மெட்ராஸ் மெடிகல் காலேஜ் ஆதிதிராவிடர் கல்லூரியாக இருந்தது!

-பா.பாலமுருகன் ஐ.ஆர்.எஸ்

தமிழகத்தில் இது வரை நீட் தேர்வினால் 16 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அனிதா தொடங்கி ஜெகதீஸ்வரன் வரை எல்லா மாணவர்களுமே நன்றாக படிக்கும் ஏழை குடும்பத்து பிள்ளைகள்! இன்று பணம் உள்ளவர்கே மருத்துவ சீட்! ஆனால், காமராஜர் காலத்தில் எப்படி மருத்துவ கல்லூரி அட்மிஷன் நடந்தது என்பதை அறிந்தால் அசந்து போவீர்கள்!

சமீபத்தில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரன் அவர் மறைவால் துயரம் தாங்காமல் தன்னை மாய்த்துக் கொண்ட அவரது தந்தை செல்வ சேகர்..என இருவர் மரணமும் ஏற்படுத்திய மனவேதனை, கடந்த காலத்து மருத்துவ கல்வி தொடர்பாக என் தந்தை கூறியவற்றை நினைவுபடுத்தியது.

என்னுடைய தந்தை மு.பாலசுந்தரம் பியூசி தேர்வில் முதலில் தேர்ச்சி பெறவில்லை. ஆனால், மீண்டும் எழுதி தேர்ச்சி பெற்று 45 சதவீதம் மதிப்பெண் பெற்றார்.  1960 ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பம் செய்து நேர்காணலுக்கும் சென்றார். அங்கு சேர்க்கை குழு அவரிடம் எந்த கேள்வியும் கேட்காமல் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு அனுமதித்தனர்.

பரம ஏழைகள் படித்த மருத்துவம்!

அன்று நேர்காணலுக்கு வந்திருந்த பலரும் என் தந்தையை போன்று கிராமத்திலிருந்து வந்த ஏழை மாணவர்களே. என் தந்தையாவது பேண்ட் சட்டை போட்டிருந்தார். ஆனால், வந்த மாணவர்களில் பலர் கிழிந்த வேட்டியையும், சட்டையையும் அணிந்திருந்தனர். பலருக்கு காலில் செருப்பு கூட இல்லை. எல்லோர் முகத்திலும் ஏழ்மையும்,வறுமையும் அப்பட்டமாகத் தெரியும். ஆனால், எல்லோருக்கும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. இந்த அதிசயம் எப்படி என்று என் தந்தைக்கு அன்று விளங்கவில்லை. ஆனால், பின்னாளில் என் தந்தை பெருந் தலைவர் காமராஜருடன் நெருங்கிய  பழகியபோது அதற்கான விடை கிடைத்தது.

காமராஜர் ஐயா 1954 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவி ஏற்ற போது, தமிழ்நாட்டில் சென்னையில் இரண்டு மருத்துவ கல்லூரிகள் மட்டுமே இருந்தன. அவை, சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி. இவற்றில் ஆண்டுதோறும் 250 மருத்துவ மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். மெட்ராஸ் மருத்துவக்  கல்லூரியை அப்போதெல்லாம் முதலியார் மருத்துவக் கல்லூரி என்று தான் அழைப்பார்கள். ஏனென்றால், அப்போதெல்லாம்  மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் பெரும்பாலான மாணவர்கள் முதலியார் வகுப்பை சேர்ந்தவர்கள்.

அதிகரிக்கப்பட்ட கல்லூரிகள்! மருத்துவ இடங்கள்!

காமராஜர் முதல்வராக வந்த பின்பு சென்னையில் கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி என ஆறு மருத்துவக் கல்லூரிகளை திறந்து மாணவர்களின் எண்ணிக்கையை 250 இல் இருந்து 1,750 ஆக உயர்த்தினார். அதில் சுமார் ஆயிரம் மாணவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கும்,  வன்னியர் முக்குலத்தோர் போன்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கும் அட்மிஷன் கொடுத்தார்.

முதலமைச்சர் காமராஜர் மருத்துவ படிப்பு தேர்வு குழுவுக்கு ஒரு அறிவுறுத்தல் தந்திருந்தார். அது என்னவென்றால், ஆதிதிராவிட மாணவர்கள் மருத்துவ படிப்பு சேர்வதற்கு விண்ணப்பித்து இருந்தால், அவர்களிடம் எந்த கேள்வியும் கேட்கக் கூடாது அவர்கள் பி.யு.சி யில் எத்தனை முறை தோல்வி அடைந்திருந்தாலும் பரவாயில்லை. கடைசியில் பி.யு.சி யில் தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். அவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கொடுத்து விட வேண்டும். வன்னியர், முக்குலத்தோர் போன்ற பிற்படுத்தப்பட்ட ஜாதி மாணவர்களுக்கு 50% மதிப்பெண் இருந்தால் போதும். அவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கொடுத்து விட வேண்டும். அப்படி மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானால், நான் புதிதாக கல்லூரிகளை திறந்து அவர்களுக்கு இடம் கொடுக்கிறேன். நீங்கள் அவர்களை இடம் இல்லை என்று திரும்ப அனுப்ப வேண்டாம்’’ என்று அறிவுறுத்தி இருந்தார்.

முதலியார் கல்லூரி ஆதி திராவிடர் கல்லூரியானது!

என் தந்தை சென்னை மருத்துவக் கல்லூரியில் 1960 ஆம் ஆண்டு மாணவராக சேர்ந்தார். என்னுடைய தந்தையின் வகுப்பில் சுமார் 120 மாணவர்கள் இதில், 80 மாணவர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள்.  முன்பு சென்னை மருத்துவக் கல்லூரியை முதலியார் மெடிக்கல் காலேஜ் என்று கூறிய நிலை போய், என் தந்தை படிக்கும் போது அது ஆதிதிராவிடர் மருத்துவக் கல்லூரி என்று மாறியது.

உலகப் புகழ்பெற்ற சென்னை மருத்துவக் கல்லூரிக்கு இப்படி ஒரு பெயர் உருவாவதை விரும்பாத சில பேராசிரியர்கள் முதல்வர் காமராஜ் அவர்களை சந்தித்து, ஐயா! நீங்கள் யாருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கொடுக்க வேண்டும் என்பதை பற்றி நாங்கள் எந்த விதத்திலும் கருத்து கூற முடியாது. ஆனால், சென்னை மருத்துவக் கல்லூரி உலக தரம் வாய்ந்த ஒரு மருத்துவக் கல்லூரி. இங்கு நன்றாக படிக்கும் மாணவர்களை சேர்த்தால் நாங்கள் அவர்களை சிறந்த மருத்துவர்களாக உருவாக்க முடியும். ஆனால் இப்போது நீங்கள் பி.யு.சி யில் முதலில் தோல்வியடைந்து பின்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களையும், குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களையும் அனுமதித்து உள்ளீர்கள். அவர்களை நாங்கள் எப்படி ஒரு சிறந்த மருத்துவர்களாக ஆக்க முடியும்? என்று கேட்டார்கள்.

அதற்கு முதலமைச்சர் காமராஜர்  நீங்கள்தான் பெரிய பெரிய டாக்டர்கள் இருக்கிறீர்களே..! உங்களை நம்பித்தான் இந்த பிள்ளைகளை அனுப்பியுள்ளேன். அவர்களுக்கு நல்ல பாடம் சொல்லிக் கொடுத்து உங்களை மாதிரி பெரிய மருத்துவர்களாக ஆக்குங்கள். அதை விட்டுவிட்டு இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு வந்து என்னிடத்தில் குறை கூறுகிறீர்களே என்று திருப்பி அனுப்பி விட்டார்.

சகலமும் இலவசம்!

என் தந்தை ஆதி திராவிட பட்டியலின மாணவர் என்பதால், அந்தப் பிரிவு மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 60 சாப்பாட்டுக்கு அரசாங்கம் கொடுத்து விடும். தேர்வு கட்டணம் கிடையாது. எல்லா புத்தகங்களும் வாங்க அரசாங்கம் பணம் கொடுத்து விடும். என் தந்தைக்கு வீட்டிலிருந்து மாதம் ரூபாய் 15 கை செலவிற்கு கொடுப்பார்கள். என்னுடைய தந்தையின் அண்ணன்கள் இரண்டு பேர் அரசாங்க உத்தியோகத்தில் இருந்ததால், அவருக்கு மாதம் ரூபாய் 15 வீட்டிலிருந்து கை செலவுக்கு பணம் வரும். பல மாணவர்களுக்கு மாதம் ஐந்து ரூபாய் கூட அவர்களுடைய வீட்டிலிருந்து வராது. எனினும், அரசாங்க உதவிகளுடன் எல்லோரும் மருத்துவ படிப்பை தொடர முடிந்தது.

காமராஜரால் மருத்துவ கல்வி பெற்ற மு.பாலசுந்தரம்

காமராஜர் ஆட்சியில் எந்த கஷ்டமும் இல்லாமல் ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கொடுத்து, எல்லா செலவுகளையும் தமிழ்நாட்டு அரசாங்கமே ஏற்று, மாணவர்களை படிக்க வைத்து மருத்துவர்களாக ஆக்கினார்கள். ஆதிதிராவிடர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மாதம் ரூபாய் 60 என்றால் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை ரூபாய் 40 ஆகும். தன் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் பெரும்பாலும் கை நாட்டு வைப்போராக இருந்ததாக என் தந்தை சொல்வார். நாங்கள் சிறந்த மருத்துவர்களாகி ஏழை, எளியோருக்கு நல்ல சேவை செய்யும் வாய்ப்பு அமைந்தது! ”இப்படி சகலமும் அரசாங்க செலவில் மருத்துவ கல்வி பெற்றதால், அன்றெல்லாம் மருத்துவம் படிப்பதே சேவை செய்யத் தான் என்ற எண்ணம் எங்கள் அனைவருக்குள்ளும் இருந்தது” என்பார் என் தந்தை பாலசுந்தரம்.

தனியார் மருத்துவ கல்லூரிக்கு தடை!

காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது, கோயம்புத்தூரை சேர்ந்த மில் முதலாளிகள் சிலர் ஐயாவிடம் வந்து ஐயா நாங்கள் ஒரு இரண்டு கோடி ரூபாய் பணம் வைத்துள்ளோம். ஒரு 15 ஏக்கர் புறம்போக்கு நிலம் கோயம்புத்தூரில் உள்ளது. ஐயா அனுமதி கொடுத்தால் நாங்கள் கோயம்புத்தூரில் ஒரு மருத்துவக் கல்லூரியை கட்டிக் கொள்கிறோம். என்றார்கள். அதற்கு காமராஜர் அந்த இரண்டு கோடி பணத்தைக் கொண்டு நானே மருத்துவக் கல்லூரியை கட்டிக் கொள்கிறேன். படிப்பு விஷயத்தில் வெளி ஆட்களுக்கு எந்த வேலையும் இல்லை. நீங்கள் மூன்று கோடி போட்டு மருத்துவ கல்லூரியை கட்டிக் கொண்டு, அதில் சேரும் மாணவர்களுக்கு ஒரு லட்சம் கட்டணம் வாங்குவீர்கள். ஒரு லட்சம் முதலீடு போட்டு டாக்டராக படித்து வருபவன் எப்படி மனிதாபிமானத்தோடு ஏழை  நோயாளிகளுக்கு வைத்தியம் பார்ப்பான்.. பணத்திற்காக தான் வைத்தியம் பார்ப்பான். என்னுடைய பிள்ளைகளை ஆரம்ப கல்வி முதல் முதுநிலை படிப்பு வரை படிக்க வைப்பது என்னுடைய வேலை. போங்க போங்க’’ என அனுப்பி விட்டார்.

இறந்து போன மாணவர் ஜெகதீஸ்வரன், அவர் தந்தை செல்வ சேகர்

அப்படி மருத்துவ கல்வியில் வியாபாரம் செய்ய தனியாருக்கு அனுமதி இல்லை என்ற முடிவில் காமராஜர் உறுதியாக இருந்தார். ஆனால், மருத்துவ கல்வியில் தனியாரை அனுமதித்ததால் தான், அவர்கள் தந்த அழுத்தத்தால் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு, கல்லா கட்டுவதும் அமோகமாக நடக்கிறது!

நீண்டு கொண்டே செல்லும் நீட் மரணங்கள்!

இன்று சென்னை குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் தற்கொலை செய்ததைத் தொடர்ந்து அவர் தந்தை செல்வ சேகரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இப்படியாக அரியலூர் அனிதா தொடங்கி விழுப்புரம் பிரதீபா, திருச்சி சுபஸ்ரீ, சென்னை சேலையூர் ஏஞ்சலின் சுருதி, திருப்பூர் ரிது ஸ்ரீ, மரக்காணம் கூனிமேடு மோனிஷா, பட்டுக்கோட்டை வைஸ்யா, திருநெல்வேலி தனலட்சுமி, கோயம்புத்தூர் சுபஸ்ரீ, மதுரை ஜோதி ஸ்ரீ துர்கா, செந்துறை விக்னேஷ், தருமபுரி ஆதித்யா, திருச்செங்கோடு மோதிலால், மேட்டூர் தனுஷ், துலாரங்குறிச்சி கனிமொழி, வேலூர் தலையாரம்பட்டு செளந்தர்யா இறுதியாக குரோம் பேட்டை ஜெகதீஸ்வரன் என 16க்கும் மேற்பட்ட மாணவக் கண்மணிகளை நீட் தேர்வு பலி வாங்கியுள்ளது!

நினைத்துப் பார்க்கும் பொழுது நெஞ்சம் உண்மையிலேயே வேதனையில் விம்முகிறது. ஏழை மாணவர்களின் மருத்துவராக வேண்டும் என்ற கனவு நீட் தேர்வால் தவிடு பொடி ஆகி வருகிறது. மருத்துவராகி ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற தங்கள் உன்னதமான கனவு நீட் தேர்வால் தவிடுபொடியானதை தாங்கிக் கொள்ள முடியாத இந்த பிஞ்சு உள்ளங்கள் தன் உயிரை மாய்த்துக் கொள்வது முடிவுக்கு வர வேண்டும். ஏழை, எளியோருக்கு மருத்துவ கல்வி மறுக்கப்பட்டால், மருத்துவத் துறையில் மனிதம் மரணித்துவிரும்.

கட்டுரையாளர்; பா.பாலமுருகன் ஐ.ஆர்.எஸ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time