பிரிட்டிஷ்காரன் கூட இவ்வளவு பெரிய பேரழிவை தமிழகத்திற்கு 300 ஆண்டுகால ஆட்சியில் ஏற்படுத்தவில்லை! தமிழக வரலாற்றில் இதற்கு முன்பு இப்படிப்பட்ட இயற்கையை அழிக்கும் பேரழிவுத் திட்டம் அரங்கேறியது இல்லை! இதை எட்டுவழிச் சாலை திட்டம் என்பதைவிட எட்டு கோடி மக்களின் பேரழிவுத் திட்டம் என்று அழைப்பதே சரியாகும்! முதலமைச்சர் எடப்பாடி சொல்கிறார்; இதில் தமிழக மக்களில் பதினொரு சதவிகிதமானோர் தான் பாதிக்கப்படுகின்றனராம்! ’’அதற்குத் தான் இழப்பீடு தந்துவிடுகிறோமே’’ என்கிறார்!
தமிழ் நாட்டை ஒரு மனிதனாக உருவகப்படுத்திக் கொள்ளுங்கள்! அந்த மனிதனின் ஒரு கால்பகுதியை முழங்கால் வரை தான் வெட்டுகிறோம். அதனால், உடம்பின் மற்ற பாகத்திற்கு பாதிப்பில்லை என்று சொல்வதைப் போன்றது. வெட்டிய காலுக்கு தங்கத்தால் ஊன்றுகோள் கொடுத்தால் கூட, அது காலுக்கு இணையாகாது. காலை வெட்டுவது அந்த மனிதனுக்கு முழு உடலுக்கும் பாதிப்பு தான்! இந்த எட்டுவழி சாலைத் திட்டத்தால் ஒட்டு மொத்த தமிழகத்திற்குமே பாதிப்பு தான்!
கண்களை விற்று சித்திரம் வாங்கத் துடிக்கும் முட்டாள்கள் ஆட்சிக்கு வந்தால், அவர்கள் இயற்கை வளங்களையும், அதை நம்பி வாழும் மக்களின் வாழ்க்கையும் அழித்துத் தான் வளர்ச்சி திட்டம் போடுவார்கள்..!
ஒரு மலை என்பது உருவாதற்கு பல்லாயிரம் ஆண்டுகாலம் எடுத்துக் கொள்கிறது. அந்த மலையால் கிடைக்கும் நன்மைகளை எந்த விஞானத்தைக் கொண்டும் ஈடுகட்டமுடியாது! சேலம் மாவட்டத்தில் ஜருகுமலை, அருநூற்றுமலை, சேர்வராயன் மலை, சின்ன கல்வராயன்மலை, பெரிய கல்வராயன்மலை, தர்மபுரி மாவட்டத்தில் சித்தேரி மலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் கவுத்திமலை, வேதிமலைகள் ஆகியவற்றை உடைத்து தரைமட்டமாக்கி, அதில் உள்ள இரும்பு, உள்ளிட்ட பற்பல கனிம வளங்களை கொண்டு ராணுவ தளவாடங்களை, வெடி குண்டுக்கு தேவையான மருந்துகளை உருவாக்குவது என திட்டமிடுகிறது பாஜக அரசு. அதாவது தமிழ் நாட்டை இராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் போர் கேந்திரமாக்க, விலை மதிப்பில்லாத ஒப்பற்ற இயற்கை வளங்களை அழிக்கப் போகிறார்கள்!
ஏழை,பாளை விவசாயிகளின் கதறல்களும்,கண்ணீரும்,ஆறா துயரமும்..ஒவ்வொரு நாளும் அவர்கள் நடத்தி வரும் போராட்டங்களும் நெஞ்சை உலுக்குகின்றன!
இதற்காக தமிழகம் இழக்க உள்ளவைகளை வெறும் கரன்சிகளைக் கொண்டோ,பல அடுக்குமாடி கட்டிடங்களைக் கொண்டோ, பளபளக்கும் சாலைகளைக் கொண்டோ ஈடுகட்டவே முடியாது. இதோ தமிழகம் இழக்க உள்ளவற்றை வாசியுங்கள்;
# 8,000 ஏக்கர் விளை நிலங்கள்!
# 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாசனக் கிணறுகள்,
# 100 க்கு மேற்பட்ட ஏரி,குளங்கள்,
# 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட தென்னை மற்றும் பாக்கு மரங்கள்!
# 500 ஏக்கர் வனப்பகுதிகள்,அவற்றிலுள்ள விலங்கினங்கள்!
# 8 அபூர்வ மலைகள்,அவற்றை நம்பி வாழும் உயிரினங்கள்!
# 30 ஆயிரம் ஏழை விவசாய குடும்பத்தின் வாழ்வாதாரங்கள்! ,
# கணக்கிலடங்கா நீரோடைகள், குட்டைகள்!
# மா, தென்னை, வாழை, பாக்கு போன்ற 3 லட்சம் மரங்கள்!
# 20-க்கும் மேற்பட்ட பள்ளிக் கூடங்கள்,
# 10 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வீடுகள்!
கையகப்படுத்தப்படும் நிலங்களில் 80 சதவீதம் சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளைநிலங்கள்.தான்! இவர்கள் காலங்காலமாக நமக்கு சோறு போட்டவர்கள்!
இந்த இயற்கை பேரழிவு திட்டத்தால் ஒட்டுமொத்த தமிழகத்தின் மழை வளம் பாதிக்கப்படும். வறட்சி உருவாகும்.
பாரத்மாலா திட்டம் 2016 முதல் மோடி அரசால் முன்வைக்கப்பட்டு அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டாலும் அந்தஅறிவிப்பில்சேலம் – சென்னை எட்டுவழிச் சாலைஇருக்கவில்லை. அப்போது ஜெயலலிதா ஆட்சி இருந்ததால் மோடி இந்த திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த துணியவில்லை. 2018 ல் தான் கொண்டு வந்தனர்.தங்களை புறக்கணிக்கும் தமிழகத்தை பாலைவவமாக்க வேண்டும். அத்துடன் தங்களை வாழவைக்கும் அதானி எஜமானரை குளிர்விக்க வேண்டும் என்ற பாஜக அரசின் இரட்டை நோக்கமாக உருப் பெற்றதே எட்டுவழிச்சாலைத் திட்டம்!
277.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படவுள்ள பசுமை வழிச் சாலையில் 3 குகைப் பாதைகள், 23 பெரிய பாலங்கள். 156 சிறு பாலங்கள், 578 கல்வெட்டுகள், 8 இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்படும். இவை அனைத்திற்கும் அதானியின் தமிழக துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கும் உள்ள சம்பந்தம் தெரிய வந்தால், இதில் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் காட்டும் ஆர்வத்தை புரிந்து கொள்ளலாம்! தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை அமைக்கவும், அதை துறைமுகம் வழியாக எடுத்துச் செல்லவும் அதானி குழுமம்
அதானிகுழுமம் தமிழ்நாட்டில் கால்பதித்து கடந்த ஒன்பதாண்டுகளாக தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வருகிறது 2018ல்காட்டுப்பள்ளிதுறைமுகத்தைஅதானி குழுமம் L & T நிறுவனத்திடமிருந்து ரூபாய் 1950 கோடிக்கு வாங்கி, தற்போது அதை 320 மில்லியன்டன்அளவு சரக்கைக் கையாளக்கூடியதாகஉயர்த்துவதற்காக ரூ 52,400 கோடி செலவில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. முன்னதாக ஏற்கனவே ரூ12,000 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. Marine Infrastructure Developer Pvt Ltd (MIDPL) எனும் பெயரில் இயங்கும் அதானியின் துறைமுகத்திட்டம் மிகப் பெரிய அளவில் எண்ணூர் பகுதியில் உள்ள நீர்நிலைகள், நீரோட்டம் ஆகியவற்றைப் அழித்து உருவாக உள்ளது.. மேற்குறித்த இந்த காட்டுப்பள்ளி துறைமுகத் திட்டத்திற்கு 2120 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது..இதில் 440 ஹெக்டேர் நிலத்தைப் புதிதாக உருவாக்க உள்ளனர்…! அதானி கேட்டால் தமிழகம் முழுமையுமே பாட்டா போட்டு தரப்படாதா..மோடி அரசாங்கத்தால்!
இத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஐந்து மாவட்ட விவசாயிகள், பா.ம.க அன்புமணி, வைகோ, பூவுலகின் நண்பர்கள் உட்பட பலரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இயற்கை வளங்கள் பாதிப்பு, விவசாய நிலங்கள் பாதிப்பு உட்பட இதுதொடர்பாக மொத்தம் 45 வழக்குகள் வரிசையாக விசாரிக்கப்பட்டு, அனைத்துத் தரப்பு விவாதங்களும் முடிந்து 2019 ஏப்ரல் 8-ம் தேதி இத் திட்டத்தை நிறுத்தி வைத்து தீர்ப்பு வழங்கியது.
ஆனால்,அதற்குப் பிறகு தமிழகம் வந்த அமித்ஷா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாமகவின் தலைமை இருவரையும் மேடையில் வைத்துக் கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்துவோம் என்றார். இருவருமே அமைதி காத்தனர்!
Also read
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை டிசம்பர் 2020ல் உச்ச நீதிமன்றமும் உறுதிபடுத்தியது. அதாவது, இந்த திட்டம் அவசர, அவசரமாக ஆரம்பிக்கபடக் கூடாது.முறையான சுற்றுசூழல் அனுமதியைப் பெற்று ,மக்களை சமாதானப்படுத்தி செய்யுங்கள் என உச்ச நீதிமன்றம் கூறி தற்காலிகமாக இத் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. அதாவது வரும் தேர்தலுக்குப் பிறகு இந்த திட்டத்தை சாவகாசமாக அமல்படுத்த நினைக்கும் ஆட்சியாளர்களுக்கு தோதான ஒரு தீர்ப்பாகத் தான் அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்! அதாவது நீதிமன்றத்தின் மூலமாக இந்த திட்டத்தை தாமதப்படுத்த மட்டுமே முடியும், தடுக்க முடியாது என்பதே யதார்த்தமாக உள்ளது.
பாதிக்கப்படும் விவசாய குடிகளின் சாபம் ஏழெழு ஜென்மத்திற்கும் எடப்பாடியையும், மோடியையும் பின் தொடரும்! உங்கள் ராணுவ தளவாட நோக்கங்களையும், கார்ப்பரேட்டுகளை குளிர்விக்கும் சேவையையும் ஏதாவது பாலைவனத்தில் செயல்படுத்திவிட்டு போகலாமே!
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய இந்த பூமியை, அவர் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து சிறந்த இந்த நிலப்பரப்பை ஒரு சில ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த தைரியத்தில் அழிக்கத் துணிவார்களோ..! இதை நாம் அனுமதியோமோ..! இவர்கள் மீண்டு எழ முடியாதவாறு மக்கள் மன்றம் ஒரு தீர்ப்பை நல்காதோ..!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Leave a Reply