குற்றவாளியை காப்பாற்றத் தான் எல்லாமே..!

- பா.பாலமுருகன் IRS

தூங்கிக் கொண்டிருக்கும் நபரை எழுப்பி விடலாம். ஆனால், தூங்குவது போல் நடிக்கும் ஒருவரை அவரே சம்மதித்தால் தான் எழுப்ப முடியும். திமுக அரசு, வேங்கை வயல் விவகாரத்தில் முற்ற முழுக்க நடிக்கின்றது! ஏழு மாதங்கள் கடந்துள்ளன. குற்றவாளிகள் கண் எதிரே கெத்தாக நடமாடுகின்றனர். ஏன் தண்டிக்கத் திரானியில்லை..?

இந்துத்துவா சக்திகள் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு என்று ஒரு வாக்கு வங்கியை உருவாக்க பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக முதலில்   மதத்தின் அடிப்படையில் பிரிவினையை  தூண்ட முயன்றனர். இதில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் தற்பொழுது அடுத்த கட்டமாக அவர்கள் தமிழர்களை ஜாதி அடிப்படையில் ஒருங்கிணைத்து கட்சிக்கு பலம் சேர்க்கிறார்கள். நாடார் சமூகம், தேவேந்திரகுல வேளாளர் சமூகம் என்பதைத் தொடர்ந்து, தற்போது முத்தரையர் சமூகத்தையும் தங்கள் பிடிக்குள் கொண்டு சென்று விட்டனர். சில ஜாதினருக்கு ஆதரவாக செயல்பட்டு   அந்த ஜாதி வாக்குகளை   பாஜகவுக்கு   ஆதரவாக மாற்ற வேண்டும் என்பது இவர்களுடைய திட்டம். இதற்காக இவர்கள் திட்டமிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயல் கிராமத்தை தேர்ந்தெடுத்தனர். இந்த கிராமம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு ஒதுக்கு புறமான   கிராமமாகும்.

இந்த கிராமத்தில் சுமார் 25 குடும்பம் ஆதிதிராவிடர்கள் உள்ளனர். இவர்கள்  மற்ற ஜாதியினரை காட்டிலும் ஓரளவு படித்து முன்னேறியவர்கள். கிராமத்தில் முதல் பட்டதாரி இந்த ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தான்.  உயர் ஜாதி குடியிருப்பில்   300 குடும்பங்களுக்கு மேல் பெரும்பான்மையாக வசிப்பவர்கள் முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்கள். இங்கு கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்களும் சுமார் 25 குடும்பங்களும் அகமுடைய சமுகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 25 குடும்பங்களும் உள்ளனர்.

இந்த  கிராமத்தின்  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், இந்நாள் ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவின்  கணவருமான முத்தையா என்பவரை இந்த இந்துத்துவா சக்திகள் தங்களுடைய திட்டத்திற்கு பயன்படுத்திக் கொண்டன. 25 குடும்பங்களே உள்ள ஆதிதிராவிட மக்கள் பெரிதளவு வன்முறையில் ஈடுபட முடியாது எனவே, இது முத்தையாவிற்கும்  அவர் சார்ந்த முத்தரையர் சமூகத்திற்கும் சாதகமாக இருக்கும். அதே சமயத்தில் ஆதிதிராவிடர்கள் குடியிருப்பில் உள்ள மேல்நிலை  குடிநீர்  தொட்டியில் மலம்  கலப்பதின் மூலம் அது  தமிழகமெங்கும் ஒரு பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும். திராவிட மாடல் சமூக நீதி ஆட்சி நடத்துகிறோம்  என்கின்ற திமுகவின் பிம்பத்தை உடைக்கும், தமிழக அரசிற்கு அவ பெயரை கொண்டு வரும்.

தமிழக அரசு முத்தையா மீது நடவடிக்கை எடுத்தால் பாஜக மற்றும் இந்துத்துவ சக்திகள் முத்தையாவிற்கு துணை நின்று அவர் நிரபராதி என்று வாதத்தை முன்வைத்து திமுக அரசு முத்தரையர் சமூகத்தை பழிவாங்குவதாக பிரச்சாரம் செய்து   முத்திரையர்களின் வாக்கை தங்கள் பக்கம் இழுக்கலாம் என்பது அவர்களுடைய திட்டம். இந்த முத்தரையர் சமூகத்தினர் புதுக்கோட்டை மாவட்டத்திலும் அதை சுற்றி உள்ள சில இடங்களிலும் சுமார் 30 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளனர்.

குடிநீரில் மலம் கலக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின்   தமிழக பாஜகவின் ஐடி பிரிவு மூன்று பேர் வேங்கை வயல் ஆதிதிராவிட  குடியிருப்பின்  மேல்நிலை குடிநீர் தொட்டியின் மீது ஏறி அந்த குடிநீர் தொட்டியை திறப்பது போன்று ஒரு காணொளியை வெளியிட்டு குற்றவாளிகள் பிடிபட்டு விட்டார்கள் என்ற  ஒரு பொய்யான செய்தியை பரப்பியது. கடைசியில்  அந்த மூன்று நபர்களும்   மலம் கலந்த அன்று   குடிநீர்  தொட்டியின் மீது   ஏறிப் பார்த்த ஆதிதிராவிட சிறுவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் தமிழக பாஜக கட்சியைச் சார்ந்த  கரு.நாகராஜன் மற்றும் தடா பெரியசாமி ஆகியோர் ரகசியமாக குற்றவாளி முத்தையாவை சந்தித்த செய்தி அந்த கிராம மக்கள் மூலமே தெரியவந்தது.

ஆளும் திமுக அரசு, சாதி அரசியல் சதுரங்கத்தில் தான் பலிகடாவாகி விடக் கூடாது என்பதற்காக பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளியாக சித்தரிக்க  காவல்துறை எடுக்கும் முயற்சியை கண்டும் காணாமல் இருக்கின்றது. மத்திய பாஜக அரசு மத்திய உள்துறை  அமைச்சகத்தின்  மூலமாக தமிழ்நாட்டில் உள்ள  பெரும்பாலான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தங்களுடைய கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வந்து விட்டதால், முதல்வர் ஸ்டாலின் செயலிழந்து உள்ளார். ஜெயலலிதா போன்றோ, கலைஞர் போன்றோ, மத்திய ஆட்சியாளர்களின் அழுத்ததை தவிர்த்து, நிர்வாகத்தை கொண்டு செலுத்தும் ஆன்மபலம் ஸ்டாலினுக்கு சுத்தமாக இல்லை.

உண்மையில் முத்தரையர் சமூகத்திலும் நியாய உணர்வாளர்களும், முற்போக்கானவர்களும் நிறையவே உள்ளனர். அவர்களுக்கு யதார்த்தம் தெரியும்பட்சத்தில் தங்கள் சாதியைச் சேர்ந்த ஒருவர் செய்த இந்த தீய செயலை நியாயப்படுத்த துணிய மாட்டார்கள். இதற்கு சிறந்த உதாரணம், அந்த கிராமத்தை சேர்ந்த முத்தரையர் சாதியினர் ஒரு சிலரே, ”முத்தையா தான் அந்த அநியாத்தை செய்தார்” என ஊடகத்தினர் சிலரிடம் கூறி, வருத்தப்பட்டுள்ளனர் என்பதாகும். ஆகவே அரசு நிர்வாகம் இதய சுத்தியோடு, எந்த அழுத்ததிற்கும் இடம் தராமல், உண்மைக் குற்றவாளியை காப்பாற்றும் போக்கை கைவிட்டு, இனியேனும் நியாயத்தை நிலை நாட்ட வேண்டும்.

வேங்கை வயல்    குடிநீரில் மலம் கலந்த விவகாரம் சம்பந்தமாக  சிபிசிஐடி விசாரணை சரியாக நடைபெறவில்லை என்றும், சிபிஐ விசாரணை கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.   இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மார்ச் 2023ல்   ஓய்வு பெற்ற நீதிபதி சத்ய நாராயணன் தலைமையில் தனி நபர் ஆணையம் ஒன்றை அமைத்து இரண்டு மாதத்தில்  விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டது.

நீதிபதி  சத்யநாராயணன் அவர்கள் ஏப்ரல் மாதம் வேங்கை வயல் கிராமத்திற்கு சென்று ஆதிதிராவிட குடியிருப்பில் உள்ள மலம் கலக்கப்பட்ட     அந்த குடிநீர் தொட்டியை பார்வையிட்டார். ஆனால், அவர் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிட மக்களை அங்கு சந்திக்கவில்லை. அந்த மக்கள் நீதிபதியை சந்திக்க   வந்த போது அவர்கள்   காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பை சந்திப்பதையே முற்றிலுமாக தவிர்த்துவிட்டார் நீதிபதி. இந்தத் தனிநபர் ஆணையம் முகவரியையோ, தொலைபேசி எண்ணையோ   பொது வெளியில் தெரிவிக்கவில்லை.

சத்யநாராயணன்  சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில்   செல்வதாகவும் சிபிஐ விசாரணைக்கு தற்போது தேவை இல்லை என்றும் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார். இவருக்கு இடப்பட்ட வேலை இரண்டு மாதத்திற்குள்  வேங்கை வயல் சென்று விசாரணை செய்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதே! ஏழு மாதங்களாகியும் இடைக்கால அறிக்கை மட்டுமே சமர்பித்துள்ளார். இன்னும் எத்தனை மாதங்களோ, முழுமை அறிக்கை கிடைக்க! அது வரை மக்களின் வரிப் பணத்தில் இருந்து பெரும் தொகை ஓய்வு பெற்ற நீதிபதிக்கும், ஊழியர்களுக்கும் சம்பளமாக செலவழிக்கப்படும்.

ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணன்

தற்போது  பாதிக்கப்பட்ட  ஆதி திராவிட மக்களை விசாரிக்காமல், இடைக்கால அறிக்கை ஒன்றை  நீதிபதி சத்யநாராயணன்சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கை மாநில அரசின்  பரிசீலனையில் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையல் உயர் நீதிமன்றம்   சிபிஐ விசாரணை  கோரும்  பொதுநல வழக்கை செப்டம்பர்14  அன்றைக்கு ஒத்தி வைத்துள்ளது. இந்த தனிநபர் ஆணையம் அமைத்ததே உண்மை வெளிவராமல் மூடி மறைக்க   மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட ஆதிதிராவிட மக்களையே குற்றவாளி கூண்டில்  நிறுத்த முயற்சிக்கும் சிபிசிஐடிக்கு பலம் சேர்க்கவோ என்ற சந்தேகமே வருகிறது.

இவ்வாறாக மாநில திராவிட மாடல் திமுக அரசும், மத்திய ஆரியமாடல் பாஜக அரசும் சென்னை  உயர்நீதிமன்றத்திற்கு அழுத்தம் தந்து இந்த வேங்கை வயலின் எளியதலித் மக்களுக்கு அநீதியை இழைத்துக் கொண்டு இருக்கின்றனர்.

வேங்கை வயல் சம்பவம் காரணமாக சுற்றுவட்டார 20 கிராமத்தின் ஆதிதிராவிட மக்கள் தொடர்ந்து நீதிகேட்டு கருப்பு கொடி ஏந்தி போராடி வருகின்றனர். வேங்கைவயல் சம்பவத்தை ஒட்டுமொத்த இந்தியா மட்டும்மல்ல, உலகமே கூர்ந்து கவனித்து வருகிறது. இன்றைக்கு உண்மையை மூடிமறைக்க திமுக ஆட்சி துணை போனாலும் ஒரு நாள் உண்மை பீறிட்டு வெளியே வந்தே தீரும். அப்போது திமுக மிகவும் அசிங்கப்பட்டு போகும்.

ஆரிய மாடலுக்கு அநீதிக்கு உதாரணமாக  நாம் 2006 ஆம் ஆண்டு  மகாராஷ்டிரா நாசிக் மாவட்டத்தின்  மேலகனில் மசூதிக்கு அருகில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை கூறலாம். இந்த குண்டு வெடிப்பில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்   நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். முதலில், இதை விசாரித்த மகாராஷ்டிரா காவல்துறை சில இஸ்லாமிய இளைஞர்களை கைது செய்தது. ஆனால், பின்னர் இந்த வழக்குதேசிய புலனாய்வு அமைப்பிற்கு   மாற்றப்பட்டு விசாரணை மேற்கொண்ட போது இதில் ஈடுபட்டது இந்து தீவிரவாதிகள் என்ற உண்மை வெளிவந்தது.  இதில் முதல் குற்றவாளி பிரகையா தாக்கூர் என்ற இந்து பெண் சன்னியாசி.

தமிழ்நாட்டில் திராவிட மாடலும், ஆரிய மாடலும் சேர்ந்த இரட்டை ஆட்சி நடக்கின்றது. இதற்கு சிறந்த உதாரணம் வேங்கை வயலில் ஆதிதிராவிடர் குடியிருப்பில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளியை காப்பாற்ற செய்யப்படும் தகிடுதத்தங்களாகும்!

கட்டுரையாளர்;  பா.பாலமுருகன் IRS

துணை ஆணையாளர்

சரக்கு மற்றும் சேவைவரித் துறை

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time