மகளிர் உரிமை தொகை; விளைவுகள் எப்படியாகும்?

-சாவித்திரி கண்ணன்

வாக்கு வங்கி அரசியலை மையப்படுத்திய திட்டமா? பெண்களை அதிகாரப்படுத்தும் அத்தியாவசியத் திட்டமா? இந்த திட்டத்தை குறைபாடில்லாமல் தொடர்ந்து செயல்படுத்த வாய்ப்பு உள்ளதா? அரசின் நிதி நிலை தாங்குமா? விளைவுகள் என்னவாக இருக்கும். மொத்ததில் இது திராவிட ஆட்சிக்கு வெற்றியா? வீழ்ச்சியா?

மகளிர் உரிமைத் தொகை என்பதாக மாதம் ஆயிரம் ரூபாய் ஒரு கோடியே ஆறுலட்சம் பெண்களுக்கு தமிழக அரசால் இந்த மாதம் முதல் இனாமாகக் கொடுக்கப்படுகிறது! மாதாமாதம் 15 ஆம் தேதிவாக்கில் தானாக அந்தந்த பெண்களின் வங்கிக் கணக்கில் அரசின் 1000 ரூபாய் சேர்க்கப்பட்டுவிடுமாம்!

இந்த உதவித் தொகை உண்மையிலேயே எளியவர்களுக்கு கிடைக்க சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன! அதன்படி;

# ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்ப உறுப்பினர்கள் இருந்தால், அந்தக் குடும்பத்தில் பெண்களுக்கு உரிமைத் தொகை கிடையாது.

# ரூ. 2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டி வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்கள்/ வருமான வரி செலுத்துபவர்கள் குடும்பத்திற்கு கிடையாது.

# ஐந்து ஏக்கருக்கும் அதிகமாக நன்செய் அல்லது 10 ஏக்கருக்கும் அதிகமான புன்செய் நிலம் வைத்திருப்போருக்கு கிடையாது.

போன்ற பல விதிகள் வகுக்கப்பட்டுள்ளன!

ஏற்கனவே தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் மூலம் மாதாமாதம் 20 கிலோ அரிசி இலவசமாகத் தரப்பட்டு வருகிறது. அனைத்து பெண்களுக்கும் பேருந்துகளில் கட்டணமின்றி செல்லும் திட்டம், அரசு பள்ளிக் குழந்தைகளுக்காக காலை மற்றும் மதிய உணவு தரும் திட்டம், கல்லூரி படிப்பில் காலடி எடுத்து வைக்கும் மாணவிகளுக்கான மாதாந்திரத் தொகை ஆகியவற்றோடு இப்போது இதையும் தருகிறார்கள்!

தார்மீக ரீதியாக பார்த்தால், இது தமிழக மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற வக்கின்றி, அரசாங்கத்தை எதிர்பார்க்கும் அவல நிலையில் வாழ்வதற்கான அத்தாட்சியாகத் தான் இந்தத் திட்டங்களை உணர முடிகிறது.

56 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்யும் வாய்ப்பை பெற்ற நமது திராவிட ஆட்சியாளர்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள திரானியற்றவர்களாக பெருந்திரளான மக்களை வைத்துள்ளனர் என்பது அவர்களின் தோல்வியாகத் தான் கருத முடியும்.

குடும்பத்தில் ஒருவருக்கு என்ற வகையில் தமிழகத்தின் இரண்டு கோடி குடும்பங்களில் சரிபாதிக்கும் அதிகமானோர் இந்த உதவித் தொகை பெறுகின்றனர் என்றால், உண்மையிலேயே இவ்வளவு பெரும் தொகையினர் இந்த திட்டத்தை பெறக் கூடிய ஏழ்மை நிலையில் உள்ளனரா? அல்லது இலவசம் என்பதால், தவறான தகவல்களைத் தந்து கணிசமானோர் பெற்றுள்ளனரா? என்பதை ஆராய வேண்டியுள்ளது.

ஒரு தொலைகாட்சி பேட்டில் ஒரு ஆட்டோ டிரைவர் இந்த உதவித் தொகை தன் மனைவிக்கு கிடைக்கவில்லை எனவும், ஆனால், தன் தெருவில் கார், பங்களாவுடன் இருப்பவர் வீட்டுப் பெண்ணுக்கு கிடைத்துள்ளது என்றும் புலம்பித் தீர்த்தார். ஆக, வசதிபடைத்த மக்களிலும் கணிசமானோர் வெட்கமோ, குற்ற உணர்வோ இன்றி இந்த உதவித் தொகையை வாங்குவதை பார்க்கும் போது, சுயமரியாதை இல்லாத ஒரு சமூகக் கட்டமைப்பு பலமாக கட்டி எழுப்பப்பட்டு உள்ளது என்றே உணர முடிகிறது. பேராசைக்காரர்களாக மக்களை மாற்றவே இது போன்ற இலவசத் திட்டங்கள் உதவுகின்றன!

பல இடங்களில் ஏழ்மை நிலையில் உள்ள விதவைப் பெண்களுக்கு இந்த உதவித் தொகை கிடைக்கவில்லை என்ற புகார்கள் உள்ளன. ஏழ்மை நிலையில் உள்ள தாய்க்கு கிடைக்கும் வீட்டில் விதவையான அவர் பெண்ணுக்கு தர மறுத்துள்ளனர் அதிகாரிகள். ஏனென்றால், விதிமுறைகளின்படி ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு தானாம்! எனவே, களத்தில் இறங்கி ஆய்வு நடத்தி பயனாளிகளை தேர்ந்தெடுக்க அர்ப்பணிப்புள்ள தொண்டர் படையை இறக்கி இருக்க வேண்டும்.

ஏனென்றால், பலன் பெறுவோர் எண்ணிக்கை அதிகம் இருந்தாலும், பயன்பெற முடியாத ஏழைப்பெண்களின் குரல்கள் ஆங்காங்கே ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டால், அது ஒட்டுமொத்தமாக அரசின் இமேஜை காலியாக்கிவிடும். எனவே, சொந்தக் காசில் அரசு, தனக்குத் தானே வைத்துக் கொண்ட சூனியமாகவும் இது மாறிவிடும். எனவே, தகுதியான ஏழைகள் விடுபட்டுவிடாமல் கர்ம சிரத்தையாக இந்த திட்டத்தை அமல்படுத்தியாக வேண்டும்.

வசதி படைத்தவர்கள் இந்த திட்டத்தில் பணம் வாங்குவது கண்டறியப்பட்டால், உடனடியாக அவர்கள் தவிர்க்கப்படுவதோடு, தண்டிக்கப்படவும் வேண்டும். அப்போது தான் ஒரு பயமாவது இருக்கும், ஏழைகளுக்கு கிடைக்க வேண்டியதை தட்டிப் பறிப்பவர்களுக்கு!

இந்த திட்டத்திற்கு மாதாமாதம் தமிழக அரசு 1,060 கோடிகள் செலவழிக்க வேண்டும். இது மிகப் பெரும் நிதிச் சுமையை தமிழக அரசுக்கு ஏற்படுத்தும். ஏற்கனவே தமிழக அரசு மிகப் பெரும் நிதிச் சுமையில் உள்ளது. இந்த நிதிச் சுமையால் அரசு மேலும் பல திட்டங்களுக்கான நிதியை குறைக்கக் கூடும்.

இப்படி குறைக்கப்படும் நிதி  சுகாதாரத் துறையென்றால், டாக்டர்களும், நர்சுகளும், இதர மருத்துவ பணியாளர்களும் பாதிக்கப்படுவதோடு, அத்தியாவாசிய மருந்து, மாத்திரைக்கும் கூட நிதிப் பற்றாகுறை உருவாகலாம். கல்வித் துறையென்றால், மருத்துவர்களும், ஆசிரியர்களும் பாதிக்கப்படலாம். கல்வித் துறையில் பல்லாயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்படாமல் மாணவர்கள் படிப்பு மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இதற்கெல்லாம் உரிய நிதி ஒதுக்க அரசுக்கு மனமில்லை.

மக்களுக்கு நிரந்தரப் பயன்களைத் தரும் திட்டங்களில் முதலீடு செய்வதில் இந்த அரசுகளுக்கு ஆர்வம் இருப்பதில்லை. கதவணை, தடுப்பணைகள் கட்டுவதிலோ, புதிய அணைகளைக் கட்டுவதிலோ அல்லது ஏராளமானோருக்கு வேலை தரும் பெரிய தொழிற்சாலைகளை உருவாக்குவதிலோ ஆர்வமில்லை. தேர்தலில் ஓட்டுகளை அறுவடை செய்யும் திட்டங்களை செயல்படுத்துவதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இது நாட்டுக்கும், மக்களுக்கும் செய்யும் துரோகமாகும்.

ஏதேனும் ஒரு இலவசத்தை தந்துவிட்டால், சுலபத்தில் அதை நிறுத்த மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். காலாகாலத்திற்கும் அதை எதிர்பார்த்து வாழப் பழகிவிடுவார்கள். இது அவர்களுக்குள்ள உழைக்கும் ஆர்வத்தை குறைத்துவிடும். அரசாங்கத்திற்கு இது நிரந்தரச் சுமையாகிவிடும்.

இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைக் கூட ஆயிரம் ரூபாய் பெறும் பெண்களிடம் இருந்து இந்த சமூகத்திற்கு பிரதிபலனாக திருப்பித் தருமளவுக்கு ஏதேனும் ஒரு உழைப்பை பெற அரசு திட்டமிட்டு இருந்தால், அது கவுரவமாக இருந்திருக்கும். ஏதேனும், ஒரு சமூகப் பங்களிப்பை அவர்கள் வாழும் பகுதியிலேயே செயல்படுத்தச் செய்து, ஆயிரம் என்ன? மூவாயிரம் கூடத் தரலாம்! இப்படி உழைப்பைக் கேட்டால், வசதிபடைத்தவர்கள் வரமாட்டார்கள். உதவி தேவைப்படுபவர்கள் மட்டுமே வந்து பலனடைவார்கள். சமூகமும் பலனடையும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time