தமிழகத்தில் வருடா வருடம் காவிரியை நம்பி விவசாயிகள் கண்ணீர் சிந்துவதும், கர்நாடக அரசியல் கட்சிகளோ மக்களின் உணர்ச்சியைத் தூண்டி, தண்ணீரை தராமல் அரசியல் செய்வதும் வாடிக்கையாக உள்ளது. செலவின்றி தண்ணீர் தேவையை நிறைவேற்ற சிறப்பாக வழி காட்டுகிறார், மூத்த பொறியாளர் அ.வீரப்பன்.
தற்போதைய நிலையில் தமிழகத்தில் இரண்டு லட்சம் நெற்பயிர்கள் கர்நாடகத்தின் காவிரி மறுப்பால் கருகிய வண்ணம் உள்ளன. 15 லட்சம் சம்பா சாகுபடி நெற்பயிர்கள் சாகுபடியாகுமா? அல்லது சாகும்படியாகுமா? எனக் கேள்விக் குறியாகியுள்ளது.
இதற்கிடையே தமிழக அரசு காவிரி நீரைத் தேக்கும் தமிழகத்தின் பிரிட்டிஷ் காலத்து பேரணையான மேட்டூர் அணைத் தேக்கத்தில் குவிந்துள்ள வண்டல் மண்ணை அகற்ற ரூ 3,000 கோடி செலவு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. பிரிட்டிஷ்காரர்கள் அன்றைக்கு இந்த அணையை கட்ட செலவழித்த தொகை 4 கோடியே 80 லட்சம். இந்த அணையால் 12 மாவட்டங்களில் விவசாயம் நடக்கிறது. இதன் நீளம் 5,300 அடிகளாகும். நீர் தேக்க பகுதி 59.25 சதுர மைல்களாகும்.மொத்த கொள்ளளவு 93.5 டி.எம்.சியாகும். அணையில் 120 அடி வரை நீரை தேக்கும் வகையில் இது கட்டப்பட்டது.
ஆனால், மேட்டூர் அணையின் மொத்த கொள்ளவில் சுமார் 40 சதவிகிதமான அளவுக்கு வண்டல் மண் தேங்கியுள்ள காரணத்தால், அணையை முழுமையாக பயன்படுத்த முடியாமல் உள்ளோம். ”ஒரு மெகா தூர் எடுப்பு என்பது மிக அவசியமே! ஆனால், அதற்காக ரூ 3,000 கோடிகளை செலவிடுவது தேவையற்றது” என்கிறார் மூத்த பொறியாளர் அ.வீரப்பன்.
இந்தச் சூழலுக்கு நிரந்தரத் தீர்வாக ஒரு அருமையான செலவு குறைந்த திட்டத்தை தமிழ்நாடு ஓய்வுபெற்ற பொறியாளர் சங்கத் தலைவர் அ.வீரப்பன் தெரிவிக்கிறார். அதன் சாராம்சம் வருமாறு;
தமிழ் நாட்டின் மிக முக்கிய நீராதாரமான மேட்டூர் அணையில் பல வருடங்களாக வந்து சேர்ந்துள்ள வண்டல் மண் என்பது தமிழகத்திற்கு கிடைத்துள்ள ஒரு பொருளாதார பொக்கிஷமாகும். மேட்டூர் அணையில் மட்டுமின்றி இது போன்ற முக்கிய நீராதரங்களில் சேர்ந்துள்ள மணல் அனைத்துமே தமிழகத்தின் கட்டுமான தொழிற்துறைக்கும், நெடுஞ்சாலைத் துறைக்கும் ஒரு வரப்பிரசாதமாகும்.
மேட்டூர் அணையில் தூர் வாரினாலே நம்மால் மேலும் 30 டிம்.சி தண்ணீர் சேமிக்க முடியும். அது போல மணி முத்தாறு, வைகை,சாத்தனூர், வீராணம், கிருஷ்ணகிரி, பவானிசாகர், திருமூர்த்தி, மேலணை… ஆகியவற்றையும் தூர் வாரினால் தமிழகத்தால் மேலும் 20 டி.எம்.சி என 50 டி.எம்.சி தண்ணீர் சேகரிக்க முடியும். இது தமிழக விவசாய பாசனத்திற்கும், மக்களின் குடி நீர் தேவைக்கும் மிக உதவிகரமாக இருக்கும்.
இதற்கான செலவை சமாளிக்க இந்த மணல் தேவைப்படும் கட்டுமானத் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு மணலை பயன்படுத்தும் பிரம்மாண்ட நிறுவனங்களை அழைத்து எடுத்துக் கொள்ளச் செய்யலாம். இந்த மணல் தமிழகத்தின் கட்டுமானத் தொழிற்துறைக்கு குறைந்தது மூன்றாண்டு தேவைக்கு பயன்படக் கூடியதாக இருக்கும். இதனால், தூர்வாரும் நிறுவனமே எடுக்கும் மணலுக்கு ஒரு தொகை தருவார்கள். அரசுக்கு செலவு மிச்சமாவதோடு வருவாயும் கிடைக்கும். அரசு அதிகபட்சம் எங்கேங்க எவ்வளவு தூர் வாற வேண்டும் என்ற திட்டமிடலுக்கும், மேற்பார்வைக்கும் சுமார் 100 கோடி செலவழித்தால் போதுமானது.
Also read
மழை அதிகமாகப் பெய்யும் பொழுது நமது நீர் தேக்கங்களால் தண்ணீரை தேக்க முடியாமல் அதிக நீரை விரயமாக்குகிறோம். இப்படி வீணாக்கப்பட்டு கடலில் சேரும் தண்ணீரை மிச்சப்படுத்தினாலே, நமது கணிசமான தேவைகளை பூர்த்தி செய்யலாம். இந்த தூர்வாறல் முறையாக செய்யப்பட்டால், கடல் நீரை குடி நீராக்க வேண்டிய அவசியமோ, செலவோ இருக்காது. உண்மையில் நம் தமிழ்நாடு தண்ணீரில் தன்னிறைவு பெற்ற நாடாகும்” என்கிறார் மூத்த பொறியாளர் அ.வீரப்பன்
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Leave a Reply