பொறியில் சிக்கிய ஊழல் மன்னன் பொன்முடி!

-சாவித்திரி கண்ணன்

அரசியல்வாதிகள் ஊழல் வழக்கில் தப்பித்து விடுவார்கள். அவர்களை தண்டிப்பது அரிதினும் அரிது என்பதை சுக்கு நூறாக்கும் விதத்தில் மாற்றங்கள்! எத்தனையோ ஊழல்கள்! எத்தனையோ வழக்குகள்! எல்லாம் வெறும் சலசலப்புடன் முடிந்தன!  ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் தப்பிக் கொள்ள முயன்று  வசமாக மாட்டிக் கொண்டார்!

நான் பார்த்ததிலேயே மிக மோசமான முறையில் விசாரிக்கப்பட்ட வழக்கு இது தான் என பொன்முடி அவர் மனைவி விசாலாட்சி உள்ளிட்ட ஐவர் சொத்துகுவிப்பு ஊழல் தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

இன்றைய உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஆனந்த் வெங்கடேஷ் பக்திமான் என்றலும் முற்போக்கான பல தீர்ப்புகளை வழங்கியவர். பாதிக்கப்பட்ட எளிய மக்களின் வலியை கணக்கில் கொண்டு தீர்ப்புகளை வழங்கி வருபவர். ஆழ்ந்த புத்தக வாசிப்பும், திருக்குறள் மீது பெருமதிப்பும் கொண்டவர். சமரசத்திற்கு இடமில்லாதவர்.

பொன்முடி எத்தனையோ பல ஊழல் வழக்குகளை கவலைப்படாமல் அடுத்தடுத்து சந்தித்து அதில் இருந்து அழகாக வெளிவந்துள்ளார்! ஆனால், இந்த வழக்கிலோ மாட்டிக் கொண்டார்.

அரசு நிலத்தை அபகரித்தவர்:

 1996 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் பொன்முடி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது சைதாப்பேட்டையில், ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் அரசுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை அபகரித்து தனது மாமியார் பெயரில் பங்களா கட்டினார். இது தொடர்பாக அடுத்து வந்த அதிமுக அட்சியில் அவர் மீது வழக்கு ஒன்று நடந்தது. இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, சார் பதிவாளர் புரு பாபு, பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, தற்போதைய சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், கென்னடி, சந்திரசேகரன், கண்ணப்பன், ஸ்ரீகாந்த், சைதை கிட்டு, ஜோதி ஆகிய 10 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கடந்த 2003-ம்ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பொன்முடி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிமன்றம், 2007-ல் வழக்கில் இருந்து பொன்முடியை விடுவித்து உத்தரவிட்டது. அப்போது திமுக ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பிறகு, ஆட்சி மாறியவுடன் இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொன்முடியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கடந்த 2017-ல் ரத்து செய்தது.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை சென்னை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜரத்தினம் உட்பட 90-க்கும் மேற்பட்டோர் சாட்சியம் அளித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் நீதிபதி ஜி.ஜெயவேல் இந்த ஆண்டு ஜுலை 7 ஆம் தேதி  தீர்ப்பு வழங்கினார். ‘‘இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்ட 7 பேர் மீதான குற்றச்சாட்டுகளும் அரசுத் தரப்பில் சரிவர நிரூபிக்கப்படவில்லை’’ என்று கூறி, 7 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்தார்.

இதே போல விடுவிக்கப்பட்ட ஒரு வழக்கில் தான் தற்போது மீண்டும் மாட்டி உள்ளார்!

வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சம் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை சட்டத்தின் 109 பிரிவின் கீழ் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, அவரது மாமியார் பி சரஸ்வதி, பொன்முடியின் நண்பர்கள் மணிவண்ணன், நந்தகோபால் ஆகியோர் மீது 2002-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 228 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு, 318 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

பொன்முடி குடும்ப கல்வி நிறுவனம்

சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் விசாரணை  முழுமையடைந்து கிட்டதட்ட தீர்ப்பு தரும் தருவாயில் அதிரடியாக வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது அதிகாரத்தில் உள்ள அமைச்சர் தொடர்பான இந்த வழக்கு கடைசி நேரத்தில் இப்படி மாற்றப்பட்டதுக்கு பின்பற்றிய நடைமுறைகள் பொதுவாக அனைத்து தரப்பிலும் சந்தேகிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளார்.

சமரசமற்ற நீதிபதி;

அதுமட்டுமின்றி, இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடும் செய்யவில்லை… என்பதால் லஞ்ச ஒழிப்புதுறையை ஆட்சியாளர்கள் கட்டுப் படுத்துகிறார்கள் என்பதும் தெரிய வந்தது. இந்த சூழலில் எம்பி,எம்.எல்.ஏக்கள் தொடர்பான ஊழல்களை விசாரிக்கும் பிரிவின் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை தானே வலிந்து எடுத்து விசாரிப்பதற்கான காரணத்தை விளக்கி 17 பக்க அறிக்கை தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு தெரியப்படுத்தி உள்ளார்.

பொன்முடி குடும்பத்தின் பொறியியல் கல்லூரி

அதில் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பகுதி வழக்கு விசாரிக்கப்பட்டு முடியும் தருவாயில் வேலூருக்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன? இரு நீதிபதிகளைக் கொண்ட நிர்வாகக் குழு இந்த மாற்றத்தை நிகழ்த்தி உள்ளது. நிர்வாக ரீதியில் கீழமை நீதிமன்ற அலுவல்களில் தலையிட உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதிகாரம் எதையும் சட்டம் வழங்கவில்லை. எனவே, அவ்வாறு செய்யும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை.

இந்த வழக்கின் இறுதி வாதங்கள் எழுத்து வடிவில் ஜூன் 23ம் தேதி வேலூர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கே நாட்களில் 172 சாட்சிகளின் பதிவை பரிசீலித்ததோடு, 381 ஆவணங்களை சரிபார்த்து 28ம் தேதி , 228 பக்க தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார். அரசியல் சாதன நீதிமன்றங்களில் இருப்பவர்கள் கூட இத்தகு சாதனையை நிகழ்த்த கனவு மட்டுமே காண முடியும். இந்த தீர்ப்புக்கு பின் ஜூன் 30 ம் தேதி  நீதிபதி ஓய்வு பெற்றுள்ளார். வேலூர் நீதிமன்ற வழக்கின் விசாரணை கோப்புகளை ஆய்வு செய்த போது  என் சந்தேகங்கள் சரி என்பது தெரியவருகிறது” என்று தன் உத்தரவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ்

எத்தனையோ ஊழல்களில் இருந்து தொடர்ந்து தப்பித்தவர் பொன்முடி! அதை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது! ஆனால், ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், நீதி பரிபாலனத்தையே கேள்விக்கு உள்ளாக்கும் வகையில், நீதித் துறைக்குள்ளேயே கறுப்பு ஆடுகளை உருவாக்கி, தப்பிய நிலையில் மீண்டும் பிடிபட்டுள்ளார்.

அன்றே தகுதி இழந்திருப்பார்;

இதே போல மற்றொரு வழக்கிலும் அதிரடி ரணகளம் செய்து பொன்முடி தப்பித்து உள்ளார் என்பதும் கவனத்திற்கு உரியது. 2006 முதல் 2011 வரையிலான கால கட்டத்தில், திமுகவின் உயர்கல்வித்துறை அமைச்சராக தமிழகத்தில் பொறுப்பு வகித்த பொன்முடி மீது 2011ஆம் ஆண்டு ஊழல் வழக்கு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை காவல்துறை கண்காணிப்பாளர் கன்னியப்பன், பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பின்னர் விழுப்புரம் ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இவ் வழக்கில் 50 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆந்திரமாநில பத்திரப்பதிவு பதிவாளர், வங்கி அலுவலர்கள் உள்ளிட்ட 37 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டனர். அரசு தரப்பு வழக்கறிஞர் சண்முக வேலாயுதம் போதுமான ஆதாரங்களை எடுத்து வைக்காமல் சற்றே ஜகா வாங்கியபடி இருந்தார்.

 

ஐந்தாண்டு விசாரணை முடிவில் அடுத்த தேர்தல் நெருங்கும் சமயம் இது தொடர்பான வழக்கில் விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுந்தரமூர்த்தி  ஏப்ரல் 18-2016  பிறப்பித்துள்ள உத்தரவில், ’’குற்றச்சாட்டுகளை உறுதி செய்யத் தேவையான ஆதாரங்கள் இல்லை’’ என்று தெரிவித்து, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரையும் விடுவித்தார். இதில் தண்டனை வழங்கப்பட்டிருந்தால், அவர் தேர்தலில் நிற்கும் தகுதியை அன்றே இழந்திருப்பார்.

2006 முதல் 2011 வரையிலான காலக்கட்டத்தில் நடந்த திமுக ஆட்சியில், தமிழக அமைச்சரவையில், தற்போதைய உயர் கல்வித் துறை அமைச்சரான பொன்முடி கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்தார். அந்த அதிகாரத்தில் தன் மகனுக்கு செம்மண் குவாரியில் மணல் அள்ள அளிக்கப்பட்டஅனுமதியை அதிரடியாக வழங்கினார். அந்த அனுமதியை துஷ்பிரயோகம் செய்து அவரது மகன் அனுமதிக்கப்பட்ட அளவையும் மீறி, 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரி செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக மற்றொரு வழக்கு நடந்து வருகிறது.

பாலி டெக்குனிக்குகள்! பொன்முடி மகன் கெளதம சிகாமணி

”இதெல்லாம் சர்வ சாதரணம்! விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் எண்ண முடியாத அளவுக்கு எக்கச்சக்க சொத்துக்களை அமைச்சர் பொன்முடி வாங்கி குவித்துள்ளார்” என உடன்பிறப்புகளே சொல்கிறார்கள்! வெளி நாட்டில் பல கோடிகள் முதலீடு செய்துள்ள விவகாரம் அமலாக்கத் துறை கைதில் வெளியானது. அதிலும்விடுவிக்கப்பட்டார்.

சூர்யா கல்வி குழுமம் என்ற பெயரில் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், பாலி டெக்குனிக்குகள் என பகாசூரக் கல்வி வியாபாரத்தில் இருக்கும் ஒரு அமைச்சரே கல்வித் துறைக்கு அமைச்சராக இருப்பது தமிழ்நாட்டில் மட்டுமே பார்க்க முடிந்த ஒரு விநோதமாகும். சென்ற பதவி காலத்திலேயே துணைவேந்தர் பதவி தொடங்கி பேராசிரியர்கள் பணியிடம் வரை அனைத்துக்கும் லஞ்சம் வாங்குவதில் பேர் போன பொன்முடிக்கே மீண்டும் அதே உயர் கல்வித்துறையை முதல்வர் ஸ்டாலின் தந்திருக்கக் கூடாது. இது போன்ற ஊழல் பெருச்சாளிகளை கூட வைத்துக் கொண்டு பாஜகவை எப்படி திமுகாவால் எதிர்க்க முடியும்?

பல ஊழல்கள்! பல ஆண்டுகள்! பல்லாயிரம் கோடிகள்! ஆனால், வெறும் 1.36 கோடிகளில் மாட்டிக் கொண்டார்! பல நாள் திருடன், ஒரு நாள் அகப்பட்டே தீர வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time