350 ஆண்டுக்கால இந்திய வரலாற்றின் முக்கிய ஆவணங்கள் தேவாலயங்களுக்குள்ளும், ஆவணக் காப்பகங்களுக்குள்ளும் மறைந்துள்ளன. அந்த வகையில் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இருக்கும் புனித மேரி ஆலயத்தின் வரலாற்றோடு நமது சமூக வரலாற்றையும் இணைத்து இந்த ஆவணப் படம் பேசுகிறது…!
சென்னை தினத்தை முன்னிட்டு, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் Westminster Abbey of the East என்ற ஆவணப்படத்தை புதனன்று திரையிட்டது. Westminster என்பது இலண்டனில் உள்ள இடத்தைக் குறிக்கும். Abbey என்றால் கோவிலைக் குறிக்கும். இந்த ஆவணப்படத்தின் மூலம் 350 ஆண்டுகால வரலாறு சொல்லப்படுகிறது. இதனை ரபீக் இஸ்மாயில் இயக்கி உள்ளார். காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன.
ஒண்ணரை மணி நேரம் ஓடும் இந்த ஆவணப்படம், ஆங்கிலேயர்கள் தமிழகத்தின் சமூக வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தைச் சொல்கிறது. சிஎஸ்ஐ சபையும், ஸ்ரீஜித் சுந்தரமும் (கட்டியக்காரி தயாரிப்பு) இதனை தயாரித்து உள்ளனர். கோவிலின் பிறப்பு-இறப்பு- திருமண பதிவேடுகள், அங்கிருக்கும் கல்லறைகள், சிற்பங்கள் வழியாக வரலாற்றைச் சொல்கிறது இந்தப்படம். 2015 ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் இதற்கு உழைத்ததாகக் கூறுகிறார் இதனை எழுதிய ஜே.கிருபா. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தேவாலயத்தின் இந்த ஆவணப்படத்தை ஸ்ரீஜித், கிருபா லில்லி எலிசபெத், ரபீக் இஸ்மாயில் மூவரும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள்.
சென்னை தலைமைச் செயலக கோட்டை வளாகத்தில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க “CSI புனித மேரி” தேவலாய வரலாறு என்பது கடந்த 350 ஆண்டுகால இந்திய வரலாறு சம்பந்தப்பட்டதாகும். இந்த ஆவணப்படத்தில் சுவைபடச் சொல்லப்படும் இந்த தேவாலயத்தின் கதை வழியே நம் தேசத்தின் கதையும், அதை ஆண்ட ஆங்கில தேசத்தின் கதையும், அதை ஆண்டவனான தேவனின் பெயரால் ஆண்டவர்களின் கதையையும் சேர்த்தே சொல்கிறது.
கிழக்கிந்திய கம்பெனி சென்னையில் கோட்டையை நிறுவியது. ஆங்கிலேயர்கள் கிறிஸ்தவத்தின் புரட்டஸ்டேண்ட் பிரிவைச் சார்ந்தவர்கள். வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி, மத நடவடிக்கைகளுக்கு முதலில் ஆதரவளிக்கவில்லை. வழிபாடு நடத்த கோவில் வேண்டும் என்பதால் தங்களுக்கிடையே வசூல் செய்து முதலில் புனித மரியன்னை ஆலயத்தை கட்டியுள்ளனர். போர் அபாயம் உள்ள காரணத்தால் குண்டு போட்டாலும் பாதிக்காத அளவில் இது கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயம் யுத்தக் காலத்தில் மூன்றுமுறை ஆயுதக்கிடங்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு முறை துப்பாக்கியால், தன்னை சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற ராபர்ட் கிளைவ் வரலாற்றில் தடம் பதித்தான். இந்தியாவை அடிமைப்படுத்திய ராபர்ட் கிளைவிற்கு இங்குதான் திருமணம் நடந்தது. அமெரிக்காவின் புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழத்திற்கு நன்கொடை அளித்த யேல் திருமணம் தான் இந்தக் கோவிலி்ல் நடைபெற்ற முதல் திருமணமாகும். தங்களது மூதாதையர்களைப் பற்றி தெரிந்து கொள்ள மேலை நாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு ஆர்வமாக வருகின்றனர். இதில் உள்ள பாத்திரங்கள் இப்போது யாரும் உயிரோடு இல்லை.
எனவே, பொருத்தமான பொம்மைகள், பிம்பங்கள் மூலம் காட்சிப்படுத்தி வரலாறு சுவைபட சொல்லப்படுகிறது. இங்கிலாந்தில் பளிங்குகினால் தயாரான சிற்பங்கள் இங்கு கொண்டுவரப்பட்டு நிறுவப்பட்டுள்ளன. தொல்லியல்துறை ஆலோசனையின் பேரில் இந்த ஆலயத்தின் சீரமைப்பு நடைபெறுகிறது. “சென்னையை விவரிக்கும் ஆவணப்படங்கள் குறைவாகவே உள்ளன. இது சிறப்பாக சென்னையை பதிவு செய்துள்ளது” என்கிறார் திரையிடலின் போது இதனை அறிமுகம் செய்த வரலாற்று ஆய்வாளரும், பள்ளிவாசல்கள் குறித்த ‘யாதும்’ என்ற ஆவணப்படத்தை இயக்கியவருமான கோம்பை எஸ். அன்வர்.
இது கிட்டத்தட்ட கதை போல செல்கிறது. சாதி கடந்த கல்வி, பெண்களுக்கும் கல்வி, அபலைகளுக்கும் கல்வி என்பதை நோக்கமாகக் கொண்டு அவ்வப்போது தேவையை ஒட்டி நிறுவப்பட்ட சின்னஞ்சிறு அமைப்புகள், இப்போது பல்வேறு பெயர்களில் பல்கிப் பெருகி புகழ்பெற்று நிலைபெற்றதைச் சொல்கிறார்கள். கதையின் போக்கில் வேப்பேரி, இராயப்பேட்டை, எழும்பூர் என பல்வேறு இடங்களில் இப்போது புகழ்பெற்று விளங்கும் நிறுவனங்களை காட்டுகிறது. பர்தா அணிந்த இஸ்லாமிய பெண்களின் கல்விக்காக ஒயிட்ஸ் சாலையில், கவர்னராக இருந்த ஹோபர்ட்- பெயரில் நிறுவப்பட்ட ஆரம்பப் பள்ளி இப்போது ஹோபர்ட் உயர்நிலைப் பள்ளியாக உள்ளது. பிரசிடென்சி கல்லூரி உருவாக்கமும் சொல்லப்படுகிறது.
இதனை மதம் சார்ந்த வரலாறு என சொல்ல முடியாது. இப்போது சென்னையில் புகழ்பெற்று விளங்கும் இராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையின் தொடக்கம் இந்த புனிதமேரி தேவாலயத்துடன் இணைந்து ஆளுநர் யேல் அவர்களால் கட்டப்பட்டதாகும். ஆங்கிலேயர்கள் இங்கு கல்வி கொடுக்க முயன்று அதன் மூலம் அனுபவங்களைப் பெற்று, அந்த முறை மேலை நாடுகளில் அமலாக்கப்பட்டது என்று இது கூறுகிறது.
இதில் ஆர்தர் ஜெயக்குமார், ஆ.சிவசுப்பிரமணியம், நரசைய்யா, முத்தையா போன்ற வரலாற்றாய்வாளர்கள் ஓரிரு வரிகளில் பேசுகிறார்கள். இவர்களின் கூற்றுகளை கூடுதலாக பதிவு செய்திருக்கலாம்.
விவசாயிகளிடம் நேரடியாக வரி வசூல் முறையை கொண்டுவந்த மன்றோ பற்றி (மன்றோ சிலை) பேசப்படுகிறது. நமது சமூகத்தில் சில முக்கிய மாற்றங்களுக்கு அடிக் கோலியவர் சார்லஸ் மன்றோ. அவர் ஜமீன்தார் முறையைத் தவிர்த்து ரயத்வாரி முறையைக் கொண்டு வந்த காரணத்தால் தான் தனிப்பட்ட சிலரிடம் பெரும் நிலப்பரப்பு செல்லாமல் காப்பாற்றப்பட்டது. இதனால், விவசாயிகளின் அன்பைப் பெற்ற அவர் ‘மன்றோலப்பா’ என்று அழைக்கப்பட்டார். பஞ்ச காலத்தில் பக்கிம்ஹாம் கால்வாய் கட்டப்பட்டது. காட்சிகள் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளன.
இந்த திரையிடலைப் பார்த்த சுப. இலங்கை வேந்தன் என்ற பார்வையாளர், “கோவில் கல்லறையில் இடம் கிடைக்கவில்லை என்பதற்காக இரண்டு ஆண்டுகள் தனது மனைவியின் உடலை பதப்படுத்தி வைத்திருந்து, பின்னர் அடக்கம் செய்த வெள்ளைக்காரன்’’ குறித்து ஆச்சரியப்படுகிறார்.
அம்பேத்கர் சட்டக் கல்லூரி ஏற்கனவே கல்லறையாக இருந்தது. போரினால் பாதிக்கப்பட்டதால் அங்கு பதியப்பட்டிருந்த கல்லறைக் கற்கள் இந்தக் கோவிலுக்கு இடம் பெயர்ந்துள்ளன. தஞ்சாவூர் சரபோஜி மன்னர் அரண்மனையைச் சார்ந்த மராட்டிய விதவை கோகிலா உடன்கட்டையை எதிர்த்து ‘கிளாரிந்தா’வாக மாறினார்; வெள்ளையர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தரங்கம்பாடியில் முதல் அச்சகத்தை சீகன்பால்கு அய்யர் நிறுவினார்.
Also read
இப்படி தஞ்சாவூர், கடலூர் கோட்டை, தரங்கம்பாடி கோட்டை, மசூலிப்பட்டனம் என முக்கியத்துவம் வாய்ந்த பலவற்றை கூறுகிறது. நிறைய பெயர்கள், சம்பவங்கள் வருகின்றன. அனைத்தும் மனதில் நிற்குமா எனத் தெரியவில்லை. ஆனால் 350 ஆண்டுகால சமூக மாற்றத்தை தொட்டுச் செல்லும் ஆவணமாக இது உள்ளது. பிரெஞ்சுப் படைகளுடன் போர், வந்தவாசிப் போர், திப்புசுல்தான், ஹைதர் அலி என பலரைப் பற்றிய குறிப்புகள் இதில் உள்ளன. பார்வையாளர்களுடைய வாசிப்பு, புரிதலுக்கு ஏற்ப இது பலவித அனுபவங்களைத் தரலாம். உயர்கல்வித் துறை மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் இதனை திரையிடச் செய்ய வேண்டும்.
கட்டுரையாளர்; பீட்டர் துரைராஜ்
Leave a Reply