கள்ளக் குறிச்சி மகாபாரதி பொறியியல் கல்லூரியில் தலித் மாணவன் மர்ம மரணம் அடைந்து ஒரு வாரமாகிறது! செய்தி வராமல் தடுக்க பெரும் பணபலமும், அதிகார பலமும் பிரயோகிக்கப் படுகிறது! ஒரு பெண்ணைக் காதலிப்பதாக சந்தேகப்பட்ட கல்லூரி நிர்வாகமும், ஆசிரியர்களும் அவனை கடுமையாக துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது…!
சின்னசேலம் அருகே உள்ள அ.வாசுதேவனூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில், கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார்., மாணவன் அபித்குமார். இவர் ஆகஸ்ட் 18- அன்று சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், மாணவனின் தந்தை பழனிசாமி, ”என் மகன் கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களால் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு இறந்துள்ளான். ஆகவே, இது குறித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், ”கல்லூரி தாளாளர், முதல்வர் உள்ளிட்டோரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டத்தைச் சேர்ந்த ஊ.மங்கலம் கிராமத்தில் வசிக்கும் பழனிச்சாமி-அன்பரசி ஆகியோரின் மகன் அபித்குமார் (வயது 19) என்பவர் வாசுதேவனூரில் உள்ள மகாபாரதி பொறியியல் கல்லூரியில் பி.இ. மின்னியல் மற்றும் மின் அணுவியல் (எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்) பொறியியல் படிப்பில் சேர்ந்து முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரி விடுதியில் தங்கி இருந்து பயின்று வந்தவர் கடந்த ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திர தின விடுமுறைக்காக வீட்டிற்கு சென்று விட்டு,16ஆம் தேதி சேத்தியாதோப்பில் உள்ள தனது பாட்டி தமிழரசி வீட்டில் தங்கி இருந்து கருப்புசாமி திருவிழாவை பார்த்துவிட்டு ,17ஆம் தேதி பாட்டி வீட்டில் இருந்து புறப்பட்டு கல்லூரி சென்றுள்ளார்.

கல்லூரி விடுதிக்குச் சென்ற அவர் அன்றைய தினம் இரவு 8:30 மணி அளவில் தந்தை பழனிச்சாமியிடம் செல்போனில் மகிழ்ச்சியாகப் பேசி உள்ளார். இரவு 9 மணி அளவில் அபித் குமாரின் தாய் வீடியோ காலில் தன் பிள்ளையிடம் நலம் விசாரித்துள்ளார்.
18 ஆம் தேதி காலை 7 மணி அளவில் அபித்குமார் அவரது தந்தைக்கு போன் செய்து மகிழ்ச்சியாக வகுப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
காலை 8:30 மணி அளவில் விவசாய வேலைக்கு களப்பரிக்கச் சென்ற தாய் அன்பரசி அங்கிருந்தவர்களிடம் செல்போன் வாங்கி தனது மகன் அபித்குமாருக்கு செல்போனில் பேசி நலம் விசாரித்துள்ளார். மாணவன் அபித்குமாரின் இறப்பு குறித்து அவன் தந்தை கூறியதாவது;
காலை 9.30 மணி அளவில் அபித்குமாரின் வகுப்பு பேராசிரியர் மாரியப்பன் என்பவர் என்ன்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, ’’ஒரு பொண்ணோட சினிமா பார்த்துள்ளான் உன் மகன் என அபித்குமாரை பற்றி அவரது தந்தையிடம் கோபமாகக் கூறியதாகவும், சிறிது நேரம் கழித்து வேறு சில பேராசிரியர்கள் “உங்கள் பையன் சரியில்லை’’ என கோபமாகப் பேசி, அபித்குமாரின் அம்மாவை அழைத்துக் கொண்டு உடனடியாக கல்லூரிக்கு வாருங்கள்” என போன் செய்து அழைத்தனர். அவசரகதியில், நானும், எனது இன்னொரு மகன் அசாத்குமார் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த கிருஷ்ணன் என்ற மாணவரையும் உடனழைத்துக் கொண்டு மூவரும் ஊரிலிருந்து கிளம்பி விருத்தாசலம் போயி, அங்கிருந்து சேலம் பஸ் ஏறி, பாலக்கரை தாண்டறோம். அப்ப கிருஷ்ணன் போன் பண்ணி, ஹாஸ்டலில் விசாரித்த போது சக மாணவர்கள் பதட்டமாக பேசினர். மதியம் 2 மணி அளவில் கல்லூரி விடுதிக்கு சென்று பார்த்தபோது, தூக்கு மாட்டப்பட்டதாக சொல்லப்பட்ட அறையில் பெல்டு போன்று மூன்று முடிச்சு போட்ட கயிறு தொங்கியது. நான்கு அறைகள் தள்ளி அபித்குமார் சடலமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தேன்.

கல்லூரி நிர்வாகம் மற்றும் துறை ஆசிரியர்களின் துன்புறுத்தலால் அபித்குமார் கொடூரமாக இறந்துள்ளதாக உடன் படிக்கும் மாணவர்கள் கண்ணீர் மல்கக் கூறினர். இதனால், மேலும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுவதைத் தவிர வேறொன்றும் எனக்கு தோன்றவில்லை. நான் சென்ற ஒரு மணி நேரத்தில் அவ்வளாகத்தில் எந்த ஒரு சம்பவம் நடந்ததற்கான அடையாளம் இல்லாமல் செய்துவிட்டனர்’’ என்கிறார் தேம்பலுடன்!
இச் சம்பவத்தில், அபித்குமார் வகுப்புக்கு வராததால் அவரது நண்பர்கள் அவரை தேடியுள்ளனர். அப்போது, விடுதியில் அவர் தங்கியிருந்த அறையில், தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் என்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் மற்றும் ஏடிஎஸ்பி ஜவஹர்லால், டிஎஸ்பி ரமேஷ் மற்றும் சின்னசேலம் பொறுப்பு தாசில்தார் ரகோத்தமன் உள்ளிட்டோர் விடுதியில் மாணவன் இறந்து கிடந்ததை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி, கல்லூரியில் ஆய்வு செய்து உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

கல்லூரி மாணவனின் ஊடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட போது ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளதால் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அபித்குமார் உடற்கூறு ஆய்வு செய்யும் பொழுது வீடியோ பதிவு செய்ய வேண்டும், உறவினர்கள் உள்ளே அனுமதிக்க அனுமதிக்க வேண்டும் போன்ற பெற்றோரின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.
அபித்குமார் தந்தை பேட்டி;
அபித்குமாரின் தந்தை பழனிச்சாமி நம்மிடம் மற்றும் நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு கூறும் போது “எனது மகன் நல்ல முறையில் தான் வீட்டில் இருந்து புறப்பட்டு கல்லூரிக்கு வந்தான். காலையில் என்னிடம் கூறிவிட்டு வகுப்பறைக்கு சென்ற என் மகன் மரணத்திற்கு கல்லூரி நிர்வாகம் தான் பொறுப்பு. கல்லூரியில் பணிபுரிபவர்கள் என் மகனை கொன்று விட்டதாக அறிகிறேன். எனக்கு நீதி வேண்டும். துறைத்தலைவர் மாரியப்பன், கல்லூரி ஆசிரியர்கள் செல்வதுரை, காளிதாஸ், மற்றும் கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் சித்ரவதை செய்து அடித்து கொன்றுள்ளனர். எனவே கல்லூரி தாளாளர் உள்ளிட்டு அனைவரையும் கைது செய்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
மேலும், ”இந்த தலித் மாணவனனை, பேராசிரியர்கள் சாதி சொல்லி இழிவு படுத்தி கொன்றுள்ளனர். அவர்களை கைது செய்ய வேண்டும்” எனக் கூறி மாணவனின் உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நிகழ்வும் நடந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து( cr, No, 474/2023 sc/st, Act ) விசாரணை நடத்தியதில், அபித்குமார் கல்லூரிக்கு ஒரு நாள் விடுப்பு எடுத்ததன் காரணமாக, பேராசிரியர்களான மாரியப்பன் மற்றும் செல்லத்துரை ஆகியோர், மாணவனை கண்டித்துள்ளனர். அதனால், மனமுடைந்த அபித்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், எனவே தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர்கள் இருவரை கைது செய்துள்ளதாகவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்
இது குறித்து கள்ளக்குறிச்சி பிராந்தியம் முழுவதும் தகவல் பரவிய பின்னணியில் மீடியாக்காரர்களும் அங்கு குவிந்துள்ளனர், சில அரசியல் செயல்பாட்டாளர்களும் அரசியல் அமைப்புகளும் அங்கு கூடியுள்ளனர்,
இச்சூழலில் இன்று சமூகம் முழுவதுமே ஊடகமாக மாறி இருக்கக்கூடிய நிலையில், இச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் மட்டுமல்ல, பத்திரிக்கை தொலைக்காட்சி ஊடகங்களிலும் உடன் செய்தி வராததும், ஆச்சரியத்தையும், ஐயப்பாட்டையும் ஏற்படுத்துகின்றன!
விசாரணையில் கணியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி சம்பவம், எஸ் வி எஸ் கல்லூரி சம்பவம், இவைகளில் எல்லாம், செய்தி வெளியிட்ட, மற்றும் நியாயம் கோரிய செயல்பாட்டாளர்கள், தண்டிக்கப்பட்டதும் பழிவாங்கப்பட்டதும், இப்பவும் அந் நிகழ்வுகளின் மிரட்டல்கள் தான் அபித்குமாரின் மரணம் குறித்து ஊடகச் சமூகமும், பொது சமூகமும், சுடுகாட்டு அமைதிக்குச் சென்றதாக அறிய முடிகிறது. ஒருபுறம் அச்சத்தை விதைத்து அநீதியை மூடி மறைக்கிறார்கள்! மறுபுறம் பணத்தை அள்ளி இறைக்கிறார்கள்!

கல்லூரி விடுதி நிர்வாகம் அபித்குமாரின் மரணம் தற்கொலை என தெரிவித்து வந்த நிலையில், இரண்டு நாள் கழித்து காவல்துறை கல்லூரி பேராசிரியர்கள் இருவரை தற்காலிகமாக கைது செய்கிறார்கள்.
மேலும், அபித்குமாரின் மரண வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக , திருக்கோவிலூர் உட்கோட்ட “டி எஸ் பி” மனோஜ்குமார் அவர்களை ( No,17/SJ &HR / proceeding/KLK 2023 Rule 7(1)OF SC/ST (POA) rules 1995 இன் படி, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நியமித்துள்ளார்.
மேலும், தற்போது வரையிலும் கூட, இச்சம்பவத்தின் எஃப் ஐ ஆர் நகல் மாணவன் குடும்பத்திற்கு தராமல் ரகசியமாக காவல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருவது பேரதிர்ச்சி தருகிறது.
அபித்குமாரின் தந்தையை அழைத்துச் சென்று சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ”தனியார் கல்லூரிகளில் மாணவ, மாணவியரின் மர்ம மரணம் என்பது தொடர்கதையாக உள்ளது. தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொணர வேண்டும்”. எனக் கூறியுள்ளது.

இச்சம்பவம் நம்மிடம் பேசிய மூத்த வழக்கறிஞர் ரத்தினம், ”கள்ளக் குறிச்சி கல்வி நிறுவனங்களில் மர்ம மரணங்கள் நடப்பது ஒரு சர்வ சாதாரணமான நிகழ்வாக மாறி வருகிறது. சம்பந்தப்பட்ட கல்லூரியின் முதலாளி மோகன் ஆர்.எஸ்.எஸுல் செல்வாக்கானவர். மாணவி ஸ்ரீமதி மரணத்திலும் இவர் தான் கட்டப் பஞ்சாயத்து செய்தார். ஏற்கனவே இந்த கல்லூரியில் ஒரு மாணவி இறந்துள்ளார். இந்த தலித் மாணவன் வேறொரு சமூகத்து பெண்ணுடன் பழகியதை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்து, அவரை தண்டித்துள்ளனர் என்பதே நான் அறிய வந்த செய்தியாகும். இந்த செய்தி ஊடகங்களில் வராமல் தடுக்க, பெரும் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிரபல புலனாய்வு பத்திரிகைகளே இதில் மெளனம் சாதிக்கின்றனர். இந்த மாணவனுக்கு உதவ வேண்டிய அரசியல், சமூக இயக்கங்களிடமும் பேரம் நடத்தப்பட்டுள்ளது. ஏழை தலித் மாணவனின் இந்தக் கொடூரக் கொலை நிச்சயம் வெளிக் கொணரப்பட வேண்டும். மாணவன் சாவிக்கு நீதி வேண்டும்.’’ என்றார்.
Also read
தொடர்ந்து கல்வி வளாகங்களில் மாணவர்கள் மர்ம மரணங்கள் நடந்து வரும் சம்பவங்களைக் கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அருகாமையில் உள்ள மாவட்டமாகும். பொன்முடியின் மகன் கெளதம் சிகாமணி தான் இந்த தொகுதியின் எம்பியாகும். இவரும் கல்லூரி நடத்துபவர் தான். இந்த கல்வி வளாக மரணங்கள் குறித்து தொகுதி எம்.பியிடமும், கல்வி அமைச்சரிடமும் எந்தச் சலனமும் இல்லை.
தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தாலும் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வி வளாகங்களில் மாணவர்களின் மர்ம மரணங்கள் தொடர் நிகழ்வாக இருப்பது பொது சமூகத்திற்கு இழிவு தான்!
களத்திலிருந்து
ஏ ஆர் கே தமிழ்ச்செல்வன்
பத்திரிக்கையாளர்
Leave a Reply