தலை நிமிர வைத்த தமிழ்ச் சினிமா படைப்பாளிகள்!

-பாலு மணிவண்ணன்

ஜெய்பீம் ஏற்படுத்திய சமூக அதிர்வைப் போல அன்றும் சில படங்கள் ஏற்படுத்தின! அப்படியான சில முன்னோடிப் படங்ககளும், படைபாளிகளும் தமிழ்ச் சினிமாவின் பெருமிதங்களாக நினைவில் கொள்ள வேண்டியவைகளாகும்!

சினிமா என்பது படைப்பாளியின் பிள்ளை! படைப்பாளி என்பவர்  சமுதாயத்தின் பிள்ளை! ஆகவே, சினிமா என்பது சமுதாயத்தின் பிள்ளை என்றாகிறது ! அந்தவகையில் சினிமாவும், சமுதாயமும் ஒன்றுக்கொன்று பெரிதும் கடமைப்  பட்டுள்ளன!

அந்தக் கடமையை அண்மையில் வெளியான “ஜெய்பீம் “முழுமையாக நிறைவேற்றி இருக்கிறது.

இருளர் எனப்படும் பழங்குடி இனம்,காலகாலமாக நம் சமூகத்தால் ஒதுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வாடுகிற இனம். அந்த இனத்து மக்கள் படும் துன்பங்களையும் துயரங்களையும் பேசும் விதத்தில் “ஜெய்பீம்,” குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கிறது. இந்தப் படத்தை  தயாரிக்க முன்வந்ததற்காக நடிகர் சூர்யாவையும், இயக்குனர் த.செ.ஞானவேலுவையும்  எவ்வளவு பாராட்டினாலும் தகும். சூர்யா ஒரு மாஸ்ஹீரோவாக இருந்தாலும் , ஹீரோத்தனம் இல்லாமல்  நடித்திருப்பது, அவருக்கும் படத்திற்கும் பெருமை சேர்க்கிறது .

தமிழ் சினிமாவின் 90 ஆண்டுகால வரலாற்றில் ஒரு சாகஸ ஹீரோவை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களே வெற்றி பெறுகின்றன! இதை உடைத்து மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையப்படுத்தி அதில் தொழிற்படும் மனிதர்களை ஹீரோவாக்கி எடுக்கப்பட்ட படங்கள் மிகக் குறைவு!

மக்களின் சமகால வாழ்க்கைப் பாட்டை, போராட்ட குணத்துடன் அதை அவர்கள் எதிர்கொள்ளும் களயதார்த்தத்துடன் சொல்ல வந்த படங்கள் எப்போதும் கவனமும், மரியாதையும் பெற்றே வந்துள்ளன. அப்படியான முயற்சிக்கு முன்னோடியாக படம் எடுத்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். அவரது உன்னைப் போல ஒருவன் படம் சேரி வாழ் எளிய மக்களை அவர்களின் உணர்வுகளை, நல்ல குணங்களை கூறியது. இந்திய அளவில் தேசிய விருதும் 1964ல் கிடைத்தது!

இன்றைய ஜெய்பீம்மிம் ராஜாக்கண்ணுவை ஞாபகப்படுத்தும் படம் யாருக்காக அழுதான். அதில் செய்யாத திருட்டுக்காக அடி, உதை அவமானங்களை பெறும் ஜோசப் கதாபாத்திரத்தில் நாகேஷ் நடித்திருந்தார். இந்தப்படத்தை கதை, திரைகதை எழுதி இயக்கி இருந்தார் ஜெயகாந்தன்.

நடந்து முடிந்த வரலாற்றில் மறைக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட மனிதர்களை நினைவுபடுத்தி எடுக்கப்பட்டவை எப்போதும் முக்கியத்துவம் பெறும்.

இந்த சினிமாக்களின் முன்னோடி ,1959 ல் வெளியான ‘வீரபாண்டிய கட்டபொம்மன் ‘! ஒரு சின்னஞ்சிறிய பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தை ஆட்சி செய்த கட்டபொம்முவின் தன்மான உணர்வையும், சமரசமற்ற வீரத்தையும் மிக அருமையாக காட்சிபடுத்தியது இப்படம்! இதன் திரைகதை, வசனத்தை மிக உயிர்ப்புடன் எழுதி இருந்தார் சக்தி கிருஷ்ணசாமி. இதன் இயக்குனர் பி.ஆர்.பந்துலு! உண்மைச் சம்பவங்களால் உருவான  இந்த வரலாற்று சினிமா , எகிப்தில் நடைபெற்ற ஆசியோ- ஆப்பிரிக்கன் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது!

இதே போன்ற வரலாற்று சினிமா   தான் கப்பலோட்டிய தமிழன் திரைப்படம்! நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தன் ஈடு இணையற்ற நடிப்பில் ஒப்பற்ற தியாகியும், தமிழகத்தின் முதல் மக்கள் தலைவருமான சிதம்பரனாரை நம் கண்முன்பு கொண்டு நிறுத்தினார். 1936 வரை உயிருடன் இருந்த சிதம்பரனாரை 1961 ல் திரைப்படமாக எடுத்து மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற வைத்ததில் இதன் கதாசிரியர் ம.பொ.சிவஞானத்திற்கு முக்கிய பங்குண்டு. இந்தப் படத்தையும் பி.ஆர்.பந்துலு தான் இயக்கினார். இந்த இரு திரைப்படங்களும் தமிழ்ச் சமூகத்தில் மிக அழமான தாக்கத்தையும், அதிர்வையும் உருவாக்கின. தேசபக்தியை தீயாய் பரப்பின!

இதே காலகட்டத்தில் உருவான மற்றொரு வரலாற்றுப்படம் சிவகங்கைச் சீமை!

கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்து அதன் காரணமாக பிரிட்டிசாரின் கோபத்துக்கு இலக்கான போதிலும், துணிந்து எதிர்த்து தங்கள் இன்னுயிரை இழந்த மருது சகோதர்களின் வீரவரலாற்றை மண் மனம் வீச யதார்த்தமாக சொன்ன திரைப்படம்! 1959 ல் வெளியான இந்தப் படத்தை கவிஞர் கண்ணதாசன் திரைகதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருந்தார்.

கவிஞர் கண்ணதாசன் தான் வாழ்ந்த காலகட்டத்தில் நிலவிய சூழல்களில் இருந்து உருவாக்கிய மற்றொரு படம் இரத்ததிலகம். இதில் சீனாவுடனான போரை மையப்படுத்தி படம் எடுத்தார். அதே போல கருப்பு பண புழக்கத்தை பற்றி கண்ணதாசன் 1964 லேயே எடுத்த படம் கறுப்பு பணம்.

அது 1956 ஆம் ஆண்டு. அன்றைய சென்னை ராஜதானிக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டுமெனக் கோரி அன்றைய காங்கிரஸ் தலைவரான சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அந்தக் கோரிக்கையை முதலமைச்சர் காமராஜரும், பிரதமர் நேருவும் ஏற்கவில்லை . ஆனாலும் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யும் வரை உண்ணாவிரதத்தைத் தொடர்வேன் என்று எழுபத்தி ஆறு நாள்கள் தொடர்ந்தார் சங்கரலிங்கனார்.  அவரது உயிரும் போனது. அதன் பின்னும் அரசு, தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டவில்லை. அது தமிழ் மக்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

அதை வெளிப்படுத்தும் வகையில், “தி லேன்ட் அன்ட் லாங்வேஜ்” எனும் ஆவணப்படம் ஓர் ஆங்கிலேயரால் தயாரிக்கப்பட்டது .அதனை இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் திரையிட அனுமதி மறுக்கப்பட்டது. இப்படித்தான் இருந்தது அன்றைய ஜனநாயகம்.

இயக்குனர் பாலச்சந்தர் வேலை இல்லா திண்டாடம் குறித்து எடுத்து, முக்கியத்துவம் பெற்ற படம் வறுமையின் நிறம் சிகப்பு. கிராமத்தில் இருந்து நகரத்திற்கு இடம் பெயரும் ஒரு எளிய குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகளை சொன்னது அவரது பட்டிணப் பிரவேசம். கிராம மக்கள் தண்ணீருக்காக படும் பாட்டையும், அதில் அரசியல்வாதிகள் நடந்து கொள்ளும் விதத்தையும் கோமல் சுவாமிநாதன் கதை, திரைக்கதை வசனத்தில் தண்ணீர், தண்ணீர் என எடுத்தார் கே.பாலச்சந்தர்.

சமூக பிரச்சினைகளை முக்கியத்துவப்படுத்தி சினிமா எடுக்கும் பணியை வெகு சமீபத்தில் வெற்றிகரமாகச் செய்தவர் இயக்குனர் ஜனநாதன்! அவருடைய ஈ மற்றும் பேராண்மை இரண்டும் குறிப்பிடத் தக்கன.

இதேபோல அடி நிலை மாந்தர்களான தலித் மக்கள் பற்றிய சொல்லாடலை, கருத்தோட்டத்தை, அடக்குமுறைகளுக்கு எதிராக அவர்கள் வெகுண்டு எழுவதை சமீப காலமாக பா.ரஞ்சித் சிறப்பாக சினிமா செய்கிறார். கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகியவை சமகால வரலாறை புனைவு கலந்து சொல்லப்பட்டவையாகும்.

அதே போல ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை ரத்தமும்,சதையுமாக சொன்ன இயக்குனர் மாரி செல்வராஜ். அவரது முதல்படம் ரஞ்சித் தயாரிப்பில் உருவான பரியேறும் பெருமாள். அடுத்தது, கொடியங்குளம் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கர்ணன். இரண்டுமே பெரும் கவனம் பெற்றன.

சமகால எளிய மக்கள் திரளில் இருந்து மாபெரும் சாதனையாளனை கண்டெடுத்து உருவாக்கிய படம்  சூரரைப் போற்று! இந்திய விமானத்துறையின் 36வது பிரிவின் கேப்டனாக இருந்த கோபிநாத் என்பவர்,கடந்த 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் நாள் ஏர் டெக்கான் விமான சேவையைத் தொடங்கினார் . அது செயல்பாட்டுக்கு வந்தது என்னவோ 2009ல் என்றாலும், செயல்படத் தொடங்கிய இரண்டு ஆண்டுகளிலேயே சுமார் 2 கோடி பயணிகளுக்கு சேவை வழங்கியது. கட்டணம் வெறும் ஒரு ரூபாய் தான் !

இந்த உண்மைச் சம்பவத்தை உள்வாங்கி நடிகர் சூர்யா அதனைத் திரைப்படமாகத் தயாரித்து வெற்றி கண்டது வெறும் சம்பவம் அல்ல; சரித்திரம்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின் நாடெங்கும் மதவெறியால் ஏற்பட்ட வன்முறைக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். அதன் காரணமாக மக்களும் கலவரத்தில் ஈடுபடுவது தவிர வேறு வேலையில் ஈடுபட முடியாதவர்களாக ஆனார்கள். அதனால் விவசாயம் பாழானது . சந்தையில் உணவு தானியங்களின் வரத்து குறைந்தது. தமிழக மக்கள் அரிசிக்காக அல்லாடினர். அலைபாய்ந்தனர். சுதந்திரம் வாங்கியது இதற்குத்தானா ? என்று கொந்தளித்தனர்.இந்த நிலையை கணக்கில் எடுத்துக்கொண்டு , அதனைக் கண்டிக்கும் வகையில் தனது மணமகள் ‘படத்தில் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் ஒரு பாடலை வைத்தார்.

சுதந்திரம் வந்ததுன்னு சொல்லாதீங்க ;

சொல்லி சும்மா சும்மா வெறும் வாயை மெல்லாதீங்க”

என்று டி.ஏ.மதுரம் பாட்டை ஆரம்பிப்பார். தொடர்ந்து ,

“சோத்துப்பஞ்சம், துணிப்பஞ்சம் சுத்தமாக நீங்கல;

சுதந்திரம் சுகம்தரும்னு  சொன்னா

யாரு நம்புவாங்க ?”

என்று அவர் பாடியதைக் கேட்க, தியேட்டர்கள் மனிதர்களால் நிரம்பின .தியேட்டர்களின் காற்று வெளியிடை  கைதட்டல்கள் நிறைந்தன. இப்படி சமூகத்திற்கு தேவையான கருத்துகளை சமகால நிகழ்வில் இருந்தே எடுத்து கையாண்ட கலைவாணர் அனைவருக்கும் முன்னோடியாவார்!

1943 ஆம்ஆண்டு !

அப்போதைய இந்தியாவில் கவர்னர் ஜெனரலான வேவல் பிரபு இங்கு விளையும் உணவு தானியங்களை எல்லாம் ஈவுஇரக்கமின்றி இங்கிலாந்துக்கு அனுப்பிக்கொண்டே இருந்தார் . அதன் காரணமாக இந்திய மக்கள் பசி பட்டினியால் வாட நேர்ந்தது. சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பசியால் பலியானார்கள். சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாந்தி பேதி போன்ற நோய்களுக்கு பலியானார்கள். இது இந்தியா மீது இங்கிலாந்து தொடுத்த சீக்ரட் வார்'” என்று ஆங்கில  பத்திரிகைகள் எழுதின.

பல பிரிட்டிஷ் சினிமாக் கலைஞர்கள் இந்தியா வந்து , அசாணி சங்கேட், பெங்கால் ஷேடோஸ் , அகலேர் சாதனா போன்ற ஆவணப்படங்களை எடுத்து இங்கிலாந்தில் திரையிட்டு அந்நாட்டு மக்களின் மனிதாபிமானத்தை வெளிக்கொணர்ந்தார்கள். அதன் வெளிப்பாடு  வின்ஸ்டன் சர்ச்சிலை ஆட்சியை விட்டு அகற்றியது. அதன் காரணமாகவே இந்தியாவும் சுதந்திரம் பெற வாய்ப்பானது.

இந்த வகையில் சினிமாக்கள் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் வலுவானது. அதனை உணர்ந்த கலைஞர்கள், உண்மைக் கதைகளையும், உண்மைச் சம்பவங்களையும் வைத்து சினிமா படைக்கிறார்கள் .அவை இயல்பாகவே வெற்றி பெறுகின்றன. அதை விடுத்து,  பங்களாக்களில் அல்லது நட்சத்திர ஓட்டல்களின் ஏ.சி அறைகளில் அமர்ந்து கொண்டு,  ஒருவர் அரிசி ,ஒருவர் உப்பு ,ஒருவர் புளி, ஒருவர் மிளகாய் என ஆளாளுக்கு ஒன்று போட்டுப் பண்ணும் திரைக்கதை  சுவைக்காது;

கட்டுரையாளர்; பாலு மணிவண்ணன்

இயக்குனர், பத்திரிகையாளர், எழுத்தாளர், ‘திரையும், திரைக் கதையும்’ உள்ளிட்ட 32 நூல்களின் ஆசிரியர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time