மறக்கக் கூடாத மாமனிதர் புலவர் செ.ராசு!

-சாவித்திரி கண்ணன்

60 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வெட்டு, செப்பேடு, ஓலைப் பட்டயம், ஓலைச்சுவடி, இலக்கியம் வழியாக தமிழ் தொல்குடிகளின் வரலாற்றை  நூற்றுக்கு மேற்ப்பட்ட நூல்களின் வழியாக அகில உலகிற்கு அள்ளித் தந்த கல்வெட்டறிஞர் புலவர் செ.ராசு  மறைந்தாலும், நாம் உத்வேகத்தோடு பயணிக்கதக்க பாதைகளை காட்டிச் சென்றுள்ளார்.

மன்னர்கள் வரலாற்றை ஆய்வு செய்து வந்தோர் மத்தியிலே, மக்கள் வரலாற்றை ஆய்வு செய்து ஆவணப்படுத்தியவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. இலக்கியங்கள் வழியாக மட்டுமே வரலாற்றை அறிவதைக் கடந்து, வாழ்விட ஆராய்ச்சி வழியாக கண்டறிய முற்பட்டவர். தளாராத மொழிப் பற்றும், ஊக்கம் குன்றாத தொல்லியல் ஆய்வுகளுமாக வாழ்ந்து, தமிழ் சமூகத்தின் அளப்பரிய பெருமைகளை அகிலத்திற்கு சொல்லிய வண்ணம் இருந்தார்.

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் அந்தக் காலத்து வித்துவான் படிப்பை நிறைவு செய்தவர். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம் என்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இந்த ஆய்வு தமிழ் சமூகத்திற்கு பல புதிய திறப்புகளைத் தந்தது குறிப்பிடத்தக்கது.

1959 -ல் ஈரோட்டில் தமிழாசிரியர் பணியைத் தொடங்கி, 1980-82ல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் பணிபுரிந்தார். பிறகு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 1982ல் இணைந்து செயலாற்றிய காலகட்டம் மிக முக்கியமானது. அந்த சந்தர்ப்பத்தில் கல்வெட்டு, தொல்லியல் துறையில் துறைத் தலைமைப் பொறுப்பை ஏற்று தீவிரத்துடன் ஆய்வுப் பணியை மேற்கொண்டவர். இவரது நுட்பமான தமிழ்ப் புலமையானது தமிழ் ஆவணங்களைப் பிழையின்றி, பொருள் மாறுபடாமல் உணர்ச்சியுடன் பதிப்பிப்பதில் உதவிகரமாக இருந்தது. கல்வெட்டு, செப்பேடு, சுவடி பற்றிய அரிய தகவல்கள் கிடைத்தவுடன் குழந்தை போல குதூகலம் அடைவார். உடனே அவற்றை ஆய்வு செய்து செய்திகளாகவும், கட்டுரைகளாகவும், நூல்களாகவும் எழுதி வெளிக் கொண்டு வரும் வரை அவரது ஆர்வம் குன்றாது. பல கல்லூரிகளில் புலவர் செ.ராசுவின் முன் முயற்சியால் தொல்லியல் அருங்காட்சியகம் உருவாகியுள்ளது.

சமகாலப் பிரச்சினைகளான கேரளத்திற்கும், தமிழகத்திற்குமான உரிமை போராட்டமாக விளங்கும் கண்ணகி கோவில் குறித்த தெளிவான வரலாற்று புரிதலை வேண்டுவோர், கண்ணகி கோட்டம் அவரது நூலைப் படித்தால் விளக்கம் பெறலாம்.

இலங்கைக்கும் நமக்குமான கச்சத்தீவு பிரச்சினை குறித்த முழுமையான வரலாற்றுத் தகவல்களை நூல் வடிவில் வெளிக் கொண்டு வந்த பெருமை புலவர். செ.ராசு அவர்களையே சாரும். இவரது ஆய்வுக் கட்டுரைகள் கொங்கு, சுவடி, ஆவணம், தேனோலை, கொங்குமலர் உள்ளிட்ட இதழ்களில் வெளியான போது பெரிதும் பேசப்பட்டன.

‘கொங்கு நாட்டுப் பட்டக்காரர்களும், பாளையக்காரர்களும்’ என்ற என்ற இவரது ஆய்வு நூல் ஒன்று போதும் கொங்கு மண்டலம் என்றென்றும் வரைக் கொண்டாட! கொங்கு நாட்டை 17 – 19 ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சிபுரிந்த 40 வட்டாரத் தலைவர்களைப் பற்றி  ஆங்கிலேயர் காலத்தில் கர்னல் மெக்கன்சி தொகுத்த ஆவணத் தொகுப்பை ஆதாரமாகக் கொண்டு  இந்த நூல் உள்ளது. இவ் வட்டாரத் தலைவர்களில் பாளையக்காரர்களில் பெரும் பகுதியினரும், பட்டக்காரர்களில் ஓரளவிலுமாக சரி பாதிப்பேர் பேர் நாயக்கர் என்ற பட்டம் கொண்டவர்களாக உள்ளனர் என்பதைக் கவனப்படுத்தினார். அதாவது, நாயக்கர் என்பது அன்றைய நிலையில் படையை நடத்தும் அந்தந்த பகுதி தலைவர்களுக்கு விஜய நகர பேரரசால் வழங்கப்பட்ட பட்டம் என நிறுவினார். இந்த நாயக்கர் பட்டம் பெற்றவர்களில் பல சமூகத்தினரும் அடங்குவர். பிராமணர், வேடர், யாதவர், பலிஜர், வேளாண் சாதியினர் எனப் பலரும் போர்த் தொழிலால் நாயக்கர் பட்டம் பெற்றனர். பிற்காலத்தில் தான் அது சாதி அடையாளமாகிப் போனதென்றார். மற்ற சிலர் கவுண்டர், மன்றாடி, வாணவராயர் என்ற பட்டங்களைப் பெற்று இருந்ததையும் குறிப்பிடுகிறார்.  அந்தந்த வட்டார சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தத் தலைவர்கள் நீர் நிலைகள், அணைகள் அமைத்ததோடு, மகக்ளைடையே நிலவும் சச்சரவுகளைத் தீர்த்து வைத்து பெரும் பங்காற்றியுள்ளதை இந்த ஆவணங்கள் மூலம் தெரியப்படுத்தினார்.

பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த  மாவீரன் தீரன் சின்னமலையையும் அவருடன் இருந்த மாவீரர்களைப் பற்றிய அரிய செய்திகளையும் தமிழ் கூறும் நல்லுகம் அறியத் தந்ததில் புலவர் செ.ராசுவின் பங்களிப்பு முக்கியமானது. 200 ஆண்டுகள் கடந்த நிலையில், கொங்கு மண்டலமே போற்றும் தலைவர்களாக தீரன் சின்னமலை, குணாளன், பொல்லான் உள்ளிட்டவர்களை. ‘சின்னமலை கும்மி’ என்கிற கலைப்பாடல் வழியாகத் தான் அறிந்திருந்தனர். ஆனால், கல்வெட்டுகள், செப்பு பட்டையங்கள் மூலம் தீரனின் வரலாற்றை முழுமையாக வெளிக் கொண்டு வந்தவர் கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு என்பது காலத்திற்கும் அவர் பெருமையை பறை சாற்றும்.

இவருடைய  கொங்கு நாடு, கொங்கு நாட்டுச் செப்பேடுகள், Kongu in Sangam Time, கொங்கு கல்வெட்டுகள், கொங்கு குல வரலாறு, கொங்கு நாட்டில் ஊராட்சி முறை, போன்ற நூல்கள்  கொங்கு மண்டலத்தின், பூகோள அமைப்பு, வேளாண்மை மற்றும் நெசவு உள்ளிட்ட பிற தொழில்கள், கொங்கு மக்களின் பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கம், நிர்வாகத் திறமை, வீரம், விருந்தோம்பல் ஆகியவற்றை சுவைபட விளக்குவதாக அமைந்துள்ளன!

கொடுமணல் ஆய்வுகள் இன்று உலக அளவில் பேசப்படுகின்றன. அதற்கு அடித்தளமிட்டவர் புலவர் ராசுவே! இவர் 1979ல், ஈரோடு மாவட்ட கலெக்டர் தியானேஸ்வரனுடன், கொடுமணலில் நடந்த கோவில் விழாவுக்கு சென்றிருந்த போது, இவர் ​​நொய்யல் பகுதியில் சுற்றித் திரிந்த போது பழங்கால பாசிமணியும், கருப்பட்டி செம்பும் அங்கு கிடப்பதைக் கண்டெடுத்தார். அதை  ​​தொல்லியல் துறை அன்றைய இயக்குனர் நாகசாமியிடம் காட்டியுள்ளார். அதைப் பார்த்து வியந்த அவர், இந்த அரிய பொருட்கள் எங்கிருந்து கிடைத்தது என்று விசாரித்த தெரிந்து கொண்டதன் மூலம் 1985 முதல் கொடு மணல் ஆய்வுகள் தொடங்கி இன்றும் நடந்து கொண்டுள்ளன. ‘நொய்யல் ஆற்று நாகரீகம்’ என்ற இவரது ஆய்வு அறிக்கை தான் நொய்யல்கரை நாகரீகம் வெளியுலகிற்கு வர வித்திட்டது எனலாம். 1979 முதல் 1980 வரை  நொய்யல் ஆற்றங்கரையில் புலவர் செ.ராசுவே மேற்பரப்பு ஆய்வுகளை மேற்கொண்டு, அந்த ஆய்வுகளை 1981ல் மதுரையில் நடந்த தமிழ் மாநாட்டில் கட்டுரையாக சமர்ப்பித்தார். அது தமிழக அரசின் அரசிதழிலுமே வெளியானது. இதன் பின்னர் 1985ஆம் ஆண்டு முதல் கொடுமணலில் 10 க்கு மேற்பட்ட அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

இவரது “கொங்கு குல மகளிர்” என்னும் அரிய நூல், பல்வேறு கல்வெட்டுச் சான்றுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் மற்றும் வழித் தோன்றல்களை ஊர் ஊராக நேரடியாகச் சென்று அவர்களின் வாயிலாகக் கேட்டு தொகுத்து வழங்கப்பட்டுள்ள அருமையானதொரு வரலாற்று ஆவணம். இந்த நூலில் பல்வேறு துறைகளில் ஆண்களுக்கு நிகராக மட்டுமின்றி, சில துறைகளில் ஆண்களுக்கு மேலாகவும் கொங்கு நாட்டுப் பெண்கள் சிறந்து விளங்கியதை வரலாற்றுச் செய்திகள் வழி ஆவணமாக்கியுள்ளார் புலவர் செ.ராசு.

கொங்கு மண்டலம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதுமே திரிந்து உள்ளூர் ஆவணங்களை தொகுத்ததில் இவர் அளவிற்கு இன்னொருவரை சொல்ல முடியாது. சின்னஞ் சிறு கிராமங்களின் வரலாற்றைக் கூட வெகு சிரத்தையாகத் தொகுத்து, அவ்வூரின் கடந்தகாலப் பெருமைகளை பதிவு செய்தவர். இந்த வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள்,  சற்றேறக்குறைய 500 செப்பேடுகள், 850 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளையும் ஆய்வு செய்து பதிவு செய்துள்ளார்.

தமிழ்ச் சமூகம் உள்ளவரை புலவர் செ.ராசுவின் படைப்புகள், ஆய்வுகள் வருங்காலத் தலைமுறைக்கு மேன்மேலும் ஆய்வுகளை தொடர்வதற்கு உந்து சக்தியாக விளங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time