தெரு நாய்கள் ஆபத்தானவையா? அன்பானவையா?

சாவித்திரி கண்ணன்

இந்தியாவில் சுமார் மூன்று கோடி நாய்கள் உள்ளன. இந்தியாவில் நாய்களால் கடிபட்டு ஆண்டு தோறும் இருபதாயிரம் நபர்கள் இறக்கிறார்கள். உலகில் ஆண்டுதோறும் நாய்க்கடியால் இறப்பவர்கள் 59,000. எனினும் கொரானா காலத்திலும் கூட தெரு நாய்களை தவறாமல் கவனித்த ஆயிரமாயிரம் எளிய மனிதர்களைக் கண்டு பெருவியப்பே எனக்கு ஏற்பட்டது…!

நாய் கடித்தவர்கள் அனைவரும் இறப்பதில்லை. வெறி நாய் கடித்தவர்கள் மட்டுமே இறக்கிறார்கள்!  வெறி நாய்க்கடிக்கு உடனே சிகிச்சை எடுத்தவர்கள் பிழைத்து விடுகிறார்கள். சிகிச்சை எடுக்க தாமதமானால் பிழைப்பது கடினம்! தெரு நாய்கள்  ஆபத்தானவையா? அன்பானவையா? என்பது அவரவர் பார்வையை பொறுத்தும்,அனுபவத்தைப் பொறுத்தும் வேறுபடும் எனினும் சில அடிப்படை உண்மைகளை பார்ப்போம்!

முன்பெல்லாம் வெறி நாய்க் கடிக்கு தொப்புளைச் சுற்றிலும் 14 ஊசிகள் போடுவார்கள். ஆனால்,தற்போதோ நான்கைந்து ஊசிகள் போதுமானதாகிறது. சுமார் பத்தாண்டுகளில் பெங்களுரில் மட்டுமே சுமார் இரண்டு லட்சம் பேர் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர். பெங்களுரில் நான்கு லட்சம் தெரு நாய்கள் இருந்த நிலை தற்போது கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு நாய்க்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பது அதன் காது பகுதியில் லேசாக வெட்டப்பட்ட அடையாளத்தைக் கொண்டு கணிக்கலாம்.

ராபிஸ் எனப்படும் நோய் நாய்கள், பூனைகள் ,குரங்குகள், பெருச்சாளிகள் ,வெவ்வால், நரிகள், வளைக்கரடிகள், கீரிப்பிள்ளைகள் உள்ளிட்ட விலங்குகள் கடித்தால் ஏற்படும் மிக ஆபத்தான நோயாகும்! உலகம் முழுமையுமாக சுமார் ஒரு கோடியே ஐம்பது லட்சம் மக்கள் ஆண்டுதோறும் விலங்குகளால் கடிபடுகிறார்கள்.

நாய் கடித்தால் அவசியம் செய்ய வேண்டியவை!

# கடிபட்ட இடத்தில் உடனே சோப்பு போட்டு நன்கு கழுவவேண்டும்

# பிறகு ஆண்டிபயாட்டிக் சொல்யூசனை தடவ வேண்டும்.

# டாக்டரிடம் சென்று ஆண்டி வைரல் இம்மியூனோ குலோபின்(RIG) ஊசி போட வேண்டும்.

# டாக்டரின் ஆலோசனைப்படி தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளிவிட்டு நான்கைந்து முறை ஊசி போடவேண்டும்.

# சிகிச்சை முடியும் வரை மது அருந்தக் கூடாது.

# உலகில் சுமார் 600 வகை நாய்கள் இருந்தாலும் 350 வகை நாய் இனங்கள் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டு, அங்கீகாரம் பெற்றுள்ளன. அவற்றுள் இந்தியாவைச் சேர்ந்தவை ஆறாகும்.

அவை ராஜபாளையம்,சிப்பிபாறை,கோம்பை,கன்னி,ஹிமாலயன்,ஷிப்டாக் ஆகியவையாகும்.

நாய்க்கடி சிகிச்சைக்கு தேவைப்படும் ARV எனப்படும் மருந்து இந்தியாவிற்கு ஆண்டுக்கு 48 மில்லியன் தேவைப்படுகிறது. ஆனால்,இந்தியாவில் 50 மில்லியன் டோசஸ் தயாராகிறது.ஆயினும் அதில் 15 மில்லியன் டோசஸ் ஏற்றுமதியாவதால், 13% தட்டுப்பாடாகிறது.

உலக நாடுகளில் நாய்கள்;

அமெரிகாவில் – 75.8 மில்லியன்

அர்ஜெண்டினா – 9.2 மில்லியன்

பிரான்ஸ் –      7.4 மில்லியன்

ஜப்பான் –        12 மில்லியன்

ரஷ்யா   –       15 மில்லியன்

சீனா          – 27.4 மில்லியன்

நாய்கள் இல்லாத நாடுகள் ஹாலந்து,டச்சு.

தெருநாய்கள் தொல்லை பற்றி நாம் அடிக்கடி விவாதிக்கிறோம்.‘’தெரு நாய்கள் அடிக்கடி குழந்தைகளையும்,முதியவர்களையும்விரட்டி தொல்லை தருகின்றன.எது நல்ல நாய்,எது வெறி நாய் என்பது தெரிவதில்லை. முன்பெல்லாம் இருபது,முப்பது என்று இருந்த நாய்கள் தற்போது இருநூறு,முந்நூறு எனப் பெருகிவிட்டன.அவற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார் எனது நண்பர் சுதாகர்.

ஒரு முறை இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்‘’நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக கால் நடைத்துறை தெருநாய்களுக்கு  இனவிருத்தியை தடுக்கும் கருத்தடை ஆபரேஷன்கள் செய்து வருகிறது.அதே சமயம் தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் நாய்க்கடிக்கான மருத்துகள் தயாராகவே உள்ளன.’’என்றார்.

தெருநாய்கள் என்பவை பிரச்சினையாக பார்க்கப்பட்ட காலம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. அப்போது அதன் எண்ணிக்கையும் மிகப் பெருத்து இருந்தது. அந்தக் காலங்களில் பொது மக்களிடம் இருந்து புகார்கள் வரும்போது, கார்ப்பரேசனில் இருந்த நாய்பிடி ஊழியர்கள், ‘’கேட்ச் அண்டு கில்’’ திட்டப்படி, பிடித்து மொத்தமாகக் கொன்று விடுவார்கள்.

ஆனால்,புளுகிராஸ் சொசைட்டி அமைப்பானது அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.அப்போது கலந்து விவாதித்து ஒரு எளிய திட்டம் தயாரானது.அதன்படி, நாய்களைக் கொல்லாமல் கருத்தடை  ஊசியும்,ஆண்டிராபிஸ் ஊசியும்போட்டாலேபோதும், காலப் போக்கில் நாய்களின்  எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி தான் இப்போதும் செய்கிறோம். பிடிக்கப்பட்ட தெருநாய்களை மீண்டும் அதே பகுதியில் விட்டுவிடுகிறோம்’’என்றார் ஒரு மாநகராட்சி அதிகாரி.

உண்மையிலேயே தெருநாய்கள் என்பவை நவீன வாழ்க்கையில் ஒரு சவாலா? மக்கள் அதை தொல்லையாகக் கருதுகிறார்களா? பெரும்பான்மையான மக்கள் தெரு நாய்கள் மீது அன்பு கொண்டோர்களாகவும், அரவணைப்பவர்களாகவும் தான்இருக்கின்றனர் என தெரியவருகிறது.

தெருநாய்கள் எப்படி உயிர் வாழ்கின்றன….அவற்றிக்கு உணவு எங்கிருந்து கிடைக்கிறது என்று பார்த்தால்,அவற்றுக்கு அந்தந்த ஏரியாவில் அங்குள்ள சில குடும்பங்களோ, தனி நபர்களோ உணவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனது நண்பரும் இயக்குனருமான ரதன் சந்திர சேகர் தெரு நாய்களை பராமரிப்பதை ஒரு தவமாகச் செய்கிறார்.

இன்று,நேற்றல்ல,பத்தாயிரம்ஆண்டுகளுக்குமுன்பிருந்தே நமது சமுகத்தில் நம்முன்னோர்கள் நாய்களை தன் தோழனாக பாதுகாவலானாக அல்லது குடும்பத்தில் ஒரு அங்கத்தினராகக் கருதி அன்பு காட்டி வந்துள்ளார்கள்!

இது குறித்து சென்னை கால்நடைமருத்துவ கல்லூரி தலைமைப் பேராசிரியரும், மருத்துவருமான பா.நாகராஜனிடம் கேட்டபோது, ’’பல்லாயிரக்கணக்கான நாய்களுக்கு சிகிச்சை தந்துள்ளவன் என்ற வகையில் அனைத்து நாய்களுமே அன்பிற்காக, அரவணைப்பிற்காக ஏங்குபவை என்பதே உண்மை! அந்தந்த தெருக்களில் இது போல நாயை அரவணைப்பவர்கள் இருக்கிறார்கள்! அவர்கள் குடும்பத் தலைவியாகவோ, ஆட்டோ டிரைவராகவோ, தள்ளுவண்டியில் உணவு விற்பவராகவோ, டீக்கடைகாரராகவோ, இட்லி கடை ஆயாவாவோ,மீன் விற்கும் பெண்ணாகவோ இருப்பார்கள்! எந்த நாயும் தானாக யாரையும் வலிந்து சென்று கடிக்காது.புதிய நபரைக் காணும்போது,அவரால் தனக்கு ஆபத்து வருமோ என்று குலைப்பது நாய்களின் இயல்பு. மற்றபடி ஒருவர் தன்னை தாக்கமாட்டார் என்று அதற்கு நம்பிக்கை ஏற்பட்டால் போதும் வாலைக் குழைத்து அன்புகாட்ட ஆரம்பித்துவிடும்.

நாங்கள் வருடத்திற்கு ஒரு முறை இந்த வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரியில் நாய்களுக்கு கருத்தடை ஊசி மற்றும் ஆண்டிராபிஸ் ஊசி போடுவோம்.அந்த நேரத்தில் தெருநாய்களை வேனிலும்,ஆட்டோவிலும், லாரிகளிலும் இன்னும் சிலர் தங்கள் இருசக்கர வாகனத்திலும் கொண்டு வந்து ஊசி போட்டு செல்கிறார்கள்! மற்றும் சிலர் தனியார் கால் நடைமருத்துவரிடம் அழைத்து சென்று தங்கள் சொந்த செலவில் ஊசி போடுகிறார்கள்.தெரு நாய்கள் என்றால்,மிக குறைந்த கட்டணத்திலோ அல்லது இலவசமாகவோ சிகிச்சை அளிக்கும்கால்நடை  மருத்துவர்கள் நிறையவே உண்டு!

ஒரு நாய்,வெறிநாயா? என்பதை அதன் வாயில் எச்சில் இடைவிடாமல் ஒழுகுவது, முக வீக்கம் மற்றும் அதன் இயல்பற்ற நடத்தையின் முலமாகவே  நன்கு அறியலாம்.உடனே பொதுமக்கள் அருகில்  உள்ள கார்ப்பரேசன் அலுவலகத்திற்கு தகவல் தரவேண்டும்.இதை ஒரு சமுகக்கடமையாக அனைவரும் கருதவேண்டும்.தகவல் வந்ததும்உடனே வந்து , நாயை பிடித்துச் சென்று விடுவார்கள். அந்த நாயை நாங்கள் பத்துநாட்கள் கண்காணிப்பில் வைத்திருப்போம்.அதற்குள் அது தானாகவே இறந்துவிடும்.அதன் மண்டை ஓட்டை உடைத்து முளைப் பகுதியை சோதிப்பதன் முலம் அதற்கு ராபீஸ் இருந்தது உறுதியானால்,அதனோடு பழகிய அனைவருக்கும் தடுப்பூசி போடவேண்டியது கட்டாயமாகி விடும்.’’என்றார்.

தெருநாய்களுக்கு தடுப்பூசி போடுவதில் உள்ளாட்சி நிர்வாகங்கள் முனைப்பு எடுத்தாலும், அவர்களால் அனைத்து தெருநாய்களுக்கும் ஊசி போடுவதென்பது இயலாத ஒன்றாகும்.அது மிகப் பெரிய சவாலும் கூட! ஆயினும் சுமார்  70  முதல் 75 சதவிகிதநாய்களுக்கு போட்டு விடுகிறார்கள். இதில் தப்பித்து விடும் பெட்டை நாய்கள், எட்டு அல்லது பத்து குட்டிகளை ஒரே சமயத்தில் ஈன்று விடுகின்றன.அதனால் தான் தெருநாய்களின் பெருக்கம் முற்றிலும் குறைக்க முடியாததாக உள்ளது.

சில நேரங்களில் தெரு நாய்களை சுட்டுக் கொல்வது,விஷம் வைத்துக் கொல்வது,கொடுரமாகத் தாக்கிக் கொல்வது என்று சில தனி நபர்கள் ஈடுபடுகிறார்கள். இது மனிதன் வெறி பிடித்த மிருகமாக மாறுகிறான் என்றே பொருளாகும்.இன்றைய நவீன சட்டங்களின்படி மிருவதை செய்வோருக்கு சட்டத்தில் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. நம்மைச் சுற்றியுள்ள ஜீவன்களை அரவணைத்து அன்புகாட்டுவது என்பதை ஒவ்வொரு குடிமகனுக்குமான அடிப்படை கடமைகளில் ஒன்றாக சட்டப்பிரிவு 51ஏ(ஜி) உருவாக்கி வகுத்துள்ளது நமது உச்சநீதிமன்றம்.

நாய்களால் எவ்வளவு பிரச்சினைகள் என்று சிலர் பட்டியல் போடுவார்கள்! ஆனால், நாய்கள் இல்லாத மனித வாழ்க்கையை நினைத்து பார்க்கவே முடியாது என்ற அளவுக்கு நமது மக்களின் வாழ்க்கை நாய்களோடு பின்னிப் பிணைந்துள்ளது! இந்து சமூகத்தில் நாய்கள் பைரவர் என்ற கடவுள் பெயரால் அழைக்கப்படுகின்றன. சிவன் கோயில்களில் பைரவருக்கும் விக்ரகம்,வழிபாடு எல்லாம் உண்டு!

சிற்றூர்களிலும்,கிராமங்களிலும் கோயிலோ, சர்ச்சோ, மசூதியோ.. எதுவானாலும் அங்கே நாய்கள் தன்னிச்சையாக சுற்றித் திரிவதைக் காணலாம்! நாய்களின் இருப்பை யாரும் தொந்தரவாகவோ, வெறுப்பிற்குரியதாகவோ உணர்வதில்லை!

தெரு நாய்களை போஷித்து வளர்ப்பதை ஒரு சமூகக் கடமையாகக் கருதுகின்ற பல நடுத்தரவர்க்க குடும்பத் தலைவிகளில் சுகந்தியும் ஒருவர்! அவரிடம் பேசிய போது, ’’நான் எட்டு தெரு நாய்களுக்கு தினசரி உணவு வைக்கிறேன். நான்கு நாய்களை வீட்டோடு எடுத்து வளர்க்கிறேன். நாய்கள் பாசமுள்ளவை! அவற்றின் நன்றியுணர்வு நம்மை திக்குமுக்காட வைக்கும்.எந்த தெரு நாயும் யாரையும் தானாக சென்று கடிப்பதில்லை! பெரும்பாலும் தன்னை துன்புறுத்துபவர்களைத் தான் அவை கடிக்கும். புதியவர்கள் நமது தெருவுக்கு வந்தால்,அவை குறைக்கும்! இதன் மூலம் புதியவர்களின் வருகையை தெருவாசிகளுக்கு கவனப்படுத்துகின்றன…! நாய்களை அரவணைக்க வேண்டியது ஒவ்வொருவரின் முக்கிய கடமையாகும்.தெருனாய்களுக்கு தடுப்பூசி,மற்றும் ஆண்டி ராபிஸ் ஊசி போடுவது மாநகராட்சியின் ஒவ்வொரு ஜோனிலும் நடைபெற வேண்டும்’’ என்கிறார் சுகந்தி!

’’தெரு நாய்கள் மனிதனால் உண்ண முடியாமல் வீசி எறியும் உணவுக் கழிவுகளைத் தின்று உயிர் வாழ்கின்றன. அவை குப்பை கூளங்களில் உள்ள கழிவுகளை உண்பதன் மூலமும், எலிகளை வேட்டையாடிக் கொல்வதன் மூலமும் நமது சமூகத்திற்கு உதவுகின்றன’’ என்கிறார் மேனகா காந்தி! சத்தியமான வார்த்தை!

 

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time