சனாதனவெறி கொண்ட சண்டித்தன மணியன்!

-சாவித்திரி கண்ணன்

பார்ப்பனத் திமிர் என்னவென்பதன் வாழும் அடையாளம் இவர்! சாதிவெறி, மதவெறியர் மட்டுமல்ல, மனிதகுல விரோதியும் கூட. காந்தி தொடங்கி அம்பேத்கர் என யாராயிருந்தாலும், ”அவன், இவன்” தான்! இவரை ‘ஆன்மீகப் பேச்சாளர்’ என அடைமொழி கொடுக்கும் ஊடகங்களை என்னென்பது?  இவர் கைதின் பின்னணி என்ன..?

தாழ்த்தப்பட்ட மக்களை அந்தந்த சாதிப் பெயர்களைச் சொல்லியே, ”உனக்கெல்லாம் எதுக்குடா படிப்பு? உங்க அப்பன் செய்யிற வேலையை செய்ய வேண்டியது தானே…’’ என்கிறார்!

”செருப்பு தைக்கிறவன் புள்ளை செருப்பை தைக்க கத்துக்கிட்டா போதும்!

வண்ணான் பிள்ளை துணி துவைக்க கத்துக்கிட்டா போதும்!

அம்ப்பட்டன் புள்ள முடிவெட்ட கத்துக்கிட்டா போதும்!

டேய் ஏண்டா படிக்கணும்னு சொல்றீங்க.. உங்க அப்பன் தொழில் இருக்குல்ல. அதை செய்யுங்க..

பிராமணனுக்கு தொண்டு செய்யத்தான் எல்லா சாதிகளும் இருக்கு”

இப்படி மேடைக்கு மேடை பேசுபவர் தான் இந்த ஆர்.பி.வி.எஸ்,மணியன்!

சமீபத்தில் இவர் ஆற்றிய ஒரு சொற்பொழிவில்,

”திருவள்ளுவன் என்ற ஒருத்தன் இருந்ததா சொல்வதே கற்பனை! இருந்திருந்தா அவன் அப்பன் பெயர் என்ன? வள்ளுவனுக்கு யாருடா அப்பன்? அவன் எப்போ பிறந்தான்? என்னைக்கு பிறந்தான்? தைரியமிருந்தா இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கடா.. இதோ ராமர் தசரதருக்கு பிறந்தவர் என்று நான் சொல்றேன். ராமர் எந்த நட்சத்திரத்தில் பிறந்தார் என்பது கூட எனக்கு தெரியும்!”

“ராமனை ஏத்துக்காத கிறிஸ்த்துவன் இந்த நாட்டிலேயே வாழத் தகுதி இல்லாதவன், ராமனை ஏத்துக்காத முஸ்லீம் இந்த நாட்டிலேயே வாழ அருகதை இல்லாதவன்…”

“எந்த பிராமணனும் தன்னை இந்து என்று 80 வருஷத்திற்கு முன்பு சொல்லிக் கொள்ள மாட்டான். தன்னை சனாதனின்னு தான் சொல்வான், இல்லை வைதீகன்னு சொல்வான். இந்துன்னே சொல்ல மாட்டான். அவனை இந்துன்னு சொல்ல வைக்கிறதுக்கே போராட வேண்டி இருந்தது”

”அம்பேத்கார் தான் இந்திய அரசியல் சட்டத்தை எழுதினவன் என்று சொல்றவன் எல்லாம் மூளையே இல்லாதவன். அம்பேத்கர் ஒரு கிளர்க், ஒரு டைப்பிஸ்ட், புரூப் பார்த்த ஆளு! ராஜேந்திர பிரசாத் தான் அரசியல் சட்டத்தை எழுதினார். அம்பேத்கர் ஒரு சக்கிலியன், திருமாவளவன் ஒரு பறையன். திருமாவளவன் எப்படி அம்பேத்கரை உரிமை கொண்டாட முடியும்..?”

”கிறிஸ்துவர் நடத்தும் பள்ளிகளுக்கு நம்ம பிள்ளைகளை படிக்க அனுப்ப கூடாது..”என்றெல்லாம் சொல்லும் இவர் தன்னுடைய வன்ம பேச்சுக்களுக்கு ஆதரவாக விவேகானந்தரையும், பாரதியாரையும் கூட மேற்கோள் காட்டுவார். விவேகானந்தரையும், பாரதியையும் அறியாதவர்கள் அந்த இருவரும் அப்படித்தான் மதவெறியர்கள் போல என நினைத்துவிடக் கூடிய அளவுக்கு பேசுவார்!

இவர் பேச்சை கேட்கும் சாதாரண பொது அறிவுள்ள எந்த மனிதரும் சொல்ல முடியும், ”இவர் ஆன்மீகப் பேச்சாளரல்ல, அவதூறு பேச்சாளர், ஆபாசப் பேச்சாளர், அடாவடிப் பேச்சாளர்” என்று!

ஆனால், இந்த மனிதரை ஆன்மீகப் பேச்சாளர் என்ற அடைமொழியிட்டு தினமலர், தினமணி, தி இந்து, விகடன் உள்ளிட்ட பார்ப்பன ஊடகங்கள் பிரபலப்படுத்தியதை அப்படியே வழிமொழிவது போல, மற்ற ஊடகங்களும் ‘ஆன்மீகப் பேச்சாளர் ஆர்.பி.வி.எஸ் மணியன் கைது’ என்றே செய்தி போடுகிறார்கள்! நியாயப்படி பார்த்தால், ‘போலி ஆன்மிகப் பேச்சாளர் ஆர்.பி.எஸ்.மணியன் கைது’ என்று செய்தி போட்டிருக்க வேண்டும்.

பார்ப்பன வெறியின் உச்சமாக பல ஆண்டுகளாகப் பேசித் திரியும் இந்த மனிதரை உச்சிமோர்ந்து பேட்டிகள் எடுத்து பிரபலப்படுத்தி, ”ஆன்மீக சொற்பொழிவாளர்” என்ற அடைமொழியையும் கொடுத்த பிரபல பார்ப்பன பத்திரிகைகளின் தந்திரத்தை என்னென்பது..?

மேற்படி பேச்சின் மூலம் திருவள்ளுவரை பார்ப்பனர்கள் அந்த காலத்திலேயே ஒழித்துக் கட்டத் துடித்ததும், அவர் பாடல்களை அரங்கேற்றவிடாமல் தடுத்ததும், பிறகு ஒரு வழியாக அது அரங்கேறிய பின்பு அவர் மறைவுக்கு பின்பு அதை வெளித் தெரியாமல் பல நூற்றாண்டுகள் ஒளித்து வைத்ததும், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மீண்டும் திருக்குறள் மீட்டெடுக்கப்பட்டதும் நினைவு கூறத் தக்கதாகும்! திருவள்ளுவர் குறித்த சரியான தரவுளை முன் வைத்தவர் என்ற வகையில் அயோத்திதாச பண்டிதரும், தற்கால அளவில் கெளதம சன்னாவும் கவனத்திற்கு உரியவர்கள்!

இத்துடன் திராவிட ஆட்சியாளர்கள் திருவள்ளுவர் சிறப்பை உணர்ந்த வள்ளுவருக்கு கோட்டம் கட்டி 133 அடி உயர சிலையும் எழுப்பியதோடு, பள்ளிப் பாடத்திட்டத்திலும் கொண்டு வந்ததையும் நாம் ஒருங்கே நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

திருவள்ளுவர் குறித்த ஆய்வுகள் நிறைய வெளி வந்துள்ளது. அவர் பிறந்த காலத்தை கணக்கிட்டு திருவள்ளுவர் ஆண்டு என அரசு நாட்காட்டிகளே உள்ளன! திருவள்ளுவர் மீதான இந்த சனாதனியின் கோபத்திற்கு காரணம்,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பு ஒவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

என்ற குறள் சொல்லும் தத்துவமே!

”ராமனை ஏத்துக்காத இஸ்லாமியரும், கிறித்துவர்களுக்கும் இங்கு வாழ இடமில்லை” என்கிறார் ஆர்.பி.வி.எஸ். மணியன். நிறைய இந்துக்களே அவரை ஏற்கவில்லை. பார்பப்னர்களிலேயே கூட சைவர்கள் ராமனை ஏற்பதில்லை எனும் போது மற்றவர்களை சொல்ல யாருக்கும் அதிகாரமில்லை.

அம்பேத்கர் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த அறிவாளி என்பதற்கு அவர் எழுதிய பற்பல ஆய்வு நூல்களே சாட்சி! இந்திய வரலாற்றின் மீது அறிவு வெளிச்சத்தை பரப்பியதில் அவருக்கு இணை வேறொருவரில்லை. அவர் தான் நமது அரசியல் சட்டத்தின் சிற்பி. குழுவில் ஒப்புக்கு பலர் இருந்தனர். அவர்கள் வெறும் கவுரத்திற்காக குழ்வில் இணைக்கப்பட்டவர்கல். மற்றபடி இரவுபகலாக உழைத்து உன்னதமான இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியவர் டாக்டர் அம்பேத்கர் என்பது உலகறிந்த விஷயமாகும். அப்படி இருக்க எவ்வளவு ஆணவத்துடனும், விஷமத்துடனும் அம்பேத்கரை இழிவுபடுத்துகிறார் இந்த மனிதர்!

கிறிஸ்த்துவ பள்ளிகளில் நம் பிள்ளைகளை சேர்க்கக் கூடாது எனப் பேசும் இந்த மதவெறிப் பேச்சாளர் உயர் கல்வி பயின்றது, திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரி என அவரது பயோடேட்டா சொல்கிறது!

மணியன் பேச்சில் கவனிக்க வேண்டிய மற்றோரு அம்சம், 80 வருஷத்திற்கு முன்பு எந்த பிராமணரும் தன்னை ‘இந்து’ எனக் குறிப்பிடவில்லை. ஏனென்றால், அவர்களின் மதம், ‘சனாதன தர்மம்’. பிராமணர்கள் இந்து மதத்தை ஏற்றதே பிற்காலத்தில் தான்! ஆனால், இன்று ஒட்டுமொத்த இந்து மதத்தையும் சனாதனம் ஆக்கிரமித்து, ‘இந்துவும், சனாதனமும் வேறல்ல’ என்கிறார்கள் என்பதே கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.

”ராமாயணம் என்பதே ஒரு புனைவு! கற்பனையில் செய்யப்பட்ட புராணாம்” என   என பாரதியாரே கூறியுள்ளார். இந்தக் கவிதையே இதற்கு சாட்சி;

கடலினைத் தாவும் குரங்கும் -வெங்

கனலிற் பிறந்ததோர் செவ்விதழ் பெண்ணும்

வடமலை தாழ்ந்ததாலே – தெற்கில்

வந்து சமன் செய்யும் குட்டை முனியும்

நதியினுள்ளே மூழ்கிப் போய் – அந்த

நாதர் உலகில் ஒரு பாம்பின் மகளை

விதியுறவே மணம் செய்த – திறல்

வீமனும் கற்பனை கண்டோம்.

ஒன்று மற்றொன்றை பழிக்கும் – ஒன்றில்

உண்மை என்றே ஓதி மற்றொன்று பொய்யென்னும்

நன்று புராணங்கள் செய்தார். – அதில்

நல்ல கவிதை பலபல தந்தார்!

கவிதை மிக நல்லதேனும் – அக்

கவிதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்.

இந்த மதவெறியரை இது வரை பாஜக கண்டித்ததே இல்லை. இவரே தன் சொற்பொழிவில் பாஜகவைத் தவிர அனைத்து கட்சிகளும் தேச விரோதக் கட்சிகள் என்று தான் பேசி வருகிறார். இந்த மனிதர் ஏற்கனவே தேன்கனிக் கோட்டை என்ற இடத்திலே பேசி பெரும் கலவரம் மூண்டு நான்கு உயிர்கள் பலியாயின! ஆகவே, இவர் போன்றவர்களை சமூகத்தில் நடமாடவிடுவது ஆபத்தானது. மிக காலதாமதமாக இந்தக் கைது நடந்துள்ளது. இவரை சாகும் வரை சிறையில் வைப்பதே சாலச் சிறந்ததாகும்.

சாவித்திரி கண்ணன்

அஅம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time