புதை குழிக்குள் தள்ளப்படுகிறதா பொது விநியோக திட்டம்?

நேர்காணல்: பீட்டர் துரைராஜ்

ரேஷன் கடைகளை ஒழிக்க நினைக்கும் ஒன்றிய அரசின் சதிக்கு திமுக அரசு துணை போகிறதா? நெல் கொள் முதலில் இனி அரசு நேரடியாக ஈடுபடாதாம்! அரிசி ஆலைகளை தனியாருக்கு தரப் போகிறார்களாம்! பொது விநியோகத் திட்டம் ஊழலில் புழுத்துக் கிடக்க என்ன காரணம்..?சி.சந்திரகுமார் நேர்காணல்.

தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள,  நுகர்பொருள் வாணிபக் கழகத்தை கூட்டுறவுத் துறைக்கு மாற்றக் கூடாது. அரிசி ஆலைகளை தனியாருக்கு தரக்கூடாது. நிர்வாகச் சீர்கேட்டை தடுக்க வேண்டும். விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும், நுகர்வோருக்கும் சேவை செய்துவரும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்  கழகத்தை வலிமைப்படுத்த வேண்டும். மாத ஓய்வூதியத்தை ரூ.6000 ஆக உயர்த்த வேண்டும் என்று கூறுகிறார் ஏஐடியுசி தொழிற்சங்கத்தைச் சார்ந்த  சி.சந்திரகுமார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்க பொதுச் செயலாளரான அவரை பீட்டர் துரைராஜ் நேர்காணல் செய்தார்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ?

முன்பெல்லாம் விவசாயிகள் அறுவடை செய்த உடனேயே, வியாபாரிகள் நெல்லை கொள்முதல் செய்ய மாட்டார்கள். விவசாயிகளை அலைக்கழித்து, விலையை குறைத்து வாங்குவார்கள். கொள்முதல் செய்த நெல்லுக்கு, உடனே பணம் தர மாட்டார்கள். அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் போராடினர்; பல நாட்கள் சிறையில் இருந்தனர். எனவேதான் விவசாயிகளின் இன்னல்களை போக்குகின்ற விதத்தில், 1972 ஆம் ஆண்டு, கலைஞர் அவர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கினார். இதனால் விவசாயிகள் பலன் அடைந்து வருகிறார்கள். நெல்லை கொள்முதல் செய்வதில் சுணக்கம் இருந்தால், உடனே விவசாயிகள் மறியல், ஆர்ப்பாட்டம் என ஏதோ செய்து, மாவட்ட ஆட்சித்தலைவரை களத்திற்கு வரவழைத்து விடுவார்கள். பிரச்சினை தீர்ந்து விடும். விவசாயிகளிடமிருந்து, அரசு நிர்ணயித்த விலையில், நேரடிக் கொள்முதல் நடைபெறுகிறது. இதனால் இடைத்தரகர்கள் கொள்ளை அடிப்பது இல்லை.

இப்போது தமிழம் முழுவதும் 23 நவீன அரிசி ஆலைகள் உள்ளன. இதன் மூலம், அரசி பொது விநியோகத்துறைக்கு கிடைக்கிறது. மாதம் 30 கிலோ இலவச அரிசித் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சத்துணவுக் கூடங்களுக்கு அரிசி கிடைக்கிறது. பட்டினிச் சாவு என்பதே இல்லை என்ற நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் என்ற மாநில அரசின் பொதுத்துறை விளங்குகிறது. இதனை கூட்டுறவுத் துறை மூலம் நிர்வகிக்க அரசு விரும்புகிறது. இப்படிச் செய்தால், அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் நெல் கொள்முதல் இருக்காது. இது நல்லதல்ல.

சிட்டா அடங்கல், இணையம் வழியாக பதிவு போன்றவை மூலம் கொள்முதல் செய்வதில் சில கட்டுப்பாடுகளை அரசு விதிக்கிறது. இது தேவையற்றது. தமிழ்நாட்டில்  உற்பத்தி ஆகும் நெல் முழுவதையும் கொள்முதல் செய்யலாம்; இதனை அரிசியாக்கி, பொதுச்சந்தையில் விற்கலாம். இதனால் இலாபமும் கிட்டும். இந்த ஆலோசனைகளை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி அவர்கள் பரிசீலிக்க வேண்டும்.

கறுப்புப் பட்டை அணிந்து போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருக்கிறீர்களே ? 

நெல்லை அரைக்கும் பணியை, முகவரிடம் கொடுக்கிறது. இதன்படி 100 கிலோ நெல்லை கொடுத்தால்,  68 கிலோ அரிசி தந்தால் போதும். அதையும் ஆறுமாதம் கழித்து திருப்பிக் கொடுத்தால் போதும். ரேஷன் அரிசியை வாங்கி, பட்டை தீட்டி அதையே திருப்பித் தரும் முறைகேடுகளும் நடைபெறுகின்றன. அதிலிருந்து கிடைக்கும் நொய், உமி, தவிடு போன்றவை முகவர்களுக்குச் சொந்தமாகிவிடும். அரவைக் கூலி தரத் தேவையில்லை. தமிழ்நாடு அரசு பெரும் பொருட்செலவில் அரிசி ஆலைகளை உருவாக்கி உள்ளது. எனவே அரசே நேரடியாக நெல்லை அரிசியாக்கலாம்.

இந்த அரிசி ஆலைகளை ஒப்பந்த முறையில் தனியாருக்கு தர முயற்சி செய்கிறார்கள். அமைச்சர் இதில் ஒரு நிலை எடுத்துப் பேசாமல், அதிகாரிகள் சொல்லுவதை அப்படியே கேட்கிறார்.  இப்போது நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் போன்ற இடங்களில் கட்டப்பட்டு வரும் நவீன அரிசி ஆலைகளை தனியார் வசம் கொடுக்க இருப்பதாக தெரிய வருகிறது. கலைஞர் உருவாக்கிய ஒரு கட்டமைப்பை, மு.க.ஸ்டாலின் அரசு வலிமைப் படுத்த வேண்டும்.

ஒன்றிய அரசு, நேரடியாக கொள்முதலில் ஈடுபடக்கூடாது என்ற மக்கள் விரோத அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது. இத்தகைய அறிவுறுத்தல்களை தமிழக அரசு கேட்கக் கூடாது. எனவே தான் இதனை எதிர்த்து, வெள்ளிக் கிழமை அன்று  கறுப்பு பட்டை அணிந்து போராட இருக்கிறோம். நம்மிடம் தமிழ்நாடு முழுவதும் சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. இதன் மூலம் பருப்பு, பாமாலின், எரிவாயு, இலவச அடுப்பு, இலவச தொலைக்காட்சி போன்றவை வழங்கப்படுகின்றன. இவ்வளவு பெரிய கட்டமைப்பைக் கட்டி,  இவைகளை தனியாருக்கு தருவது என்பது தற்கொலை முயற்சிக்கு ஒப்பானது ஆகும். இருக்கின்ற கட்டமைப்பை பயன்படுத்தி மஞ்சள், மிளகாய், புளி, உளுந்து, பச்சைப் பயிறு, கேழ்வரகு போன்ற தானியங்களையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும். இதனால் விவசாயிகளும் பலன் பெறுவர், பொதுமக்களும் பலன் பெறுவர்.

விவசாயிகளிடமிருந்து, கையூட்டு வாங்கிக் கொண்டு  கொள் முதல் செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டு வருகிறதே !

லாரி சொந்தமாக வைத்து  இருக்காத ஆளுங்கட்சிக்காரர்களுக்கு டெண்டரை விடுகிறார்கள். அவர்கள் ஒரு லாரிக்கு  நான்காயிரம் ரூபாய் வரை  கொடுத்தால்தான் கொள்முதல் நிலையங்களில் இருந்து அன்றைக்கே நெல்லை எடுத்துச் செல்கிறார்கள்.

இல்லையென்றால்  நெல்லின் எடை குறையும்; அதனை சேமித்து வைப்பதில் சிக்கல் ஏற்படும். இதுதவிர  ஆய்வுக்கு வரும் அதிகாரிகளுக்கு வசூல்,   வாராந்திர வசூல் என தர வேண்டும். ஆனால் அதிகாரிகளுக்கு எந்த பொறுப்பும் இல்லை. ஏற்படும் இழப்பீடுகளை பட்டியல் எழுத்தர்தான் தர வேண்டும். இதைத் தவிர ஈரப்பதம் குறிப்பிட்ட அளவுக்கு மேலாக இருக்கக் கூடாது, எடை குறையக் கூடாது என சொல்லுகிறார்கள். அறிவியல் பூர்வமாக கட்டப்பட்ட கிட்டங்கிகளில் தான் சேதாரம் இருக்காது. சாலை ஓரங்களில் சேமிக்கப்படும் நெல்லுக்கு சேதாரம் இருக்கும். இலஞ்சம் இல்லாத ஒரு கொள்முதல் நிலையத்தையாவது உங்களால் காட்ட முடியுமா? என்று பேச்சு வார்தையின் போது ஓர் உயர் அதிகாரியைக் கேட்டேன்.

கடந்த ஆண்டு டெல்டா மாவட்டத்தில் இருந்து 8 கோடி ரூபாய் இழப்பீட்டிற்காக வசூலித்து உள்ளனர். மாதம் 5000 ரூபாய் சம்பளம் வாங்கும் எழுத்தர்கள் எப்படி இத்தனை ரூபாய் கட்ட முடியும். அப்படி கட்டவில்லை என்றால், அடுத்த ஆண்டு அவர்களுக்கு வேலை தர மாட்டார்கள். கொள்முதல், எடை, தரம், சேமிப்பு, தணிக்கை என நாள் முழுவதும் உடல் வருத்த பணியில் ஈடுபட்டிருக்கும் எழுத்தர்களின் நிலையை  உணர வேண்டும். ஏற்படும் இழப்பீடுகளுக்கு,  அதிகாரிகளுக்கும் பொறுப்பு நிர்ணயிக்க வேண்டும். இங்கு நடப்பது ஒரு அமைப்பு ரீதியான ஊழல். இது அனைவருக்கும் தெரியும். இதனை தீர்க்க வேண்டுமானால்,  இதற்கான முயற்சிகள் மேல்மட்டத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும்.

நுகர்பொருள் வாணிபக் கழகத்தை சீர்படுத்த நீங்கள் சொல்லும் ஆலோசனை என்ன ?

அமுதம் பல்பொருள்  அங்காடியில் அனைத்து பொருட்களும் பொதுமக்களுக்கு கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் 500 கடைகள் தான் இப்போது  உள்ளன. குறைந்த பட்சம் ஒரு தாலுகாவிற்கு ஒரு அமுதம் பல்பொருள் அங்காடியையாவது   திறக்கலாம். அதன் மூலம் அனைத்து பொருட்களும், நியாயமான விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கும். இவை லாபத்தோடு  இயங்கி வருகின்றன.

தமிழக அரசு நடத்தும் பெட்ரோல் நிலையம், எரிவாயு நிலையம்,  மண்ணெய் நிலையம் போன்றவைகளின் தரம் நன்றாக இருப்பதால், தேடிப் போய் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இத்தகைய நிலையங்களின் எண்ணிக்கையை உயர்த்தலாம். இதனால் இலாபம் கிடைக்கும்.  ஓய்வு பெற்றவர்களுக்கு மாதம். 1500 ரூபாய்தான் தற்போது ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இதனை உயர்த்தி, மாதம் 6000 ரூபாய் வழங்க வேண்டும்.

மற்ற சங்கங்கள் என்ன சொல்கின்றன ?

ஒரு கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர் உள்ளனர். இவர்களைத் தவிர சுமை தூக்குபவர்களும் உள்ளனர். இவர்களுக்கு மூன்று மாதம், நான்கு மாதம் என அறுவடையின்போதுதான் வேலை இருக்கும். ஒரு லாரியிலிருந்து ஏற்றி, இறக்கும் மூட்டைகளுக்கு கிடைக்கும் பணத்தை அவர்களுக்குள்  பகிர்ந்து கொளகிறார்கள்.  இறந்து போகும் சுமை தூக்கும் தொழிலாளிக்கு எங்கள்  சங்கத்தி்லிருந்து ரூ.10,000 வழங்கி வருகிறோம். கிட்டத்தட்ட 13,000 பேர் சுமை தூக்கும் பணியில் உள்ளனர். இது போன்ற எளிய மக்களின் வேலைவாய்ப்பை பறிக்கின்ற  கொள்கைகளை நாங்கள் எதிர்க்கின்றோம். வருகிற செப்டம்பர் 20 ம் நாள் தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.

பொதுமக்கள், நுகர்வோர், விவசாயிகள் என சகலருக்கும் பணியாற்றி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை மற்ற மாநிலங்கள் வியப்பாக பார்த்து வருகின்றன. எனவே, இதனை வலிமைப் படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பமாகும். இந்தக் கோரிக்கைகளுக்கு திமுகவின் தொழிற்சங்கமான தொமுச உட்பட அனைத்து சங்கங்களும்  ஆதரவாக உள்ளன. நன்றாக செயல்படும் பொதுத்துறையை முடக்கக் கூடாது.

நேர்காணல்; பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time