We-20 மாநாட்டை அராஜகமாக நிறுத்திய பாஜக அரசு!

ச.அருணாசலம்

ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறுவதை யொட்டி பொய்யான பிம்பங்களை கட்டமைக்கிறார்கள் பாஜக அரசும், ஆர்.எஸ்.எஸும்! இந்தியா குறித்த உண்மையான தோற்றத்தை உலகிற்கு தரவும், ஜி20 மாநாட்டில் ஆரோக்கியமான தீர்வுகள் முன்னெடுக்கப்படவும் நடந்த  we-20  மாநாட்டுக்கு ஏகக் கெடுபிடி!

”இயற்கையை அழித்து கொள்ளை லாபம் ஈட்டுவோரிடம் இருந்து மக்களையும், நாட்டையும் காப்போம்” என்ற முழக்கத்தோடு டெல்லியில் திரண்ட இந்தியாவின் முற்போக்கு சிந்தனையாளர்களையும், சமூக செயற்பாட்டாளர்களையும் உள் அரங்கில் வைத்து கைது செய்து அராஜகம் நிகழ்த்தி உள்ளது பாஜக அரசு!

1999-ம் வருடத்தில் கிழக்கு ஆசிய பகுதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உலக பொருளாதாரத்தை பெருமளவு “பதம்” பார்த்தது . இதை எதிர் கொள்ள வளர்ந்த நாடுகள் சிலவும் வளரும் நாடுகள் சிலவும் இணைந்து உருவாக்கிய  அமைப்பே இது. 2001ல் இந்தியா இவ்வமைப்பிற்கு தலைமை தாங்கியுள்ளது. இக் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு வருடத்திற்கு ஒரு முறை மாறும். இப்பொழுது இந்தியா டிசம்பர் 2022 முதல் நவம்பர் 2023 வரை பொறுப்பிலிருக்கும்.

இந்த மாநாடு உலக பொருளாதாரமும் , பருவ நிலையும் ஒரு இக்கட்டான நெருக்கடியை சந்தித்து கொண்டிருக்கும் வேளையில் கூட்டப்பட்டுள்ளது. எனவே, இந்தச் சூழலில் தலைமைப் பொறுப்பேற்றுள்ள இந்தியாவின் பங்கு எப்படி இருக்க வேண்டும் ?

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர் காலம் என்பதை 2023ம் ஆண்டுக்கான ஜி20 மாநாட்டின் கருப் பொருளாக பிரதமர் மோடி முன் வைத்துள்ளார். இக்கருப்பொருளின் அடிப்படையில் இந்த உச்சி மாநாட்டில் பொருளாதார வளர்ச்சி, முதலீடு, காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகள், அனைவருக்குமான உறுதியான வளர்ச்சியை முன்னெடுத்தல் மற்றும் பொது கட்டமைப்புகளை டிஜிட்டல் மயமாக்குதல் போன்றவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.


இதற்கு உறுதுணையாக வர்த்தகம்-20 என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது, இதில் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) முக்கிய பங்காற்றுகிறது.

LIFE (life style for environment) இயற்கை சூழலுக்கு ஏற்ற வாழ்வு முறையை இந்தியா இவ்வுலகிற்கு இம்மாநாட்டின் மூலம் காட்ட விழைகிறது என்றால் , அனைவருக்குமான நியாயமான சமமான வளர்ச்சி மூலமே இதை சாதிக்க முடியும் . எனவே, இந்தியா காந்தியடிகள், பசவேஸ்வரா, தயானந்த சரஸ்வதி, இராமகிருஷ்ணர், மகாத்மா பூலே, திலகர், மற்றும் அம்பேத்கர் ஆகிய பெரியோர் காட்டிய வழியில் சிவில்-20 -Civil20 (C20) என்ற அமைப்பை ஏற்படுத்தி, இவ்வமைப்பு ஜி-20 உச்சி மாநாட்டின் கொள்கை விளக்கத்தை முன்னெடுக்கும் “அதிகாரபூர்வ குழுவாக” மோடி அறிவித்தார் . இக்குழு பரந்துபட்ட, பல தரப்பட்ட சமூக ஆர்வலர்களின் , சமூக குழுக்களின் குரலாக, பிரதிநிதியாக இம்மாநாட்டில் செயல்படும்  எனக் கூறப்பட்டது அனைத்தும் பொய்யாகி வருகிறது.

நடைமுறையில் இந்த அமைப்பு -C20- மாதா அமிர்தானந்த மயி அவர்களின் ஆன்மீக வழிகாட்டலில் செயல்படும் என்று அறிவித்தனர் . இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக  – அன்னையின் அருளாசிக்கு வலு சேர்க்க -ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங் -ஆர்.எஸ்.எஸ் அமைப்பு களமிறங்கி பரப்புரைகள், முன்னெடுப்புகள் விளக்கங்கள் ஆகியவற்றை  செய்கிறது.

ஏராளமான மக்களின் வரிப்பணத்தையும் அதிகாரத்தையும் ஒன்றிய அரசின் ஆசியையும் பெற்றஇந்த குழு பெரும்பான்மைவாத நிலைப்பாட்டை முன்னெடுக்கும் கல்வியாளர்கள், ஊடகத்தினர், சமூக அமைப்பினர் ஆகியோரை வைத்து நிகழ்ச்சிகளையும் ,விவாதங்களையும் கருத்தரங்குகளையும் நடத்தி “இந்துத்துவ ” கண்ணோட்டங்களையும், கருத்தாக்கங்களையும்
உண்மையான இந்தியாவாக சித்தரிக்க முனைகின்றனர். பாரதீய ஜனதா கட்சியின் சின்னமான “தாமரை”யும் ஜி-20 மாநாட்டு அடையாளமாக  ( logo) காட்டப்படுவதில் இருந்து இவர்களின் வேலையை நாம் புரிந்து கொள்ள முடியும்.


இத்தகைய சூழலில் தான் முற்போக்கு சிந்தனை கொண்டோரும், சுதந்திரமான சிந்தனையுடையோரும்,தொண்டு மற்றும் சமூக நிறுவனங்களும், அறிவியலாளர்களும் , பத்திரிக்கையாளர்களும் கல்வியாளர்களும் தங்களுடைய கவலைகளை கருத்துக்களை உலகின்முன்னே கொண்டுவர முயன்றனர்.

ஜி-20 உச்சி மாநாட்டின் போது, மோடி அரசு வர்த்தகம்-20, சிவில்-20 குழுக்களின் மூலம் எத்தகைய பிம்பத்தை – இந்திய மக்களின் உண்மை நிலை மறைத்த பிம்பத்தை – உலகத்தார் முன் கட்டியமைக்கின்றனர் என்பதை அம்பலப்படுத்த முயன்றனர் . உண்மை நிலையை உலகினர்க்கு உணர்த்த முயன்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் , சிறு பான்மை மக்களின் , எதேச்சதிகாரத்தை அன்றாடம் எதிர்கொள்ளும் இந்திய சமூகத்தினரின் உணர்வுகளை C20  போன்ற குழுக்கள் வெளிப்படுத்தாத காரணத்தால் அத்தகைய குழுக்களில் இடம் மறுக்கப்பட்டதால் நாம் 20 (WE20) என்ற
We 20 People’s summit  – நாம் 20 மக்களின் மாநாடு புது தில்லியில் ஆகஸ்ட் 18,19,20 தேதிகளில் நடைபெற்றது.

அதன்படி மார்க்சிஸ்ட் கட்சிக்கு சொந்தமான ஹரி கிருஷ்ண சிங்  சுர்ஜீத் வளாகத்தில் நடைபெறப்போவதாக அறிவிப்பு வந்தது முதலே பாஜக அரசுக்கு பதட்டம் ஏற்பட்டுவிட்டது. நாடெங்கிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாடு, கேரளம், பீகார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற பல்வேறு மாநிலங்கிலும் உள்ள 70 அமைப்புகளின் பிரதிநிதிகள் புது தில்லி வந்தனர்.

மனித உரிமை காவலர் தீட்சா செத்தல்வாட், மேதா பட்கர், பொருளாதார விற்பன்னர் ஜெயதி கோஷ், பேராசிரியர் அருண் குமார், முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரியும் மனித உரிமை போராளியுமான ஹர்ஷ் மந்தர், பாராளுமன்ற உறுப்பினர் மனோஜ் ஜா , பிருந்தா காரத், ஹன்னான் மொல்லா மற்றும் ராஜீவ் கவுடா, தாமஸ் பிராங்கோ ஆகியோரும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

விவசாயம், பருவ நிலை மாற்றம், எரி சக்தி மற்றும் போக்குவரத்து,பன்னாட்டு வணிகம்,வங்கிகள், தொழிலாளர் நலன் வளர்ந்து வரும் ஏழை பணக்கார ஏற்ற தாழ்வு, சரிந்து வரும் ஜனநாயக செயல்முறை போன்ற பல்வேறு பிரச்சினைகளை பற்றி அலசி ஆராய, அனைவருக்கும் உடன பாடான முடிவுகளை முன்னெடுக்க, பெரும்பான்மையான ஊடகங்களில் பேசப்படாத உண்மை நிலவரங்களை, மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளை வெளியுலகிற்கு காட்ட இம்மாநாடு கூட்டப்பட்டது.

ஜி-20 நாடுகளின் உண்மை நிலை அந்நாட்டு ஆட்சியாளர்களின் பரிந்துரையில் அடங்கி விடவில்லை , அது பரந்துவிரிந்த எதார்த்தமாக பல்வேறு படிமானங்களை கொண்டது என்பதை முன்னெடுக்க இம்மாநாடு முனைந்தது.

மோடி அரசு உண்மையில் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை கட்டி எழுப்ப முனைகிறது என்று கூறுவதற்கு இந்த மாநாடு பெரிதும் உதவியிருக்க கூடும் ஒருவேளை இந்த மாநாட்டை மோடி அரசு முழுமையாக அனுமதித்து இருந்தால்.

ஆனால், முதல் நாள் மட்டுமே கூட்டம் சிறப்பாக நடந்தது. அடுத்த நாள் ஆகஸ்ட் 19 மதியமே கூட்டம் நடக்கும் இடத்தை சுற்றி ஆயிரக்கணக்கான காவலர்களை தில்லி காவல்துறை குவித்து ஏதோ போர்க்களம் போல் மாநாட்டு கூடத்தை சுற்றி வளைத்தது. சுர்ஜீத் பவனுக்குள் இருந்த சுமார் 400 பிரதிநிதிகளை அவர்கள் வெளியேற முடியாமல் சிறைபிடித்தும் நூற்றுக்கணக்கில் பங்கேற்க வந்தவர்களை கட்டிடத்திற்குள் நுழையவிடாமல் தடுத்தும் அரண்களை அமைத்தனர்.


அப்பொழுது அரங்கிற்குள்ளே வன பாதுகாப்பு சட்டம் பற்றியும் மோடி அரசு இச்சட்டத்தை எவ்வாறு நீர்த்துபோக செய்கிறது என்பது பற்றியும் நுண்ணுயிர் வேறுபாட்டு சட்டம் (Biological Diversity Act) எப்படி சிதைக்கப்படுகிறது , இதனால் கால நிலை மாறுபாட்டை எதிர்கொள்ள உலக நாடுகள் எடுக்க எத்தனிக்கும் நடவடிக்கைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது பற்றி விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன. காங்கிரசை சார்ந்த முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ், நர்மதா  நதி பாதுகாப்பு அமைப்பை சார்ந்த மேதா பட்கர், பாராளுமன்ற மேலவை உறுப்பினர் அனில் ஹெக்டே, நவதான்யா என்ற அமைப்மை சார்ந்த பிரபல இயற்கை ஆர்வலர் வந்தனா சிவா ஆகியோர் இவ்விவாதத்தில் பங்கு பெற்று வந்தனர்.

கூட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி பெறவில்லை என்று கூறி புது தில்லி காவல்துறை ஜனநாயகத்திற்கு புதிய விளக்கம் கொடுத்தது. இதுதான் மோடி அரசின் ” புதிய ஜனநாயகம்” போலும்.


இதைப் போன்றே ஞாயிற்றுக் கிழமையிலும் அரங்கத்தினுள் கூட்டம் நடத்த தில்லி காவல்துறை அனுமதிக்காமல் மாநாட்டை நடைபெறவிடாமல் தடுத்தது. இதற்கு அவர்கள் தில்லி உயர்நீதி மன்ற ஆணையை சுட்டிக் காட்டி உள்ளனர். அவ்வாறு கூறப்பட்ட ஆணையை (W.P. ( C) 2965/2023,
Dated 10.3.2023) ஆராய்ந்ததில் ஒரு உண்மை புலப்பட்டது. அந்த ஆணை பொதுவான ஆணையல்ல, சம்பந்தப்பட்ட ஒரே ஒரு நிகழ்ச்சிக்காக அன்று(10/3/2023) வழங்கப்பட்ட ஆணை எனத்தெரிய வந்தது எனக்குறிப்பிடும் மாநாட்டு அமைப்பாளர் இந்த உண்மையை எடுத்துக் கூறியும் தில்லி போலீஸ் மனம் மாறவில்லை என்று வேதனைப்படுகிறார். மோடியின் புதிய இந்திய ஜனநாயகம் இந்த நிலையில்தான் உள்ளது!

அமைதியான முறையில் குடிமக்கள் கூடவும் கூடி விவாதிக்கவும் , பேசவும் கூடாதென்றால் அதற்கு பெயர் ஜனநாயகமா? செப்டம்பர் திங்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் பல நாட்டு தலைவர்கள் இதைப்பற்றி ( ஜனநாயக சீர்குலைப்பை) தங்களின் கவனத்தை செலுத்துதல் வேண்டும் எனப் பலரும் வாதிடுகின்றனர். அது அவ்வளவு எளிதான செயலும் அல்ல என்றும் அவர்கள் உணர்ந்தும் இருக்கிறார்கள். காரணம் ஜி20 நாடுகள் பெரும்பாலும்
கடைப்பிடிக்கும் புதிய தாராளமயக்கொள்கைகளின் விளைவாக அத்தலைவர்கள் கவலைப்படுவதெல்லாம் வணிக ஆளுமை பற்றியும் அது கொடுக்கும் லாப விகிதத்தை பற்றியும் தான்.

ஜி-20 நாடுகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரங்கள் ஆட்சியாளர்களால்  சிதைக்கப்படுவது பற்றியோ, இந்நாட்டிலுள்ள அரசுகள் ஜனநாயகத்தின் பெயரை உச்சரித்துக் கொண்டே, எப்படி ஜனநாயக வேர்களை அறுக்கின்றனர் , சிறு பான்மையினரை நசுக்குகின்றனர் என்று ஜி20 நாடுகளின் தலைவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

பிரிட்டன், அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பிரதிநிதிகள் ஜனநாயகத்தின் “மாண்பு” பற்றி வாய்கிழியப் பேசுவதால் அதன் சீரழிவு யார் தலைமையில் இந்தியாவில் நடந்தேறிவருகிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

பசுமை வளர்ச்சி, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நிதி, அனைவருக்குமான வளர்ச்சியை அடைவது, தொழில்நுட்ப மாற்றம் மற்றும் பொது கட்டுமானங்களை டிஜிட்டல் மயமாக்குதல் பலதரப்பட்ட அமைப்புகளின் எதிர்கால வளர்ச்சி பற்றும் பெண்களின் முன்னேற்றம் போன்ற முக்கியமான அம்சங்கள் ஜி-20 மாநாட்டின் அடிநாதமாக கண்டறியப்பட்டுள்ளது .

இதைப் பற்றிய -இப்பிரச்சினைகள் பற்றிய – பொதுமக்களின் , தொழிற்சங்கங்களின், சிவில் சொசைட்டிகளின் , பாதிப்படைந்த மக்களின் கருத்து என்ன என்பதை WE20 ( நாம் 20) என்ற மாநாடு அலசி ஆராய்ந்து அதன் கருத்துக்களை , ஆலோசனைகளை பரிந்துரைகளை இம்மாநாடுக்கு கொடுத்திருக்க கூடும் .

ஆனால், கொட்டிக் கவிழ்ப்பதும் தட்டிக் கழிப்பதும் மோடி அரசின் தாரக மந்திரம் ஆனபின் இவற்றுக்கெல்லாம் இடமேது?

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time