மாணவர்களிடையே அதிகரிக்கும் சாதி மோதல்கள்!

-சாவித்திரி கண்ணன்

சாதி ஆதிக்க உணர்வு தற்போதைய தமிழ்ச் சமூகத்தில் எவ்வளவு மேலோங்கி வருகிறது என்பது நடுங்க வைக்கும் நாங்குநேரி சம்பவத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. மாணவர்களிடையே சாதி ஆதிக்க உணர்வு தூக்கலாக இருப்பதன் பின்னணி என்ன? இதை வளர்த்தெடுப்பது யார்? இதில் யார்யாருக்கெல்லாம் பொறுப்பு இருக்கிறது..?

பொதுவாக தமிழகமெங்கும் மாணவர்களிடையே சாதி மோதல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இத்தகு சாதி வெறியர்களை மதவெறியர்களாக மாற்றுவது மிக எளிது! என்ன செய்யப் போகிறோம்?

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அரசு மேல் நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவன் சின்னதுரையும், அவன் தங்கையான சிறுமியும் உடன்படிக்கும் மாணவர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாதன் பின்னணியில் சாதி ஆதிக்க உணர்வு மேலோங்கி இருந்துள்ள செய்தி தமிழ்ச் சமூகத்திற்கே தலைக் குனிவைத் தந்துள்ளது. மருத்துவமனையில் குற்றுயிரும், குலை உயிருமாய் இருப்பது அந்த இளம் பிஞ்சுகள் மட்டுமல்ல, நாம் சவடால் பேசும் சமூக நீதியும் தான்!

இதற்கு மாணவர்களைக் காட்டிலும் இந்த சமூகத்தை தான் குற்றம் சாட்ட வேண்டும். இந்த சமூகத்தில் தங்கள் பெற்றோர்களிடம், உறவினர்களிடம், ஆசிரியர்களிடம்.. இன்னும் திரைப்படங்களில் இருந்தெல்லாம் பெற்ற சாதி நஞ்சு தான் அந்த பிஞ்சு நெஞ்சங்களில் நின்று நிலைபெற்று ஆட்டுவித்துள்ளது.

பொதுவாக தென் மாவட்டங்களில் இருக்கும் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் சாதி இந்துக்களால் உருவாக்கப்பட்டவை. அங்குள்ள நிர்வாகிகள் தொடங்கி ஆசிரியர்கள் வரை இந்த சாதி உணர்வு நீருபூத்த நெருப்பு போல உள்ளூக்குள் கழன்று கொண்டே இருப்பதைக் காணலாம். அந்த வகையில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்விக் கூடங்களில் பாகுபாட்டோடு தான் நடத்தப்பட்டு வருகிறார்கள்!

பட்டியலின மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்ய நிர்பந்திக்கும் ஆசிரியர்கள்,

தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களை தனியாக உட்கார வைக்கும் ஆசிரியர்கள்,

‘’உங்களுக்கெல்லாம் படிப்பே வராதுடா’’ என சாதியைக் குறிப்பிட்டு திட்டும் ஆசிரியர்கள்,

மாற்று சாதி மாணவர்களுக்கு மதிப்பெண்ணை குறைக்கும் ஆசிரியர்கள்…

என பலதரப்பட்ட குறைகள், கற்பிக்கும் அசிரியர்களிடையே நிலவும் சமூகத்தில், மாணவர்களிடம் அந்த சாதி உணர்வு தொற்றிக் கொள்ளாமல் என்ன செய்யும்? தமிழகத்தில் ஆண்டுதோறும் அறுபது முதல் எழுபது வழக்குகள் மாணவர்கள் சாதிமோதல் தொடர்பாக பதிவாகிறது என்பது சாதி நஞ்சு எவ்வளவு வீரியமாக சமூகத்தில் பரவிவருகிறது என்பதன் அடையாளமாகும்!

“கோட்டாவுல் வந்த கோஷ்டிகள்’’ என்றும், ‘’சத்துணவுக்காக ஸ்கூல் வந்தவர்கள்”, என்றும் நலிந்த சாதி மாணவர்கள் கேலி, கிண்டலுக்கு ஆளாவது நீண்ட வருடங்களாகவே உண்டு. ஸ்காலர்ஷிப் பெறும் தலித் மாணவர்களை பார்த்து நமட்டு சிரிப்பை உதிர்ப்பது, அவர்களோடு சேர்ந்து உட்காருவதை கவுரவ குறையாக பாவிப்பது, பேசிப் பழகவே தகுதியற்றவர்கள் என புறக்கணிப்பது எல்லாம் பலகாலமாகவே தொடர்வதற்கு நாம் அனைவருமே பொறுப்பேற்க வேண்டும்.

இப்படி பல்வேறு வகைகளில் தலித் மாணவர்கள் அநீதியாக நடத்தப்படுவதால், மாணவர் குழாம் தெளிவாக சாதிய ரீதியாக பிரிந்திருப்பதும் அவர்களுக்குள் பல சர்ச்சைகள், சண்டைகள் வருவதும் தொடர் நிகழ்வாகவே உள்ளன. இதில் பாதிப்புகளை அதிகம் பெறுவது பலம் குறைந்த பிரிவினரே!

1990 களில் நடந்த கொடியன் குளம் கலவரத்தை ஒட்டி சில தலித் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளை விட்டு நீக்கம் செய்யப்பட்டு எதிர்காலத்தை தொலைத்தனர்! அப்போது இந்த அவலம் போதுமான கவனம் பெறாமலே கடக்கப்பட்டது!

2008 ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கும் மற்றொரு பிரிவு மாணவர்களுக்கும் ஏற்பட்ட படுபயங்கர மோதல் சம்பவம் தொலைகாட்சியில் லைவ்வாக ஒளிபரப்பாகி பார்ப்பவர்களை குலை நடுங்க வைத்ததை மறக்க முடியாது.

2008 ல் சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறை.

சென்ற ஆண்டு அம்பாசமுத்திரம் அடுத்துள்ள பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல் நிலைப்பள்ளியில் தங்கள், தங்கள் சாதியை அடையாளப்படுத்தும் விதமாக கயிறு கட்டி வந்த இரு பிரிவு மாணவர்களிடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவியுள்ளது. இதில் ஒரு பிரிவு மாணவனான செல்வ சூர்யா தனியாக சென்று கொண்டிருப்பதை அறிந்து எதிர்தரப்பு சாதி மாணவர்கள் கூட்டாக வந்து அவனை கொடூரமாகத் தாக்கியதில் குற்றுயிரும், குலை உயிருமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் இழந்தான். சாதிக்கயிறு, சாவுக்கயிறாக மாறியது!

கடலூர் அடுத்த வே.காட்டுப்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் சாதி ஆதிக்க மாணவர்கள் தங்களை தொடர்ந்து தாக்குவதாக ஒரு பிரிவு மாணவர்கள் பெற்றோர் மூலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து காவல்துறை பள்ளி வாசலில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட நிலையில், பக்கவாட்டு சுவர் ஏறி பள்ளிக்குள் குதித்த சாதி ஆதிக்க மாணவர்கள் ஒரு வகுப்பறைக்குள் நுழைந்து கடும் தாக்குதல் நடத்தி மீண்டும் சுவர் ஏறித் தப்பித்தனர்.

அக்டோபர் 2021 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் சைக்கிள் நிறுத்தும் இடத்தில், ஒரு மாணவன் மற்றொரு மாணவனிடம், ‘’உங்க ஆளுங்கெல்லாம் இங்க நிறுத்தக் கூடாது’’ என அதட்டியதையடுத்து இரு சாதி மாணவர்களிடையே பெரும் மோதலே வெடித்து பள்ளி இருக்கும் சாலையே போர்க்களமான செய்தி வெளியானது.

இவையாவும் வன்முறைக்கு அஞ்சாத ஒரு இளம் தலைமுறை சாதி வெறியோடு உருவாகியுள்ளதைத் தான் காட்டுகிறது.

1996 ல் அன்றைய திமுக அரசு நெல்லை மாவட்டத்தில் காவல்துறையில் நாடார், தேவர், தாழ்த்தப்பட்ட சமூகம் சார்ந்த அதிகாரிகளை நியமிப்பதை நிறுத்தி வைத்தது. ஏனெனில் காவல்துறையில் பிரச்சினையை அணுகுவதில் இருந்த வெளிப்படையான பாகுபாடுகளே அதற்கு காரணம். பின்னர் அதிமுக ஆட்சியில் அது தளர்த்தப்பட்டுவிட்டது.

தற்போது நாங்கு நேரி சம்பவத்தைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் நீதிபதி சந்துருவைக் கொண்டு ஒரு கமிஷனை அமைத்துள்ளார். அது தொடர்பான முதல்வர் அறிக்கை குறிப்பிடுவதாவது;

இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத்‌ தமிழ்நாட்டின்‌ நலனுக்கு உகந்ததல்ல. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமானப்‌ பிரச்சினை என்பதால்‌, இதில்‌, அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும்‌, பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப்‌ பிரிவினைகள்‌ இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்தும்‌, அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஒய்வு பெற்ற நீதியரசர்‌ திரு. கே.சந்துரு அவர்கள்‌ தலைமையில்‌ ஒரு நபர்‌ குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளேன்‌. இந்தக்‌ குழு, மேற்படி பொருள்‌ தொடர்பாக கல்வியாளர்கள்‌, மாணவர்கள்‌, பெற்றோர்கள்‌, சமூக சிந்தனையாளர்கள்‌, பத்திரிகைத்‌ துறையினர்‌ என பல்வேறு தரப்பினரிடமிருந்தும்‌ கருத்துக்களைப்‌ பெற்று அதனடிப்படையில்‌ அரசுக்கு விரைவில்‌ அறிக்கை சமர்ப்பித்திடும்‌” என முதல்வர் அறிக்கை தெரிவிக்கிறது.

நல்லது! அறிக்கை கேட்டால் மட்டும் போதாது. அறிக்கை தரும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் மனோதிடம் வேண்டும். அதற்கான சமூக சூழல்கள் கட்டமைக்கப்பட வேண்டும்.

முதலில் சாதி பார்த்து வேட்பாளரை நிறுத்தும் போக்கை கட்சிகள் கைவிட வேண்டும். சாதிகளைக் கடந்த பொது நலச் சிந்தனையுள்ளவர்களை நிறுத்தும் ஆன்ம பலம் வேண்டும். இப்படிப்பட்டவர்கள் எம்.பி, எம்.எல்.ஏக்களாக அதிகாரத்திற்கு வரும் போது தான் சாதி உணர்வு படிப்படியாக மட்டுப் போகும். சமூகத்தில் சாதி உணர்வுகள் உயிர்ப்போடு இருப்பதற்காக காரணிகள் சகல தரப்பிலும் கண்டறியப்பட்டு, அதைக் களைவதற்கான குறிக்கோளோடு நவீன பொதுச் சமுதாயம் கட்டமைக்கப்பட வேண்டும்.

திரைப்படங்களில் சாதி பெருமித உணர்வுகளை வலுவூட்டும் காட்சிகள், வசனங்கள், பாடல்கள் தவிர்க்கப்பட வேண்டும். மனித நேயத்தின் உன்னதத்தை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களும், வசனங்களும், பாடல்களும் பரவலாக வெளிவர வேண்டும். சாதியைக் கொண்டு ஆதாயங்களை அறுவடை செய்யும் மனநிலையைப் பேணிக் கொண்டே சாதிமறுப்பும், முற்போக்கும் பேசுவது போலித்தனம் என்பதை நாம் உணர வேண்டும். ‘சாதி மறுத்த மனித நேயமே பெருமைக்குரியது’ என்ற புரிதல் உருவாக்கப்பட வேண்டும் என்றால், அதற்கு வாழும் முன்னுதாரணங்களாக சிலரேனும் முன்வர வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time