”சமூக நேசிப்பே கலைகள்! “- ஓவியர் ரவி பேலட்

-பீட்டர் துரைராஜ்

சமகால சமூக, அரசியலின் பிரதிபலிப்பே ரவிபேலட் ஓவியங்கள்! ஓலையில் எழுத்தாணியில் தொடங்கி, பேனா, பென்சில், பிரஸ் என்று மாறி, oil painting, water colour, acrylic போன்ற வடிவங்களை கடந்து, கணினி டிஜிட்டல் ஓவியங்கள் மனதை அள்ளுகின்றன! அறச்சீற்றங்களை அற்புத ஓவியமாக்கும் ரவியோடு நேர்காணல்;

மதுரையைச் சார்ந்த ஓவியரான ரவி பேலட்  சென்னையில் டிஜிடல் ஓவியக் கண்காட்சி நடத்தி வருகிறார். கலைகளின் முக்கியத்துவம், பள்ளிகளில் அவைகளை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம், டிஜிடல் ஓவியங்கள்  போன்றவை குறித்து பேசுகிறார். கண்காட்சி நடந்து வரும் சோல் ஸ்பேஸ் கேலரியில் நடந்த நேர்காணல் இது.

ரவி பேலட் என்று பெயர் வைத்து இருக்கிறீர்களே ? 

என்னுடைய இயற்பெயர்  ரவி. புனைப்பெயர் வைக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை. சமூக வலைத்தளங்களில் சேர வேண்டும் என நண்பர்கள் வலியுறுத்தினர். ரவி என்ற பெயரில் பலர் இருந்தனர். ஆர்டிஸ்ட் ரவி, ரவி ஆர்ட்ஸ் என்ற பெயர்களிலும் பலர் இருந்தனர். எனவே ஓவியத்தோடு தொடர்புடைய ஒரு பெயராக இருக்க வேண்டும் என்பதால், பேலட் என்ற பெயரை இணைத்துக் கொண்டேன். பேலட் என்ற ஆங்கில வார்த்தை, வண்ணங்களை கலக்க பயன்படும் தட்டைக் குறிக்கும். ரவி பேலட்  என்ற பெயர் வந்தது ஒரு விபத்து என்று தான் சொல்ல வேண்டும்.

இப்போது நீங்கள் நடத்தி வரும் ஓவியக் கண்காட்சி பற்றி…

நான் தென் மாவட்டங்களில் மற்றவர்களோடு இணைந்து குழுவாக கண்காட்சி நடத்தி இருக்கிறேன். oil painting, water colour, acrylic போன்ற வகைகளில் வரைந்த ஓவியங்கள் அவை. இது தனியாக நான் நடத்தும்  கண்காட்சி. டிஜிடல் முறையில் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி இது. கணிணி, டேப், ஐ பேட் உள்ளிட்ட மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தி வரையப்பட்ட ஓவியங்கள்! இந்த வகையில் சேரும். இந்தக் கண்காட்சி 25ம் தேதி வரை  நடைபெறும். டிஜிடல் ஓவியங்களை ஓவியங்களாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஒரு மூத்த ஓவியர் சொன்னார்.  டிஜிடலில் ஓவியங்கள் பலவற்றை வரைந்து அந்த அனுபவத்திற்குப் பின்பு,  டிஜிடல் ஓவியங்கள் சரியல்ல என்று ஒருவர் சொன்னால், அதை நாம் யோசிக்கலாம். ஓலைகளில் எழுத்தாணி கொண்டு எழுதியது ஒரு காலம். பின்னர் பேனா, பென்சில் என்று மாறி, இப்போது  கணினியில் எழுதுகிறோம். அதன் தொடர்ச்சியாகத் தான் டிஜிடல் வகை ஓவியங்கள் வந்துள்ளன. இனி டிஜிடல் ஓவியங்கள் முக்கியத்துவம் பெறும்.

டிஜிடல் வகை ஓவியம் என்றால் போட்டோ ஷாப் தான் நமக்கு நினைவுக்கு வரும். நமது முகத்தை மேடு பள்ளம் இல்லாமல், வண்ணம் தீட்டி போட்டோ ஷாப் செயலி மூலம் சரிசெய்து, பிளக்ஸ் போர்டுகளில் பார்க்கும் போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. இது ஸ்டுடியோவை ஒட்டி வளர்கிறது. இது எளிமையாகவும் இருக்கிறது. ஆனால், இது டிஜிடல் ஓவியம்  இல்லை. இதில் பல சாப்ட்வேர்கள் உள்ளன. பல சாத்தியங்களை டிஜிடல் ஓவியங்களில்  உருவாக்க முடியும். ஓவியங்களை மேம்படுத்த முடியும். பல வகையான ஓவியங்களை காட்ட முடியும் என்பதை இந்தக் கண்காட்சி் விளக்கும்.

ஓவியர் ரவிபேலட்டின் கண்காட்சியில் அவருடன் பீட்டர் துரைராஜ்

ஓவியக் கல்லூரியில் இருந்து இதனை பார்வையிட மாணவர்கள் வந்தார்களா.. ?

இந்தக் கண்காட்சிக்கு பெரிய விளம்பரம் இல்லை. பொதுவாக, நமது சமூகத்தில் பேச்சாளர்களுக்கும்,  எழுத்தாளர்களுக்கும் விருது கிடைக்கிறது. சினிமாவிற்கு நிறைய விருது கொடுக்கிறார்கள். இதைப் போல மற்ற கலைகளை கௌரவப்படுத்துவது இல்லை. நடனம், இசை, சிற்பம், ஓவியம் போன்றவை அனைத்தும் கலைகள்தான். இது போன்ற கலைகளைக் குறித்து யாரும் அதிகம் பேசுவதில்லை. இந்தக்  கண்காட்சிக்கு எனது ஓவியங்களுக்கான சட்டகங்களை அடித்துக் கொடுக்க ஒருவரை பேசி இருந்தோம். வேலை முடிந்த பிறகு எனது ஓவியங்களைப் பார்த்து வியந்த அவர் ஒப்புக் கொண்ட தொகையை விட குறைவாகப் பெற்றுக் கொண்டார். இது போன்ற உடனடி அங்கீகாரம் தான் எனக்கு திருப்தி அளிக்கிறது. நாம் சொல்ல வேண்டியதை கடத்தி விட்டோம் என்ற உணர்வு எனக்கு வருகிறது.

ஓவியம் வரையும் பழக்கம் உங்களுக்கு எப்படி வந்தது? உங்களுக்கு குரு என்றால் யாரைச் சொல்லுவீர்கள் ?

நான் ஓவியக் கல்லூரியில் படிக்கவில்லை. எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே வரைந்து வருகிறேன். எங்கள் வீட்டிலோ, எனக்குத் தெரிந்தவர்களோ யாரும் படம் வரைந்தது இல்லை. இன்னும் சொல்லப் போனால், படம் வரைந்தால் வீட்டிற்கு ஆகாது , கடன் வரும் என்றெல்லாம் வீட்டில் தடைகள் இருந்தன! எத்தனையோ மூடச் சிந்தனைகள் இது போல இளமையில் பலருடைய திறமைகளை அழித்துவிடுகின்றன.இது போன்ற தடைகளை மீறி வரைந்தே நான் என் சுயத்தை வெளிப்படுத்தினேன். எனக்கு குரு என்று யாரையும் சொல்ல முடியாது. சுதேசமித்திரன் என்ற பத்திரிகையில் கார்டூனிஸ்டாக இருந்தேன். பிறகு ஓவிய ஆசிரியரானேன். கோபம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகள் படங்களாக வெளிவந்தன.

எனது ஓவியங்களுக்கு நான் விளக்கம் கொடுக்க மாட்டேன் என்று கூறுகிறீர்களே ?

ஒருவன் சினிமாவில் அழும்போது, அவன் அழுது கொண்டிருக்கிறான் திரையின் கீழ் எழுத வேண்டுமா? அது போல ஓவியம் என்பது ஒரு காட்சி ஊடகம். அதற்கு விளக்கம் சொல்ல அவசியமே இல்லை. அருஞ்சொற்பொருள் விளக்கம் ஓவியத்திற்கு தேவை இல்லை. அந்த ஓவியம் ஒருவனுக்கு பிடித்திருக்கிறதா அல்லது பிடிக்கவில்லையா என்பது தான் இதில் கேள்வி. ஒரு மொழியை கற்கையில் ஆனா, ஆவண்ணாவில் ஆரம்பித்து பயில்வதைப் போல, தொடர் பயிற்சியின் மூலமே, ஓவியங்களை புரிந்து கொள்ள முடியும். தொடர்ந்து கவனித்து, படித்து, புரிந்து கொள்வதன் மூலம் கவிதைகளைப் புரிந்து கொள்வது போலத் தான் இதுவும். ஓவியம் என்பது ஒரு கலைதானே !

கண்காட்சியை நீங்கள் மணிரத்னத்தை வைத்து திறக்கச் செய்திருக்கிறீர்களே ! மணிரத்னத்தை விமர்சிப்பவர்கள் இருக்கிறார்களே ?

சினிமா என்ற ஒரு காட்சி் வடிவ திரைக் கலையை சிறப்பாகக் கையாண்டவர் மணிரத்தினம்.  அவருக்கு குறுஞ்செய்தி மூலமாகத் தான் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்தேன். வருவாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், ஒப்புக் கொண்டார். இதனை ஒரு அங்கீகாரமாகத் தான் பார்க்கிறேன். அவரது தனிப்பட்ட படைப்பாளுமையைத் தான் பார்க்கிறேன். அவரது கருத்தியலை பார்க்கவில்லை. மிஷ்கின் என் நண்பர். இந்த நிகழ்வின் போது அவர் இருக்க வேண்டும் என விரும்பினேன். எனவே அவரை அழைத்தேன். மணிரத்னம், மிஷ்கின் இருவருமே என்னுடைய ஓவியங்களை வாங்கினார்கள் ‘முதன் முதலாக நடைபெறும் டிஜிடல் ஓவியக் கண்காட்சி இது தான்’ என்று கண்காட்சி் தொடக்க விழாவில் திரைக் கலைஞர் ஷாஜி  குறிப்பிட்டார்.

மாணவர்களுக்கு ஓவியங்களைக் கற்றுத் தர வேண்டும் என்று நினைக்கிறீர்களா? 

படிப்பு என்பது பணம் சம்பாதிக்க உதவும் ஒரு கருவி என்று மாறிவிட்டது. நமது பாடத்திட்டத்தில் கலைகளுக்கான இடமே இல்லை. ஓவியம் மட்டுமல்ல. சிற்பம், இசை, கவிதை, நடனம், சினிமா போன்ற பல வகையான கலைகள் குறித்தும் மாணவர்களுக்கு ஒரு அறிமுகம் இருக்க வேண்டும். முழுவதுமாக தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. கலைகள்தான் மனிதர்களை மேம்படுத்தும். சக மனிதனிடம்  அன்பு காட்ட வைக்கும். இதற்கான மாற்றம் வீடுகளில் இருந்தே தொடங்க வேண்டும். இதற்கு முதலில் ஆசிரியர்களுக்கு, பெற்றோர்களுக்கு, பயிற்சி தர வேண்டும்.  அரசுக்கு இதைப் பற்றிய ஒரு தெளிவு வேண்டும்.  இப்படிச் செய்தால் இருபது ஆண்டுகளில் மாற்றத்தைக்  கொண்டுவர முடியும்.

உங்களுக்குப் பிடித்த ஓவியர்கள் யார்  ? 

ஆதிமூலம், மருது, மார்க் ரத்தினராஜ், செந்தில் என பலரைச் சொல்ல முடியும். இப்போது சட்டென்று இவர்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள்.

இயேசுநாதர் சிலுவையில் தொங்குவது போல, ஒரு விவசாயி ஏர் கலப்பையில் தொங்கும் உங்களது ஓவியத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன். உங்களுக்கு ஏதும் அரசியல் சார்பு உள்ளதா ?

 அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளில் நாம் சொல்ல நினைப்பதை வெளிப்படுத்த வேண்டும் என நினைக்கும்போது அதையொட்டி ஓவியங்கள் உருவாகின்றன. ஒரு கலைஞன் என்பவன் சமூகத்தை நேசிப்பவன். எனவே  பெரிய நிகழ்வுகளை எளிய படங்கள் மூலம் விளக்கும் – minimalist படங்களாக – அரசியல் நையாண்டியாக வருகின்றன.

ரவிவர்மா ஓவியங்கள் குறித்து சில விமர்சனங்கள் உள்ளன. அவை பற்றி….

மன்னர்கள், ஜமீன்தார்களின் ஆளுயர ஓவியங்களை ரவி வர்மா வரைந்திருக்கிறார். அப்போதெல்லாம் புகைப்படக் கலை என்பது உருவாகவில்லை. இப்போது நாம் செல்பேசியிலேயே உடனுக்குடன் படம் எடுத்து விடுகிறோம். அந்தக் காலக்கட்டத்தில் வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து, தைலம் போன்ற அப்போது இருந்த பொருட்களை வைத்து சுவரில் வரைந்திருக்கிறார்கள். ரவி வர்மா மக்களை வரையவில்லை என்றெல்லாம் நாம் இப்போது குறையாகச்  சொல்ல வேண்டியதில்லை. ஒருவன் எந்த ஓவியங்களை வரைவது என்பதை அந்தந்த  காலம்தான் தீர்மானிக்கும்.

நேர்காணல்; பீட்டர் துரைராஜ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time