காந்தி இல்லாத இந்தியாவை கட்டமைக்க காய் நகர்த்துகிறது பாஜக அரசு! ஹிந்து ராஷ்டிராவிற்கு முக்கிய தடையே காந்தி அமைப்புகளும், காந்தியச் சிந்தனைகளுமே எனக் கருதி அவற்றை படிப்படியாக காலி செய்கின்றனர். காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி கைது, சர்வமதப் பிரார்த்தனைக்கு தடை.. என விரிகிறது சர்வாதிகாரம்!
குஜராத் வித்யா பீடம் என்பது காந்தியால் நிறுவப்பட்ட 103 ஆண்டு கால ஸ்தாபனமாகும். இங்கு காந்தி உயிரோடு இருந்த போது, சர்வமதப் பிரார்த்தனை கூட்டங்களை தினசரி நிகழ்த்துவார். இதில் இந்தியாவில் உள்ள முக்கிய மதங்களின் பிரார்த்தனைப் பாடல்கள் பாடப்படும். அந்த வகையில் இங்கே காலங்காலமாக சர்மதப் பிரார்த்தனைகள் நடந்து வருகின்றன.
தற்போது அங்கு சர்வமதப் பிரார்த்தனைகளுக்கு தடை போட்டுள்ளது பாஜக அரசு! சர்வமதப் பிரார்த்தனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, காந்தியின் பிரபல பாடலை நிறுத்தக் கோரி திடீரென்று ஒரு இந்தி பேராசிரியர், ”இனி இங்கு இது போன்ற பாடல்களைப் பாடக் கூடாது” என தடுத்துள்ளார்.
குறிப்பாக காந்தியின் பிரபல பாடலான,
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதீத பாவன சீதாராம்!
ஈஸ்வர அல்லா தேரே நாம்
சப்கோ சன்மதி தே பகவான்
என்ற பாடலை ஒலிக்க அனுமதியோம்” என ஓங்கி சத்தம் போட்டு பேசி அதட்டியுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு பெண் ஆசிரியை, ”இந்தப் பாடல் பாரம்பரியமாக இங்கு பாடப்பட்டு வருகிறது. இது நம் பண்பாட்டு விழுமியங்களை பறை சாற்றும் விதமானது மட்டுமல்ல, காந்தியப் பண்பு நலன்களை உள்ளட்டக்கியது’’ எனச் சொல்லியுள்ளார்.
ஆனால், இதை அரசு விரும்பவில்லை. அரசாங்கம் விரும்பாதவற்றை இங்கு செய்ய அனுமதி இல்லை எனக் கூறியதால் மாணவர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அடுத்த நாள் நூறு மாணவ,மாணவியர் நூல் நூற்று வேள்வி செய்யும் விதமாக கையில் கறுப்பு ரிப்பனைக் கட்டிக் கொண்டு காம்பவுண்டுக்கு வெளியே ராட்டை சுற்றினர்.
முன்னதாக சென்ற வாரம், ‘வெள்ளையனே வெளியேறு’ போரட்டத்தின் நினைவாக ஒரு அமைதி பேரணியை மும்பை கிர்கான் சொளபதியில் உள்ள கிராந்தி மைதானத்தில் பிரபல சமூக அர்வலர் தீஸ்தா செதல்வாட் ஏற்பாடு செய்திருந்தார். சுதந்திரப் போராட்டத்தின் திருப்பு முனையாக அமைந்த இந்த நிகழ்வில் தான் மகாத்மா காந்தி, ”செய் அல்லது செத்து மடி” என்ற புகழ் பெற்ற வாசகத்தை சொன்னார். அந்த நினைவைப் போற்றும் இந்த நிகழ்வுக்கு மகாராஷ்டிராவை ஆளும் பாஜக கூட்டணி அரசு சட்டம், ஒழுங்கு பிரச்சினையைக் காட்டி தடுத்துள்ளனர். அந்தப் பேரணியில் கலந்து கொள்ள புறப்பட்ட காந்தியின் பேரன் துஷார் காந்தியை வழியிலேயே தடுத்த மும்பை போலீசார் சன்டா கிரஸ் காவல் நிலையத்தில் கொண்டு வைத்து விட்டனர். அப்போது அவர், ”இதே நாளில் தான் என் தாத்தாவையும், பாட்டி கஸ்தூர்பாவையும் ஆங்கில சர்க்கார் சிறையில் அடைத்தனர். அதை நினைத்துப் பார்க்கிறேன்” என பதிவிட்டு இருந்தார்.
காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் துஷார் காந்தி மேற்படி இடத்திற்கு செல்ல வயதான முஸ்லீம் ஆட்டோ டிரைவரை அழைத்துள்ளார். அந்த ஆட்டோ டிரைவர் பயந்தபடி மறுத்துள்ளார். அவர் கண்களில் அச்சம் நிலவியதை தெளிவாக என்னால் உணர முடிந்தது எனவும் துஷார் காந்தி கூறியுள்ளார்.
சமீபத்தில் உத்திர பிரதேசத்தில் ராஜ்காட்டில் காந்தியின் பிரதான சீடர் வினோபாவே அவர்களால் உருவாக்கப்பட்டு கடந்த முக்கால் நூற்றாண்டாக பல அரிய சேவைகளை செய்து வரும் சர்வோதயா சேவா சங்கத்தினரை வெளியேற்றி, அந்த அமைப்பின் கட்டிடத்தை புல்டோசர் கொண்டு இடித்தனர்.
Also read
அதற்கும் முன்னதாக காந்தி சில ஆண்டுகள் வாழ்ந்த சபர்மதி ஆஸ்ரமத்தை ஆக்கிரமித்து அங்கு பல காலமாக வாழ்ந்து வந்த காந்திய தொண்டில் ஈடுபட்டுள்ள பல குடும்பங்களை வெளியேற்றினர். இந்த இடத்திற்கு தான் இந்தியாவிற்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டுத் தலைவர்களும் வந்து பார்வையிட்டு மரியாதை செலுத்துகின்றனர். ஆகவே, இதைத் தடுக்க இந்த இடத்தை அழித்து, முற்றிலும் மாற்றி சுற்றுலா தளமாக்கும் முயற்சியை மத்திய அரசு செய்தது. ஆனால், மத்திய அரசின் இந்த முன்னெடுப்பை உச்சநீதி மன்றம் அதிரடியாக தலையிட்டு நிறுத்தி வைத்துள்ளது என்பது கவனத்திற்கு உரியது.
ஆக, ‘காந்திய அடையாளங்களை எல்லாம் முற்ற முழுக்கத் துடைத் தெரிந்தால் தான், தாங்கள் கட்டமைக்க விரும்பும் இந்து ராஷ்டிராவிற்கு இடையூறுகள் இருக்காது’ என பாஜக அரசு கருதி, ஒவ்வொன்றையும் செயல்படுத்தியும் வருகிறது! காந்தியை இழக்க சம்மதித்தோம் என்றால், இனி கடைத்தேறும் வாய்ப்பே நமக்கில்லை.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Leave a Reply