மீண்டும் தடங்கல்! மீட்கப்படுமா சமூக நீதி?

- பீட்டர் துரைராஜ்

சமூக நீதி விஷயத்தில் சமீப காலமாக தமிழக அரசு தடுமாற்றம் கண்டு வருகிறது.இந்தச் சூழலில் “கொளஞ்சியப்பர் திருக்கோவிலில் பயிற்சி முடித்த அர்ச்சகரை பணி அமர்த்துக” என உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் இடையீட்டு மனு செய்துள்ளதானது கவனத்திற்கு உரியதாகும்!

” நீண்டகாலமாக நிலவிய பழக்கம் என்பதற்காக தேவதாசி முறையை ஏற்போமா ? பலதார மணத்தை ஏற்க முடியுமா ? கோவில், தெரு முதலிய பொது இடங்களில் தலித்துகள் நடமாடக் கூடாது என்று சொல்ல முடியுமா ? ” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். இவரது இடையீட்டு மனு, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் தலைமையிலான அமர்வு முன்பு திங்கள் கிழமையன்று வருகிறது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகா,  மணவாளநல்லூரில்  அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோவில் உள்ளது. இந்த முருகன் கோவிலில் ஒரு அர்ச்சகர் பதவி காலியாக உள்ளது. ஆகம விதிகளின் படி, ஓராண்டு பயிற்சி முடித்தவர்களிடம் இருந்து  விண்ணப்பங்களைக் கோரி,  இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர், கடந்த ஆண்டு  ஜூலை 7, 2021 அன்று, செய்தித்தாட்களில் விளம்பரம் செய்திருக்கிறார். இதனை எதிர்த்து அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியர்கள் சேவா சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இதன் மீது தமது கருத்துக்களை தெரிவிக்கக்  கோரி, வழக்கின் எதிர் மனுதாரரான இந்து சமய அறநிலையத்துறைக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பது தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வரும் கோரிக்கையாகும். இதற்கான சட்டத்தை 1970 ஆம் ஆண்டு, முதலமைச்சராக இருந்த  மு.கருணாநிதி கொண்டு வந்தார். பல தடைகளுக்கு பிறகு, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், அரசு பயிற்சிப் பள்ளியில் (கோவில்களில்) படித்த 24 பேர் உட்பட, 58 பேருக்கு நியமன ஆணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அவர்கள் இப்போது பல கோவில்களில் பணியாற்றி வருகின்றனர். கேரளாவில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலித்துகள் உட்பட, 36 பேருக்கு அர்ச்சகராக பணிபுரிய ஆணையை 2017  ஆண்டு  வழங்கினார். இதற்காக அப்போது,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், பினராயி விஜயனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஒரு சில கோவில்களின் சொத்து, சமஸ்தானங்களின் சொத்துகளை விட அதிகம். பரம்பரை, பரம்பரையாக பார்ப்பனர்கள் தான் கோவில்களில் அர்சகர்களாக இருந்துள்ளனர். கோவில்களின் சொத்துகளையும் பெரும்பகுதி அவர்கள்தான் அனுபவித்து வந்தனர். கோவிலை ஒட்டியுள்ள, மேட்டுப்பாங்கான தெருவில்தான் அக்ரஹாரம் இருக்கும். வாய்க்காலை ஒட்டி, நீர்ப்பாசன வசதியுள்ள வயல்கள் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன. ஆனால், விடுதலைக்குப் பிறகு தீண்டாமை என்பது குற்றம்;  சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பது போன்ற விழுமியங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன. ஆனாலும் தோல்வியை ஒப்புக்கொள்ள  பார்ப்பனர்கள் தயாராக இல்லை.

நீதிமன்றம் மூலமாக, சட்டத்தின் ஓட்டைகள் மூலமாக, அரசுத்துறைகளை ஊடுருவுவதன் மூலமாக தமது மேலாதிக்கத்தை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்கள். உதாரணமாக மாம்பலம், அயோத்தியா மண்டபத்தை தமிழக அரசு  நிர்வகிக்க ஜெயலலிதா எடுத்த முயற்சிகளைத் தொடர்ந்து நீதிமன்றத் தீர்ப்பும் சாதகமாக வந்தது. ஆனால், மேல் முறையீட்டில் உயர்நீதிமன்றத்தில் முறையாக ஆதாரங்களை சமர்பிக்க விரும்பாமல் விட்டுக் கொடுத்து திமுக அரசு இழந்தது. இப்படி ஒரு சம்பவம் வரக்கூடாது என்பதற்காக தொல்.திருமாவளவன் இடையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

ஆகம விதிப்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தடையில்லை என்று  உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துவிட்டது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகப் பணிபுரிகிறார்கள். இந்த நிலையில் அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியர்கள் சேவா சங்கம் தனது மனுவில் ” எந்த இடத்தில் கோயில் இருக்க வேண்டும்; எப்படிப்பட்ட கட்டுமானமாக அது இருக்க வேண்டும்; அதில் என்ன சிலை  நிறுவ வேண்டும் என்பதும்,  அங்குள்ள துணை கடவுள்கள் யார் என்பதும், அங்குள்ள சிற்பங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதும், என்னவிதமான வழிபாடுகள் நடத்த வேண்டும் என்பதும், கோவில் திருவிழா எப்படி நடக்க வேண்டும் என்பதும்,  அந்தக் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது எப்படி என்பதும், காலங்காலமாக நிலவி வரும் வழக்கத்தின்படியே நடைபெற்று வருகிறது. இப்படி நிலவிவரும் பழக்கத்தை நீக்குகிற  முயற்சியில் உதவி ஆணையரின் இந்த அறிவிப்பு உள்ளது. எனவே தமிழக அரசினுடைய இந்த அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும்”  என்று உயர்நீதிமன்றத்தில் பி எஸ் ஆர் முத்துக்குமார் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார். இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தால், தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும்  தமிழக அரசின் உத்தரவு முடக்கப்படும்.

மேற்படி வாதம் தேவை இல்லாமல், சம்பந்தமே இல்லாமல் ஏதோ எல்லவற்றுக்குமே தமிழக அரசு எதிர்ப்பாக இருப்பதைப் போல குதர்க்கமாக அரசை குற்றம் சாட்டுகிறது.

அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களின் உரிமை போராட்டம்

பாராளுமன்ற உறுப்பினரான தொல் திருமாவளவன் இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ளக் கோரி மனுச் செய்து இருக்கிறார். “பிறப்பின் மூலமாக, சாதியின் மூலமாக, வர்ணாசிரம தருமத்தின் மூலமாக தனது கோரிக்கையை அவர் நியாயப்படுத்தி உள்ளார். அதாவது தமது சட்டவிரோத விளக்கங்களுக்கு, நீதித்துறை மூலமாக சட்டப்பூர்வ அனுமதியை சிவாச்சாரியார் கோரியிருக்கிறார்” என மிகக் கடுமையாக தனது வாதுரையில் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

“எட்டாம் நூற்றாண்டு வரை, அதாவது பல்லவர் காலம் வரை தமிழகத் கோவில்களின் நிர்வாகம் பார்ப்பனர்கள் அல்லாதவர்களிடமே இருந்துள்ளது என்று ஏ.கே. ராஜன் அறிக்கை கூறுகிறது. ( இந்தக் குழு அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்குவதற்கான வழிமுறையை ஆராய முதலமைச்சர் மு.கருணாநிதியால் 2008 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது) சோழர்கள் காலத்தில் தான் பார்ப்பனர்கள் செல்வாக்கு பெற்று கோவில் நிர்வாகத்தை தன் வசம் எடுத்துள்ளனர். எனவே காலம் காலமாக நிலவி வரும் பழக்கம் என்றால், கோவில் நிர்வாகத்தை பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் வசமே தர வேண்டும்.

பழனி முருகன் கோவில் பார்ப்பனர் அல்லாத பண்டாரங்களின் வசம்தான் இருந்தது. கோவில் அர்ச்சகர் என்ற பதவி பரம்பரை பதவி அல்ல. அது ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டது. பக்தர்கள் தான் நிரந்தரமானவர்களே தவிர, அர்ச்சகர்கள் அல்ல. மண்டைக்காடு கலவரத்தை ஒட்டி (1980), எம்.ஜி.ஆரால் அமைக்கப்பட்ட நீதிபதி எஸ்.மகாஜன் குழு,  பரம்பரை பரம்பரையாக பார்ப்பனர்களே அர்ச்சகராக இருக்க வேண்டும் என்பது அவர்களே போட்டுக்கொண்ட இட ஒதுக்கீட்டு விதியாகும்; எனவே, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க வேண்டும் என்று அக்குழு பரிந்துரைத்துள்ளது.

பார்ப்பனர் அல்லாதவர்கள் கடவுளை அடைய முடியாது என்பது ஆதிசங்கரருடைய கருத்து. அப்படியானால் பார்ப்பனர் அல்லாதவர்களை ஏன் இந்துக்கள் என்று சொல்ல வேண்டும் ? அனைத்து சாதியினரும் உள்ளடங்கி இருந்தால்தான் இந்து மதத்தை சீர்திருத்த முடியும். வழக்கம் என்பதற்காக, கணவனை இழந்த பெண்களை, தலையை மொட்டை அடித்து இப்போது ஒதுக்கி வைப்பதில்லை. தென் கர்நாடகாவில், பார்ப்பனர்கள் சாப்பிட்டு மிச்சம் வைத்திருக்கும் எச்சில் உணவின் மீது, பார்ப்பனர் அல்லாதவர்கள் உருண்டு புரளும் வழக்கம் நின்று விட்டது. சைவ , வைணவ கடவுள்களை ஒரே கோவிலில் வைக்கும் அளவுக்கு விதிகள் மாறிவிட்டன.

சிதம்பரம் கோவிலில், வயது முதிர்ந்த பக்தை ஒருவரை தாக்கிய தர்ஷன் என்ற அர்ச்சகர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அரசு வெளியிட்டுள்ள விளம்பரப்படி பணி நியமனம் நடைபெற வேண்டும்” என்ற தனது மனுவில் கூறியுள்ளார்.

திருமாவளவன் சார்பில் வழக்கறிஞர் ஆர். நடராஜன் வாதிடுகிறார். திருமாவளவன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள,  வாதுரைகள் சிறப்பாக உள்ளன. இருபது பக்கங்கள் உள்ள இந்த வாதுரைகளை, விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரசுரமாக்கி வெளியிடக் கூடும். அந்த மனுவில் சாதியற்ற சமுதாயத்திற்கான சட்ட வாதங்களையும், அறவியல் கூறுகளையும் நன்கு விளக்கியிருக்கிறார். இந்த வழக்கில் தமிழக அரசு என்ன பதில் மனு போட்டிருக்கிறது, எப்படி வாதாடப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் திமுகவின் தோழமைக் கட்சியைச் சார்ந்த, பாராளுமன்ற உறுப்பினரான திருமாவளவன் தன்னை இந்த வழக்கில் இணைக்க கோரிக்கை விடுத்திருப்பதன் மூலம், இந்து சமய அறநிலையத்துறையின் எதிர் வழக்காடும் திறன் மீது தனது ஐயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என்றே தோன்றுகிறது.  இதில் தீர்ப்பு தவறாகப் போகுமானால், அது மற்ற கோவில் விஷயத்திலும் எதிரொலிக்கும்!

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time