எட்டுபேர் இறப்பும், வீணான உணவும் சொல்லும் செய்தி!

-சாவித்திரி கண்ணன்

மதுரை சித்திரை திருவிழாவிற்கு கூடாத கூட்டமா? மீனாட்சி திருக் கல்யாணத்திற்கு நடக்காத விருந்தா..? லட்சம் பேருக்கு விருந்து படைபார்களே! அதிமுக மாநாட்டில்  இவ்வளவு உணவுக் குவியல் வீணானது ஏன்? விலை மதிப்பில்லா மனித உயிர்கள் மரணித்தது ஏன்..? நடந்தது என்ன..?

மாநாடு மிகப் பிரம்மாண்டம் தான்!

மக்கள் திரள் பெரு வெள்ளம் தான்!

விமானத்தில் இருந்து 600 கிலோ மலர் தூவல்!

65,000 வாகனங்கள்! 10,000 சமையல்காரர்கள்!

செல்வத்தை குவித்து வைத்துள்ளவர்களின் கட்சி என்பது செய்யப்பட்ட செலவுகளிலேயே தெரிகிறது! எல்லாவற்றிலும் பிரம்மாண்டத்தைக் காட்டினார்கள்!

மதுரை பல அரசியல் கட்சிகளின் மாநாடுகளைப் பார்த்துள்ளது! இங்கே மாநாடு நடத்தாத கட்சிகளே கிடையாது! பொதுவாக தமிழக அரசியலின் நாடித் துடிப்பை கண்டறிய விரும்பும் அரசியல் தலைமைகள் அதற்கான இடமாக மதுரையைத் தான் பார்க்கிறார்கள்! ஆனால், எந்த அரசியல் மாநாட்டிலும் இந்த அளவு உணவுகள் குப்பையில் கொட்டப்பட்டதில்லை. எட்டுபேர் அளவுக்கு இறந்ததும் இல்லை.

பெருந்திரள் மக்களுக்கு உணவு பரிமாறல் என்பது ஒரு தவம்! அதை மிகச் சிரத்தையுடன் செய்ய வேண்டும். மதுரையில் சித்திரை திருவிழாவின் போது கூடும் கூட்டத்தை விட எந்த அரசியல் கட்சியாலும் பெரும் கூட்டத்தைக் கூட்ட முடியாது! மீனாட்சி திருக் கல்யாணத்தின் போது மதுரையில் கால் பதிக்கும் மக்கள் அனைவருக்கும் மிக பிரம்மாண்ட விருந்து பரிமாறப்படும். இது  மிக தெளிவான திட்டமிடலுடன் நடக்கும். சிறிய அளவு கூட வீணானதாக செய்திகள் இல்லை.

எனக்குத் தெரிந்து ஒவ்வொரு ஆண்டும் திருக்கல்யாண வைபவத்தின் போது பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் சார்பில் சேதுபதி மேல் நிலை பள்ளியில் திருக்கல்யாண விருந்து 23 ஆண்டுகளுக்கு மேலாக அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, இந்த ஆண்டு கூட மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் 400 சமையல்காரர்கள் உழைப்பில் 7 ஆயிரத்து 500 கிலோ அரிசி, 6 டன் காய்கறிகளுடன் உணவு தயாரிக்கப்பட்டது.

மீனாட்சி திருக் கல்யாண விருந்தில் தன்னார்வத்துடன் சமையல் பணியில் மக்கள்!

இந்த உணவு தயாரிப்பில் ஆணும்,பெண்ணுமாக நூற்றுக் கணக்கான மதுரை மக்கள் தன்னார்வத்துடன் வீட்டில் இருந்தே அரிவாள்மனை, காய்கறி நறுக்கும் கத்திகளுடன் வந்து வேலைகள் செய்து கொடுத்து மகிழ்ச்சி அடைவார்கள்! விருந்துக்கும் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பள்ளி மைதானத்தில் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு ‘பப்பே’ முறையில் விருந்து பரிமாறப்படும். இது தவிர ஆங்காங்கே அவரவர்கள் சாலையில் வெஜ் பிரியாணி,சாம்பார் சாதம், புளியோதரை ஆகியவற்றை வழங்குவதும் நடக்கும்.

செய்தி தொடர்பாளர் ஜவகர் அலி தரும் தகவல்கள்படி, ”மாநாட்டில் 5 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டது. 5 லட்சம் பேருக்கு உணவு தயாரிப்பது என்பது மிகப்பெரிய வேலை. இந்த உணவு விநியோகிக்கப்படுவதற்காக நிறைய Counters வைத்தோம். ஒரே நேரத்தில் 5 லட்சம் பேருக்கு சமையல் செய்ய முடியாது. இதை கருத்தில் கொண்டு சில உணவுகளை முன்கூட்டியே முதல்நாளே கொஞ்சம் சீக்கிரமாக செய்யத் திட்டமிட்டு புளியோதரை செய்தால் தாங்கும் என செய்யப்பட்டது” என்கிறார்.

இங்கே தான் தவறு நடந்துள்ளது! ஒரே இடத்தில் ஐந்து லட்சம் பேருக்கான சமையல் என்பதை கண்டிப்பாக தவிர்த்து இருக்க வேண்டும். ஐந்து லட்சம் இல்லை மூன்று லட்சம் என்று வைத்துக் கொண்டலுமே ஒரே இடத்தில் சமைப்பதையும், பரிமாறுவதையும் தவிர்த்து இருக்க வேண்டும். எவ்வளவு சிறப்பான ஏற்பாடுகள் செய்தாலுமே கூட ஒரே இடத்தில் ஒரு லட்சம் பேருக்கு மேல் உணவு பரிமாறல் என்பது சாத்தியமே இல்லை. அனைவரும் அப்படி ஒரே இடத்திற்கு வந்து சாப்பிடவும் மாட்டார்கள்! மதுரையில் சைவ, அசைவ உணவுகளுக்கு பேர் போன பல ஹோட்டல்கள் உள்ளன. அது போன்ற இடங்களுக்கு சென்று விரும்பியதை சாப்பிட கணிசமானவர்கள் ஆர்வம் காட்டுவது இயற்கையே!

சரி, இப்படித் தாறுமாறாக பல அண்டாக்களில் புளியோதரை செய்துவிட்டனர். அதைப் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி மதுரைக்குள் அங்குமிங்குமாக நடமாடிக் கொண்டிருக்கும் கட்சிக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் பரிமாறச் செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. பணம் இருக்கிறது என்பதற்காக உணவை வீணடிப்பதில் ஒரு சிறிதும் நியாயமும் இல்லை. தர்மமும் இல்லை.

‘பணம் இருக்கிறது. செலவுக்கு அஞ்சமாட்டோம்…’ என அள்ளி இறைத்திருக்கிறார்கள்! முன் யோசனையும் இல்லை. திட்டமிடலும் இல்லை. உழைத்து சம்பாதித்த பணம் என்றால் உறுத்தும். வலிக்கும். ஊழலில் வந்த பணம் தானே!

அதே போல மதுரை மாநாட்டிற்கு வந்ததில் எட்டு பேர் உயிர் இழந்துள்ளனர். 50 க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் படுகாயம் அடைந்துள்ளனர். சில நேரங்களில் மாநாட்டிற்கு வந்து திரும்புவோர் வரும் வழியிலோ போகும் வழியிலோ ஏதெனும் விபத்தை சந்தித்து ஓரிருவர் இறப்பதுண்டு. ஆனால், இவ்வளவு அதிகம் உயிர் இழப்பும், படுகாயங்களும் ஏற்பட்டதில்லை.

அதிமுக மாநாட்டில் ஏற்பட்டதற்கு காரணம், கூடுதலாக கூட்டம் சேர்க்க செய்யப்பட்ட முன்னெடுப்புகள் தாம்! மதுரை மாநகர் இந்த அளவுக்கு மேல் மனித கூட்டத்தை தாங்காது என்ற புரிதல் இல்லாமல் பணத்தை தண்ணீராகச் செலவழித்து ஆட்களை அழைத்து வந்துள்ளார்கள். கூடுகின்ற கூட்டத்தைக் கொண்டு ‘கெத்து காட்ட வேண்டும்’ என்ற எண்ணமே அரசியல் கட்சிகளுக்கு மேலோங்கியுள்ளது .65,000 வாகனங்கள் வந்ததாக சொல்கிறார்கள் தாங்குமா மதுரை!

”மாநாட்டிற்கு 50 லட்சம் தொண்டர்கள் வந்தனர். காவல்துறையினர், மாநாட்டில் பங்கேற்க வந்த தொண்டர்களை முழுமையாக அனுமதிக்கவில்லை. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது..”என ஆர்.பி.உதயகுமார் சொல்கிறார். உதார் விடுவதற்கும் அளவிருக்கிறது! 50 லட்சமாம்!

வரும் தொண்டர்களின் உயிர் குறித்து கட்சித் தலைவருக்கு கடுகளவும் அக்கறை இல்லை. ஆறு லட்சம் பணம் சற்றே ஆறுதலை தர முடியுமே தவிர போன உயிரை மீட முடியாது. அந்த குடும்பத்தின் இழப்பை பணத்தை கொண்டு ஈடு செய்ய முடியாது.

இது மட்டுமா சோகம்..! ஏராளமான பணத்தை விரயம் செய்து, ஏகப்பட்ட மக்கள் கூட்டத்தைக் கூட்டிய போதிலும் தமிழ் நாட்டின் பிரதான எதிர்கட்சி நாடும், மக்களும் எதிர்கொள்ளும் எந்த பிரச்சினை குறித்தும் பேசத் திரானியின்றி வெறும் திமுக வசைபாடலோடு முடிந்தது வேதனை தான்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time