விருதுகளின் பின்னணியில் இத்தனை வில்லங்கங்களா..?
தேசிய விருதுகளுக்கு பாஜக அரசு வைத்துள்ள அளவுகோல்கள் என்ன?
விருதுகளின் பின்னணியில் இருக்கும் அரசியலை விமர்சிக்காமல் கடப்பது அரசியல் தலைவர்களுக்கு அழகா..?
யமுனா ராஜேந்திரன் நேர்காணல்;
சர்ச்சைக்கு உள்ளான காஷ்மீர் ஃபைல்ஸ், விண்வெளி விஞ்ஞானியாக மாதவன் நடித்த ராக்கெட்டரி, கடைசி விவசாயி போன்ற படங்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதே சமயம் ஜெய்பீம், கர்ணன், சர்தார் உத்தம் சிங், சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் திரை விமர்சகரான யமுனா ராஜேந்திரன் விருது வழங்குவதன் அடிப்படை, அதிலுள்ள அரசியல் போன்றவை பற்றி இந்த நேர்காணலில் பேசுகிறார்.
தேசிய ஒருமைப்பாட்டிற்கான விருது நர்கீஸ் தத் பெயரில் வழங்கப்படுகிறதே ! அவரைப் பற்றி .…
நர்கீஸ் தத் ஒரு சிறந்த நடிகை. ராஜ்கபூர், சுனில் தத் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். ‘மதர் இந்தியா’ என்ற புகழ்பெற்ற படம் அவர் நடித்தது தான். அவர் ஒரு முஸ்லிம். இந்தியா போன்ற ஒரு நாட்டில் இந்து- முஸ்லிம் ஒற்றுமை தேவை என்பதை உணர்ந்த நமது முன்னோர்கள் நர்கீஸ் பெயரில் சினிமாவிற்கு விருதை ஏற்படுத்தினார்கள். அப்படிப்பட்ட உயரிய நோக்கம் கொண்ட விருதிற்கு, ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ ஐ தேர்ந்தெடுத்தது பெரிய சோகம்.
விருதுக்கு தகுதியற்ற படமாக காஷ்மீர் ஃபைல்சை கருதுகிறீர்களா ?
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படத்தை திரையிட்டார்கள். அந்த விழாவின் நடுவராக இருந்த இஸ்ரேல் நாட்டு இயக்குநரான நடாவ் லேபிட் (Nadav Lapid) இது ஒரு இழிவான படம், பிரச்சார படம் என்ற பகிரங்கமாக நடுவர்கள் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்தார். அவர் தன்னுடைய நாடான, இஸ்ரேலின் இனவெறி கொள்கையை எதிர்ப்பவர்; பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருப்பவர். இப்படி சர்வதேச ரீதியில் கண்டனத்தைப் பெற்ற ஒரு படத்திற்குத் தான் மோடி அரசு விருது தருகிறது.
ஒரு படத்தை தேர்ந்தெடுக்க இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒரு படம் என்பது கலையின் வெளிப்பாடு. அதோடு அது மனித மேம்பாட்டை அடிப்படையாக கொள்ள வேண்டும். சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். கலை அம்சம், மானிட விடுதலை என்ற இரண்டு அம்சங்களுமே இல்லாத படம்தான் காஷ்மீர் ஃபைல்ஸ்.
சர்தார் உத்தம் சிங் மிகச்சிறந்த படம். இதில் உத்தம் சிங், பகத் சிங்கின் நண்பன். தலைமறைவாக இலண்டனுக்குச் சென்று, அங்கிருந்த போராளிக் குழுக்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு போரிடும் வரலாற்று ரீதியான படம். தொழில்நுட்ப ரீதியிலும் சிறந்த படம். படத்தின் கதைக் கருவுக்காக அல்ல, டெக்னிக்கல் விருதுகள் தான் இப்படத்திற்குத் தரப்பட்டுளளது.
தமிழ்நாட்டில் இருந்த வெளிவந்த ஜெய்பீம், சார்பட்டா பரம்பரை, கர்ணன் என மூன்று முக்கியமான படங்கள் இந்திய அளவில் பேசப்பட்ட படங்கள். இவைகள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஜெய்பீம் படத்திற்கு விருது கிடைக்காதமைக்கு தெலுங்கு நடிகர் நாணி, நடிகர் அசோக் செல்வன் (தெகிடி), இயக்குநர் சுசீந்திரன்(வெண்ணிலா கபடிக்குழு), ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
பாஜக அரசானது இந்து தேசியப் பெரும்பான்மைவாதத்தை உயர்த்திப் பிடிக்கும், சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பை உமிழும் தனது அரசியல் நிலைபாட்டிற்கு ஏற்ப விருது அறிவித்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் ஒருசில நல்ல படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் முஸ்லிம் வெறுப்பை உமிழும், தேசவெறியை ஊட்டும், தேசப் பெருமிதமாக காட்டப்படும் படத்திற்கே சிறந்த திரைப்பட விருதை வழங்கியுள்ளனர். மானிட நேசத்தை, தலித் விடுதலையை முன்னிருத்தும் படங்களை புறக்கணித்துள்ளனர். இது அவர்களின் அரசியல் வெளிப்பாடு.
‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ மூலம் இந்தியாவைப் பற்றிய அவமானகரமான சித்திரத்தை வெளிநாடுகளுக்கு காட்டுகிறோம். திரைக்கலையை அவமதிக்கிறோம். தாகூர், காந்தி, ரே போன்றோரின் கலை ஆன்மாவை அவமதிக்கிறோம்.
கடைசி விவசாயி படத்தை தமிழில் சிறந்த படமாக தேர்ந்தெடுத்துள்ளனரே?
மகாராஷ்டிராவில் விவசாயிகளின் தற்கொலையை சித்தரிக்கும் 25 க்கும் மேற்பட்ட படங்கள் வந்துள்ளன. கடைசி விவசாயி படத்தில் அவர்களின் ஏழ்மை, கையறுநிலை போன்றவை காட்டப்படுகிறது. அதில் வரும் நீதிபதி ரொம்ப நல்லவர். விவசாயிகள் இருக்கும் இடத்திற்கே சென்று பிரச்சினையை பார்ப்பார். அதில் வரும் காவலர்கள் தனிபட்ட முறையில் நல்லவர்கள். ஆனால், இது நிர்வாக வர்க்கத்தையோ, அரசியல் மதிப்பீட்டையோ, அவர்களின் துயர் தீர்க்கும் வழியையோ கேள்விக்கு உட்படுத்தாது. நிலத்திற்கும், விவசாயிக்கும் உள்ள தொடர்பு சொல்லப்பட்டிருக்கும்; அந்த வகையில் நல்ல படம் தான். ஆனால், இந்தப் படத்தில் உள்ள அரசியலற்ற நிலை, ஒருவித ஆன்மிகத் தன்மை போன்றவை பாஜகவோடு ஒரு சிறிய அடிப்படையில் ஒன்று சேர்கின்றன.
தேர்வுக் குழுவினர் தானே விருதை தேர்வு செய்கிறார்கள் ?
தமிழ்நாட்டைச் சார்ந்த சாய் வசந்த் என்ற இயக்குநர் இதன் தேர்வுக் குழுவில் இருக்கிறார். இவர் பாலச்சந்தரிடம் பணிபுரிந்தவர். மற்றவர்கள் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆனால், விருதுக்குழுவிற்கு ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது அவர் தாராளவாத கண்டோட்டம் கொண்டவரா, மனித விழுமியங்களுக்கு எப்படி மதிப்புக் கொடுக்கிறார் என்பதை பார்த்து தான் தேர்ந்தெடுப்பார்கள். தேர்வுக் குழுவினர் தங்களின் தேர்வு (choice), யதார்த்தம், புதிய முயற்சி, கலைமேன்மை போன்றவைகளைப் பொறுத்து தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த அரசு திரைப்பட தணிக்கைக் குழுவில் தங்களது ஆட்களை நியமித்துள்ளது. பூனா திரைப்படக் கல்லூரியின் தன்னாட்சியைப் பறித்து தங்கள் ஆட்களை நியமித்துள்ளனர். பெரும்பான்மை வாதத்தை முன்னெடுக்கும் வகையில் அனைத்து அமைப்புகளையும் அவர்கள் கட்டுப்படுத்துகிறார்கள். எனவே விருதுகளும் அப்படியே வழங்கப்படுகின்றன.
இப்படிப்பட்ட தேர்வுகளை எதிர்த்து திரைக்கலைஞர்கள் பெரிதாக பேசவில்லையே ?
இன்றைய இந்திய அரசியல் கால கட்டம் ஹிட்லர் காலத்து ஜெர்மனி போல உள்ளது. அசோகா பல்கலைக் கழகத்தில், தேர்தல் குறித்த அறிக்கை ஒன்றை தயாரித்த ஆய்வறிஞர் மீது விசாரணை நடந்துள்ளது. அங்குள்ள சமூகவியல் துறையிலும், பொருளாதார துறையிலும் சென்று அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர்.
சந்திரயானை விண்வெளிக்கு ஏவியது விஞ்ஞானிகள் சாதனை. அதற்கு சிவசக்தி என்று மதரீதியான பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். இங்கு அச்சமான சூழல் நிலவுகிறது. எனவே, கலைஞர்கள் கருத்து சொல்ல அஞ்சுகிறார்கள். தேசியப் பாதுகாப்புச் சட்டம் மூலம் சிறைக்கு அனுப்பலாம்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின், விருதுகள் அரசியல் சார்பற்று இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதே போல ஒவ்வொரு மாநில முதலமைச்சரும் பேச வேண்டும். இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் பேச வேண்டும். விமர்சன மாற்றை முன்வைக்க வேண்டும். அப்படிச் செய்தால், அவர்கள் பின்னால் கலைஞர்களும், அறிவாளிகளும் திரளுவார்கள். அனுராக் கஷ்யாப், நசுரீதின் ஷா, தமிழ்நாட்டில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீ ராம் அரசு காஷ்மீர் ஃபைல்சுக்கு விருது கொடுத்ததை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளனர்.
‘பிரதமர் மோடியுடனும், பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரனுடனும் மாதவன் செல்பி எடுத்துக்கொண்டார்; அவருக்கு எப்படி விருது கொடுக்காமல் இருக்கமுடியும்‘ என்று பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் கூறுகிறாரே?
மாதவன் கமலோடு சேர்ந்து அன்பே சிவம் படத்தில் நடித்துள்ளார். மணிரத்தினத்தின் படங்களில் நடித்துள்ளார். மத்தியதர, உயர்மத்திய தர பாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவர் ரஞ்சித் போலவோ, மாரி செல்வராஜ் போலவோ, எஸ்.பி. ஜனநாதன் போலவோ படங்களை இயக்கியவர் அல்ல. தலித், இடதுசாரி எண்ணவோட்டம் கொண்ட கலைஞர் அல்ல. விண்வெளி விஞ்ஞானியாக தேசப் பெருமிதத்தை ராக்கட்டரி படத்தில் காட்டியிருக்கிறார். ஜெய்பீம், சார்பட்டா பரம்பரை, கர்ணன் போல சமூக மாற்றத்தைக் விரும்பும் புரட்சிக்குரிய பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவரும் இல்லை. எனவே, மாதவனை நாம் பெரிதாக பொருட்படுத்த வேண்டியதில்லை.
Also read
சமீபத்தில் நீங்கள் பார்த்து ரசித்த படம் எது ?
ஒரு காலத்தில் வங்காளத்தில் மிகச் சிறந்த படங்கள் வெளிவந்தன. சத்யஜித் ரே, மிருணாள் சென், ரித்விக் கட்டாக் போன்ற புகழ்பெற்ற இயக்குநர்கள் இருந்தார்கள். ஆனால், இப்போது, மற்ற மாநிலங்களைப் போலவே அங்கும் மெயின்ஸ்ட்ரீம் ஆக்க்ஷன், காமெடி, திரில்லர் படங்கள் தான் வருகின்றன. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் சிறந்த படங்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. Made in Heaven என்ற தொலைக் காட்சித் தொடர் இரண்டு பாகங்களாக பிரைம் தளத்தில் உள்ளது. இதில் 12 கதைகள் உள்ளன. பெரும்பாலும் பெண்களே எழுதி, இயக்கி இருக்கிறார்கள். தங்களது மனக்குமுறலை பலவிதமாக இந்த தொடரில் பெண்கள் காட்டியுள்ளனர். நடிப்பு என்று பார்த்தால் ஜெய்பீமில் நடித்த மணிகண்டனுக்கு வழங்கியிருக்க வேண்டும். சார்பட்டா கதாநாயகி துஷாரா விஜயனுக்கு வழங்கி இருக்க வேண்டும்.
நேர் காணல்; பீட்டர் துரைராஜ்
Leave a Reply