சைலேந்திர பாபு ஒரு ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்!

-சாவித்திரி கண்ணன்

பல்லாயிரம் இளைஞர்களை அரசு பணிக்கு எடுக்கும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சீர்குலைந்து செயலிழந்து போய்க் கொண்டுள்ளது. தலைவர் இல்லை. 13ல் 11 உறுப்பினர்கள் இல்லை. இந்தச் சூழலில், கடந்த இரண்டாண்டுகளாக காவல்துறையில் ஆர்.எஸ்.எஸுன் ஆணைகளை செயல்படுத்திய சைலேந்திரபாபுவை தேர்ந்தெடுத்த பின்னணி என்ன?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission– TNPSC) என்பது தமிழ் நாட்டரசின் உயர்மட்டம் தொடங்கி அடித்தளம் வரையிலான பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் அமைப்பாகும். ஏறத்தாழ 34 துறைகளுக்கு ஊழியர்களை தேர்வு நடத்தி அரசுக்கு தரும் அமைப்பாகும். அந்த வகையில் வருஷத்திற்கு சுமார் 150 requirements பல்வேறு துறைகளுக்கு நடக்கும்.

இன்றைய தினம் படித்துவிட்டு தகுந்த வேலை தேடும் லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைக்காக கடுமையாக உழைத்து அரசு வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், அந்த அமைப்பே போதுமான உறுப்பினர்களும் இன்றி, தலைவரும் இன்றி தள்ளாட்டத்துடன் இருப்பதை என்னென்பது?

இந்தியாவிலேயே முதன்முதலாக  மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையம் இது தான்! ஆண்டு 1929. அரசு பணிக்கு நேர்மையான முறையில் பணியாளர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டால் தான் நேர்மையான நிர்வாகம் சாத்தியமாகி மக்கள் சேவை சிறப்பாக நடந்தேறும். அந்த வகையில் திறமையும், நேர்மையும் உள்ளவர்களை இந்தப் பணியில் எடுக்கும் நோக்கம் ஆரம்ப காலங்களில் நன்றாகவே நடந்தேறியது. ஆனால், காலப் போக்கில் இதன் கட்டமைப்பில் அரசியல் ஆதிக்கங்களும், சாதி ஆதிக்கங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் கோலோச்சியுள்ளன…என்பது வருத்தமான அம்சமாகும்.

திமுக அரசு பொறுப்பேற்ற போது இதன் தலைவராக பாலசந்திரன் என்பவர் இருந்தார். அவர் சென்ற ஆண்டு ஜுன் மாதமே ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால், சைலேந்திரபாபு இந்த ஆண்டு டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெறும் வரை ஓராண்டாக அதன் தலைமைக்கு உரிய தலைவரைப் போடாமல் அமைதி காத்த தமிழக அரசு இன்னும் ஓராண்டில் 62 வயதை பூர்த்தி செய்யவுள்ள சைலேந்திர பாபுவை நியமித்தது. இதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் கொடுக்காமல் வழக்கம் போல் குடைச்சல் தந்துள்ளார்.

ஆளுநர் குடைச்சல் தருவதாலேயே தமிழக அரசுக்கு இன்னும், இன்னும் தமிழக மக்களிடம் அனுதாபம் கூடி, ஆதரவு பெருகி வருகிறது. போதாக்குறைக்கு, ”சைலேந்திரபாபு நாடார் என்பதால் கவர்னர் மறுக்கிறாரா?” என்று வேறு ஒரு வெடிகுண்டை தூக்கி போட்டுள்ளார் ஆர்.எஸ்.பாரதி. அப்படியானால் நாடார் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் அவருக்கு இந்தப் பதவியை திமுக வழங்கியதா? அவரது சிறப்பை சொல்வதற்கு வேறு ஒன்றுமே இல்லையா…?

பாரபட்சமில்லாமல் பல்லாயிரம் இளைஞர்களுக்கு நேர்மையாக தேர்வு நடத்தி திறமையின் அடிப்படையிலும், இட ஒதுக்கீட்டு வழிமுறையின் அடிப்படையிலும் வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்கான ஒரு தலைமைப் பதவியை சாதியைக் கொண்டு அணுகுவது தவறாகும்.

நாம் இந்த விவகாரத்திற்குள் இன்னும் விரிவாக நுழைய வேண்டாம். தமிழக மக்கள் மற்றும் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் நலன் சார்ந்து இந்த பிரச்சினையை அணுகுவோம். அந்த வகையில் டிஜிபி சைலேந்திர பாபுவின் நியமனத்தை அவரது தகுதி, திறமை, கடந்த காலச் செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு பார்ப்போம்.

ஒரு சுய விளம்பர மோகி என்ற போதிலும், காவல்துறை உயர் அதிகாரிக்கு ஏற்ற உடல் திறன், சுறுசுறுப்பு ஆகியவை கொண்ட ஒரு ஸ்மார்ட்டான மனிதர் சைலேந்திர பாபு என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால், தமிழக டிஜிபியாக இரண்டாண்டுகள் அவர் பணியாற்றிய காலம், தமிழக காவல்துறை பெரும் பின்னடைவை சந்தித்த காலகட்டமாகும். இரண்டே ஆண்டுகளில் 11 ‘லாக் அப்’ மரணங்கள் நடந்துள்ளன. கள்ளச் சாராயம், போதை பொருட்கள் ஆகியவற்றின் புழக்கம் அதிகமானது. காவல்துறையில் லஞ்சம், முறைகேடுகள் மிக அதிக உச்சத்தில் சென்ற காலகட்டமாகவும் இது இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக குற்றம் இழைப்போர், அநீதி செய்வோருக்கு அனுசரணையான நிலை எடுத்து மக்கள் போராட்டங்களை ஒடுக்கிய காலகட்டமாகவும் இது இருந்தது.

குறிப்பாக கள்ளக் குறிச்சி மாணவி ஸ்ரீமதி கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் மிக வெளிப்படையாகவும், மூர்க்கமாகவும் குற்றவாளிகளை காப்பாற்ற சகல தந்திரங்களையும் கையாண்டது காவல்துறை! நீதிக்காக ஜனநாயக முறையில் போராடியவர்களை ஒடுக்க பள்ளிக் கூட நிர்வாகத்திற்கு ஆதரவான சமூக விரோதிகள் பள்ளிக் கூடத்தை எரிக்க அனுமதித்ததோடு, அந்த சமூக விரோதிகளின் கட்டளைப்படி அப்பாவி தலித் மற்றும் மிக நலிந்த பிரிவின் இளைஞர்கள் சுமார் 600 பேரை ஈவிரக்கமின்றி கைது செய்து கொடுமைபடுத்தி, வழக்குபோட்டு அலைக்கழித்த சம்பவம் தமிழகம் முன்னெப்போதும் காணாத அராஜகமாகும்.

கள்ளக் குறிச்சி கைதுகள் யாரை திருப்திபடுத்த?

அதே போல வேங்கை வயல் சம்பவத்திலும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த உண்மையான குற்றவாளியைக் காப்பாற்ற அப்பாவிகளை பிடித்து ஒத்துக் கொள்ளச் சொல்லி துன்புறுத்தும் மாபெரும் அநீதிகள் நடந்த காலகட்டம் சைலேந்திரபாபு டிஜிபி பொறுப்பு வகித்த காலகட்டமே!

குற்றவாளியைக் கப்பாற்றத் தான் எல்லாமே!

இந்த இரு சம்பவங்களிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அழுத்தத்திற்கு முழுமையாக அடிபணிந்தே சைலேந்திரபாபு இத்தகைய அநீதிகளை செய்தார். தமிழக காவல் துறையில் ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்த காலகட்டமாகவும் சைலேந்திரபாபுவின் காலகட்டத்தைச் சொல்லலாம். ஏனெனில், தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு கூட நிறைய தடைகளை தமிழக ஒற்றுமை மேடை என்ற அமைப்பு காவல்துறையிடம் சந்திக்க நேர்ந்தது. கோட்சே என்பவன் காந்தியைக் கொன்றான் என சொன்னதற்காக சிபிஎம் தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல தோழர்களை காவல்துறையினர் மிரட்டினர்.

பல்பிடுங்கி ஆபிசரான பல்வீர்சிங்கை தண்டிக்காமல் தாங்கி பிடித்ததும் இவர் காலகட்டமே!

பெரம்பலூர்  சிறுவாச்சூரில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் பெரியசாமி மலை அடிவாரத்தின் காட்டுக் கோவில்களில். 2021 ஆம்  வருடம் அக்டோபரில் ஏராளமான சிலைகள்  உடைத்து சேதப்படுத்தப்பட்டன. கார்த்திக் கோபிநாத் என்ற விஷ்வ இந்துபரிஷத்தை சேர்ந்த நபர், ”இது திராவிட இயக்கங்களின் சதி, கோவிலை புனரமைக்க அறநிலையத் துறை ஒன்றும் செய்யாது. ஆகவே, நாம் தான் செய்ய வேண்டும்” என உணர்ச்சிகரமாக பேசி கோடிக் கணக்கில் பணம் வசூலித்து, பாஜக தலைவர்கள் பாதுகாப்பில் ஒளிந்து கொண்டார். பொதுமக்கள் கொந்தளித்து கார்த்திக் கோபிநாத்தை கைது செய்ய வலியுறுத்தினர். இந்த சம்பவத்தில் தமிழக காவல்துறை கார்த்திக் கோபிநாத்தை கைது செய்வது போல பாவனை காட்டி, ”அவருடைய வங்கி கணக்கை பெற முடியவில்லை’’ என்று சொல்லி விடுதலை செய்யத் துணை போனது.

அமித்ஷாவுடனும், அண்ணாமலையுடனும் இருக்கும் கார்த்திக் கோபிநாத்

பெரியார் தொண்டர் ஒருவர் தன் இல்லத்தின் காம்பவுண்டில் வைத்த பெரியார் சிலையை  காரைக்குடியில் ஹெச்.ராஜா கொடுத்த புகாரின் பேரில், இடித்து அகற்றி அராஜமாக அகற்றினர் காவல் துறையினர். இப்படி ஆர்.எஸ்.எஸின் பல அஜந்தாக்களை சிரமேற் கொண்டு நிறைவேற்றியது சைலேந்திரபாபு தலைமையிலான காவல் துறை! இப்படிப்பட்ட ஒரு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு செயல்பாட்டாளருக்கு டி.என்.பி.எஸ்.சி பதவி கொடுப்பது மிகவும் பிழையானது. இதை திராவிட மாடலாகத் தன்னைக் கூறிக் கொள்ளும் அரசு தவிர்த்திருக்க வேண்டும்.

முதல்வர் குடும்பத்திற்கு சேவகம் செய்து, கிச்சன் கேபினேட் வழியாக இவர் டி.என்.பி.எஸ்.சி தலைவராக்கப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் டி.என்பி.எஸ்.சி தலைவரானால், தமிழக அரசுத் துறையில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் ஊடுருவவே அது வழிவகுக்கும். ஆகவே, சைலேந்திரபாபு பரிந்துரையை வாபஸ் பெற்று, நேர்மையும், திறமையும் ஒருங்கே பெற்றத் தலைவரையும், நேர்மையான உறுப்பினர்களையும் முதல்வர் ஸ்டாலின் விரைந்து நியமிக்க வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time