் பின், “நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இனி பேசமாட்டோம்’’ என எழுதிக் கொடுத்தால் இருவரையும் விடுவிப்பதாக நீதிபதி கூறினார். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. இதையடுத்து தந்தை, மகள் இருவரையும் போலீஸார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனால், நந்தினிக்கும், குணா ஜோதிபாசுவுக்கும் மதுரையில் ஜூலை 5-ம் தேதி அன்று நடைபெற இருந்த திருமணம் நின்றுபோனது. அன்று இருவரும் சிறையில் இருந்தனர். ‘நீதிமன்றத்தில் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுப்பதில்லை’ என்ற நந்தினியின் முடிவை மணமகன் குணா ஜோதிபாசு மற்றும் அவரது குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டனர்.
சிறையிலிருந்து விடுதலையான பிறகு திருமணத்தை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டு, அவ்விதமே மிக எளிமையாக நடந்தேறியது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து போராட்ட வாழ்க்கை தான்! 30 வயது நந்தினியும், 25 வயது நிரஞ்சனாவும் அந்த வயது பெண்களுக்கே உள்ள கனவுகளைத் துறந்து , வாழ்க்கையைத் தொலைத்து பொது நன்மை கருதி போராடி, சிறை வாழ்க்கை அனுபவிக்கின்றனர் என்பதை தமிழ்ச் சமூகம் சரியாக இன்னும் உணரவில்லை. அவர்களுக்கு துணை நிற்பது நம் அனைவரின் கடமையாகும்.
கொரோனாவை காரணம் காட்டி, நாட்டு மக்களுக்கு மோசடி செய்ததாகக் கூறி, பிரதமர் மோடி பதவி விலக வேண்டும், இவிஎம் வாக்கு இயந்திரங்களுக்கு தடை விதிக்க வேண்டும், வாக்கு சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, மதுரையில் பிரவரி 2021 ல் ஆனந்தனும், நந்தினியும் பிரச்சார இயக்கம் தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் அவர்களை மதுரை நகர் கே.புதூர் போலீசார் வீட்டுச் சிறையில் வைத்தனர்.
கொரனாவில் மக்களுக்கு பல்வேறுவிதமான பாதிப்பை பிரதமர் மோடி ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு வைத்து அவர் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு குடியரசு தலைவரிடம் விண்ணப்பபித்துவிட்டு, அதை பொருட்படுத்தப்படாத நிலையில் தமிழக ஆளுனரின் சென்னை கிண்டி மாளிகை முன்பு போராட வந்த நந்தினியும், அவர் தந்தை ஆனந்தனும் 2021 ஆகஸ்ட் கைது செய்யப்பட்டு பிணை மறுக்கபப்ட்டு பிறகு செப்டம்பரில் விடுவிக்கப்பட்டனர்.
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களை முதல்வர் நேரில் சந்தித்து மீட்பு பணிகளை மேற்கோள்ள வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையிலுள்ள முதலமைச்சர் இல்லம் முன்பாக நந்தினி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள முயன்று கைதானது 2017 ஆம் ஆண்டு டிசம்பராகும்.
கந்துவட்டி கொடுமை தொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் அலுவலகம் முன்பு தனது 2 குழந்தைகள், மனைவியுடன் இசக்கிமுத்து என்பவர் நெல்லையில் தீக்குளித்தார். இந்த படுகொலைக்கு காரணமான நெல்லை கலெக்டரை கைது செய்யக்கோரி மதுரை நந்தினி, தந்தை ஆனந்தனுடன் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி கைதானார்.
மோடி காந்தி கிராம பல்கலைக்கு வரும் போது கறுப்பு கொடி காட்டுவேன் என அறிவித்திருந்த நந்தினியை திமுக அரசின் காவல்துறை மூன்று நாட்கள் முன்பே கைது செய்து வீட்டுச் சிறையில் வைத்தது. அப்போது நந்தினி எதிர்கட்சியாக இருக்கும் போது பிரதமர் மோடியின் வருகைக்கு அன்றைய எதிர்கட்சியான திமுக கறுப்பு கொடி காட்டியது தானே! ஆட்சிக்கு வந்ததும் ஜனநாயகத்தை மறுப்பதா? எனக் கேள்வி எழுப்பினார்.
Also read
”இந்தியாவில் மக்களாட்சி என்ற பெயரில் சர்வாதிகார ஆட்சியே நடக்கிறது. தேர்தல் நேர்மையாக நடக்காத நாட்டில் மக்களாட்சி நடக்காது. கொள்ளையர்களின் ஆட்சி தான் நடக்கும். வாக்குப்பதிவு இயந்திரத்தை தடை செய்து மற்ற நாடுகளைப்போல வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்த வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளரை தேர்தலில் போட்டியிட தடை விதித்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையம் முன்பாக வரும் ஆக.15-ம் தேதி சுதந்திர தினம் முதல் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம்” என இந்த சகோதரிகள் அறிவித்துள்ள நிலையில் தான் அவர்கள் தொடர்ந்து சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கவனத்திற்குரியதாகும். இதன் பின்னணியில் மத்திய பாஜக அரசு மற்றும் ஆர்.எஸ்.எஸுன் அழுத்தம் இருக்கிறது ஆட்சி மட்டத்தில் உள்ள முக்கியஸ்தர்ளே சொல்கிறார்கள்!
ஆக, பாஜக, ஆர்.எஸ்.எஸை யார் எதிர்த்தாலும் அவர்களை உடனடியாக கைது செய்வது, தொடர் சிறையில் அடைப்பது.. ஆகியவற்றை சமரசமின்றி திமுக அரசு செய்து வருவது மீண்டும் இந்த சகோதரிகள் விஷயத்தில் உறுதியாகிறது. இது மிகுந்த கெட்ட பெயரை ஏர்படுத்தும் என்பதை திமுக அரசின் தலைமைக்கு கூட்டணிக் கட்சிகளாவது சொல்வார்களா..?
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
மக்கள் பிரச்சனையை மக்களுடன் ஒருங்கிணைப்பு செய்துதான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர இப்படி தனிப்பட்ட முறையில் செய்வது தங்களுக்கான சுயத்தம்பட்டத்தை பெருக்கிக் கொள்வதாக தான் அமையும் என்று நினைக்க வேண்டி வருகிறது!!
தேர்தலின் போது திமுக வீசி எறியும் எலும்புத் துண்டுகளுக்காக காத்திருக்கும் கூட்டணிக் கட்சிகள் எப்படி இடித்துரைக்கும்?
ஜோக்கர் படத்தில் இப்படித்தான் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருப்பார்கள்
இவர்கள் யார் ? சாதரண குடும்பத்தை சேர்ந்தவர்கள்
அதிகாரிகளுக்கு நீயுசென்ஸ்.ஆனால் மக்கள் பிரச்சனையைஅமைதியான போராட்டம் வழியாக வெளிக் கொண்டு வருகிறார்கள்
ஆனால் மக்கள் ஆதரவு துளியும் இல்லை என்பது கண்கூடு.
TASMAC ஐ எதிர்த்து போராட்டம் நடத்தியதை தொடர்ந்தார்களா ? அதை மறந்து விட்டு வேறொரு போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர் .கோவன் மூடு டாஸ்மார்க் ஊத்திகொடுத்த உத்தமி என்று பாடி கைது செய்யப்பட்டு சிறையிலிருந்தவர்.
இப்போது ஏன் பாடவில்லை போராட்டம் நடத்தவில்லை என்றால் பாசிச பாசக என்கிறார் அதை எதிர்த்து போராட்டம் என்கிறார்.
இவர் நம்மையெல்லாம் கேனையர்கள் என்றே முடிவுகட்டிவிட்டார் போலும்
பாசிசம் அப்போதும் ( ஆட்சியில் )இருந்த்து . அப்போது துடிக்காத இதயம் இப்போது துடிக்கிறது என்றால் இயக்கியவர்கள் யார் ?