சனாதன தர்ம சதிகளின் வரலாறு தரும் செய்தி என்ன?

-சாவித்திரி கண்ணன்

சாமியார் கொலை வெறியோடு கொந்தளிக்கிறார்! வட இந்திய அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள், தலைவர்கள்  எதிர்க்கிறார்கள்! வரலாற்றின் பக்கங்களில் சனாதனம் செய்த சதிகளின் பட்டியல் சொல்வது என்ன? திராவிட வெறுப்பையும், ஒழிப்பையும் தூண்டி வேடிக்கை பார்த்தவர்களின்  சூழ்ச்சி பலிக்குமா..?

என்ன புதிதாகப் பேசிவிட்டார் உதயநிதி! சனாதனம் என்பது ஒழிக்கப்பட வேண்டியது என்பதை நாம் தமிழ்நாட்டில் கடந்த நூற்றாண்டுகளாக பேசி வருகிறோம். ஆன்மீகப் பெரியோர்களான வள்ளலார், நாராயணகுரு தொடங்கி சமூக புரட்சியாளர்களான அயோத்திதாசர், பெரியார், அம்பேத்கார் வரை சனாதனம் குறித்து தெரிவித்த கருத்தை தான் உதயநிதி ஸ்டாலின் பேசி இருந்தார்.

தமிழ்நாட்டில் திராவிடத்தை ஒழிப்போம், வேரறுப்போம் என சாதி அமைப்புகளை தூண்டிவிட்டு பேச வைத்துக் கொண்டிருக்கும் சனாதனவாதிகள்.. தற்போது ஏன் கொந்தளிக்கிறார்கள்?

நாம் தமிழர் கட்சியின் பின்புலத்தில் திராவிட ஒழிப்பை பிரதானமாகக் கொண்டு திராவிட ஒழிப்பு மாநாடுகளையும், திராவிட வெறுப்பு மற்றும் வன்மம் சார்ந்த பேச்சுக்களையும் பேச இங்கு ஜனநாயகம் அனுமதிக்கிறது என்றால், சனாதன எதிர்ப்பை சொல்வதற்கும் ஜனநாயகத்தில் உரிமை உண்டு தானே!

கருத்தை கருத்தால்  எதிர்கொள்ளாமல் வன்முறையாலும், அதிகார பலத்தாலும் எதிர்கொள்ளத் துடிப்பதிலேயே அவர்கள் தோற்றுவிட்டனர் என்பதே உண்மை! அதுவும் வட இந்தியாவில் தேவையில்லாத பதற்றத்தை உருவாக்குகின்றன, பாஜகவும் அதன் ஆதரவு இந்துத்துவ அமைப்புகளும்!

உதயநிதியை கழுவிலேற்றி, செருப்பு மாலை அணிவித்து கொந்தளிக்கும் இந்துத்துவ அமைப்பினர்.

ஒரு வட இந்திய சாமியார் உதயநிதியின் போட்டோவை கத்தியால் குத்திக் கிழித்து, தீயிட்டு எரித்துள்ளார்! மேலும் அவர், ”உதயநிதியின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ரு10 கோடி பரிசளிக்கிறேன்” எனக் கூறியுள்ளார். இவர் எப்படி சாமியாராக இருக்க முடியும்? அன்பின் ஒளியாக திகழ வேண்டிய சாமியார் கொலைவெறியோடு பேசுகிறார்! கொலை செய்ய 10 கோடியை அள்ளிவீசும் அளவுக்கு பணக்காரராக இருக்கிறார். இந்த கொலை வெறிப் பேச்சை எப்படி அரசாங்கங்கள் வேடிக்கை பார்க்கின்றன..?

ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்து மதத்தின் மீதான அவரது வெறுப்பையே வெளிப்படுத்தி இருக்கிறது. சமூகத்தின் இரு பிரிவினரிடையே பகைமையை உருவாக்கும் வகையில் அவரது பேச்சு உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களை அழிக்க வேண்டும் என அழைப்பு விடுப்பதாக  உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் 153A, 153B, 295A, 298, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனைக்கு உரியது. எனவே, அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சர் உதயநிதிக்கு எதிராக, நடவடிக்கை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி டிங்கரா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கோபால் கிருஷ்ணா, மூத்த எழுத்தாளர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், சினிமா கலைஞர்கள், பாடகர்கள் என்று 262 பிரபலங்கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ளனர். இவர்களில் ஒருவரும் ”இந்த கொலைவெறி சாமியாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறவில்லை.

பா.ஜ.க.வின் தேசிய ஐ.டி. விங் பொறுப்பாளர் அமித் மால்வியா, “இந்தியாவில் உள்ள தேச விரோத சிந்தனைகளை ஒழிக்கும் அற்புத மருந்து தான் சனாதன தர்மம். இந்தியாவில் சனாதன தர்மத்தை பின்பற்றும் 80% மக்களை ஒழிப்பதற்கு உதயநிதி அழைப்பு விடுத்துள்ளார்’’ எனப் பேசியுள்ளதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. சனாதனம் அல்லவா 80 சதவிகித மக்களை சூத்திரர்கள் என்றும், அடிமை என்றும் புறந்தள்ளி வைத்துள்ளது. மனிதகுலத்திற்கே விரோதமான ஒரு சிந்தனை எப்படி தேசத்தை ஒருங்கிணைக்க முடியும்?

இந்த விவகாரத்தில் மம்தா பானர்ஜிக்கும் தெளிவில்லை. அவர், ”தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மக்களை நான் மதிக்கிறேன். ஆனால் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி உணர்வுகள் இருப்பதால் அனைவரையும் மதிக்க வேண்டும் என்பதே அவர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள். நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன். வேதங்களில் இருந்து கற்றுக் கொள்கிறோம். எங்களிடம் பல புரோகிதர்கள் உள்ளனர். மாநில அரசு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. நாடு முழுவதும் எங்களிடம் பல கோவில்கள் உள்ளன. நாங்கள் கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்குச் செல்கிறோம்” என மம்தா பேசியுள்ளார்.

நல்லது, தமிழ்நாட்டிலுமே கூட கோவில் அர்ச்சகர்களுக்கு விஷேச மரியாதையும், அரசின் நலத்திட்ட உதவிகளும் திராவிட ஆட்சியில் வழங்கப்படுகிறதே! இங்கே என்ன சனாதனிகளை கழுவிலேற்றியா விட்டோம்? இல்லையே! ராஜாராம் மோகன் ராயும், விவேகானந்தரும் பிறந்த மண்ணில் பிறந்த மம்தா சனாதனத் தீமைகளுக்கு எதிரான அவர்களின் போராட்டங்களையும், பேச்சுக்களையும் நினைவு கூர்ந்தாலே தெளிவு பெற முடியுமே! கணவனை இழந்த விதவைகளை உயிரோடு எரிக்க செய்தது தானே சனாதன தர்மம்!

சனாதனக் கொடூரங்கள்…!

நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெளிவாகவே பேசியுள்ளார்! ” சனாதன தர்மம் என்பது ஜாதி கட்டமைப்பு. அதைத் தவிர, வேறு எந்தத் தத்துவ அர்த்தமும் இல்லை. உதயநிதி பேசியதில் எந்தத் தவறும் இல்லை. அவர் எந்த இன அழிப்பு குறித்தும் அழைப்பு விடுக்கவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

இதையே தான் கர்நாடக மாநில அமைச்சரும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுமான ப்ரியங் கார்கேவும் ரத்தின சுருக்கமாக கூறியுள்ளார்; “சமத்துவத்தைப் பரப்பாத எந்த மதமும் மனித கண்ணியத்தை உறுதிசெய்யாத எந்த மதமும் நோயைப் போன்றதுதான்,” என்று பதிலளித்துள்ளார்.

ஆக, தென் இந்தியர்களிடம் இருக்கும் தெளிவு வட இந்தியர்களிடம் இல்லை. ‘தாங்கள் அடிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளோம்’ என்ற உணர்வே அவர்களிடம் ஏற்படவில்லை.

இந்தியாவின் வரலாறு என்பது, புராணகாலம் தொடங்கி நிகழ்காலம் வரை சனாதனத்திற்கும், சாதாரண மக்களுக்கும் இடையிலான மோதல் தானே!

பிராமண முனிவரான வசிஸ்டருக்கும், சத்திரிய முனிவரான விசுவாமித்திரருக்கும் நடந்த சண்டைகளும், கொடூர மோதல்களும் அதில் ஏற்பட்ட பேரழிவுகளும் கொஞ்சமா? நஞ்சமா?

சநாதந தர்மம் என்ற தலைப்பில் 1905 ஆம் ஆண்டு ப.நாரயண ஐயரால் எழுதப்பட்ட நூல் சனாதான தர்மம் என்பதற்கு விளக்கம் தருகிறது.

# இன்னின்ன சாதிகள் இதையிதை மட்டுமே தொழிலாகச் செய்ய வேண்டும். தொழில் மாறிச் செய்பவர்களை குலவிளக்கம் செய்து வாழ முடியாதவாறு தண்டிக்க வேண்டும். சூத்திரன்  அறிவை பெறக் கூடாது. அவனுக்கு கல்வி போதிப்பது பாவம். குற்றச் செயலுமாகும்.

# ஒரு சூத்திரன் பிராமணனுடைய கால்களைக் கழுவி வாழ்பவனாவான். பிராமணனுக்கு பணி செய்து கிடப்பதே சூத்திரனுடைய உன்னத பணியாக கருதப்படும்.

# சூத்திரனுக்கு சொத்து சேர்க்க உரிமை இல்லை. அவன் பொருட்கள் உடமைகளை எந்த கேள்வியும் இல்லாமல் பிராமணன் எடுத்துக் கொள்ளலாம்…!

இப்படியாக நிறைய விளக்கம் தருகிறது மனுஸ்ருதியும், ஆபஸ்தம்ப தர்ம சூத்திரமும்! எனில், இப்படிப்பட்ட கருத்தியல் நிலைபாடு கொண்ட சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றில்லாமல் பின்பற்றவா முடியும்?

பிராமணர்கள் அரசர்களை அடக்கி ஆள முயன்றதும், அதில் சூர்ய வம்ச சத்திரியர்கள் பிராமணர்களுக்கு அடங்க மறுத்து எதிர்த்து நின்றதும், சந்திர வம்ச சத்திரிய அரசர்கள் பிராமணர்களுக்கு அடங்கி சேவகம் செய்ததும் வரலாறு.

ஒரு அரசனை, ‘சத்திரியன் தான்’ என பிராமணர்கள் அங்கீகரித்தால் தான் அது சமூக அங்கீகாரமாகும். அவர்கள் தான் மன்னருக்கு முடிசூட்டு விழாவை நடத்த முடியும். அவர்கள், ‘இவன் சத்திரியனா…’ என்று சந்தேகித்துவிட்டால், அந்த அரசர்கள் பெரும் செலவில் இரணிய கர்பதானம் அல்லது துலாபாரம் செய்ய வேண்டும். அதாவது தங்கத்தால் ஒரு பசுமாட்டின் சிலை செய்து அதன் வயிற்றுக்குள் அரசனும், அவன் மனைவியும் நுழைந்து சென்று அந்த தங்கப் பசுவை பிராமணர்களுக்கு தானமாக தந்துவிட வேண்டும். அல்லது அரசன் தன் எடைக்கு எடை தங்கள் உள்ளிட்ட விலையுயர்ந்தவற்றை பிராமணர்களுக்கு தானமாகத் தர வேண்டும்.

சத்திரபதி சிவாஜியையே ஆட்டிவித்தது தான் சனாதன தர்மம்.

சத்திரபதி என புகழப்பட்ட மராட்டிய மன்னர் சிவாஜி பிராமணர்களின் அங்கீகாரம் பெற வேண்டி பட்ட இன்னல்களும், அவமானங்களும், கொடுத்த இமாலய வெகுமதிகளும் பிராமண புரோகிதர்கள் மாமன்னர்களையே எப்படியெல்லாம் ஆட்டி வைத்தனர் என்பதற்கான சான்றாகும்.

இன்றைக்கும் நரேந்திர மோடியின் ஆட்சி யாரால் ஆட்டுவிக்கப்படுகிறது? பார்ப்பன கருத்தியலைக் கொண்ட ஆர்.எஸ்.எஸால் தானே! சமத்துவம், சமநீதி பேசிய தேசத் தந்தை காந்தியைக் கொன்றது சனாதனக் கருத்தியல் தானே!

காந்தியின் வழி வந்த நேருவையும், அவர் வழியில் வந்த ராகுல் காந்தியையும் பிராமணர்கள் என்ற போதிலும், இந்திய மக்கள் அதிலும் குறிப்பாக, திராவிட மக்கள் நேசிக்கிறார்களே என்ன காரணம்? இன்றைய இந்தியாவின் தேவை ஜனநாயகமும், சமத்துவமும் தானே அன்றி, சனாதானமல்ல என்ற தெளிவு அவர்களுக்கு இருப்பதால் தான்!

இது நாள் வரை ”வாரிசு” என பாஜக பழித்து வந்த உதயநிதியை இன்றைக்கு இந்தியப் பெருந் தலைவராக உருவாக்க பாஜகவே பாடுபடுவதை நினைத்தால் வியப்பாக உள்ளது! தமிழகம் மட்டுமே அறிந்திருந்த உதயநிதியை இன்று அகில இந்தியாவிற்கும் அதிவிரைவாக கொண்டு சேர்த்துள்ளது பாஜக! இதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்கம் எடுத்த சனாதன ஒழிப்பு மாநாடு காரணமாகிவிட்டது.

இந்த சர்ச்சை ஒரு விதத்தில் நல்லதற்கு தான்! சனாதானம் குறித்த தெளிவை, தமிழகம் அகில இந்தியாவிற்கு அளிக்கும் பொன்னான வாய்ப்பு வந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்தியா முழுமைக்கும் சனாதானம் குறித்த மறு பரிசீலனை உருவாக்கினால் மகிழ்ச்சி தான்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time