”இவர்கள் எங்கள் சிறந்த அடிமைகள்! நாங்கள் எவ்வளவு ஏறி மிதித்தாலும், எட்டி உதைத்தாலும் கெஞ்சுவார்கள், முணுமுணுப்பார்கள். எய்தவனைத் தவிர்த்து அம்பைத் தான் நொந்து கொள்வார்கள்” என்ற பாஜகவின் அனுமானத்தை தகர்க்க அதிமுகவினரும் சில உண்மைகளை பேசினாலே போதும். இதோ சில ஐடியாக்கள்:
உலகத்தில் பரிதாபத்திலும் அதிக பரிதாபத்துக்கு உரியவர்களாக இன்று அதிமுகவினர் நிலை உள்ளது!
ஐ.பி.எஸ் அண்ணாமலை ஒரு முறை காலால் நெஞ்சில் எட்டி உதைக்கிறார்.
அடுத்த முறை மூஞ்சியை நோக்கி கும்மாங்குத்து விடுகிறார்!
இவை போதாது என காறித் துப்புகிறார் அதிமுகவினர் மீது!
அதிமுக தெய்வமாக மதிக்கும் முன்னோடி திராவிட இயக்கத் தலைவர்களை தொடர்ந்து இழிவாகப் பேசி அதிமுகவினரை கொந்தளிக்க வைத்து ரசிக்கிறார் அண்ணாமலை!
”கூட்டணிக்குள் இருந்து கொண்டு இப்படி பேசலாமா?”
”எங்க தோளில் உங்களை சுமக்கிறோமே இப்படி பேசலாமா?”
”நீங்க பேசுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.”
”அண்ணாமலை அடக்கமாக பேச வேண்டும்.”
”அண்ணாமலை இவ்வாறு பேசிக் கொண்டே இருந்தால் பொறுக்க மாட்டோம்..”
”இது எங்கள் தன்மானத்திற்கு விடப்படும் சவாலாகும்..”
என்றெல்லாம் மாற்றி, மாற்றி வசனம் மட்டுமே பேசி வந்த அதிமுகவின் தலைவர்கள் இன்று பாஜகவுடன் கூட்டணி இல்லை என சற்றே துணிச்சலாக அறிவித்துள்ளனர்.
அதுவும் தற்போது கூட்டணி இல்லை என்று தான் அவர்களால் சொல்ல முடிந்ததே அன்றி, இனி எக் காலத்திலும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை எனச் சொல்ல முடியவில்லை!
இப்படி அதிமுகவினர் எவ்வளவு கதறிய போதும், கெஞ்சிய போதும் பாஜகவின் தரப்பிலோ அல்லது அவர்களின் ஆதரவாளர்களாக அறியப்படும் பத்திரிகையாளர்கள் தரப்பிலோ வருத்தம் தெரிவிப்பதோ, சமாதானத்திற்கேனும் இரண்டு வார்த்தைகள் கூட சொல்வதில்லை.
என்ன அண்ணாமலை சொல்லிவிட்டார்? உண்மையைத் தானே சொன்னார்!
”ஜெயலலிதா உழல் செய்தவர் தானே!”
”அண்ணா அவர்கள் முத்துராமலிங்கத் தேவரிடம் மன்னிப்பு கேட்டு பயந்து ஓடி வந்தவர் தானே!”
”இதுல வேக்சுவல் மிஸ்டேக் இருந்தால் சொல்லுங்க திருத்திக் கொள்கிறோம். அது உங்களால் முடியலை அல்லவா? அப்ப நாங்க சொன்னது சரி தான்!” என ஒரே போடாகப் போடுகிறார்கள்!
அதாவது பாஜகவினர் உண்மை விளம்பிகளாம்! உண்மையைத் தான் சொல்கிறார்களாம்!
சரி, நல்லது. அதிமுகவினரும் பாஜகவின் வழியில் கொஞ்சமேனும் உண்மையை சொல்லுங்களேன். அதாவது பாஜகவின் அடியொற்றி அவர்களின் வழியிலேயே நீங்களும் சில உண்மைகளை பேசுங்க..! அண்ணாமலை என்பது வெறும் அம்பு தான்! அந்த அம்பை மட்டுமே நீங்க நொந்து பயனில்லை. எய்தவர்களை கொஞ்சம் ஏறெடுத்துப் பாருங்கள்; பார்த்து இந்த உண்மைகளைப் பேசுங்க;
# நீங்க போற்றி புகழ்கிற தலைவர் சாவர்க்கர் மகாத்மா காந்தியின் கொலை வழக்கில் கைதானவர். அந்தமான் சிறையில் மன்னிப்பு கடிதம் தந்தவர்!
# 1998 ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தது எங்க தலைவி ஜெயலலிதா போட்ட பிச்சையில் தான்! எங்க தலைவியின் ஆதரவை பெற அன்றைய பாஜக தலைவர்கள் போயஸ் தோட்ட வாசலில் காத்துக் கொண்டிருந்ததை மறந்துவிடாதீர்கள்!
# 2002 ல் குஜராத்தில் நடந்த கலவரத்தில் அன்று முதல்வராக இருந்த மோடி அரசு இஸ்லாமியர்கள் இரண்டாயிரம் பேர் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தது.
# பாபர் மசூதி இடிப்பில் பாஜகவின் பெரும் தலைவர்கள் பலர் சம்பந்தப்பட்டு இருந்தனர்.
# நாட்டில் இந்துத்துவ தீவிரவாதத்தை வளர்ப்பதன் மூலம் இஸ்லாமியர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி ஒரு அமைதியற்ற சூழலை அடிக்கடி உருவாக்குகிறது.
# எங்களை ஊழல்வாதி என்கிறீர்கள். ஆனால், நீங்கள் வரலாறு காணாத ஊழல்களை செய்துள்ளதை சி.ஏ.ஜி அறிக்கையே அம்பலப்படுத்தி உள்ளதே?
# மோடி இந்திய மக்களுக்கான சேவகரா? அல்லது அதானி, அம்பானிக்கான சேவகரா?
# மோடியும், அமித்ஷாவும் பல கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருந்தனர். அதிகார பலத்தால் அதில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர்.
# மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி பெண்களை நிர்வாணப்படுத்திய அட்டூழியத்திற்கு துணை போன கட்சி பாஜக!
# காலாவதியாகிக் போன மக்களை ஏற்றத் தாழ்வுக்கு உள்ளாக்கும் மனு நீதிக் கொள்கையை மீண்டும் புதுப்பிக்க துடிக்கின்றனர் பாஜகவினர்!
# சி.பி.ஐ. வருமான வரித்துறை, அமலாக்கத் துறை ஆகியவற்றின் அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி எதிர்கட்சி அரசியல்வாதிகளை விலைபேசும் கட்சி தான் பாஜக!
இப்படி பாஜகவைப் பற்றி சொல்வதற்கான ஆயிரம் உண்மைகள் உள்ளனவே.. அதில் சிலவற்றையாவது அவர்களின் வழியில் நின்று அதிமுகவினரும் சொல்லலாமே!
அப்படிப் பேசாவிட்டால், பாஜகவினர் உங்களை, ‘இவர்கள் எங்கள் சிறந்த அடிமைகள்! நாங்கள் எவ்வளவு எட்டி உதைத்தாலும், ஏறி மிதித்தாலும் எங்களைப் பற்றி பேசத் துணியமாட்டார்கள்’ என கணித்து வைத்துள்ளது உண்மை என்றாகிவிடுமே..!
இந்த உண்மை மக்கள் உணரத் தொடங்கும் போது, அது உங்கள் இமேஜை சுக்கு நூறாக்கி விடுமல்லவா? அவர்கள் உங்களை அடிமைப்படுத்த நீங்கள் தான் இடம் தந்து கொண்டுள்ளீர்கள்!
உங்க தலைவர் எம்.ஜி.ஆரின் சினிமா பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது;
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? – தினம்
அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு?
ஒட்டி உறவாடவும் முடியாமல், வெட்டி தூக்கி எறியவும் முடியாமல் இருப்பதற்கு பெயர் தான் ஆண்டான் – அடிமை உறவு என்பார்கள்! நவீன ஜனநாயக யுகத்திலும் இங்கு மிகப் பலம் வாய்ந்த அடிமை ஒரு பலவீனமான ஆண்டையைத் தூக்கி சுமப்பது தான் வரலாற்றின் முரண்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Leave a Reply