இந்திய சட்டங்களுக்கு பதிலாக மனு நீதியா?

-ச.அருணாசலம்

அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்ட புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது பாஜக அரசு! தேசத் துரோக குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான தண்டனையாம்! ஆட்சியாளர்களுக்கு ஒத்துழைக்காவிடில் நீதிபதியே கூட கைதாகலாமாம்! மக்களாட்சியை சிதைத்து மன்னராட்சியாக்கவா சட்டங்கள்?

இ.பி.கோ. என இந்திய நாட்டு  மக்களால்  பெரிதும் அறியப்பட்ட இந்திய தண்டனைச்சட்டம் Indian Penal Code (IPC), இந்திய சான்று சட்டம் (Indian Evidence Act) மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டம் Criminal Procedure Code (CrPC) ஆகிய மூன்று சட்டங்களை ஒழித்துவிட்டு, அதற்கு மாற்றாக பாரதீய நியாய சன்ஹிட்டா, பாரதீய சாக்‌ஷியா பில்,  பாரதீய நகரிக் சுரக்‌ஷா சன்ஹிட்டா என மூன்று சட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவரப்போவதாக ஒன்றிய அமைச்சர் அமீத் ஷா நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடரின் இறுதிநாளன்று மாலை அறிவித்தார்.

நாட்டு விடுதலைக்காக போராடிய அனைத்து தரப்பு மக்களும் , இந்திய மக்களில் அறுதிப் பெரும்பான்மையினரும் விடுதலை அடைந்த இந்தியா ஒரு ஜனநாயக , மதச் சார்பில்லாத குடியரசாக மலர வேண்டும் என்றே விரும்பினர்.

ஆம், இந்து மகா சபா மற்றும் ஆர். எஸ். எஸ். அமைப்பினர் மற்றும்  சனாதனவாதிகள் மட்டுமே, ”இந்திய நாடு புராதன இந்து மன்னர்கள் ஆட்சியின் கீழ் வர வேண்டும், பாரதம் என்ற பெயரே நிலைக்க வேண்டும், இஸ்லாமியர்கள் இந்நாட்டில் இருக்க வேண்டியதில்லை, இந்து சாஸ்திரங்களின் அடியொற்றி மனு சாஸ்திர முறைப்படி ஆட்சி நடைபெறவேண்டும்” என்று குரலெழுப்பி, அணி திரண்டனர் .

ஆனால், பெருவாரியான மக்கள் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு தலைமையில் இந்தியா  அனைத்து மக்களுக்குமான ஜனநாயக நாடாக மலரவே விரும்பினர். அண்ணல் அம்பேத்கர் தலைமையில் புதிய அரசியல் சாசனம் வரையப்பட்டது , புதிய இந்தியா கட்டியெழுப்பப்பட்டது.

காலனியாதிக்க மிச்ச சொச்சங்களை உண்மையாகவும் உணர்வு பூர்வமாகவும் களைந்து, சுய சார்பு நிலைப்பாடு கொண்டோம்.

”அடிமைத்தனத்தின் சின்னங்களை ஒழிக்கப் போகிறோம்” என இன்று தேசபக்த வேடம் போடும் பாஜக கும்பல் இந்த சட்டங்களுக்கு  வைத்த பெயரின் மூலமாகவே இவர்கள் கட்டமைக்க விரும்பும் “தேசம்” எது என்பதை காட்டி கொடுத்து விட்டனர்.

அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 348 அனைத்து சட்டங்களும், மசோதாக்களும் ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் என்று கூறுவதை மறுத்து, இந்தியில் அதுவும் சமஸ்கிருத மயமான இந்தி சொற்களில் வடித்துள்ளது கண்டு நகைப்பதா அல்லது வெகுண்டெழுவதா?

முன்னாள் சட்ட அமைச்சரான கபில்சிபல் இந்த மூன்று மசோதாக்களை சரியாக அம்பலப்படுத்தி உள்ளார்;

இந்த மசோதாக்கள் மூலம் நாட்டில் சர்வாதிகார ஆட்சியை கொண்டுவர பாஜக அரசு விரும்புகிறது. தங்களுக்கு ஒத்துழைக்காத சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், அரசு ஊழியர்கள், தலைமை கணக்கு தணிக்கையாளர், இதர அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடிய சட்டங்களை கொண்டுவர பாஜகவினர் விரும்புகிறார்கள்.

நீதிபதிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். இம்மசோதாக்கள் சட்டமாகி விட்டால், நாட்டின் எதிர்காலத்துக்கு ஆபத்து நேரும்.இவை, நாட்டின் அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை. நீதித்துறையின் வேர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடியவை. நீதித்துறை சுதந்திரத்துக்கு முற்றிலும் முரணானவை. அவர்கள் ஜனநாயகத்தை விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.  அதிலும், பாரதீய நீதிச்சட்ட மசோதா, ஆபத்தானது. அது நிறைவேற்றப்பட்டால், அனைத்து அமைப்புகளும் மத்திய அரசின் கட்டளைப்படி நடக்க வேண்டி இருக்கும். ஆகவே, 3 மசோதாக்களையும் திரும்ப பெறுமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். நாம் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, என்ன மாதிரியான ஜனநாயகத்தை நீங்கள் விரும்புகிறீர்கள் என்று மக்களிடம் கேட்போம்’’ என்று கபில்சிபல் கூறியுள்ளார்.

இச் சட்டங்களை மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளில் அவையில் வைப்பது, யாரையும் கலந்து ஆலோசிக்காமல் இறுதி நிமிடங்களில் அவைக் குறிப்பில் ஏற்றி அவையில் அறிமுகப்படுத்துவது போன்ற செயல்கள் யாவும், ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்ற இவர்களது நிலைப்பாட்டையே காட்டுகிறது.

உச்ச நீதி மன்றம் தேசத்துரோகம் என்ற குற்றப்பிரிவை நிறுத்தி வைத்து பல மாதங்கள் கழித்து, பல பத்திரிக்கையாளர்கள், மாணவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் மீதெல்லாம் தேசத் துரோக குற்றம் சுமத்தி பொய் வழக்கு போட்ட பாரதிய ஜனதா கட்சியினர் இன்று புனிதர்கள் போல்  sedition னை நீக்கி விட்டோம் அடிமைச் சின்னத்தை ஒழித்துவிட்டோம் என இன்று கூச்சலிடுகின்றனர்.

உண்மையில் sedition- தேச விரோதம் என்ற சொல்லை மட்டும் நீக்கி விட்டு, அதன் சாராம்சத்தை அப்படியே வைத்துக் கொண்டு அதனுடன் பல்வேறு கொடுமையான விதிகளை இணைத்து, புதிய சட்டப்பிரிவு 150 ஐ அமைத்துள்ளனர். மேலும், இதற்கு-இந்த விதிக்கு கொடுக்கப்படும் விளக்கம் பூர்த்தியாகமல் உள்ளது என உச்ச நீதி மன்ற வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில் சாதாரண சட்டங்களையோ அரசு நடவடிக்களையோ எதிர்த்து போராடினலே இந்த சட்டம் பாயும் நிலையில் subversive activity என்ற முத்திரை குத்தி, வழக்கு தொடர இச்சட்டத்தில் இடமுள்ளது. இதன் மூலம் தேசவிரோதம் என்ற சொல் எடுக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, அரசு நினைத்தால் சாதாரண போராட்டங்களையும், போராட்டகாரர்களையும் இச்சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்க  வாய்ப்புள்ளது . மேலும், இதன் தண்டனைகளும் முன்பிருந்த நிலையில் இருந்து குறைக்கப்படவில்லை. எனவே, ‘இது வெறும் கண் துடைப்பே’ என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

பாலியல் வன்புணர்வு குற்றத்திற்கான தண்டனையை கடுமையாக்கி இப்புதிய சட்டத்தில் 20 ஆண்டுவரை கூட்டியும் வாழ்நாள் சிறைத் தண்டனையையோடு மரண தண்டனையும் சேர்த்துள்ளனர். இதைக் கொண்டு நாம் பாலியல் குற்றவாளிகளை தண்டிப்பதில் இந்த ஆட்சியாளர்களுக்கு தான் எவ்வளவு சிரத்தை என நினைக்க முடியாதபடிக்கு பில்கிஸ்பானுவும், மல்யுத்த வீராங்கனைகளும் நினைவுக்கு வருகின்றனர்.

இதில் கொடுமைக்கு ஆளான பெண்கள் 18 வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.

ஏமாற்றி , ஆசை வார்த்தைகள் கூறி மணமுடிப்பது , பாலுறவு கொள்வது இப்பொழுது தண்டனைக்குரிய குற்றச் செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பறித்தல் – செயின் பறித்தல் உட்பட குற்றங்கள் வரையரைக்கப்பட்டுள்ளன இப்புதிய சட்ட வடிவில். பாலியல் கொடுமைக்கு ஆளானவர்களின் வீடியோ வாக்குமூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறைகளை சீரமைக்க , குற்றப்பத்திரிக்கை 90 நாட்களுக்குள்ளும், நீதிமன்றங்கள் அனுமதித்தால் அடுத்த 90 நாட்களுக்குள்ளும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் , 180 நாட்களுக்குள் வழக்கு விசாரணைக்கு வர வேண்டும் , விசாரணை(trial) முடிந்த 30 நாட்களுக்குள் தீர்ப்பு கூற வேண்டும் என்ற குற்றவியல் நடைமுறைகளை இச்சட்டம் வரையறுக்கிறது.

காவல்துறை நடைமுறைகளில் பொறுப்பும், கடமையும் வெளிப்படை ஆக்கப்படும் விதத்தில் காவலர்கள் கைது நடவடிக்கையை தொடர்ந்து , கைதிற்கான ஆவணமும் , டிஜிட்டல் சான்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டும்’ என இச் சட்டம் கூறுகிறது.

ஆனால், காவல் விசாரணை முறைகளை பற்றியோ, காவல் விசாரணை வன்கொடுமை மற்றும் கொலைகளைப் பற்றியோ எத்தனையோ வழிகாட்டும் முறைகள் சிபாரிசுகள் இருந்தும் இந்த கொடுமையைக் களைய எவ்வித முயற்சியும் இச்சட்டங்களில் இல்லை

குற்றவியல் நீதி  முறையை டிஜிட்டல் மயமாக்கவும் தடயவியல் சான்றுகளை கட்டாயமாக்கவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

பாரதீய நகரிக் சுரக்‌ஷா சன்ஹிட்டா மசோதா 2023   குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 533 பிரிவுகள உள்ளன, 160 பிரிவுகளில் மாற்றமும் புதிதாக 9 பிரிவுகள் சேர்க்கப்பட்டும் , 9 பிரிவுகள் நீக்கப்பட்டும் உள்ளதாக தெரிகிறது.

பாரதீய சாக்‌ஷியா மசோதா இந்திய சான்று சட்டத்திற்கு மாற்றாக (Indian Evidence Act) வந்துள்ளது . இதில் இப்பொழுது 170 பிரிவுகள் உள்ளன. முன்பு 166 பிரிவுகளே இருந்தன. 23 பிரிவுகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது, ஒரு புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது, 5 பிரிவுகள் நீக்கப்பட உள்ளன.

1860, 1872 மற்றும் 1898 களில் நடைமுறைக்கு வந்த இந்த மூன்று சட்டங்களும் நமக்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் வழங்கப்பட்டவை. நம்மை ஆண்ட அன்னியர்களே இச் சட்டங்களை அமலுக்கு கொண்டு வந்தனர். அவர்களது நோக்கம் அவர்கள் ஆளுமையையும், அதே சமயம் சமூக ஒழுங்கையும் பாரபட்சமின்றி நிலைநாட்டுவதை நோக்கமாக கொண்டவை!

ஆனால், அதற்கு முன்பிருந்த குற்றவியல் நடைமுறை என்ன? தண்டனை விதிகள் என்ன?

பூசல்களும், தாவாக்களும், பிரச்சினைகளும், மோதல்களும் எவ்வாறு தீர்க்கப்பட்டன?

சாதியக் கட்டமைப்புகள்  மேலோங்கி, சனாதனத்தை தூக்கிப்பிடித்த ‘மனு நீதி’ தானே மன்னர்களின், அரசர்களின் மற்றும் ஆளும் கும்பல்களின் “நீதி” பரிபாலனமாக இருந்தது. ‘ஏழை சொல் அம்பலம் ஏறாது’, ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்பது தானே, இந்திய சமூகத்தில் ஆயிரம் ஆண்டு காலமாக சட்டமாக இருந்தது!

அந்நியர் ஆட்சியிலே இந்த சட்டங்கள் அமலுக்கு வந்தாலும், இத் தண்டனை சட்டம், இந்த குற்றவியல் நடைமுறை சட்டம் ஒரு சமமான களத்தை இந்திய மக்களுக்கு வழங்கியது. வரலாற்றில் முதன்முறையாக பிறப்பால் பாகுபடுத்தப்படாமல், சமமான நடைமுறையை இச் சட்டம் அனுசரித்ததை யார் மறுக்க இயலும்?

இதில் ஓட்டைகள் இருந்தன, உண்மைதான்! பணக்காரர்களும், தனவான்களும், ஆட்சியாளர்களும் தண்டிக்கப்படவேயில்லை. உண்மை தான் ! ஆனால், இந்த குறைகளை மீறி, அவை சமுதாயத்தில் இன்று வரை ஓரளவு சமநிலையை, சமதளமான ஆடுகளத்தை நிலைநாட்டியதை மறுக்க முடியுமா என்றால் முடியாது.

ஆகவே தான், இந் நடைமுறை சட்டங்களை நமது முன்னோர்கள் இதில் உள்ள குறைகளை தெரிந்தும், தொடர்ந்து நீட்டிக்க ஒப்புக் கொண்டனர்.

சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தவர்கள், அரசியல் லாபத்திற்காக சட்டங்களை வளைப்பவர்கள், நீதியை வாங்குபவர்கள், வேண்டாத நீதியரசர்களை “அப்புறப்படுத்துபவர்கள்” இன்று தேச பக்தர் வேடம் பூண்டு நாடகமாடுவதன் இறுதி அத்தியாயமே ”இந்த காலனியாதிக்க மிச்ச சொச்சங்களை விரட்டுகிறோம்’’ என்று சொல்லி, அதை விட மோசமான சட்டத்தை நம் மீது திணிப்பது தான்.

ஜனநாயகத்தின் அடிநாதமான அதிகார பங்கீட்டை அங்கீகரிக்க மறுக்கும், இந்த கும்பல், நாடாளுமன்றத்தின் மாண்பையும், ஆளுமையையும் மறுதலிக்கும் இந்த கும்பல், நீதி மன்றங்களின் தீர்ப்பை காலால் இடறும் இந்த கும்பல், காவல்துறை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, உளவுத்துறை என அனைத்து அமைப்புகளையும் பாரபட்சமாக அரசியல் லாபங்கருதி ஆட்டிப்படைப்பவர்கள் ஏவல் நாய்களாக பயன்படுத்துவோர்,  திடீரென்று இந்த மூன்று சட்டங்களை சிதைக்க முனைவதன் நோக்கம் என்ன?

குற்றங்களை சமூகத்தில் களைவதற்காகவா அல்லது துரிதமாக நீதி வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த மாற்றங்களா? அப்படி என்றால், யாரையும் கலந்தாலோசிக்காமல், இதை ரகசிய ஏற்பாடாக வைத்திருந்தது ஏன்?

தான்தோன்றித்தனமாக ஆட்சி புரியும் இந்த கும்பல் பொது சிவில் சட்டம் உருவாக்க வேண்டும் என்று கூறி அதற்கான முன்னெடுப்பாக சட்டக்கமிஷன் மூலமாக வெளிப்படையான விவாதங்கள்  பல காலமாக நடத்தியதைப் போன்று விவாதங்களோ, கருத்து கேட்புகளோ ஏதும் நடத்தாமல் இருந்ததேன்?

இரகசியமாகவும் அவசர அவசரமாகவும் இந்த மாற்று ஏற்பாடுகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்வதன் நோக்கம் என்ன?

சட்ட அமைச்சர் என்ன ஆனார்? கிரிமினல் நடைமுறைக்கும், உள்துறைக்கும் என்ன சம்பந்தம்? இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சான்று சட்டம் என்று இருந்தால் இவர்களுக்கு என்ன வந்தது?

மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் கொண்டுவர விரும்பினால் வெளிப்படையான ஆலோசனகள் மற்றும் சட்ட கமிஷனின் ஆலோசனையோடு அதை நிகழ்த்தலாமே. அப்படித் தானே இதுவரை இந்த சட்டங்களில் பல மாற்றங்களும், திருத்தங்களும் முந்தைய ஆட்சியாளர்கள் கொண்டுவந்தனர்.

இன்று ஒட்டு மொத்தமாக புதிய சட்ட வரைவுகளை கலந்தாலோசிக்காமல் கொண்டு வருவதால் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை பற்றி இவர்கள் யோசித்தார்களா?

இச்சட்ட வரைவுகள் நிலைக்குழுவிற்கு இப்பொழுது அனுப்ப பட்டாலும் இந்த ஆட்சியாளர்களின் கடந்தகால செயல்களின் அடிப்படையில் நோக்கினால், இவர்கள் நினைத்ததையே தங்களுக்கு பெரும்பான்மை உள்ளது என்ற அடிப்படையில் சட்டமாக நிறைவேற்றுவர்  என நம்ப இடமிருக்கிறது.

இந்தியா என்ற பெயரைக்கேட்டாலே வெறித்தனமாக மிரளும் இந்த எதேச்சதிகார கும்பல்  தங்கள் ஆட்சியை தக்கவைக்க என்னவெல்லாம் செய்வார்கள் என்று எண்ணும்பொழுது நெஞ்சம் பதைபதைக்கிறது.

தேர்தல் ஆணையர் நியமனக் குழுவில் இருந்து உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியையே நீக்க சட்டம் கொண்டு வருபவர்கள், மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரின் இறுதியில் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரை இடைநீக்கம் செய்யத் துணிந்த இந்த கும்பல் அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருக்கும் சிறு மதியாளர்கள்.

இதை முறியடிக்க இன்று குரல் எழுப்பாவிடில் நாளை நமக்கு குரலே இருக்காது!

கட்டுரையாளர்; ச.அருணசலம்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time