தமிழ்த் தேசியமா? பிரித்தாளும் சூழ்ச்சியா?

தமிழ் நிலத்தில் வாழ்வோரிடையே பல முரண்களை உருவாக்கி, பிரித்தாளும் சூழ்ச்சியாக இங்கே தமிழ்த் தேசியம் கட்டமைக்கப்பட்டு வருகிறது! தமிழ்த் தேசியம் என்ற பெயரால் உருவாக்கப்படும் ஜாதியப் பெருமிதங்கள், திராவிட வெறுப்பு மற்றும் வன்மத்தின் பின்னணி என்ன? அவற்றின் மூலம் என்ன? நோக்கம் என்ன..?

நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்தில் பேசிய திமுக எம்பி கனிமொழி, ஆளும் பாஜகவை பார்த்து நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்து,  ‘அது சோழ மன்னனுடையது’ என்றீர்கள். கண்ணகியின் கோபத்தால் பாண்டியனின் செங்கோல் தகர்ந்த கதை தெரியுமா உங்களுக்கு? சாதாரண மக்களை கைவிட்ட போது செங்கோல் எரிந்தது! எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தைப் படியுங்கள். அதில் உங்களுக்கான பாடம் நிறைய உள்ளது” என்று காட்டமாக கூறினார்.

அதற்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் மறைந்த சிலம்பு செல்வர் மா. பொ. சிவஞானம் அவர்களை மேற்கோள்காட்டி, ”சிலப்பதிகாரம் நாம் திராவிடர் அல்ல, தமிழர்கள்! நமது தாயகத்தின் பெயர் திராவிடம் அல்ல தமிழகம்! இதன் எல்லை விந்திய மலை அல்ல, திருவேங்கடம் (திருப்பதி)! மற்றும் தமிழகத்தில் வாழும் அந்தணர்கள் (பிராமணர்கள்) ஆரியர்கள் அல்லர், தமிழர்கள்! நமது பண்பாடு,பழக்க வழக்கங்கள் போன்றவை வேங்கடத்திற்கு வெளியே வாழ்பவர்களில் இருந்து வேறுபட்டது’’ என்று கூறுவதாக கூறினார். நிர்மலா சீதாராமனனின் இந்த கோட்பாட்டை நாம் பாஜகவின்   கோட்பாடாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில், சிலப்பதிகராத்தில் திராவிடம் பற்றி எதுவும் கூறப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், வேறு பல இலக்கியங்களில் திராவிடம் என்பது கூறப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம் தமிழ் நிலம் திணைகளாக இயற்கை சூழல்களுக்கு ஏற்ப இருந்ததை தான் இயம்புகிறது. மேலும், தென்றமிழ் நன்னாடு என்று தமிழ் நாட்டை புகழ்கிறது! பாஜகவினரோ, ”தமிழ்நாடு என சொல்லாதீர் தமிழகம் எனச் சொல்வீர்” எனக் கூறுபவர்கள்!  தமிழ்நாட்டில் உள்ள சில தமிழ் தேசியவாதிகளும் இதற்கு ஒத்த ஒரு கோட்பாடை தான் முன் வைக்கின்றனர். ஆனால், சிலப்பதிகாரத்தில் ‘ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்’ எனக் கூறப்பட்டிருப்பதை வசதியாக மறந்து பேசுகிறார்கள்!

2009 இலங்கை உள்நாட்டு போரில், இந்தியா அரசானது இலங்கைத் தமிழர்களை முழுவதுமாக  கைவிட்டு விட்டது என்ற ஆதங்கம் இளம் தமிழர்களிடையே உள்ளது. இதன் விளைவாக 2009 ஆம் ஆண்டுக்கு பின் தமிழகத்தில் தமிழ் தேசிய உணர்வு  பெருமளவில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் வளர ஆரம்பித்தது. இந்த தமிழ் தேசிய உணர்வு காங்கிரஸ் கட்சிக்கும், இந்திய தேசிய உணர்வுக்கும் எதிரான போக்கை மேற்கொண்டது. இந்த தமிழ் தேசிய உணர்வை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பாஜக திட்டமிட்டது. அன்றைக்கு ஜெயலலிதாவும் திமுகவை எதிர்க்க, தமிழ் தேசியவாதிகளை மறைமுகமாக ஊக்குவித்தார். இதற்காக இவர்கள் பல போலித் தமிழ் தேசியவாதிகளை களத்தில் இறக்கினர். இவர்கள் நோக்கம் திராவிடத்தையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் ஒழிப்பதாகும்.

இவர்களுடைய தமிழ் தேசியம் திராவிடத்திற்கு எதிரானதாகும். திராவிடமே ஒரு மாயை, திராவிடம் என்று ஒன்றும் இல்லை என்பது இவர்களுடைய வாதம். திராவிடத்திலிருந்து  தமிழ் தேசியத்தை  பிரிப்பதனால் தமிழ் நாட்டில் தமிழர், தமிழர் அல்லாதவர் என்ற ஒரு பிரிவு ஏற்படும். குறிப்பாக தமிழ்நாட்டில் பலநூறு ஆண்டுகளாக வாழும் தெலுங்கர், கன்னடம் பேசும் மக்களை இவர்கள் ”வந்தேறிகள்” என்றும், ‘தமிழர்களின் நலனுக்கு எதிரானவர்கள்’ என்றும், சித்தரிக்கின்றனர். தமிழ் தேசியம் என்ற பெயரில் தமிழர்களை மற்ற திராவிடர்களிடம் இருந்து பிரிக்கும் இவர்கள், தமிழர்களிடையே ஜாதி வேறுபாட்டை நியாயப்படுத்தி, ஊக்குவிக்கின்றனர். ஆனால், ஜாதி என்று கூறாமல் ‘குடிகள்’ என்று கூறுகின்றனர்.

தமிழ் குடிகள் என்று இவர்கள் கூறுவது தமிழ்நாட்டில் உள்ள ஜாதிகளைத் தான். அந்த வகையில் ‘பறையர் குடி’, ‘பள்ளர் குடி’, ‘கள்ளர் குடி’  ‘வன்னிய குடி’ என்றேல்லாம் ஜாதிகளுக்கு தமிழ் சார்ந்த புது அங்கீகாரம் தருகிறார்கள்!  இந்த குடிகள், ஆரிய பிராமணர்களின் வாரணா சிரம கோட்பாடுகளால்  உருவாக்கப்பட்டது அல்ல.   இந்த குடிகள் தானாக தோன்றிய தமிழ்க் குடிகள் என்பது இவர்களுடைய வாதம்.

உண்மையில், இவர்கள் கட்டமைக்கும் தமிழ் தேசியத்தில் தமிழை தாய் மொழியாக கொண்ட திராவிடர்களும், தமிழை தாய் மொழியாக கொண்ட ஆரியர்களும் (பார்ப்பனர்கள்)  அடங்குவார்கள். ஆனால், இந்த  தமிழ் தேசியத்தில் தமிழர்கள் நேரிடையாக பங்கு கொள்ள  முடியாது அவர்கள் சார்ந்த குடிகளின் வாயிலாகவே பங்கு கொள்ள முடியும். இந்த தமிழ் தேசிய கயிறு பல தமிழ் குடிகளை (ஜாதிகளை) கொண்டு  திரிக்கப்பட்ட கயிறாகும். இந்த தமிழ் தேசிய கயிறை பல நாறுகளாக, குடிகளாக அதாவது ஜாதிகளாக பிரித்து விடலாம். ஒரு குடியை மற்றொரு குடியோடு  மோத விடலாம். தேவைப்படும் போது மொத்த கயிறையும், தமிழ் தேசத்தையும் அறுத்து விடவும் முடியும்.

1965 ஆம் ஆண்டு இந்திய எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டில் நடந்தது அதற்கு அடுத்த பெரிய மக்கள் எழுச்சி என்பது தமிழ்நாட்டில் 2017 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த இரண்டும் ஜாதி மதம் கடந்து தமிழர்கள் ஒன்றுபட்ட போராட்டமாகும்.  தமிழர்கள் மட்டுமல்லாமல்,  தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்களும் எந்தவித வேறுபாடுமின்றி இந்த போராட்டத்தில் பங்கு கொண்டனர்.

இப்படி ஓர் எழுச்சி தமிழ்நாட்டில் வருங்காலத்தில் எப்பொழுதாவது எந்த காரியத்திற்காவது நடந்தால் அப்போது தமிழர்கள் ஜாதி மதம் கடந்து தமிழன் என்ற முறையில் ஒன்று சேர்ந்து அந்த எழுச்சியில் பங்கு கொள்ளாமல் தன் குடி சார்பாக பங்கு கொள்வான். அந்த எழுச்சியில் பள்ளர் குடி, பறையர் குடி, கள்ளக்குடி, வன்னியர் குடி  என்று பல குடிகள் ஒன்றிணைந்து அந்தப் போராட்டத்தை முன்னெடுப்பார்கள். மற்ற திராவிடர்களான தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்களுக்கு இந்த போராட்டங்களில் எந்தப் பங்கும் இருக்காது இருக்கவும் கூடாது.  அப்படி ஒரு போராட்டம் நடந்தால் அது வெற்றி அடையுமா? தோல்வி அடையுமா என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம்.  இப்படிப்பட்ட தமிழ் குடிகள் தமிழர் நலனுக்காக எப்போதும் ஒன்று சேர மாட்டார்கள். இவர்கள்  தங்களுக்குள்ளேயே ஏற்றத் தாழ்வு, போட்டி, பொறாமை என்று சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள்.

அந்நிய சக்திகள் இவர்களை தங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல் கையாளலாம், ஆட்டி வைக்கலாம்.  இந்திய எதிர்ப்பு போராட்டம், ஈழத் தமிழருக்கான போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டம் எனப் பல போராட்டங்களில் நம்மோடு தோளோடு தோள் நின்று போராடிய தமிழகத்தில் வாழும் தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகளை நாம் இந்த தமிழ் தேசியத்திலிருந்து ஒதுக்கி, அவர்களை நமக்கான எதிரிகளாக்க வேண்டும் என்பதே இவர்கள் நோக்கம்!

திராவிட நிலப் பரப்பையும், திராவிட மொழி பேசுவோரையும் அடையாளப்படுத்தும் வரைபடம்.

ஆங்கிலேயர்கள் இந்தியர்களை பிரித்தாண்டதைப் போல, தற்போது திராவிடர்களை குறிப்பாக தமிழர்களை பிரித்து ஆள வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறார்கள். இதற்காக அவர்களால் உருவாக்கப்பட்டது தான்  இந்த போலித் தமிழ் தேசியம். போலி தமிழ் தேசியத்தின் மூலமாகத் தமிழ்நாட்டில் உள்ள ஜாதிகளுக்கு ஒரு தற்பெருமையை ஏற்படுத்தி கொடுக்கிறார்கள். ஜாதி என்பது ஆரிய பிராமண  வருணாசிரம கோட்பாட்டால்  உருவாக்கப்பட்டது என்ற புரிதலை மாற்றவே இத்தனை முயற்சிகள்! எனவே, ஜாதிகளைக் குடிகளாக்கி, புதிய மொந்தையில் பழைய கல்லை ஊற்றுகிறார்கள். ஜாதி உணர்வுகளை உயிர்ப்போடு வைக்கும் முயற்சிகளே இவை!

இதில் வருத்தப்பட வேண்டியது  என்னவென்றால்,  உண்மையான தமிழ் தேசியவாதிகளும் இந்த போலி தமிழ் தேசியவாதிகளை அரவணைப்பதே! இவர்கள், ‘திராவிடம், தமிழ் தேசியத்திற்கு எதிரானது’ என்றும்,  ‘திராவிடம் ஒரு பொய்யான பிம்பம்’ என்றும் கருதுகிறார்கள்.

நமது மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை இயற்றியுள்ள தமிழ்த்தாய் வாழ்த்திலேயே, ‘திராவிட நல் திருநாடு’ என வருகிறதே! நமது தேசிய கீதத்தில் ரவீந்திரநாத் தாகூர், ”திராவிட, உத்கல வங்கா” என்கிறார்! ஆக, திராவிடம் என்பது இடத்தையும், அங்கு வாழும் இனத்தையும் குறிப்பதாகும். திராவிட இனம் ஒரு கூட்டு குடும்பமாகும். இதில், திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்  ஆகியவை பிரதான மொழிகளாகும். திராவிடத்திலிருந்து தமிழையோ, தமிழிலிருந்து திராவிடத்தையோ பிரிக்க முடியாது.

கட்டுரையாளர்; பா.பாலமுருகன் ஐ.ஆர்.எஸ்

துணை ஆணையாளர்

சரக்கு மற்றும் சேவைவரித் துறை

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time