முட்டாள்களை உருவாக்கவே இந்தக் கல்விக் கொள்கை!

-கே.யோகராஜன்

அறிவியல் பூர்வமான கல்வியை காலி செய்து, புராண, இதிகாசம் சார்ந்த கல்வியை திணிப்பதாக தேசியக் கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளது. எல்.கேஜி தொடங்கி எம்.பி.பி.எஸ், ஐ.ஏ.எஸ் வரை அனைத்து நிலை பாடத் திட்டத்தையும் பார்ப்பனிய, சனாதனக் கண்ணோட்டத்தில் மாற்றியுள்ளனர். விரிவான அதிர்ச்சி ரிப்போர்ட்!

சின்னஞ்சிறு குழந்தையின் கல்வி முதல் மிகவுயர்ந்த ஆய்வுகள் வரை அனைத்தும் ஒன்றிய அரசின்       கட்டுப்பாட்டிற்குள் கொண்டு போகின்றனர். இதில்  “தேசிய அடித்தள நிலைக்கான பாடத்திட்டக் கட்டமைப்பு” அவற்றின் முதல் இரு முக்கிய அத்தியாயங்கள் குறித்து ஆய்வு செய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

தேசிய அடித்தள நிலைக்கான பாடத் திட்டக் கட்டமைப்பு (NCFFS) தேசியக் கல்விக் கொள்கை 2020 பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படாமல் கோவிட் பெருந்தொற்று பெருகி வந்த வேளையில், தன்னிச்சையாயாக நிறைவேற்றப்பட்டு, துரித கதியில் நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதை நாம் கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒன்றிய அரசால் தேசிய உயர் கல்வித் தகுதி வரைமுறை ( NHEQF ), தேசிய அடித்தள நிலைக்கான பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS), தேசியப் பள்ளிக் கல்வி பாடத் திட்டக் கட்டமைப்பு (NCFFS) ஆகிய மூன்று வரையறைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. மேலும், அறிவியல் ஆராய்ச்சிகளை கட்டுப்படுத்தும் வகையில் National Research Foundation எனும் உயர் அமைப்பு உருவாக்கப்படும் எனும் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

முதலில் கொள்கை(Policy) என்றால் என்ன…? வரையறைஅல்லது கட்டமைப்பு (Framework ) என்றால் என்ன? என நமது வாசகர்கள் அறிந்து கொள்வது மிக அவசியம்.கொள்கை பொதுவாக லட்சியங்களையும், நோக்கங்களையும் பரந்துபட்ட வகையில் விவரிக்கிறது. கட்டமைப்பு அந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான திட்டவட்ட முறைகளை, (ஒரு Blue Print போல)  விவரிக்கிறது.

360 பக்கங்கள்கொண்ட NCFFS, நேரிடையாக ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. மற்ற எந்த இந்திய மொழிகளிலும் வெளியிடப்படவில்லை. எந்த மாநில அரசும் தமிழக அரசு உட்பட, ”ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?” என இதுவரை ஒன்றியஅரசை  கேட்கவில்லை. ‘ஒன்றிய அரசு இவ்வாறு வெளியிட்டிருக்கிறது’ என்று மக்களிடமும் தெரிவிக்கவில்லை. ஒன்றிய அரசோ NEP 2020 யின் கொள்கைகளை மிகத் தீவிரமாக ஒரு தேர்தல் பரப்புரை போல் செய்து வருகிறது.

இந்த NEP 2020 யின் கொள்கை குறித்தும், வரையறை குறித்தும் எளிய மக்களும் புரியும் வகையில் விளக்க முயற்சிப்பதே நமது நோக்கம். இது பல நுட்பமான விஷயங்களையும், நம்பிக்கை சார்ந்த விஷயங்களையும் கொண்டிருப்பதால் சற்றுப் பொறுமையுடனும், கவனத்துடனும் வாசிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

எந்த ஒரு கொள்கையையும் ஆய்வு செய்வதற்கு“அறிவியல்”நமக்கு வழி காட்டுகிறது. அது என்ன…? ஒரு கொள்கை சரியானதா அல்லது தவறானதா என்பதை அந்தக் காலகட்டத்தின் சமூகப் பின்னணியில் பார்க்க வேண்டும். அந்த சமூகப் பின்னணியில் அந்தக் கொள்கை சமூகத்தை முன்னோக்கி கொண்டு செல்லுமா அல்லது பின்னோக்கி கொண்டு சென்று மீண்டும் ஒரு இருண்ட காலத்திற்கு இட்டுச் செல்லுமா…? என்பதைக்  கொண்டு தான் அது சரியா? அல்லது தவறா? என்று முடிவு செய்ய வேண்டும்.

இந்தியாவின் கல்வி வரலாற்றுச் சூழலை சுருக்கமாக விளக்குவோம். சுதந்திரம் அடைந்த பிறகு எழுதப்பட்ட கோத்தாரி கமிசன் எழுதிய கல்விக் கொள்கை சில போதாமைகள் இருப்பினும் கூட, சிறந்த கொள்கையே. இந்தியக் கல்விக்கு முதல் மரண அடி கொடுத்த கொள்கை, 1986 இல் வெளி வந்த அப்போதைய புதியக் கல்விக் கொள்கை 86.

இக் கல்விக் கொள்கை மூலம் தான் கல்வி முதன்முறையாக இந்தியாவில் வணிகமானது. 1992இல் அதே கொள்கை திருத்தி எழுதப்பட்டது. தாராள மயத்திற்கும், வணிகம யத்திற்கும் அதன் மூலம் சட்டவடிவம் கொடுக்கப்பட்டது. 2000 ஆண்டில் வெளியான பிர்லா அம்பானி அறிக்கை கல்வியை பல நுட்பமான வழிகளில் வணிகமாக்கும் திட்டங்களைக் கொண்டிருந்தது.

இந்திய கல்விப் புலத்தில் பெரும் வீழ்ச்சிக்கு வித்திட்ட பிர்லா-அம்பானி அறிக்கை!

முதன் முதலில் கல்வியை நிர்வாக அதிகார முறைகளில் மத்தியப் படுத்தும் திட்டத்தினை கொண்டு வந்தது National Knowledge commission. கல்வியில் நாம் சந்தித்த பெரும் வீழ்ச்சி இங்கு தான் உருவாக்கப்பட்டது. இந்த வரலாற்று நிகழ்வுகள் தான் இன்றைய சமூக பொருளாதாரச் சூழலை உருவாக்கியது.

இந்தியா வளங்கள் குறைந்த நாடு அல்ல. ஆனால், பெரும்பான்மையான இந்திய மக்கள் கற்பனைக்கு எட்டாத வறுமையில் இருக்கிறார்கள். முதல் 20% அதாவது, 28 கோடி இந்தியர்களுக்கு வருமானம் என்பதே அனேகமாக இல்லை. 90%, அதாவது 124 கோடி இந்தியர்களால் மாதம் ரூ20,000 கூட ஈட்ட முடியவில்லை. மொத்த வருமானமும் 1 % பேரிடமே போய்ச் சேருகின்றன.

தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு தேர்வு எழுதாத 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை 1,15,000.   இந்தியா முழுமைக்கும் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது. இந்தச் சூழலில் தான் தேசியக் கல்விக் கொள்கை 2020 மற்றும் அதன் வரையறைகள் வெளிவருகின்றன.

இந்த இக்கட்டான சூழலில் நம் குழந்தைகளுக்கு கல்வி எவ்வாறு பயிற்றுவிப்பது? என நவீன ஆய்வினை முன்வைக்க ஒன்றிய அரசு தயாரில்லை..! ஆனால்,  “தேசிய அடித்தள நிலைக்கான பாடத் திட்டக் கட்டமைப்பு” ஆவணமோ இந்திய யதார்த்தத்திற்கு முற்றிலும் புறம்பான வேறொன்றைப் பேசுகிறது.

முதல் அத்தியாயத்தில் “இந்தியப் பழமையும் பெருமையும் பாரம்பரியமும்”   அடிப்படை கல்விக் கொள்கையாக, கல்வியின் ஒவ்வொரு அம்சத்திலும் பிரிக்க இயலாதவாறு ஒன்று கலந்து இருக்க வேண்டும் என்று கூறுகிறது.

இரண்டாம் அத்தியாயத்தில் இந்த நோக்கத்தைக் கொண்டு இதிலிருந்து எவ்வாறு கற்றல் இலக்குகள், அதில் இருந்து பெறப்படும் திறமைகள் (competencies),  கற்றல் விளைவுகள் எவ்வாறு வகுக்க வேண்டும் என்று விளக்குகிறது.

பிறந்த தருணத்தில் இருந்து மூன்று வயது வரை என்ன கற்பிக்க வேண்டும் என்பதை ஒன்றிய அரசின் MWCD வெளியிடுமாம். 3 வயதில் இருந்து 8 வயது குழந்தைகளுக்கு NCFFS இன் வரையறைகள் நடைமுறைப்படுத்தப்படுமாம்.   மூன்று வயதில் இருந்து முறைசார் (Formal) கல்வி அளிக்கப்படுமாம்.

ஆறு வயது முடிந்ததும் 1ஆம் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும். 3 வயதில் இருந்து 8 வயது வரை ஒன்றிய அரசின் NCERT கற்றல், கற்பித்தல் முறையை வகுக்குமாம்.

முதல் கேள்வி, பிறந்த குழந்தைக்கு என்ன கற்பிப்பது என்பதை ஒன்றிய அரசு ஏன் முடிவு செய்ய வேண்டும்…?  புராணத்தில் இரண்யன் என்னும் ஒருவனே “இரண்யன் பெயரில் துதிக்கிறோம்”(கிரண்ய கசிபு நமஹ) என்று பிறந்த குழந்தைகளுக்கு கற்பிக்கச் செய்தான்.  விசித்திரமான ஒற்றுமை…!

NCFFS  தனது preamble இல் இவ்வாறு கூறுகிறது…

It outlines the criticality of Early Childhood Care and Education, it’s rootedness in Indian traditions…

பகுதி 1.2 இல்கூறுகிறது…

The Indian vision of education has been broad and deep, including the idea that education must foster both inner and external development. Learning about the external world should be in consonance with learning about one’s inner reality and self.

இன்றைய இந்தியச் சிக்கலுக்கு பண்டைய இந்திய வழக்கங்களில் கல்வியை வேர் கொண்டு இருக்கச் செய்து எவ்வாறு தீர்வாகும்..? பண்டைய இந்திய ஆட்சி முறை, சமூக வாழ்வு, அறியாமை, மூடநம்பிக்கை, சாதியப் படிநிலை, போர் வெறி கொண்ட மன்னர்கள், எண்ணற்ற பெண்களின் கண்ணீரான அந்தப்புரம், கொடுங்கோல் நிலவுடமைப் பொருளாதாரம் ஆகியவை குறித்து சரித்திரம் பயின்ற அனைவருக்கும் தெரியும் அல்லவா?

பண்டைய காலத்திலும் சிற்சில நேரங்களில் அற்புதமான அறிவியல் முயற்சிகள், தத்துவ முயற்சிகள் எடுக்கப்பட்டன. புத்தர் போன்றவர்கள் அன்றைய மன்னனர்களின் பலவிதமான நிலவுடமை கருத்துக்களுக்கு எதிராக நடத்திய சித்தாந்த யுத்தத்தின் விளைவு அது.  மிக முக்கியமாக பண்டைய பெருமைக்கும், பண்டைய இழிவிற்கும் இன்றுள்ள நாம் யாரும் காரணமில்லை.

சிலரின் பெருமை பலருக்கு இழிவைத் தருமானால், அதை ஏற்றுக் கொள்ள முடியாதே. பெருமையையும், இழிவையும் போதிப்பதா கல்வியின் நோக்கம்? மனிதர்கள் அனைவருக்கும் நன்மை தரக் கூடிய வகையில் அமைவது தானே கல்வியின் அடிப்படை நோக்கம். கல்வியில் பண்டைய பெருமை வாதத்தை ஏன் ஒன்றிய அரசு புகுத்துகிறது என்பது மிக முக்கியக் கேள்வியாகும்.

பண்டைய இந்தியப் பெருமைக்கு காரணமாக NCFFS கூறுவது யஜுர் வேதத்தில் உள்ள தாத்திரிய உபநிடதத்தின் பகுதியான பஞ்ச மய கோஷ் அல்லது பஞ்ச மய கோஷா.

தந்தை வருணனுக்கும், மகன் பிருகுக்கும் நடந்த உரையாடலாக உபநிடதத்தில் வருகிறது. அதில் மனிதன் ஐந்து உறைகளாக இருப்பதாக விளக்குகிறது. உணவு, பிராணன், மனம், அறிவு மற்றும் இன்பம் ஆகியவையே அந்த ஐந்து உறைகள். பஞ்சமயகோஷ் ஒரு மிக உயர்ந்த கொள்கை என்று NCFFS, வியந்து சிலாகிக்கிறது. நம்மையும் வியந்தே ஆக வேண்டும் கூறுகிறது. இந்த அதிஅற்புத கொள்கையே கல்விக் கொள்கையின் ஆதாரமாகவும், நோக்கமாகவும் இருக்க வேண்டும் எனவும் இந்த ஐந்து உறைகளையும் கவனமாக வளர்ப்பதையே லட்சியங்களாகக் கொண்டிருக்க வேண்டும் என்று NCFFS கூறுகிறது.

இதன் உண்மையைத் தெளிவாக விளக்குவது நமது கடமை.  யஜுர்வேதம் ஏறத்தாழ 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. அன்றைய சிந்தனாவாதிகள் அவர்களுக்கு எது சரி போன்று தோன்றியதோ அதனை பஞ்சமயகோஷ் என்று விளக்கியிருக்கிறார்கள்.

ஆனால், இந்தக் கேள்விகளையெல்லாம் எதிர் கொண்டே நவீனஅறிவியல் தோன்றியிருக்கிறது. கலிலியோ, புருனோ, நியூட்டன், பேகன், டெக்கார்ட், மில்போன்ற ஐரோப்பிய அறிஞர்களும் வித்யாசாகர், பிரபுல்லசந்திரராய், S N போஸ், மேகநாத்சாஹா போன்ற இந்தியஅறிஞர்களும் இது போன்ற உபநிடத கருத்துக்களையும், அனைத்து மதக் கருத்துக்களையும் பண்டைய தவறான புரிதல்களையும் பலமுறை விளக்கியிருக்கின்றனர்.

புற உலகிற்கும், மனித மூளைக்கும் இடையில் நிகழும் நுட்பமான வினைகளே சிந்தனைகளை தோற்றுவிக்கிறது. மனித மூளையே சிந்தனைக்கான பிறப்பிடம். மூளை இல்லாத இடத்தில் சிந்தனை சாத்தியமில்லை. சமூகத்தில் நிலவும் கருத்துக்களை ஒரு தனி மனிதன் எவ்வளவு உள்வாங்கியிருக்கானோ, அதுவே அவனுடைய “நான்”. அந்த சிந்தனைகள் உண்மையை பிரதிபலிக்க வேண்டுமெனில், அறிவியல் முறைமைகள் (Scientific methodology ) கைக் கொள்ள வேண்டும். வரலாற்றில் மறுமலர்ச்சிக் காலம் என்று நாம் கூறுவதே இந்த நவீன அறிவியல் தோன்றிய காலத்தைத் தான்.

வரலாற்றுக் காரணங்களினால் இது நம்மக்களிடம் இன்னும் ஆழ்ந்து புரிந்து கொண்டிருக்கப்படவில்லை. காலனி ஆதிக்கத்தாலும், மகத்தான விடுதலைப் போராட்டத்தின் சிக்கலான பலவீனத்தாலும், இந்திய மக்கள் அறிவியல் தத்துவத்தில் ஆழ்ந்த புரிதல் பெற முடியவில்லை. அந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு இன்று இது போன்று கல்விக் கட்டமைப்புகளை (Framework) உருவாக்கியுள்ளனர்.

பண்டைய காலத்தின் முடிவையும், நவீன இந்தியாவின் துவக்கத்தையும், முரசு கொட்டி செய்யப்பட்ட பிரகடனம் தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம். நவீன இந்தியா அறிவியலை மட்டுமே ஏற்கும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம், பண்டைய இந்தியப் பெருமை, நவீன அறிவியல், NEP 2020 ஆகிய நான்கையும் கலந்து கல்வியின் நோக்கத்தை உருவாக்கியிருப்பதாக NCFFS பேசுவதை என்னவென்று சொல்வது…?

நிற்க, ஏறத்தாழ இதே போன்ற பெருமைவாதம் 1930களில் ஜெர்மனியிலும் இத்தாலியிலும் உக்கிரத்துடன் பேசப்பட்டது. ஜெர்மனியில் பேசப்பட்டது ஆரியப் பெருமைவாதம், இத்தாலியில் பேசப்பட்டது ரோமானியப் பெருமைவாதம். அது எத்தகைய மிகப்பெரும் இனப் படுகொலைகளுக்கு இட்டுச் சென்றது என்பதை நாம் அறிவோம். அதுமட்டுமல்ல..  மிகப் பெரும் இரண்டாம் உலக மகாயுத்தத்திற்கு இட்டுச் சென்றது. அதில் மாண்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 8.5கோடி.

சமூக அறிவியல் பாசிசம் என்றால் என்ன என்பதை நமக்கு கற்பிக்கிறது. சந்தைப் பொருளாதாரம் படிப்படியாக வளர்ந்து ஏகபோகமாக மாறும் சூழலில் பாசிசஅபாயம் தோன்றுகிறது. அதில்,மூன்று கூறுகள் இருக்கின்றன.

நிதி குவிதல், அதிகாரம் குவித்தல், மற்றும்  ஆன்மீக கருத்துக்களும், தொழில் நுட்பங்களும் பிரத்யேக முறையில் ஒன்றிணைதல். இப்போது இந்திய சூழலுடன் மேலே உள்ள கருத்துகளைப் பொருத்திப் பாருங்கள். துல்லியமாகப் பொருந்துகின்றதா…?

எனவே தான், இது பாசிச அபாயம் என்று கூறுகிறோம்.

இப்போது இரண்டாவது அத்தியாயத்தைப் பார்ப்போம். முதல்அத்தியாயத்தின் நோக்கங்களை பூர்த்தி செய்ய எவ்வாறு இறுக்கமான திட்டங்களை அல்லது முறைகளை உருவாக்க வேண்டும் என்று விளக்குவதே இரண்டாம் அத்தியாயம். இந்திய அரசியலமைப்புச் சட்டம், பண்டைய இந்தியப்பெருமை, நவீன அறிவியல், NEP 2020 ஆகிய நான்கையும் கலந்து கல்வியின் நோக்கத்தை NCFFS உருவாகியிருக்கிறது அல்லவா…! அதன் மூலம் எவ்வாறு பாடத் திட்டத்தை உருவாக்குவது என்பதே இப்போதைய கேள்வி!

அவைகள் மூன்று படி நிலைகள் கொண்டவை…

  1. கற்றல் இலக்குகள் (Curricular goals)
  2. வல்லமைகள் (Competencies)
  3. கற்றல் அடைவுகள் (Learning outcome)

கல்வியின் நோக்கத்தை ஒரு குறிப்பிட்ட துறையில் பிரயோகம் செய்தால் அது பல துணைப் பகுதிகளாக மாறிவிடுகிறது.

கற்றல் இலக்குகள் நிறைவடைந்து விட்டன என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது..? வல்லமைகள் கண்ணிற்குப் புலப்படக் கூடியவை.  இந்திந்த வல்லமைகள் பெற்றுவிட்டால், இலக்குகள் நிறைவடைந்து விட்டன என்று முடிவு செய்யலாம்!

இடதுபுறம் உள்ளது கற்றல் இலக்குகள். வலதுபுறம் உள்ளது வல்லமைகள். வல்லமைகள் அனைத்தையும் பரிசோதிக்க முடியும் என்பதை கவனியுங்கள்.

இந்த வல்லமைகளை அடைவதற்கு குறிப்பிட்டகாலம் தேவைப்படுமல்லவா..! எனவே, இந்த வல்லமைகளை அடைவதற்கு ஒவ்வொருபடி நிலையிலும் ஒவ்வொரு சிறுகால இடைவெளியிலும் எவ்வளவு கற்றிருக்கிறார்கள் என்று வல்லமைகளை சிறுசிறு பகுதிகளாக பிரித்தால் நாம் பெறுவது கற்றல் அடைவுகள்.

கற்றல் வல்லமைகளை அடைவதற்கு ஏற்ப எழுதப் படுவதே பாடம் (Text book). இத்தகைய பாடங்களின் தொகுப்பே பாடத்திட்டம் (Curriculum)

அதாவது, கல்விச் செயல்பாடுகள் அனைத்தும் படை முறை (regimentation) படுத்தப்பட்டு விட்டன.

பண்டைய இந்தியப் பெருமை வாதத்தை அடிப்படையாகக் கொண்டு இத்தகைய இறுகிய முறையில் பாடங்களும், பாடத்திட்டங்களும் எழுதப்பட்டால் அதனைப் படிக்கும் பிஞ்சுமனம் படைத்த மாணவர்கள் எதிர்காலத்தில் என்னவாக மாறுவார்கள்.?

அத்தகைய மாணவர்கள் இளைஞர்களாக மாறும் போது சமூக வாழ்வின் நிலை எவ்வாறு இருக்கும்..? சனநாயகம் என்னவாகும்..?

பெருமைவாதத்தில் பலியான இளைஞர்களிடம் என்ன சகிப்புத் தன்மை இருக்கும்..?

மாற்றுக் கருத்துள்ளவர்கள் எவ்வாறு கையாளப்படுவார்கள்..? தமிழகத்தில் மட்டும் ஒரு வருடத்திற்கு சராசரி 10 லட்சம் மாணவர்கள் பள்ளிக் கல்வியை முடிக்கின்றனர். 10 வருடத்தில் ஒரு கோடி மாணவர்கள் வெளி வந்து விடுவர். ஒருவேளை இக் கொள்கை தடுக்கப்படாமல் நிறைவேற்றப்பட்டால் குறைந்த பட்சம் 100 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட மாட்டோமா..? என்றோ மனு எழுதிய கொள்கை இன்றும் சமூகத்தை வாட்டி வதைக்கிறது. தேசியக் கொள்கை 2020 இன் பாதிப்பிலிருந்து சமூகம் வெளிவர எத்தனை பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டும்.

ஓராயிரம் ஆண்டு காலம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது வந்த மாமணியைத் தோற்போமோஎன்று பாரதியின்கதறல் இன்னும் நம் அனைவரின் காதிலும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. தோற்போமோ அல்லது வெல்வோமோ என்பது சரியான அறிவியல் புரிதலில் நாம் ஒன்றிணைந்து போராடப் போகிறோமா அல்லது வேடிக்கை பார்க்கப் போகிறோமா என்பதில் அடங்கியுள்ளது. சனாதனத்திற்கு எதிராக இருப்பதாக தங்களை பிரகடனப்படுத்தி உள்ள இன்றைய தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் இந்த கல்வி கொள்கை குறித்து இன்னும் மெளனம் சாதிக்காமல் எதிர்க்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பமாகும்.

கட்டுரையாளர்; கே.யோகராஜன்

கல்வி செயற்பாட்டாளர்

அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி

 

 

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time