தினமலர் கக்கிய விஷங்களின் பட்டியல்!

-சாவித்திரி கண்ணன்

ஒட்டுமொத்த தமிழக மக்கள் காறித் துப்பி, கழுவி ஊற்றி விட்ட பிறகு, ஆறு பதிப்புகளை கைவசம் வைத்துள்ள ராமசுப்பு ஐயர் கோஷ்டி ஈரோடு-சேலம் பதிப்பில் வெளியானது வெட்கி தலைகுனியக் கூடிய செய்தி எனக் கதறி, பகையாளியான பங்காளியை காட்டிக் கொடுத்துள்ளது. ஆனால், இந்த தினமலர் கக்கிய விஷங்கள் இதைவிட அதிகம். இதோ பட்டியல்;

ராமசுப்பு ஐயர் என்ன சுத்த சுயம்பிரகாச வள்ளலாரா? இவர்கள் வசம் உள்ள சென்னை, மதுரை, கோவை, புதிவை, நெல்லை, நாகர்கோவில் பதிப்புகள் நாளும், பொழுதும் கொட்டித் தீர்க்கும் விஷம் என்ன கொஞ்சமா? நஞ்சமா?

பொதுவாக தினமலர் எந்த ஒரு விவகாரத்திலும் செய்தியை அதன் இயல்பான தன்மையில் செய்தியாக போடாது. எல்லா நியூஸ்களிலும் இவர்களின் உள் நோக்கம் கொண்ட வியூஸ்கள் தான் கோலோச்சும். இல்லாத விஷயத்தைக் கூட தலைப்பு செய்தியாக போடும் அடாவடி துணிச்சலில் தினமலரை மிஞ்ச ஆளில்லை எனலாம்.

மத்திய பாஜக அரசு என்ன மக்கள் விரோத சட்டங்கள் கொண்டு வந்தாலும், விழுந்தடித்து ஆதரிப்பதும், வரிந்து கட்டிக் கொண்டு அதில் உள்ள தீமைகளைக் கூட நன்மையாக பாவிப்பதும், அதுவே, திராவிட இயக்க ஆட்சி எந்த ஒரு நல்ல திட்டம் கொண்டு வந்தாலும், அதை இழிவான கோணத்தில் மட்டுமே பார்ப்பதும் இவர்களின் அணுகுமுறையாக உள்ளது.

ராமசுப்பையர் பதிப்பிக்கும் தினமலர் பதிப்புகளில் வெளியான விஷச் செய்திகளை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; ஒரு சில சாம்பிள்கள் மட்டும் கீழே தருகிறேன்.

‘தமிழகம் இரண்டாகப் பிரிகிறது; உருவாகிறது கொங்கு நாடு’ என செய்தி போட்டது ராம சுப்பையர் பதிப்புகள் தானே!

தமிழகத்தை இரண்டாகப் பிளக்கும் தீய நோக்கத்தை இவர்களாகவே விதைக்கும் வண்ணம் அதை தலைப்பு செய்தியாக்கியது சாதாரண வன்மமா?

சாதிய சனாதனப் பார்வை இவர்களிடம் தூக்கலாக வெளிப்படும். நிர்மலா சீதாராமனை உசத்தியாக கார்டூன் போடும் தினமலர், தமிழிசை செளந்திரராஜனை படுகேவலமாக கார்டூனில் சித்தரித்து அவமானப்படுத்தியது.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது, தலைப்பு செய்தியில் அவரை ‘பழனி’ என மரியாதக் குறைவாக  போட்டனர். அப்போது அதிமுகவினர் தினமலரை எரித்தனர். சுப்பிரமணியசாமியை என்றாவது ‘சுப்பு’ எனச் சொல்லியதுண்டா இவர்கள்!

2009 ஆம் ஆண்டு, ‘தமிழ் நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்’ என போட்டோ, பெயர்களைப் போட்டு எழுதிய போது, ரஜினி, சூர்யா,சரத்குமார் ஆகிய நடிகர்கள் தினமலரை எதிர்த்து பேரணியே அறிவித்தனர்.

தொடக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை மிக இழிவுபடுத்தியும், வன்னிய மக்களை தாழ்வாகச் சித்தரித்தும், ராமதாசை ”மரம்வெட்டி” என அடைமொழியில் பெயர் வைத்து அடிக்கடி செய்தியும், கார்டூன் போட்டதுமாக படு வன்மத்தை வெளிப்படுத்தியது தினமலர். டாக்டர் ராமதாஸ் கண்டணம் தெரிவித்தார், கனிவோடு வேண்டுகோள் விடுத்துப் பார்த்தார். எதையும் பொருட்படுத்தாமல் தினமலர் தன் வன்மத்தை கக்கிக் கொண்டே இருந்தது. ஒரு நாள் பாட்டாளி சொந்தங்கள் தினமலர் அலுவலம் நுழைந்து, ’செமையாக பாடம்’ எடுத்த பிறகு அடங்கிப் போனார்கள்!

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவை ஒழித்துக் கட்ட வலிந்து பொய் செய்திகளையும், மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும் போட்டது தினமலர்.

உயிர் பலியான சோகச் செய்திகளைக் கூட, ”கார்கள் டமால், 4 பேர் பலி” என தமாஷாக பேசும் பாவனையில் செய்தி வெளியிடுவார்கள். அப்போது நான் நண்பர்களிடம் சொன்னேன்;

”நல்ல வேளை மகாத்மா காந்தி இறந்த போது தினமலர் பத்திரிகை இல்லை. இருந்திருந்தால், கோட்சே டுமீல், காந்தி பணால்! அப்படின்னு தான் செய்தி போட்டு இருப்பாங்க”

இலங்கையில் ஈஸ்டர் குண்டு வெடிப்பு நடந்த போது, ‘ஓ…சேசப்பா..’ எனத் தலைப்பிட்டு தினமலர் குதூகலத்துடன் செய்தி வெளியிட்டதைக் கண்டு, ஒட்டுமொத்த கிறிஸ்துவர்களும் கொதித்து எழுந்தவுடன் பிறகு மன்னிப்பு கேட்டனர்.

இதே போல இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல சித்தரித்து செய்தி போடுவார்கள். சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் மீனவர்களை தீவிரவாதிகளாகவும், சுப.உதயகுமார் அவர்களை அன்னிய நாடுகளிடம் நிதி பெற்று எதிர்ப்பதாகவும் பொய் செய்தி பரப்பினர்.

அதென்னவோ தெரியவில்லை. தினமலர் விவகாரத்தில் எந்த திராவிட ஆட்சியாளர்களும் இது வரை துணிந்து எந்த சட்ட நடவடிக்கையும் எடுத்ததில்லை. தற்போது முதல்வர் ஸ்டாலினும் கூட சட்ட நடவடிக்கைகளை தவிர்த்து, கண்டனம் தெரிவித்து கடந்து போவதை பெருந்தன்மையாக பார்க்க முடியவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தினமலருக்கு அரசு விளம்பரங்களை நிறுத்தினார். கோர்ட்டுக்கு போனார்கள். அசரவில்லை. ஆனால், ஸ்டாலின் அரசோ, அத்தனை அரசு விளம்பரங்களையும் தருவதோடு, ஸ்டாலின், உதய நிதி பிறந்த நாட்களின் போது தினமலருக்கும் உடன்பிறப்புகள் விளம்பரங்களை அள்ளி இறைக்கிறார்கள்! இதை எப்படி புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை.

தமிழக ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர் தினமலர் ராமசுப்பையர் நெல்லை மாவட்டத்தில் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை ஆட்டையப் போட்டது பற்றி பக்கம், பக்கமாக ஆவணங்களுடன் தமிழக அரசுக்கு புகார்கள் தந்துள்ளனர். அந்த விஷயத்திலும் இது வரை நடவடிக்கை இல்லை.

மிகப் பெரிய வாசகர் பலம் கொண்ட பத்திரிகை என்பதால் எல்லா ஆட்சியாளர்களும் தினமலர் என்ன அடாவடி செய்தாலும் அனுசரித்து போய்விடுகிறார்கள் என்று தான் தோன்றுகிறது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time