கடல் நீரை குடி நீராக்குவது மிகக் கேடானது!

-சாவித்திரி கண்ணன்

தமிழ்நாடு நன்கு மழை பொழியும் இடமாகும்! இது செளதி இல்லை.ஆனால், பெய்யும் மழை நீரை எல்லாம் கடலுக்கு அனுப்பி மீண்டும், மீண்டும் கடல் நீரைக் குடிநீராக்க பல ஆயிரம் கோடிகளை விரயமக்குகிறார்கள்! கடல் நீரைக் குடிப்பது உடலுக்கு கேடு! சூழலுக்கும் கேடு.ஒரு விரிவான அலசல்;

ஆசியாவிலேயே மிகப் பெரிய குடிநீர் திட்டமாக நெம்மேலியில் ரூ.4,276.44 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். 2026 ல்  இந்த திட்டத்தை முடிக்க திட்டமிட்டு உள்ளனர். 40 கோடி லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் இந்த கடல் குடிநீர் சுத்திகரிப்பு  திட்டத்தின் மூலம் தாம்பரம் மாநகர மக்களுக்கும் சென்னையின் தென் மேற்கு பகுதியில் உள்ள 35 பகுதிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க முடியுமாம்.

சென்னையில் குடிநீர் பற்றாக் குறையை போக்கும் வகையில் கடந்த 2003-2004-ம் ஆண்டு  கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அன்றைய ஜெயலலிதா அரசால் அறிவிக்கப்பட்டது. அதன் படி மீஞ்சூர் காட்டுப்பள்ளி மற்றும் நெம்மேலி என இரண்டு இடங்களில் தினமும் தலா 10 கோடி லிட்டர் (100 மில்லியன் லிட்டர்) கொள்திறன் கொண்ட கடல்நீரை குடி நீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டன.

இதன் மூலம் சென்னை மக்களுக்கு கடல் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இரு சுத்திகரிப்பு நிலையங்களும் சென்னையின் மொத்த குடிநீர் தேவையில் 20 சதவீதத்தை பூர்த்தி செய்து வந்தன. இந்நிலையில் நெம்மேலியில் 2வது திட்டமாக கடல்நீரை குடிநீராக்கும் நிலையம், எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போது 2019-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 15 கோடி லிட்டர் (150 மில்லியன் லிட்டர்) கொள்ளளவு கொண்ட இந்த சுத்திகரிப்பு ஆலையின் பணிகள் ரூ.1516 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் அனைத்தும் இப்போது முடிவுறும் தருவாயில் உள்ளது.


சென்னையில் ஆண்டு தோறும் சராசரியாக 1300-1350 மில்லிமீட்டர் மழை பெய்கிறது. இந்த அளவு மழை பெய்யும் நகரத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது என்றால், அது யாருடைய தவறு?. பெருகி வரும் மக்கள் தேவையை கருத்தில் கொண்டு நீர் ஆதாரங்களை பாதுகாக்காமல் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை செய்வது தான் காரணம்!

2015 ஆம் ஆண்டு மாபெரும் மழை,வெள்ளத்தால் சென்னை திணறியது. சுமர் 300 டி.எம்.சி தண்ணீர் கொட்டித் தீர்த்தது! நாம் அவ்வளவையும் சமர்த்தாக கடலுக்கு அனுப்பி விட்டு, அடுத்த ஆண்டே தண்ணீர் பற்றாகுறை என கூப்பாடு போட்டோம்.

இதன் மூலம் தண்ணீர் பற்றாகுறை என்பது செயற்கையாக உருவாக்கப்படுகிறது. அதன் மூலம் பல்லாயிரம் கோடி பெறுமான சூழலுக்கு கேடான திட்டங்களை அரசியல்வாதிகள் வெளி நாட்டு கடன் உதவி பெற்று செயல்படுத்தி ஊழலில் திளைக்கிறார்கள்!

கடல் நீர் கேடானது;

கடல் நீர் குடிக்கத் தகுந்தது அல்ல. அதை சுத்திகரித்தாலும் குடிப்பது நல்லதல்ல.காரணம், அதில் உள்ள கழிவுகளையும், உப்பையும் மட்டுமே நம்மால் சுத்திகரிக்க முடியும். அப்படி சுத்திகரிக்கப்பட்ட பிறகு அது ஒரு உயிர்ப்பற்ற சக்கை நீராகும். அதில் இயற்கையான தண்ணீருக்கான சக்தி கிடையாது. இதில் மனிதனுக்கு நன்மை செய்யும் எந்தக் கனிமங்களும், நுண்ணுயிர்களும் இல்லை. கடல் நீரை குடி நீராக்க இரும்பு குளோரைடு, பாலி அக்ரிலிக் அமிலம், அல்கலைன் அமிலம், சோடியம் சல்பைடு போன்ற ரசாயனக் கலவைகள் சேர்க்கபடுகின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இயற்கை தண்ணீருக்கு என்று ஒரு மகிமை உள்ளது. ஒருவனின் குணாம்சத்தை தீர்மானிக்கும் சக்தி தண்ணீருக்கு உள்ளது. நான் காவிரி நீரைக் குடித்து செழிப்பாக வளர்ந்தவன் என்றும், தாமிரபரணி தண்ணீரைக் குடித்து வளர்ந்த வீரத் தமிழன் இன்றும் பலர் பேசக் கேட்கலாம். அந்த இயற்கையான நீரின் சத்து நம் ரத்தத்தில் கலப்பதன் மூலம் நாம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உத்திரவாதம் ஆகிறது. ஆனால், கடல் நீர் என்பது குடிக்கக் கூடாதது. அரபு நாடுகளில் பாலை வனத்தில் வாழும் மக்கள் உள்ள நாடுகளில் இந்த திட்டம் வேறு வழியின்றி செயல்படுத்தப் படுகிறது. ஆனால், நல்ல மழைப் பொழிவு உள்ள நமக்கு தேவை இல்லை.

மேலும் கடல் நீரை குடி நீராக்குவது அதிக செலவு பிடிக்கக் கூடியது! 40 கோடி லிட்டர் தண்ணீர் தயாரிக்க சுமார் நாற்பது லட்சம் ரூபாய் பணம் செலவாகிறது. இதுமட்டுமின்றி, 40 கோடி லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்க இரண்டு லட்சம் கோடி லிட்டர் கடலில் இருந்து எடுக்க வேண்டும். அப்படிக் கடலில் இருந்து நீரை ராட்சதக் குழாய்கள் மூலம்  மிக வேகமாக உறிஞ்சி  எடுக்கும் போது அதில் பல்லாயிரக்கணக்கான கடல் உயிரினங்கள் அள்ளிச் செல்லப்பட்டு மடிகின்றன. மேலும் லார்வா, மீன் முட்டைகள் உள்ளிட்ட நுண்ணுயிர்கள் நீரின் விசை மற்றும் அழுத்தத்தால் சாகடிக்கப்பட்டு விடுகின்றன.

இது போதாது என மீதி  1,60,000 லிட்டரை மீண்டும் கடலில் கழிவாகக் கொட்டும் போது கடலின் சுற்றுச் சூழலுக்கு கேடு என்கிறார்கள் சூழலியல் நிபுணர்கள். இதனால் கடலில் வாழும் மீன்கள், ஆமைகள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் என்கிறார்கள். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கபடும்.

சென்னையிலும், அதைச் சுற்றிலுமாக 4.000 க்கு மேற்பட்ட ஏரிகள் உள்ளன. அவற்றை சிரத்தையுடன்  உயிர்பித்தாலே போதுமானது. அபரிமிதமான இயற்கை தண்ணீரை நாம் பெறலாம்.

இவ்வளவு கேடுகள் இருந்தும் இது போன்ற திட்டங்களில் ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டுவதற்கு திட்டத்தின் மூலம் கிடைக்கும் ஆதாயங்களே காரணமாகும். நகரமயமாக்கம், நரகமாக்கத்தில் தான் நம்மை கொண்டு விடுகிறது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time