உலக நாடுகளில் அதிகம் வாசிக்கப்படும் இந்திய எழுத்தாளர் அருந்ததிராய். இவர் புனைவு இலக்கியம் எழுதி பொழுதை கழிப்பவரல்ல, ஒரு சமூக செயற்பாட்டாளர்! மனதில் பட்டதை அச்சமின்றி பட்டவர்த்தனமாக பேசக் கூடிய அருந்ததி ராய், மணிப்பூர், ஹரியானா நிகழ்வுகள் மற்றும் பிரதமர் மோடி குறித்து பேசி இருப்பதாவது;
மணிப்பூரில் நடப்பது ஓர் இன அழிப்பே. நடக்கும் கேடுகளுக்கு மைய அரசு உடந்தையாக இருக்கிறது. மாநில அரசு, கலவரத்தில் ஈடுபடும் ஒரு தரப்பிற்கு ஆதரவாகச் செயல்படுகிறது. பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் சாதியத்தால் பிளவுண்டு கிடக்கிறார்கள்.
மணிப்பூரில் தொடங்கிய இக் கோர நிகழ்வுகள் ஹரியானாவிலும் தொடர்கின்றன. தேர்தல்கள் நடைபெறவுள்ள வேறு மாநிலங்களிலும் இவை தொடரலாம். அதற்கான சிறு பொறிதான் இன்று நடப்பவை என அனைவரையும் நான் எச்சரிக்கிறேன்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை மிகுந்த கவலை அளிக்கிறது. குற்றமிழைப்போரின் நம்பிக்கைக்கு ஏற்ப, இத்தகைய வன்முறையைப் பெண்களே ஆதரிப்பது என்பது மேலும் கவலை அளிக்கிறது.
கலவரத்தில் ஈடுபடும் ஆண்கள் செய்யும் வன்புணர்வை, பெண்களே நியாயப்படுத்துவதும், இத்தகைய கொடுஞ்செயலைச் செய்ய, ஆண்களைப் பெண்களே தூண்டுவதுமான ஒரு மோசமான காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். மணிப்பூரைக் கருத்தில் கொண்டு மட்டும் நான் இதைக் கூறவில்லை; உ.பியின் ஹித்ராஸில் நடந்ததாகட்டும் அல்லது ஜம்மு காஷ்மீரில் நடந்ததாகட்டும்.
யாரை யார் வன்புணர்வு செய்கிறார்கள் என்பதைப் பற்றி, அவர்கள் சார்ந்திருக்கும் சாதியைப் பொறுத்தே, பெண்கள் குரல் எழுப்புகிறார்கள். நாம் மன நோயாளிகள் ஆகிப் போனோம் என்பதே இதன் பொருள். ஏதோ ஒன்று மிகவும் தவறாக இருக்கிறது. காலதாமதமாவதற்குள் ஒவ்வொரு குடிமகனும் இதற்காக எழுந்து நின்று போராடவேண்டும்.
அடைக்கலம் தேடி வந்த பெண்களை, வன்புணர்வு செய்யும் ஒரு கலவரக் கும்பலிடம், காவல்துறையே ஒப்படைக்கும் கொடுங்காலத்தில் நாம் நிற்கிறோம்.
ஹரியானாவில் இரண்டு இஸ்லாமியர்களை உயிரோடு எரித்தவர் சுதந்திரமாக நடமாடுகிறார். ஒரு மத ஊர்வலத்தை பின்னிருந்து இயக்கி கலவரத்தை விளைவிக்கிறார்! இரயில்வே பாதுகாப்புப்படை வீரர் ஒருவர், வெவ்வேறு பெட்டிகளில் பயணித்துக்கொண்டிருந்த இசுலாமியர்களைச் சுட்டுக்கொன்றுவிட்டு, மோடிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறார்.
இவரை எப்படி மனநிலை பிறழ்ந்தவர் என்று கருத முடியும்? இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று பரப்பப்படும் கருத்துகளை, நாம் எச்சரிக்கையாகவே கொள்ள வேண்டும். அவர் மனநலத்தோடே இருக்கிறார். இரவு பகலாகச் செய்யப்படும் வெறுப்பான பரப்புரைகளை உள்வாங்கிக் கொண்டதாலேயே, அவர் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார்.
நமது மாநிலங்கள் சீரழிந்த நிலையில் உள்ளதை விவரிக்க முடியவில்லை. டெல்லியிலேயே பயம் நிறைந்த சமூகச் சூழல் உள்ளது. டெல்லியில் வசிக்கும் நான், சாலையில் நடக்கும்போது அச்சமடைகிறேன். ஒரு சிறு நிகழ்வு என்றாலும், ஆரஞ்சு வண்ணமணிந்த ஐம்பது பேர் கூடிவிடுகிறார்கள். நான் யார் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.
நான் என்னைப் பற்றிப் பேசவில்லை. உங்களை ஒரு இசுலாமியராகக் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் வாகனத்தை ஓரிடத்தில் நிறுத்துவதில் தொடங்கும் ஓர் உரசல், கும்பல் கொலையில் போய் முடியலாம். டெல்லியில் இருக்கும் நீங்கள், அலிகாரில் இருக்கும் உங்கள் பெற்றோர்களைக் காணச் செல்கிறீர்கள். அப்போது நீங்கள் கொல்லப்படுகிறீர்கள்.முற்றிலும் சகிப்புத் தன்மையற்ற இத்தகைய நாட்டில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது மிகவும் அவமானகரமானது. நான் சொல்வதற்கே வார்த்தைகள் இல்லை.
ஒரு போர் நடந்துகொண்டிருக்கிறது. பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டு, நிர்வாணமாகத் தெருக்களில் இழுத்துச் செல்லப்படுகின்றனர். மக்கள் வாழும் குடியிருப்புகள் எரிக்கப்படுகின்றன. இசுலாமியர் வீட்டுக் கதவுகளில் அடையாளக்குறிகள் இடப்படுகின்றன. உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, அவர்கள் வேறு வேறு இடங்களுக்குப் பறந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் நேற்று இரவு, தான் அப்பம் சாப்பிட்டதாக, நாட்டின் பிரதமர் சுட்டுச்செய்தி இடுகிறார்.
ஆம். ஆகஸ்ட் மூன்றாம் நாள், தனது ட்விட்டரில் மோடி ட்வீட் செய்கிறார்: “நேற்று மாலை தென்னிந்தியாவிலிருந்து வந்த NDA-வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு சந்திப்பில் கலந்து கொண்டேன். சந்திப்புக்குப் பிறகு நடந்த இரவு உணவில், பணியாரம், அப்பம், காய்கறி குருமா, புலிக்கோரா, பாப்பு சாறு, அடை, அவியல் போன்ற பல தென்னிந்திய உணவுகள் பரிமாறப்பட்டன”.
இது தான் நாட்டின் பிரதமர் மனநிலை!
இங்கு கொடுக்கப்பட்டது போன்ற பரிசுகள் என்னை மகிழ்விக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், நான் எழுதிய யாவும் பெரும் தோல்வியடைந்துவிட்டன. அவை எதுவும் சமூகத்தில் எந்தச் சிறிய மாற்றத்தையும் ஏற்படுத்தாத நிலையில், அவை எனக்குப் பரிசுகளையும் பணத்தையும் மட்டுமே தருகின்றன.

மேட்டுக்குடியைச் சேர்ந்தவளாகவே என்னை மக்கள் கருதுகிறார்கள். நான் வசதியாக உள்ளேன். ஆம். அதை எனது புத்தகங்கள் தரும் பணத்தின் மூலமாகவே நான் அடைகிறேன். நிறையப் பணம். அதனால் என்ன பயன்? நான் விரும்புவது நல்ல சமூக மாற்றத்தைத் தான்!
நமது மாநிலங்களுக்கு வெளியே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்கவில்லை; ஐயப்படவுமில்லை. அவை நம் மாநிலங்களிலும் நிகழ்த்தப்படக் காத்திருக்கின்றன.
கேரளாவிற்கு வருவது எனக்கு பெரும் மகிழ்ச்சி. கேரளா ஒரு அரசியல் விழ்ப்புணர்வு பெற்ற – அறிவு முதிர்ச்சி கொண்ட – மாநிலம். இங்குள்ள பிரச்சினைகளை நாம் லாவகமாக கையாண்டு வருகிறோம். ஆகவே நமக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. ஆனால், நெருப்பு வெகு அருகில் எரிந்துகொண்டிருக்கிறது. கேரளத்தில் இருப்பது அழகிய ஓர் உலகத்தில் இருப்பது போல. ஆனால், அது அச்சுறுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆகவே, நாம் சவால்களை எதிர்கொள்ளத் தக்க வகையில் மாற வேண்டும். ஏனென்றால், இந்த கலவரங்கள் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே நிகழும் என்பதில்லை. அவை எங்கும் விரிவடையலாம்.
Also read
மணிப்பூர் நிலவரங்களை அவதானிக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் கேரளாவில் இருந்து ஒரு குழு மணிப்பூருக்கு அனுப்பட வேண்டும். இப்போது நாம் எதையுமே செய்யவில்லையானால், நம் எதிர்காலத் தலைமுறை நம்மை சபிக்கும் அவமானத்தை சந்திக்க நேரும்.
அமைதியையும் சமாதானத்தையும் காப்பாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை நான் நினைவுபடுத்துகிறேன்’’என்றார்.
ஆகஸ்ட் 6 – ஆம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற ஒரு விழாவில், எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததிராய் அவர்களுக்கு நவமலையாளி விருது வழங்கப்பட்டது. அந்த நிகழ்வில் அவர் பேசி, ஆங்கில நாளிதழ்களில் வெளியானவற்றின் தொகுப்பு:
தமிழில்: முனைவர் தயாநிதி
சிறப்பு