டெல்லி தலைமையின் பிணைக் கைதியானதா திமுக அரசு?

-சாவித்திரி கண்ணன்

ஸ்ரீமதி மரணத்திற்கு காரணமானவர்கள் விசாரணை வளையத்திற்கே இன்னும் வரவில்லை! வன்முறையின் பின்னுள்ள உண்மையான குற்றவாளிகளை ஏன் காப்பாற்றுகிறார்கள்? கலவரத்தை காரணமாக்கி ஆர்.எஸ்.எஸ்சின் அரசியல் எதிரிகளை ‘களை’ எடுக்கிறார்கள்! தமிழக காவல்துறையை இயக்கும் டெல்லித் தலைமை!

முதலில் தற்கொலை என்று தகவல் பரப்பப்பட்டது! பிறகு மாணவியின் தாயாரின் குற்றச்சாட்டுகளும், கதறலும் இது மர்ம மரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை உருவாக்கியது! தற்போது வெளிப்பட்டுள்ள உண்மைகள் சந்தேகமில்லாமல் இது கொலை என்ற முடிவுக்கு நம்மை நகர்த்தி உள்ளது.

மாணவியின் மரணத்தை தொடர்ந்து பள்ளியின் உரிமையாளர் சக்தி ரவிக்குமார் டெல்லி சென்று அரசியல் லாபி செய்ய வேண்டிய அவசியம் என்ன? மாணவி இறந்த நாளன்று இரவு அங்கு நடந்த பிறந்த நாள் விருந்து குறித்த உண்மைகளை மறைப்பது ஏன்? அந்த விருந்தில் யார், யார் கலந்து கொண்டனர். விருந்தை தொடர்ந்து நடந்தவை என்ன? என்பது ஒரு தீப்பொறி போல வெளிப்பட்டு உடனே மறைந்துவிட்டது. பள்ளி உரிமையாளர் மகன் சக்தியும், தம்பி சரணும் ஏன் இன்னும் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்படவில்லை. ஏன், தலைமறைவான இருக்க அனுமதித்து உள்ளனர் என்பதும் விடை தெரியாத வினாவாகத் தொடர்கிறது.

தந்தி டிவியிலும், சன் டிவியிலும் ஒரு செய்தி சொல்லப்பட்டு மின்னல் வேகத்தில் அந்த செய்தியை பிறகு லிங்கில் இருந்தே எடுத்துவிட்டார்கள்! கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் சந்தேக மரணம் என பதியப்பட்டிருந்த பிரிவை மாற்றியது காவல்துறை! தற்கொலைக்கு தூண்டுதல், போதைப் பொருள் பிரிவுகளின் கீழ் மாற்றி வழக்கு பதிவு! இந்த செய்தி நமக்கு சொல்ல வரும் செய்தி என்னவென்றால், படிப்பதற்காக ஹாஸ்டலில் சேர்க்கப்பட்ட மாணவி கல்வி வளாகத்தில் நடந்த விருந்துக்கு அழைக்கப்பட்டு உள்ளாள். அந்த விருந்தில் மது உள்ளிட்ட போதை வஸ்துகள் புழங்கியுள்ளன. அது வலுக்கட்டாயமாக அவளுக்கு தரப்பட்டு உள்ளது. அவளுக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனையில் அது வெளிப்பட்டு உள்ளது. அதனால் தான் இந்த செய்தி வெளியானது. இந்த செய்தியை வெளியிடுவதன் மூலம் கல்வி நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு திரும்பும் என்பதால், காவல்துறையின் நிர்பந்தத்தால் அந்த செய்தி உடனே லிங்கில் இருந்தே எடுக்கப்பட்டுவிட்டது.

ஆக, அந்த பெண் குழந்தைக்கு மது கொடுக்கப்பட்டு உள்ளது என்றால், கல்வி நிறுவனத்திற்குள் மது எப்படி வந்தது என்ற கேள்வி எழும் அல்லவா? அதை தொடர்ந்து என்ன நடந்தது..? என்ற கேள்விக்கு மக்களை சிந்திக்க வைத்துவிடும் என்பதால், காவல்துறை இந்த சேனல்களுக்கு நிர்பந்தம் தந்து செய்தியை இருட்டடிப்பு செய்துள்ளது. ஆகவே எல்லா அச்சு ஊடகங்களும் இந்த உண்மை தெரிய வந்தும் போடவில்லை. இது மட்டுமல்ல, பள்ளி தாளாளர் அறையில் இருந்த ஆணுறைகளை வெளியே எடுத்து வந்து காண்பித்த காணொலியையும் முக்கிய சேனல்கள் ஒளிபரப்பவில்லை.

அதற்கு மேல் நடந்த ஒரு உண்மை என்னவென்றால், ”அந்த பிரேத பரிசோதனையில் மார்பில் பல்லினால் கடிந்த காயங்கள் இருந்தன” என வழக்கறிஞர் சங்கர சுப்பு கூறியுள்ளார். அதுவும் அந்தக் காயங்கள் 1.5 செ.மீயில் இருந்து .5 செ.மீ வரை இருந்துள்ளதாக சொல்லப்பட்ட போஸ்ட்மார்ட் ரிப்போர்ட்டையும் ஊடகங்கள் மக்களிடம் இருந்து மறைத்துவிட்டன. அத்துடன் அந்த குழந்தையின் பாவாடை நாடா பின்புறமாக கட்டப்பட்டு இருந்த விநோதத்தையும் வழக்கறிஞர் சங்கர சுப்பு கூறியுள்ளார்.

தன் குழந்தையின் மரண செய்தி கேட்டு மருத்துவமனை சென்ற தாய் செல்விக்கு ஏகப்பட்ட கெடுபிடிகளுக்கு பிறகே அவள் சடலத்தை பார்க்க அனுமதித்து உள்ளனர். அதே சமயம் தன் மகளின் ஆடையை விலக்கி பார்க்கும் வாய்ப்பு தனக்கு மறுக்கப்பட்டதை செல்வி கொந்தளிப்புடன் கூறியதையும் நாம் இங்கே நினைவு கூற வேண்டும்.

அடுத்ததாக சங்கரசுப்பு சொல்லும் செய்தி நமக்கு அதிர்ச்சியைத் தருகிறது. ”முதல் போஸ்ட் மார்ட்டம் அதற்குரிய மருத்துவர்களால் நடக்காமல் தவிர்க்கப்பட்டு உள்ளது. கத்துக்குட்டி மருத்துவரும், டியூட்டருமான செந்தில்குமாரும், மகப்பேறு மருத்துவரான ராஜலஷ்மியும் இன்னும் மிகவும் கெட்ட பெயர் சம்பாதித்துள்ள இரண்டு மருத்துவர்களைக் கொண்டு போஸ்ட்மார்ட்டம் நடத்தப்பட்டுள்ளது” என்கிறார் சங்கரசுப்பு.

சமீபகாலமாக நமது அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனைகள் எப்படி நடக்கின்றன? என்பதற்கு உதாரணமாக அக்டோபர்14,2020 ல் மதுரை உயர் நீதிமன்றத்திற்கு வந்த வழக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். சுமார் 57 பிரேத பரிசோதனை அறிக்கைகளில் ஒரே மாதிரி வாசகங்கள் காப்பி, பேஸ்ட் பண்ணி வைக்கப்பட்டது அப்போது அம்பலமானது. அதுவும், உடல்களில் உள்ள அங்க அடையாளங்களும் கூட காப்பி அடிக்கப்பட்டுள்ளன. பல அறிக்கைகளில் நெஞ்சின் இடது பக்கத்தில் கருப்பு மச்சம், வயிற்றின் வலது பக்கம் சுற்று மச்சம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  ”ஒரு கொலை அல்லது தற்கொலை வழக்குக்கு ஆதாரம் பிரேத பரிசோதனை தான்.  அதில் தவறு இருந்தால் அது நீதிமன்ற தீர்ப்பையும் தவறாக்கும். மருத்துவர்கள் இவ்வாறு செய்வது அவமானமாகும்”என்று அன்று நீதிபதி கிருபாகரன் கண்டித்து  நம் நினைவுக்கு வருகிறது.

நியாயத்தை மறுத்த நீதிமன்றம்;

அதனால் தான் ஸ்ரீமதி மரணத்தில் இரண்டாவது பிரேத பரிசோதனையில், ”தங்களுக்கு நம்பகமான மருத்துவர் ஒருவரை சேர்க்க வேண்டும்” என பெற்றோர் மன்றாடினர். ஆனால், திமுக அரசும் அதை மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றமும் மறுத்து விட்டன. ஆனால், சர்வதேச மனித உரிமை அமைப்பு பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலான ஒரு மருத்துவர் என்பது பிரேத பரிசோதனையின் போது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய கோரிக்கை எனக் கூறியுள்ளது. இப்படி கேட்பதும், அனுமதிப்பதும் பல வழக்குகளில் நடந்துள்ளன! ஆக, ‘நீதிமன்றம் இந்த விவகாரத்தில் நியாயமின்றி நடந்துள்ளது’ என்பது தான் அனைத்து மக்களின் ஒருமித்த குரலாகும். இது போதாது என்று நீதிபதி பெற்றோர்களை அணுகிய முறை மனிதாபிமானமற்றதாகும். அத்துடன் பிரேத பரிசோதனை முடிவை ஒருமாத காலம் எடுத்துக் கொண்டு அறிவிக்க கோரியது ஏன்? ஓரிரு நாட்களில் சொல்லிவிடக் கூடிய அறிக்கைக்கு ஏன் நீண்ட அவகாசம் தர வேண்டும்? இந்த விவகாரத்தை மக்கள் மறந்துவிட்ட பிறகு இந்த அறிக்கை வெளிவர வேண்டும் என நினைக்கிறார்களா?

போராட்டம் வன்முறையாக மாறியதில் போலீசின் பங்கு!

நான்கு நாட்கள் நடந்த போராட்டங்கள் குறித்து, இண்டலிஜன்ஸ் பிரிவு போலீசார் துல்லியமான, தெளிவான அறிக்கைகளை தலைமைக்கு அனுப்பி வைத்தனர். ஐந்தாம் நாள் ஞாயிறன்று மிகப் பெரிய போராட்டத்திற்கு பல்வேறு மக்கள் இயக்கங்கள் அறிக்கை வெளியிட்டதும், ஆர்கனஸ் பண்ணி வருவதும் மிக வெளிப்படையாகவே நடந்தன. அவை முழுமையாக உளவுத் துறை தலைமைக்கும், காவல்துறை தலைமைக்கும் அனுப்பப்பட்டன. எனினும், தேவையான எண்ணிக்கையில் அங்கு காவலர்கள் மக்களை கட்டுப்படுத்த களத்தில் இல்லை. சுமார் காலை 9 மணிவாக்கில் போராட்டம் வீரியம் பெற்ற போதாதவது உளுந்தூர்பேட்டை சிறப்பு ஆயுதப் படையை வரவழைத்திருக்கலாம். அவர்கள் ஒரு மணி நேரத்திக்குள் சம்பவ இடத்திற்கு வரும் தொலைவில் தான் இருந்தனர். ஆனால், மாலை நான்கு மணி வரை கலவரத்தை தடுக்காமல் வேடிக்கை பார்த்தது போலீஸ்! காரணம் என்ன?

கலவரத்தில் பாஜகவுக்கு நெருக்கமான யுவராஜ் நடத்தும் தீரன் சின்னமலை பேரவை அமைப்பின் நிர்வாகி ராஜசேகர் (இவரும் பாஜகவில் இருந்து தற்போது அதிமுகவில் உள்ளார்) தலைமையில் ஏராளமான இளைஞர்கள் மிகத் தீவிரமாக வன்முறை செய்தனர்! அவர்கள் சிஸ்டமேட்டிகாக ஒவ்வொரு வகுப்பறையாக தீ வைத்துள்ளனர். அப்படி அவர்கள் செல்வதற்கு தோதாக ஒவ்வொரு வகுப்பறையும் திறந்து கிடந்துள்ளன. வழக்கமாக அவை ஒவ்வொன்றும் சாத்தி பூட்டு போடப்பட்டு இருக்குமாம்! அவர்களிடம் போலீசார், ”டேய் சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு கிளம்புங்க” என்று வேறு வற்புறுத்தினார்கள் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், யுவராஜின் ஆட்களோ, எல்லாவற்றையும் நடத்தி முடித்துவிட்டு, அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சில இளைஞர்களை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்து உள்ளனர். போராட்டக்கரார்களின் இரு சக்கர வாகனங்களுக்கு அவர்கள் தான் தீ வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தை வைத்துப் பார்க்கும் போது, ஸ்ரீமதி மரணத்தை பின்னுக்கு தள்ளும் வண்ணம் ஒரு பெரும் வன்முறையை நிகழ்த்தி, மக்களையும், ஊடகங்களையும் வன்முறை குறித்து பேச வைத்து, திசை திருப்ப ஒரு முயற்சி நடந்துள்ளதா.. என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை. காரணம், பேருந்து, கட்டிடம் உட்பட எல்லாவற்றுக்கும்  நிர்வாகம் இன்ஸ்சூரன்ஸ் செய்து வைத்திருந்தபடியால் ‘அதற்கான பணம் வந்துவிடும்’ என அவர்கள் நம்பி இருக்கலாம்.

பின்னணியில் இயங்கிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்;

கள்ளக்குறிச்சியில் மஹாபாரதி என்ற பெரிய பள்ளிக் கூடத்தை நடத்தும் உரிமையாளரான ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் மோகன் என்பவர் ஆரம்பம் முதல் ஸ்ரீமதி விவகாரத்தில் தலையிட்டு பெற்றோர்களை அழைத்து, ”பணம் வாங்கி கொண்டு போய்விடுங்கள்” என கட்டபஞ்சாயத்து செய்துள்ளார். இவர் பள்ளியிலும் ஆர்.எஸ்.எஸ் சாகா பயிற்சிகள் நடந்துள்ளன. ரவுடி யுவராஜிக்கு இவரும், சக்தி ரவிக்குமாரும் லட்சலட்சமாக நன்கொடை தந்துள்ளனர். ஆகவே, இவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப தான் களத்தில் யுவராஜ் ஆட்கள் வன்முறை தாண்டவங்களை நிகழ்த்தி உள்ளனர். பள்ளி வன்முறையை அடுத்து களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ள காவல்துறை சின்ன சேலம் அருகில் உள்ள கொங்கு திருமண மண்படத்தில் இருந்து தினசரி மட்டன், சிக்கன் பிரியாணி தவறாமல் செய்து களத்தில் உள்ள போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆகவே, தமிழக காவல்துறை கொங்கு மண்டலம் முழுக்க ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

ஆர்.எஸ்.எஸ்சுக்கு மிக நெருக்கமான பிரவீன்குமார் அபிநவ் என்ற சேலம் சரக காவல்துறை அதிகாரி தான் சிறப்பு புலனாய்வுக்கு தலைமையாக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நிறைய எழுதலாம். அந்த அளவுக்கு ஆதிக்கசாதி மனோபாவம் உள்ளவராக பெயர் எடுத்தவர். அதனால் தான் இவர் பொதுவுடமை கொள்கையாளர்கள், தலித் இளைஞர்கள், இஸ்லாமிய இளைஞர்கள், அப்பாவி இளைஞர்கள் ஆகியோரை  ‘டார்கெட்’ செய்து கைது செய்து வருகிறார்.

ஆக, கட்டற்ற வன்முறையை அனுமதித்தன் மூலம் ஸ்ரீமதி கொலைக்கான கோபத்தை திசை திருப்பியதாகவும் ஆச்சு! வன்முறையின் பெயரால் பாஜகவின் அரசியல் எதிரிகளை வேட்டையாடியதாகவும் ஆச்சு. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

இப்படியாக ஒரு அநீதிக்கு ஆதரவாக, உண்மையை மறைக்க, அடுத்தடுத்து அரசாங்க பலத்துடன் அரங்கேற்றப்படும் அத்துமீறல்களால் மக்களின் நியாயம் கேட்கும் உணர்வை மழுங்கடித்துவிட முடியும் என நினைக்கிறார்கள்! ஆனால், இந்த அத்துமீறல்கள் மக்களின் நெஞ்சில் நீருபூத்த நெருப்பாக கோபத்தீயைத் தான் உருவாக்கும். கருணாநிதி, ஜெயலலிதா மரணத்திற்கு நிகராக அனைத்து தொலைகாட்சி சேனல்களும் ஸ்ரீமதியின் இறுதி சடங்கை ஐந்து மணி  நேரம் நேரலையில் ஒளிபரப்பியதும், அதை கோடிக்கணக்கான மக்கள் கண்களில் கண்ணீருடன் கண்டதும் அலட்சியம் செய்யத்தக்கதல்ல. முதல்வர் ஸ்டாலின் ஆர்.எஸ்.எஸ் தளையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மக்கள் தரப்புக்கு – உண்மையின் பக்கம் – வந்துவிட வேண்டும்.

நடந்த சம்பவங்களை முழுமையாக, வரிசைபடுத்தி ஆராய்ந்தால், தமிழக காவல்துறை தலைமை முதலமைச்சர் ஸ்டாலினிடம் இருந்து டெல்லி ஆதிக்க சக்திகளின் கைகளுக்கு சென்று விட்டது என்ற முடிவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

கோவலனை கொன்றதற்காக பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனே வெட்கப்பட்டு உயிர் துறந்ததும், மதுரை மாநகரே மக்களின் கோபத்தால் பற்றி எறிந்ததுமான ஒப்பற்ற வரலாறு கொண்டது தமிழகம்.

தமிழக கிராமங்களில் கருப்பாயி, ராக்காச்சி, அங்கம்மா..போன்ற எண்ணற்ற பெண் தெய்வங்கள் உள்ளன. ‘இவை யாவுமே ஸ்ரீமதியைப் போல அநியாயமாக கொலையுண்ட இளம் பெண்ணின் ஆத்மா சாந்தி அடையவும், அந்த பாவத்திற்கு கைமாறாக அவர்களை காவல் தெய்வங்களாகவும், குல தெய்வங்களாக ஆக்கியும் இந்த சமூகம் செய்த பிராயசித்தங்கள் தாம்’ என ஆய்வாளர்கள் பலர் கூறுகின்றனர். ஸ்ரீமதியின் கொலையை மறைக்க ஆட்சியாளர்கள் செய்யும் முயற்சிகள் பெரும் தோல்வியை தழுவும் என்பது மட்டுமல்ல, ஒருபோதும் மீட்டெடுக்க முடியாத அவ நம்பிக்கையை திமுக அரசு மீது ஏற்படுத்திவிடும். மிகப் பெரும் வீழ்ச்சிக்கே வித்திடும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time