மக்கள் உயிரை காப்பாற்றுகிறோம் என்ற போர்வையில் மீண்டும் கொரோனா பரவல், பொது முடக்கம், அதீத கட்டுபாடுகள் என்ற சமூக நெருக்கடியை உருவாக்கி, தேர்தலை நிறுத்தி, ஜனநாயகத்தையும் முடக்கி, அதன் வழியே ஒரு ஆதாய அரசியலை முன்னெடுக்கும் முயற்சிகளை ஆதிக்கவர்க்கம் திட்டமிடுகிறதோ என்ற அச்சம் வருகிறது..!
நெருக்கடியான காலகட்டங்களில் மனித நேயம் மேலெழுந்து, மக்களை அரவணைக்க வேண்டும். ஆனால், மனித நேயத்தை மறக்கடித்தனர். நெருங்கிய உறவுகளையே அன்னியமாக எண்ண வைத்தனர். இஷ்டத்திற்கும் கட்டுப்பாடுகளை நிர்பந்தித்து, இயல்பு நிலையை குலைத்து கொரோனா அச்சங்களை பல மடங்கு பூதாகரப்படுத்தினர். இவையே நம் கடந்த கால அனுபவங்களாகும்! மீண்டும் அதே கசப்பான அனுபவங்களை நாடும்,மக்களும் எதிர் கொள்வது போன்ற ஒரு சூழலை வலிந்து, திட்டமிட்டு கட்டமைக்கிறார்கள்.
இன்று காலை அடையாறில் தன்னந்தனியாக சாலையில் நடைபயிற்சி மேற் கொண்டவர்கள், வேலைக்கு புறப்பட்டோர்,கடைகளில் பொருள் வாங்க வந்தோர் ஆகியோர்களைத் ஓடிப் பிடித்து போலீசார் ரூ200 அபராதமாக பணம் பறித்தனர்!- முகக் கவசம் போடவில்லையாம்! பேப்பர் கடையில் தினமலர் தொங்கியது. அதன் முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக, முழு அடைப்பு வருமா? சட்டசபை தேர்தலையும் ஒத்தி வைக்கலாம். உயிரிழப்புகளை தடுக்க முன் வருமா அரசு..? என்ற கேள்விகள்!
இந்த சூதுமதியாளர்கள் தங்கள் அஜந்தாவை ஆரம்பித்துவிட்டனர்..என்பது புரியத் தொடங்கியது.
தமிழக தேர்தலில் அதிமுக,பாஜக கூட்டணிக்கு பின்னடைவான சூழல் நிலவுவதால்,கொரோனா பூதத்தை கிளப்பி, தேர்தலை தடுத்தது போலும் ஆச்சு, மீண்டும் கொரோனா பெயரில் போலீசும், அதிகார வர்க்கமும், அரசியல்வாதிகளும் காசு பார்த்தது போலும் ஆச்சு என சில ஆதிக்க சக்திகள் கணக்கு போடுகின்றனர்..! அல்லது பொது முடக்கத்தை காரணமாக்கி, எதிர்கட்சியினர் நடமாட்டத்தை முடக்கி பண விநியோகம் செய்யும் திட்டமும் இருக்கலாம்!
பெருவாரியான மக்களை கொரானா அச்சத்தில் வீட்டில் முடக்கிவிட்டு, பணம் கொடுத்து ஆட்களைக் கூட்டி வந்து, அதிகார பலத்துடன் சாதகமான தீர்ப்பை பெற அளும் தரப்பினர் முயற்சிக்கலாம். படித்த வர்க்கமும், நடுத்தர வர்க்கமும்,குறிப்பாக நகர்புற மக்களும் கொரானா அச்சத்தில் கணிசமாக வாக்கு சாவடி வருவதை தவிர்த்து விட வாய்ப்புண்டு!
எத்தனை அதிகார துஷ்பிரயோகங்களைச் செய்வதற்கான பொன்னான வாய்ப்பாக அதிகாரத்திலிருக்கும் ஆட்சியாளர்களுக்கும், ஊழல் அதிகாரிகளுக்கும்கொரோனாவானது பயன்பட்டது.! அந்த வாய்ப்பைத் தான் தற்போதும் எதிர்பார்க்கின்றனர்.
எளிய அடித்தட்டு மக்கள் வேலைவாய்ப்பின்றி, வெளியேறி, கிராமங்களுக்கு செல்லமுயன்ற போது, அதற்கு கையூட்டு! பட்டினியில் வெளியேறிய மக்களிடம் டோல்கேட்டு போலீசார் இரக்கமின்றி லஞ்சம்! கால் நடையான நீண்ட நெடிய பயணத்தில் உயிரிழந்த எளியவர்களை மறக்க முடியுமா?
முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200, சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு ரூ.500, எச்சில் துப்புபவர்களுக்கு ரூ.500 என்பதாக அபராதம் விதிக்கப்பட்டது. கொரோனா தொற்றுள்ள கட்டுப்பாட்டு பகுதிகளை மீறியவர்களுக்கு ரூ.500 அபராதம்! கொரோனா முடக்கத்தால் பசி,பட்டினியில் வாடும் ஏழை,எளிய நடைபாதைவாசிகளை தேடிச் சென்று உணவளித்த ஆயிரமாயிரம் மனிதாபிமானிகள் வழக்குகளில் மாட்டி, துன்புறுத்தப்பட்டனர். அவசர, ஆத்திரத்திற்கு நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவர்களிடம் அபராதம் வசூலித்து துன்புறுத்தினர். நடு ரோட்டில் மக்களை அவமானப்படுத்தி, தண்டனை தந்தனர்!
கொரோனா தடுப்பு விதிமுறையை பின்பற்றவில்லை என வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம்! பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துதுறை, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி துறை அமைப்புகள் என அனைத்துமே மக்களிடம் பணம் பறிக்கும் வழிப்பறி கொள்ளையர் துறையாக மாற்றப்பட்டன.
2020 ஆகஸ்டு மாதம் வரை பொதுமுடக்க விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.22.கோடி 9 லட்சங்கள் அபராதமாக வசூலிக்கப்பட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.அதிகாரபூர்வமற்ற முறையில் வசூலிக்கப்பட்டது இதைக் காட்டிலும் அதிகமிருக்கும்!
இந்த காலகட்டத்தில் ஆறு லட்சத்து தொன்னூற்று ஒன்பதாயிரத்து சொச்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன! பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் மீது சுமார் ஒன்பது லட்சத்து ஐயாயிரத்து சொச்சம் வழக்குகள் பதிவாகி, அலை கழிக்கப்பட்டனர்.
ஒரு வீட்டில் யாருக்காவது கொரோனா வந்தால், அந்த தெரு அல்லது அந்த வட்டாரமே தகர தடுப்பு கொண்டு அடைக்கப்பட்டு அல்லோலப்பட்டது. மக்களின் அத்தியாவசிய நடமாட்டம் ஒடுக்கப்பட்டது. இந்த தகரம் அடிக்கும் விவகாரத்தை ஒரு அமைச்சரே தன் பினாமி மூலம் காண்டிராக்ட் எடுத்து செய்தார்!
சில இடங்களில் மாவட்ட ஆட்சியரும், வட்டாட்சியரும், தாசில்தாரும் தங்களை ஆண்டவனின் அவதாரங்களாக கருதினர்! சம்பவங்களை பட்டியலிட்டால் வால்யூம்களாகத் தான் எழுத வேண்டியிருக்கும்.
மக்களின் அத்தியாவசிய உணவுத் தேவையான காய்கறிகள்,பழங்களின் மாபெரும் சந்தையான கோயம்பேடு பல மாதங்கள் மூடப்பட்டன. இதனால் விவசாயிகள், வியாபாரிகள், மூட்டை தூக்கும் கூலி தொழிலாளிகள் சரக்கு வாகன ஓட்டிகள்..வாழ்வாதாரம் இழந்தனர். இந்த மார்க்கெட்டை திறக்க ஆட்சியாளர்கள் பேரம் பேசிய அவலங்களும் நடந்தேறின!
இந்தச் சூழலில் தான் துணிந்து சாராயக் கடைகள் திறந்தது தமிழக அரசு. குடிமகன்கள் முண்டியடித்து நீண்ட வரிசையில் நின்றனர். அந்த சாரய வியாபாரத்திற்கு சேவையும்,பாதுகாப்பும் தந்த காவல்துறையும், வருவாய்த்துறையும்,எளிய தள்ளுவண்டி வியாபாரிகளின் காய்கறிகள்,பழங்களை கீழே தள்ளி வீணடித்தனர்.
ஆக, மேல்மட்டம் தொடங்கி அடிமட்டம் வரை அதிகாரதுஷ்பிரயோகத்திற்கான வாய்ப்பாக கொரோனா காலகட்டம் மாறியதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் எல்லோராலும் உணரமுடிந்தது. ஆகவே, அதை மீண்டும் நடைமுறைப்படுத்தாதீர்கள்!
தமிழகத்தின் பல இடங்களிலும் வீடுவீடாக அத்துமீறிச் சென்று அதட்டி அப்பாவிகளை கொரானா செக் பண்ணணும்னு அழைத்துப் போனார்கள்! அப்படி வம்படியாக அழைத்து செல்லப்பட்டவர்கள் அனைவருக்கும் கொரானா இருக்குது என்றனர்.
ஒவ்வொரு கொரானா கேசுக்கும் ஒதுக்கப்பட்ட பணத்திற்கு கமிஷன் பார்த்தனர். இப்படி கமிஷன் பார்த்து பழகியதால், கொரானாவே ஓய்வெடுக்க விரும்பினாலும் இவர்கள் விடமாட்டார்கள்! அதனால் தான் மீண்டும் இப்படி ஆரம்பிக்கின்றனர்!
அன்று முதலில் ஓடி ஒளிந்த தனியார் மருத்துவமனைகள் இரண்டரை மாதங்கள் கழித்து வந்து, ஒன்னுமில்லாத விஷயங்களுக்கெல்லாம் பணம் பிடுங்கின! அரசால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை! முதல் இரண்டரை மாதங்களாக லட்சக்கணக்கான மற்ற நோயாளிகள் எந்த சிகிச்சையும் தரப்படாமல் மறுக்கப்பட்டனர்! பிறகு, தனியார் மருத்துவமனைகளோடு அமைச்சர் விஜயபாஸ்கர் கைகோர்த்து அவர்கள் அத்துமீறல்களை அனுமதித்தார்!
கொரானா பெருந் தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய அரசு, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒரு மாதகூடுதல் ஊதியம் வழங்கப்படும் என்பதும், கொரானாவிற்கு உயிரிழந்த மருத்துவர்களுக்கும்,செவிலியர்களுக்கும் அறிவித்த நிதிஉதவிகளும் இன்று வரை தரப்படவில்லை!
உண்மையில், கொரோனா கூட பிரச்சினையில்லை! கொரானாவை நாங்கள் எதிர்கொள்ள தயார். ஒரு வகையில் அது அதிகம் பரவும் போது தான் எதிர்ப்பு சக்திகளும் நம் உடலில் வலுப்பெறும் என்பதே மருத்துவ உண்மை! கொரோனா பெயரில் நடத்தப்படும் அதிகார சித்து விளையாட்டுகளும், ஆதாயக் கொள்ளைகளும் தான் ஆபத்தானதாக இருக்கின்றன!
முறையான பரிசோதனைகள் இன்றி அவசரகதியில் கொரானாவிற்கு தடுப்பூசியைக் கொண்டு வந்தீர்கள்! அந்த தடுப்புசிகளை போட்டுக் கொண்டவர்களுக்கு கொரானா வராது என்பதற்கு உத்திரவாதமில்லை என்கிறீர்கள்! ஆகவே,அவர்களும் முகக்கவசம் போட வேண்டும் என்கிறீர்கள்! அதில் பக்க விளைவுகள் ஏற்பட்டு சுமார் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ரத்தம் உறைந்து மூளை பாதிப்பு ஏற்பட்டதாக 27 பேருக்கு நிருபணமானது! இவ்வளவு ரிஸ்க் எடுத்து போட்டவனுக்கும் இனி வராது என்பதற்கு உத்திரவாதமில்லை என்றால், உங்கள் பித்தலாட்டத்திற்கு அளவே இல்லையா…?
Also read
தாவரங்கள், விலங்குகள், உயிரற்ற ஜடப் பொருள்கள் என எது ஒன்றுக்கும் கொரானா இருப்பதாக காட்டும் PCR எனப்படும் பரிசோதனை கருவிகளைக் கொண்டு இன்னும் எத்தனை காலத்திற்கு ஏமாற்றுவீர்கள்? கொரானா கேஸ்களை அதிகப்படுத்துவதற்கும் ,குறைப்பதற்குமான அரசியல் கணக்குகள் உங்களுக்கு இருக்கின்றன.
அதனால் தான் எங்களைப் போன்றவர்கள் கொரானா என்ற முழு அத்தியாயமும் அதிகாரவர்க்கத்தின் ஆதாயங்கள் தொடர்பானவை என்றும், அதில் மக்கள் பலிகடாக்களாக ஆக்கப்படுகின்றனர் என்றும் சொல்லி வந்தோம்! அதன் தொடர்ச்சியாகத் தான் தேர்தலை தடுக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன! இவற்றை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், இன்னும் பல காலத்திற்கு கொரானா பெயரில் நம்மை முடக்கி, ஆதாய அரசியலை செய்து கொண்டே இருப்பார்கள்!
-சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Leave a Reply