(பகுதி-4)
வீரப்பனுக்கே தெரியாத நல்ல விஷயங்கள் வீரப்பன் நடமாட்டத்தால் காட்டில் நடந்தன. காட்டில் நிறையக் கல்குவாரிகள் உண்டு. வெடிவைத்து பாறைகளைப் பிளக்கும்பொழுது ஏற்படும் சத்தம் 15 கிலோமீட்டர் தூரம் கேட்கும். பொதுவாக விலங்குகள், பறவைகள், சிறு உயிரிகள் சிறு சத்தத்தைக் கேட்டாலும் ஓடி ஒளிந்து கொள்ளும். காடு நூலகம் போல் மிக அமைதியான இடம். அங்கு வெடிச் சத்தம் கேட்டால் அங்கு வாழும் காட்டுயிர்களின் நிலைமை என்னாகும் மற்றும் வெடி வெடிக்கும் பாறைகளுக்கு அருகில் இருக்கும் உயிரினங்கள் நிறைய இறந்துவிடும்.
இது மட்டுமில்லாமல் இயற்கை சுழற்சியில் பாதிப்பும் ஏற்பட்டது. வெடியினால் ஏற்படும் பாறை துகள்கள் மரங்களின் மேல் இலைகளில் படிந்துவிடுகிறது. இதனால் இலைகள் சூரியனின் ஒளிச்சேர்க்கையைப் பெறமுடியாமல் வழக்கமாகத் தன்மையிலிருந்து மாறுகிறது. எட்டு மாதங்கள் உயிர்ப்போடு இருக்கவேண்டிய இலைகள் நான்கு மாதங்களில் விழும். இனிதான் பாதிப்பு அதிகமாகிறது. இந்த நான்கு மாதங்களில் அந்த இலைகளைச் சார்ந்து வாழ்ந்து கொண்டிருந்த பலவித சிறு உயிரிகள் அழிந்துவிடும்.
மரத்திற்குக் கீழே புற்கள் இருக்கும் வெப்பம் தாங்காமல் இலை கீழே விழுந்தால் அந்த புற்கள் அழியத் தொடங்கும். அந்த புற்களை உண்டு வாழும் விலங்கினங்களுக்கு இரை பற்றாக்குறை ஏற்படும். அதனால் அங்கிருந்து வெளி இடத்திற்குக் கிளம்பத் தொடங்கும். இப்படி குவாரியால் ஏற்படும் இந்த வெடி நிகழ்வால் காட்டுயிர்களும், தாவரங்களும் அழியத் தொடங்கின. இது போலத் தமிழ்நாடு, கர்நாடகா காடுகளில் உள்ள நூற்றுக்கணக்கான குவாரிகள் காடுகளில் ஏற்படுத்திய நாசவேலைகள் மிக அதிகம். இந்தச் சூழல்கள் வீரப்பனுக்கு உதவிக்கரமாக அமைந்தன..
1992 வருடம் இரண்டு வெடி சம்பவங்கள் வீரப்பன் நிகழ்த்தினான். வீரப்பன் தேடுதலுக்குக் காட்டுக்குள் வந்த கர்நாடகா எஸ்.பி அரிகிருஷ்ணன் மற்றும் 22 காவலர்கள் பாலாற்று அருகில் வெடி வைத்து கொல்லப்பட்டனர். கர்நாடக அரசின் அதிகாரமட்டம் பரபரப்பானது. இவ்வளவு பெரிய வெடி சம்பவத்திற்கான மூலம் என்ன? இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எப்படி வெடிமருந்துகள் கிடைத்தன… என்ற கோணத்தில் விசாரணை சென்ற போது,அவை குவாரிகளில் இருந்து எடுத்துப் பயன்படுத்தப்பட்டது என தெரியவந்தது.
’ஆகா, இது அரசாங்கமே வீரப்பனுக்கு வெடி மருந்துகளை கையளித்தது போல ஆகிவிட்டதே…’ என்று யோசித்த கர்நாடக அரசு உடனே காடுகளிலிருந்த அனைத்து குவாரிகளையும் தடை செய்தது. தமிழ்நாடும் அதேபோல் தடை செய்தது. இந்த வகையில் காட்டுச் சூழலுக்கு மிகத் தீமையாக இருந்த கிட்டத்தட்ட 150 குவாரிகள் மூடப்பட்டன. அந்த குவாரிகள் இருந்திருந்தால் கிழக்கு மலைத்தொடர்ச்சி பகுதிகள் மிகப் பெரிய அழிவுக்கு உள்ளாகி இருக்கும். சிழக்கு தொடர்ச்சி மலை பகுதிகளைப் பொறுத்த வரையில் காடு, காட்டுயிர், தாவரங்கள் போன்றவை இன்றைக்கு அங்கு அழியாமல் இருப்பதற்கு மிகப் பெரிய காரணம் அந்த குவாரிகள் முடப்பட்டதே. ஆக,ஒரு மிகப் பெரிய சூழழியல் பேரழிவிலிருந்து காடு காப்பாற்றப்பட்டது. இது வீரப்பனையறியாமல் நடந்த நற்காரியமாகும். பிறகு ஒரு முறை நான் அவரிடம் பேசிய பொழுது, ’’இந்த சம்பவத்தால் காடு தப்பிச்சது’’ என்றார்.
2004 வருடம் வீரப்பன் இறக்கும் வரை குவாரிகளை திறக்க அரசாங்கங்களுக்குத் தைரியம் வரவில்லை! பிறகு சூழலியல் விழிப்புணர்வு அதிகரித்த நிலையில்,அது போன்ற முயற்சிகள் எடுக்கப்பட்ட போது, சூழழியல் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், ஊடகங்கள் ஆகியவற்றின் எதிர்ப்பு காரணமாக இன்று வரை அவை மூடியே இருக்கின்றன.
ஆனால் தற்போது நாமக்கல்,சேலம்,கிருஷ்ணகிரி,தர்மபுரி…ஆகிய மலைகள் சூழ்ந்த மாவட்டங்களில் மலையை தகர்த்து கட்டுமானத்திற்காக ‘என்சாண்ட்’ எடுக்கும் கல்குவாரிகள் பெருகி வருகின்றன.இதனால், காடு,மலைகள்,ஓடைகள் அனைத்தும் பேரழிவுக்கு உள்ளாகி வருகின்றன.
துப்பாக்கி குண்டுகளைச் சுமக்கும் யானைகள்
தற்பொழுது காடுகளில் ஆண் யானைகளின் எண்ணிக்கை கூடியுள்ளது. பெரும்பாலான ஆண் யானைகள் உடலில் துப்பாக்கி குண்டுகளுடனும், வலிகளுடனும் வாழ்ந்து வருகின்றன. வீரப்பன் குழுவிலிருந்த அன்புராஜ் சொன்ன ஒரு சம்பவம்.
ஒரு இடத்தில் ஆண் யானை இறந்திருந்தது. அருகில் சென்று பார்த்தோம். உடலில் இரண்டு மூன்று இடத்தில் கட்டி கட்டியாக இருந்தது. அதைப் பார்த்த வீரப்பன் அந்த இடத்தை அறுத்துப் பாருங்கள் என்றார். அந்த இடத்தை அறுத்துப் பார்த்ததில் 5 கிலோ அலுமினியம் யானை உடலிலிருந்தது. அந்த அளவு குண்டுகள் அதன் உடலில் இறங்கி உள்ளன. அன்றிலிருந்து இன்றும் யானை வேட்டை என்பது தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இன்றும் தந்தங்களுடைய பெரும்பாலான ஆண் யானைகள் உடலில் துப்பாக்கி குண்டுகள் உள்ளன.உண்மையில் சொல்லொண்ணா வலிகளுடன் தான் அவை நடமாடிக் கொண்டுள்ளன.
- தந்தங்களுக்காக யானைகளைக் கொல்வதும்,
- தோல், நகம் ஆகியவற்றுக்காகச் சிறுத்தை மற்றும் புலிகளைக் கொல்வதும்,
- தோல்களுக்காக மான் மற்றும் பாம்புகள் கொல்லப்படுவதும்,
- இறைச்சிக்காகக் கடமான்,புள்ளிமான்,காட்டெருமை,காட்டுப்பன்றி ஆகியன கொல்லப்படுவதும் மனிதன் செய்யும் கொடூரங்களாகும்!
மேற்கத்திய நாடுகளில் தந்ததால் உருவான பொருட்கள் விற்பனைத் தடை நீடிக்கிறது. ஆனபோதிலும் கள்ளச் சந்தையில் யானைத் தந்தம் விற்பனை நடைபெறுகிறது. இதற்கு முக்கிய காரணம் நுகர்வு கலாச்சாரம் பெருகியதே ஆகும். மனிதர்கள் ஆடம்பத்திற்காக வாங்கும் பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றன.. அதனால் பெரும் உயிர்கள் முதல் சிறு உயிரிகள் வரை கொல்லப்பட்டு கள்ளச் சந்தையில் விற்பனை நடைபெறுகிறது.
வீரப்பன் நடந்து சென்ற பாதையில் நின்ற யானை மற்றும் அதன் நினைவு திறன்
பர்கூர் மலைப்பகுதியில் வீரப்பன் குழுவினர் நடந்து சென்று கொண்டிருந்தனர். ஒரு பாறை இடுக்கில் நடந்தபொழுது எதிரில் யானை வந்துவிட்டது. திரும்பி ஓட முடியாத நிலை ஏற்பட்டது வேறு வழி இல்லை என்ற நிலை வந்தவுடன் உடனே கோவிந்தன் துப்பாக்கி தூக்கிக் குறி வைத்தபொழுது அன்புராஜ் வந்து, ’’அண்ணே அண்ணே சுட வேண்டாம் அவை எனக்கு நன்கு தெரிந்த யானை. சிறு வயது முதலே பார்த்து வருகிறோம். ஒன்றும் செய்யாது’’ என்று சொல்லி அதன் அருகில் சென்று போ என்பது போல் சைகை, சத்தம் எழுப்பியதால் அந்த யானை நகர்ந்து சென்றது.
பிறகு அன்புராஜ் சிறை சென்று 18 வருடம் கழித்து வெளியே வந்து இரண்டு வருடம் கழிந்த பிறகு ஒரு முறை மலை வழியில் வண்டியில் வந்து கொண்டு இருந்தபொழுது கோவிலுக்குச் சென்று வந்து கொண்டிருந்த நண்பரை வண்டியில் ஏற்றி வந்தபொழுது 20 வருடம் முன்பு வீரப்பனுடன் பார்த்த அதே யானை பாதையில் நின்றது. அருகில் இருந்தவர்கள், ’’கிட்ட வராதீர்கள்’’ என்று கூச்சல் போட்டார்கள். ஆனால், அன்புராஜ் கோவிலுக்கு சென்று திரும்பிய நண்பர் கையிலிருந்த வாழைப்பழத்தை யானைக்கு அருகில் சென்று கொடுத்ததில், அதனை வாங்கி சாப்பிட்டு அங்கு இருந்து நகர்ந்து சென்றுவிட்டது.
Also read
வீரப்பன் கூட்டத்திலிருந்தபொழுது பார்த்த யானை 20 வருடம் பிறகும் அன்புராஜை நினைவில் வைத்து இருந்தது என்றால், எந்த அளவு யானையின் நினைவு திறன் கூர்மையானது என்பதை இந்த சம்பவம் நன்கு உணர்த்தும். யானைக்கு ஆபத்து வராத வரையில் எந்த யானையும் யாரையும் கொல்வதில்லை.
வீரப்பன் இறந்த பிறகு
வீரப்பன் இருந்தபொழுது தமிழக போலீஸ் ஆயிரம் பேர், கர்நாடக போலீஸ் ஆயிரம் பேர் எப்பொழுதும் காட்டுக்குள் இருந்தார்கள். அப்போது வேட்டைகார்கள் உள்ளே நுழையவே அச்சப்பட்டு இருந்தார்கள். இருந்தும் சில வேட்டைகள் நடந்தது. ஆனால் வீரப்பன் இறந்த பிறகு இரண்டு மாநில போலீஸ் வெளியே வந்துவிட்டார்கள். அதிக காவலர்கள் காட்டுக்குள் நடமாடியதும் காட்டுச் சூழலுக்கு ஒரு இடையூறாகத்தான் இருந்தது. ஆனால்,சட்ட விரோத வேட்டை தடுக்கப்பட்டிருந்தது. தற்போது வேட்டைக்கார்கள் உள்ளே நுழைந்துவிட்டார்கள்.
உள்ளே செல்லும் வேட்டைகாரர்கள் அங்கு இருக்கும் ஒரு சில பழங்குடிகளைப் பயன்படுத்தி வேட்டையில் ஈடுபடுகிறார்கள். பழங்குடிகளுக்கு நல்ல வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து இருந்தால், இந்த நிலை குறைந்து இருக்கும். காட்டை பாதுகாக்கும் பெரும் பொறுப்பை, காட்டுயிர்களைப் பாதுகாப்பும் பொறுப்பை, வேலையைப் பழங்குடிகளுக்குக் கொடுங்கள். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய வேலை வாய்ப்பை நகரவாசிகளுக்குக் கொடுப்பதால் காடுகளின் அருமை தெரியாத இவர்களை வேட்டைக்காரர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
காட்டின் அழிவு, காட்டுயிர்களின் அழிவு, பழங்குடிகளின் வாழக்கைமாற்றம் இவை அனைத்துக்கும் நகரவாசிகள் அங்குக் குடியேறியது முக்கிய காரணம் என்றாலும், வேட்டைக் காரர்கள் மற்றொரு காரணம். காடு-காட்டுயிர்-பழங்குடிகள் இவற்றை உள்ளடக்கியதே சூழலியல் ஆகும். இந்த பூமி பசுமையாக இருக்க வேண்டுமென்றால், இவை மூன்றும் வளமாக, நலமாக இருக்க வேண்டும். நம் அடுத்த தலைமுறைக்குக் காட்டை அப்படியே சிதைக்காமல் ஒப்படைப்போம்.
சிவ சுப்பிரமணியன்
30 ஆண்டுக்கால பத்திரிகையாளர், எழுத்தாளர் ,மனித உரிமைச் செயற்பாட்டாளர். வீரப்பனை முதன்முதலில் காட்டுக்குச் சென்று சந்தித்து எழுதியவர்.பழங்குடி சமூக மக்களின் பல பிரச்சினைகளை அடிக்கடி எழுதிக் கவனப்படுத்தி, சில தீர்வுகளுக்குக் காரணமானவர்.
# பொய் வழக்கும்,போராட்டமும்
# அழகிய தமிழ் பெயர்கள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.
’வீரப்பன் வாழ்ந்ததும்,வீழ்ந்ததும்’ என்ற நூலை விரைவில் வெளியிட உள்ளார்.
பேட்டி நிறைவுற்றது.
1 Comment