நடிகர், நடிகைகள் பட்டாளம் பாஜகவிற்கு பலமா? பலவீனமா?

-சாவித்திரி கண்ணன்

ஒரு பக்கம் அணி,அணியாக நடிகர், நடிகைகள்,திரைப்பட இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் சேர்கிறார்கள்! மறுபக்கம் பல மோசமான குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடிகள் சமூகவிரோதிகள் சேர்கிறார்கள்…! இந்த ஆள்பிடிக்கும் அரசியல் மூலமாக பாஜக தமிழக மக்களுக்கு தனது கட்சி குறித்த என்ன மாதிரியான தோற்றத்தை தர விரும்புகிறது…? என்ன மாதிரியான பிம்பத்தை கட்டமைக்கத் துடிக்கிறது…?

ஒரு கட்சி என்ன மாதிரியான கட்சி என்பதற்கு அந்த கட்சியின் முகங்களாக இருக்கும் பிரபலங்கள் ஒரு அளவுகோலா?

ஒரு இயக்கத்தின் கொள்கையில் உள்ளார்ந்த ஈடுபாடு, அதன் தலைவர் மீது மிகப் பெரிய அசைக்கமுடியாத நம்பிக்கை, அதை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற தன்னியல்பாக ஒரு முனைப்பு ஆகிய அம்சங்களை அந்தக் கால கலைஞர்கள் அரசியல் இயக்கத்தில் சேர்ந்த போது பார்க்கமுடிந்தது!

ஒரு காலத்தில் எம்ஜிஆர் திமுகவின் முகமாக பாமரர்களுக்கு அடையாளமானார்!

சிவாஜி காங்கிரசின் அல்லது தேசியத்தின் அடையாளமானார்.

எம்.ஆர்.ராதா திராவிட இயக்கத்தின் அடையாளமாகத் திகழ்ந்தார்!

இவர்களெல்லாம் அந்தந்த இயக்கத்தின் பிரிக்கமுடியாத அங்கமாக கொள்கை பிணைப்போடு இருந்தனர். உண்மையிலேயே இந்த மூவரும் அன்றைய தினம் அந்தந்த இயக்கங்களின் மிகப் பெரிய பலமாக உணரப்பட்டனர்!

சுதந்திரப் போராட்ட காலத்தில் கே.பி.சுந்தராம்பாள் காங்கிரசில் சேர்ந்து பட்டிதொட்டியெங்கும் காந்தியின் கொள்கைகளை பாட்டுப்பாடி பரப்பினார் என்றால், அது நிச்சயம் பணத்திற்காகவோ,பதவிக்காகவோ அல்ல, நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்ற வேட்கை தான்!

இன்றைக்கு தமிழக பாஜகவில் அணிஅணியாக நடிகர், நடிகைகள் சேர்கிறார்கள்! இத்தனைக்கும் அந்த கட்சி தமிழகத்தில் பெருவாரியான மக்களால் விரும்பப்படாத கட்சியாக உள்ளது. அதன் மத்திய ஆட்சியாளர்கள் கொண்டு வரும் திட்டங்கள் எல்லாம் மக்களை மிகவும் பாதிப்பவையாக உள்ளது என்ற நிலையில் அங்கு சினிமாவில் செல்வாக்கு இழந்த பிரபலங்கள் சேர்கிறார்கள் என்பது கவனத்திற்குரியது!

அதாவது, பாஜக என்பது வருமானமில்லாமல் அல்லது வருமானம் குறைந்து போன வக்கற்ற கலைஞர்களின் புகழிடமா? கெளதமி, குட்டி பத்மினி, மாளவிகா, காயத்திரி ரகுராம் ஆகியவர்களும் இன்றைக்கு ஒரு கட்சி, நாளைக்கு ஒரு கட்சி என்று அலைபாயும் ராதாரவி, கங்கைஅமரன், குஷ்பு, நமீதா போன்றவர்களும் இத்தனை வருடங்களாக பாஜகவில் சேராமல் இப்போது ஏன் சேர வேண்டும்? கட்சியில் சேர்வதற்கு முன்பு பாஜகவின் மீது ஏதோ ஒரு வகை ஈர்ப்பு இருந்தது என்பதற்கான அடையாளத்தைக் கூட நாம் இது வரை பார்க்க முடிவில்லையே! இயக்குனர் கஸ்தூரி ராஜா எத்தனை படங்கள் இயக்கியுள்ளார். ஏன் ஒன்றில் கூட பாஜகவின் கொள்கையை ஆதரித்து இது வரை எடுத்ததில்லை.

கண்ணதாசன் காங்கிரசில் இருந்தார். காமராஜர், நேரு ஆகியோர் குறித்து மேடைதோறும் கவிதை பாடினார்.தேசியத்தில் அசைக்கமிடியாத பற்றுள்ளவராக திரைபாடல்களையும் எழுதினார்! இந்திய – சீன யுத்தத்தின் போது இந்தியாவை ஆதரித்து திரைப்படம் எடுத்து நஷ்டப்பட்டார். நாளும்,பொழுதும் தான் ஆதரித்த இயக்கத்திற்காக பிரச்சாரம் செய்தார்! சினிமாவுக்கே நேரமின்றி சுற்றிச் சுழன்று இயங்கிய அந்தக் கவிஞன் தன் பொன்னான நேரத்தை விரும்பித்தான் காங்கிசுக்கு தந்தார்! கங்கைஅமரன் நிலை அதுவல்ல! இன்று வரை அவரால் பாஜகவுடன் ஒட்டமுடியவில்லை. கம்யூனிச இயக்கத்தில் உருவாகிய அவரை காவி இயக்கதாலும் உள்வாங்க முடியவில்லை!

மேற்படி கலைஞர்களும், தீனா,பேரரசு,பெப்சி சிவா,பாபுகணேஷ்…ஆகியோர்களாலும் அந்தக் கட்சிக்கு என்ன பலம்? இவர்களால் எத்தனை பேர் புதிதாக அந்தக் கட்சியில் சேர்ந்தனர்! இவர்கள் பேச்சுக்கு பொது மக்கள் முக்கியத்தும் கொடுத்து ஓட்டு போடுவார்களா? அல்லது பொழுதுபோக்கிற்காக கேட்டுவிட்டு போவார்களா…? ஒரு நாளைக்கு எவ்வளவு நேரத்தை இவர்கள் கட்சிக்கு தருவார்கள்? அதற்கு என்ன கட்டணம் எதிர்பார்ப்பார்கள்…? குஷ்பு ஒரு பிரச்சாரத்திற்கு காங்கிரசில் கேட்ட கட்டணம் இரண்டு லட்சம்! அதை கொடுக்கமுடியாத இடத்தில் அவர் காலடி படாது! இத்தனை பேருக்கும் அவரவர் மார்கெட் வேல்யூவிற்கு ஏற்ப பணம் கொடுத்து படியளக்க கட்டுப்படியாகும் என்ற அளவுக்கு பாஜகவில் பணபலம் கொட்டிக்கிடக்கிறது என்பது தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியதாகும்! ஏனெனில், போய்ச் சேருபவர்கள் அங்கு ஏற்கனவே இருப்பவர்கள் என்ன பலனடைந்தார்கள் என விசாரித்தும்,தனக்கு என கிடைக்கும் என ஒரளவேனும் உத்திரவாதப்படுத்தாமல் சேர வாய்ப்பில்லை! பாஜகவில் இத்தனை வருடங்களாக சேராமல் இவர்கள் ஏன் இப்போது சேரவேண்டும்? பாஜகவும் இந்த ஆள்பிடிக்கும் அரசியலில் இப்போது ஏன் திவீரம் காட்டவேண்டும்…?

பாஜகவிடம் ஆட்சிபலம்,பணபலம் இருப்பது பிரபலங்கள் வருவதற்கான காரணங்கள் என்றால், இங்கு தமிழகத்தின் பிரதான கட்சிகளில் குறிப்பிடத்தக்க செல்வாக்கான தலைமைகள் இல்லாதது மற்றொரு முக்கிய காரணமாகும்! ஆகவே, எப்படியாவது மாநிலத்தில் தன் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள எந்த எல்லைக்கும் போக அவர்கள் துணிந்துவிட்டார்கள்! அதில் தவறில்லை! ஆனால், உண்மையில் அவர்கள் கட்சியை வளர்க்க விரும்பியிருந்தால், ஊழல் அதிமுக ஆட்சியை தூக்கி சுமப்பதை தவிர்த்து, இரு திராவிடக் கட்சிகளையும் சம தூரத்தில் வைத்து,மாற்றத்திற்கான ஒரு ஆரோக்கிய அரசியலை முன்னெடுத்து இருக்க வேண்டும்.எடப்பாடியையும்,பன்னீரையும் ஒன்றிணைத்து தமிழகத்தை சூறையாடித் திளைக்க துணை போவது கொடுமை! இவர்கள் சரியானவர்களாக இருந்திருந்தால் கழகங்களின் தவறுகளை நாங்கள் செய்யமாட்டோம் என்பதான ஒரு நம்பிக்கையை மக்களிடம் விதைத்து இருப்பார்கள்!

ஆனால்,இந்த கழகங்களே கழிசடைகள் என ஒதுக்கி வைப்பவர்களை எல்லாம், கமலாலயம் அழைத்து மாநிலத் தலைமைப் பதவிகள் தருவதன் மூலம் நீங்கள் சொல்லும் செய்தி என்ன? திமுக, அதிமுகவின் கலவையே பாஜக என்று காட்டத் துடிகிறீர்களா…?

ஆனால்,’’கழக ஆட்சிகளே பரவாயில்லை போலிருக்கிறதே..’’ என்று சொல்லத்தக்க வகையில் கட்சியில் பல மோசமான கொலை,கொள்ளை,வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய சமூகவிரோதிகள், ரவுடிகள் கும்பல்,கும்பலாக வந்து சேர்கிறார்கள் என்றால்,அந்த கட்சிக்கு மக்கள் மத்தியில் என்ன மதிப்பிருக்கும்? இப்படிப்பட்டவர்கள் அந்த கட்சியில் சேர்வதை பொது மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற பிரக்ஜை கூட அவர்களுக்கு இல்லையே! இதை அந்த கட்சியில் உள்ள மற்றவர்கள் எப்படி மவுனித்து ஏற்றுக் கொள்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தமிழகத்தில் அதிகாரத்திற்கு வந்தார்கள் எனில், பொது மக்களுக்கு என்ன பாதுகாப்பு இவர்களால் தரமுடியும் என்ற கேள்வி எழுகிறதே? கல்வெட்டு ரவி,பிபி.ஜி.சங்கர், சேலம் முரளி…என்று பட்டியல் நீளத்தை சொல்லவே தர்மசங்கடமாகவுள்ளது.

அதிலும் சுமார் ஐம்பது பயங்கர வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியான ரவுடி சூர்யா என்பவரை வண்டலூர் கட்சி விழாவில் பகிரங்கமாக வந்து கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார் எல்.முருகன். அவரும் ஆறு ரவுடிகளுடன் அங்கு வரவே, அவரை கைது செய்ய போலீசார் முயல, பாஜக தலைவர்கள் சமாதானம் பேச…, இறுதியில் அவரோடு வந்த ஆறு பேரை கைது செய்துவிட்டு, அவர் தப்பித்தாக காட்டி போலீசார் செயல்பட வேண்டியதாகிவிட்டது. இதுவே ஜெயலலிதா ஆட்சியாக இருந்தால், பாஜகவிற்கு இந்த தைரியம் வந்திருக்குமா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் சாதாரணமாக எழுந்தது.

நாம் கேட்க விரும்புவதெல்லாம் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத சூழலை நீங்கள் பயன்படுத்தி வளரும் லட்சணம் இது தானா? இந்த ஆள்பிடிக்கும் அரசியல் உங்கள் தலைக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் கொள்ளியாகத் தெரியவில்லையா..?

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time