குழந்தைகளை பாதிக்கும்  குடற்புழு, கீரிப்பூச்சிகள்!

-விஜய் விக்கரமன் (MD Siddha)
குழந்தைகள் காரணம் தெரியாமல் வீரிட்டு அழும். வயிற்று வலியால் துடிக்கும். வாந்தி எடுக்கும். சரியாகத் தூங்காமல் பல்லைக் கடிக்கும். பெரியவர்களுக்குமே இந்த பிரச்சினைகள் வரும். எப்படி இந்த குடற் புழு, கீரிப்பூச்சிகள் வயிற்றில் வருகின்றன? இதை தவிர்க்கவும், வந்தால் வெளியேற்றவும் செய்ய வேண்டியவை என்ன?
குடலில்  தொற்றி உள்ள  புழுக்கள் அல்லது  கீரி பூச்சிகளால் குழந்தைகளுக்கு பெரிய அளவில் உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றது. குடல்புழுக்களில் உருண்டை புழு, கொக்கி புழு, நூல் புழு, சாட்டை புழு, நாடா புழு எனப் பல வகைகள் உண்டு.
இந்தப் புழுக்களின்  முட்டைகள்  அசுத்தமான இடங்களிலும், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவு வகைகள் மூலமாகவும், அசுத்தமான நீர், சரியாக  சுத்தம் செய்யப்படாத  காய்கறிகள், பழங்கள், புழுக்கள் தொற்று உள்ள   இறைச்சியாலும்  இவ்வகைப் புழுக்கள் , அதன் முட்டைகள்  குழந்தைகளின் வயிற்றுக்குள் செல்கின்றன.
குழந்தைகளின் உடலுக்குள் சென்ற புழுக்கள்  ரத்தத்தில் கலந்து  வளர்ந்து  குடலில் பெருகி  பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
இப் புழுக்களால் பாதிக்கப்பட்டவருக்கு அடிக்கடி வயிற்று வலி வரும். இரவில்  தூக்கத்திலிருந்து எழுந்து அழுவார்கள்!  குமட்டல், வாந்தி, பசிக் குறைவு, அஜீரணம், வயிற்று உப்புசம் ஆகிய தொல்லைகள் தொடரும்.
சாப்பிடப் பிடிக்காது, உடல் மெலியும், உடல் எடை குறையும்.  இதனைத் தொடர்ந்து ரத்த  சோகை ஏற்படும். குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி  குறைந்து, அடிக்கடி   உடல் நல பாதிப்புகள் ஏற்படும்.
சிலருக்கு தோலில் அரிப்பு, தடிப்புகள் போன்ற சரும நோய்கள் ஏற்படுகின்றன. நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகளும், வறட்டு இருமல், இளைப்பு  போன்றவையும் ஏற்படலாம்.
கீரி பூச்சிகள் என்று அழைக்கப்படும் (Thread worms)  பார்ப்பதற்கு மிகச் சிறியதாக இருக்கும். பல நேரங்களில் குழந்தைகளின்  மலத்துடன் கலந்து வெளிவரும்.
இவை மட்டும் மனிதனின் மல வாயில் முட்டை இடுகின்றன. இதனால், அங்கு அரிப்பு ஏற்படும். இரவில் ஏற்படும் மலவாய் அரிப்பால் குழந்தைகள் இரவில் சரியாக தூங்க மாட்டார்கள், பல்லை கடிப்பார்கள், மலவாய் அரிப்பால் குழந்தைகள் விரலை வைத்து அடிக்கடி  அங்கு சொரிவார்கள் , மிகவும் மன பதட்டம் அடைவார்கள்.
அடிக்கடி வயிற்றுப் போக்கும் ஏற்படும். பசியே இருக்காது, சாப்பிடமாட்டார்கள். உடல் எடை குறையும். உடல் மெலியும், இவர்கள் ஒல்லியாகவும் மந்தமாகவும் இருப்பார்கள்.
சித்த மருத்துவத்தில் இதற்கு  தீர்வாக பல மருந்துகள் உண்டு.
அதில் மிகச் சிறந்தது  நாக்குப்பூச்சி  குடிநீர் சூரணம் என்ற மருந்தாகும்.
இம்மருந்து மிகச் சிறப்பாக குடலில் உள்ள கீரி பூச்சிகளைக் கொன்று  வெளியேற்றுகின்றது
நாக்குப்பூச்சி  குடிநீர் சூரணம் செய்முறை;
பலாசு விதை ,
கருஞ்சீரகம்,
வாய்விடங்கம்
ஓமம்
சிவதை வேர்
நில ஆவாரை இலை
 சோம்பு
 கடுகு ரோகிணி
குடிநீர் செய்யும் முறை- நாக்குப்பூச்சி  குடிநீர் சூரணம்  ஐந்து கிராம் எடுத்து 300 ml  நீரில் கலந்து இளந் தீயில் 30 ml  அளவிற்கு அதனை சுண்ட வைத்து,  வடிகட்டி  வெறும் வயிற்றில் காலை மாலை இருவேளை  கொடுக்க வேண்டும்.
இம் மருந்தை தொடர்ந்து கொடுத்து வர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறுவதுடன், அதன் முட்டைகள் புதிய புழுக்களாக உருவாகாமல் தடுக்கப்படும்.
ஒரு வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை பயன்படுத்தலாம்.  அனைவருக்கும் இது மிகச் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
இம் மருந்தினை தொடர்ந்து 15 நாட்கள் எடுத்து பின்,  ஒரு நாள் வயிற்று பேதிக்கு மருந்து கொடுக்கும் போது வயிற்றில் உள்ள அனைத்து புழுக்களும் சுத்தமாக வெளியேறி விடுகின்றது.
இம் மருந்தினை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து இவ்வாறு பயன்படுத்தலாம். இதன் மூலம் அதன் முட்டைகளில் இருந்து புதிதாக புழுக்கள்  உருவாவதை இதன் மூலம் தடுக்க முடியும்.
தொடர்ந்து இப்ப பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்கான வழிகள்;
தனிநபர் பொது சுகாதாரம் மட்டுமே  தீர்வு.
சுகாதாரமற்ற முறையில் ,ஈக்கள்  மொய்க்கும் பண்டங்களை குழந்தைகள்  வாங்கி உண்பதை தவிர்க்க வேண்டும்.
 சுகாதாரமற்ற முறையில் பராமரிக்கப்படும் பொது கழிப்பறைகளை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளின் கை விரல்நகங்களை சுத்தமாகவும், அடிக்கடி வெட்டியும் பராமரிக்க வேண்டும்.
பொது இடங்களில் காலில் செருப்பு அணிந்து செல்வதை  கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
காய், கனிகளை உண்பதற்கோ, சமைப்பதற்கோ பயன்படுத்தும் முன்பு தண்ணீரில் நன்றாகக் கழுவிக் கொள்ள வேண்டும்.
 நன்றாகக் கொதிக்க வைத்து, ஆறவைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும்.
மீன், இறைச்சி போன்றவற்றை நன்றாக வேக வைத்த  உணவு தயாரிக்க வேண்டும்.  சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுகின்ற உணவுகளாலும் மிகப் பெரிய அளவில்  இவ்வகையான புழுக்களால்  குழந்தைகளை பாதிக்கின்றது.
பெரியவர்களுக்கும் கூட இவை வரலாம். இதை முன் கூட்டியே தடுக்க உணவில் சுண்டைக்காய் பொறியல், அல்லது குழம்பு, பாகற்காய் பொறியல் ,கூட்டு அல்லது மசியல் அகத்திக் கீரை சாறு போன்றவை எடுத்தல் நலம். மேலும் வெறும் வயிற்றில் வேப்பங் கொழுந்து சாப்பிட்டு வந்தாலும் குடற்புழுக்கள் வராது. வந்தாலும் மடிந்துவிடும்.
கட்டுரையாளர்; விஜய் விக்கரமன் (MD Siddha)
சித்த மருத்துவ செயற்பாட்டாளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time