அரசியல் கட்சிகள் மகளிர் வாக்கு வங்கியை குறிவைக்க ஆரம்பித்துள்ளனர்! வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள ‘பெண்களுக்கு அதிகாரம்’ என்ற முற்போக்கு முகமுடியைக் கூட பாஜக அணியத் தயாராகிவிட்டது! இந்த மகளீர் இடஒதுக்கீட்டில் இது வரை அரசியல் கட்சிகள் நடத்திய கபட நாடகத்தை பார்ப்போமா?
சமீபத்தில் உச்ச நீதிமன்றம் மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி அரசை உலுக்கியது என்பதும் ஒரு காரணம்;
மகளீர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக அரசின் நிலைபாடு என்ன? ஏன் பதில் மனு கூட தாக்கல் செய்யவில்லை. மகளிர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த விரும்புகிறீர்களா? இல்லையா? ஏனென்றால், இது முக்கிய பிரச்சினை. பத்தாண்டு கால ஆட்சி முடிவுக்கு வரப் போகும் நிலையில் உறுதியான பதில் தேவை…’’
என கட்டளையிட்டு வழக்கை அக்டோபர் மாதம் தள்ளி வைத்திருந்தது!
இந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் நுழைந்தவுடன் புரட்சிகரமாக ஒன்றை செய்ததாக பேர் வரட்டுமே எனக் கருதி முதல் நாளே அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் வழங்க, அடுத்த நாளே தாக்கல் செய்து உள்ளனர். ஆனால், இதை இந்த தேர்தலில் அமல்படுத்தமாட்டோம். கால அவகாசம் எடுத்து தான் நடைமுறை சாத்தியமாக்குவோம் எனச் சொல்லி இருப்பதும் கவனத்திற்கு உரியது.
உண்மையில் மகளிர் இட ஒதுக்கீடு என்ற விவகாரத்தில் எந்தக் கட்சிக்குமே ஒரு உள்ளார்ந்த ஈடுபாடு கிடையாது என்பதே மகளிர் இட ஒதுக்கீடு கோரிக்கை தொடர்பான வரலாறு உணர்த்தும் செய்தியாகும்.
1956 ல் காகா கலேகர் கமிட்டி பெண்கள் அனைவருமே மிக, மிகப் பின்தங்கியவர்கள் எனச் சொன்னது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு CWSI என்ற கமிட்டி முதன்முதலாக தந்த பரிந்துரை தான் மகளிர் இட ஒதுக்கீடு.அந்த கமிட்டி தந்த பரிந்துரை இது தான்; இந்தியாவில் பெண்களின் பிரதி நிதித்துவம் மிக மோசமாக உள்ளது. ஆட்சி அதிகாரம், சட்டம் இயற்றும் இடம் ஆகியவற்றில் பெண்களின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே பெண்களின் நிலை முன்னேறும். ஆகவே, முதல்கட்டமாக அரசியல் கட்சிகள் தாங்கள் நிற்கும் தொகுதிகளில் 15 சதவிகிதத்தை பெண்களுக்கு ஒதுக்க சட்டம் இயற்றலாம் என்றது.
இந்த 15 சதவிகித இட ஒதுக்கீட்டை தங்களின் கட்சிப் பெண்களுக்கு எந்தக் கட்சியும் ஒதுக்க முன்வரவில்லை. இன்று வரை இது தான் நிலை. அதனால் தான் மகளிர் இட ஒதுக்கீடு என்பதை மகளிர் ஓட்டுவங்கியை வென்றெடுக்கும் மந்திரமாக மட்டுமே அரசியல் கட்சிகள் கையாண்டு வந்தனர். நடைமுறையில் இந்த மசோதாவை நிறைவேற்ற சரியாக ஒத்துழைப்பு தரமாட்டார்கள்.
மறுபடியும் ராஜிவ்காந்தி காலத்தில் அமைக்கப்பட்ட National Perspective Plan(NPP) என்ற கமிட்டியும் கூட 30 சதவிகித இடங்களை அரசியல் கட்சிகள் பஞ்சாயத்து தொடங்கி பார்லிமெண்ட் வரை ஒதுக்கலாம் என பரிந்துரைத்தது. அப்போதும் அனைத்து அரசியல் கட்சிகளும், ”இதை எங்களால் செய்ய முடியாது. வேண்டுமானால் சட்டம் போட்டு நிறைவேற்றுங்கள்” எனக் கூறிவிட்டனர். ‘சட்டம் கொண்டு வரும் போது தங்கள் தானே அதை அங்கீகரிக்க வேண்டும் பார்த்துக் கொள்ளலாம்’ என வைத்து செய்துவிட்டனர்.
இதில் நடந்த ஒரே ஒரு முன்னேற்றம் என்னவென்றால் 1992ல் பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடங்கள் மசோதா சாத்தியமாக்கப்பட்டதாகும். அதன் பிறகு 31 ஆண்டுகள் வரை சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்குமான மசோதா சாத்தியமாகவே இல்லை. இந்த காலகட்டத்தில் பெண்கள் அமைப்புகள் தெருவில் இறங்கி நடத்திய போராட்டங்கள் கொஞ்சமா? நஞ்சமா?
இத்தனை ஆண்டுகளில் அந்தந்த அரசியல் கட்சிகளாவது தாங்களே முன்வந்து தங்கள் கட்சியில் மகளிரின் பிரதிநிதித்துவத்தை படிப்படியாக அதிகரித்து வந்திருக்கலாம். அப்படி ஒரு கட்சியும் செய்யவில்லை. சட்டமன்ற நாடாளுமன்றத்திற்கு தான் மனமில்லை என்றால், கட்சிப் பதவிகளிலாவது உரிய பிரதிநிதித்துவம் தந்திருக்கலாமே! மாவட்டம், ஒன்றியம், வட்டம் என்ற படி நிலைகளில் பெண்களுக்கு பதவிகள் கிடைத்ததா? அரசியல் கட்சிகளின் செயற்குழுக்களில், பொதுக் குழுக்களிலாவது போதுமான முக்கியத்துவம் கிடைத்ததா? கம்யூனிஸ்ட் கட்சியிலும் கிடையாது. காவி கட்சியிலும் கிடையாது. திராவிட கட்சிகளிலும் கிடையாது. சாதி கட்சிகளிலும் கிடையாது.

ஆனால், எல்லா கட்சிகளும் பெண்களின் இட ஒதுக்கிடு தொடர்பாக போராட்டங்களை தங்கள் கட்சி பெண்களை வைத்தே செய்வார்கள்! பெண்களும் கட்சி நிர்வாகிகள் அழைப்பிற்காக வந்து போராட்டங்கள் நடத்தி, தொண்டை கிழிய, ‘’மகளீர் இட ஒத்துகீடு சட்டம் இயற்று’’ என கோஷம் எழுப்புவார்கள். ஆனால், தங்கள் கட்சித் தலைமையிடம், ‘’ஏன் நமது கட்சியில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கலாமே தலைவரே’’ எனக் கேட்கத் துணியமாட்டார்கள்!
இந்திராகாந்தி பிரதமராக இருந்தார். காங்கிரஸ் கட்சிக்கும் தலைவராக இருந்தார். அவரும் இதை நிறைவேற்றவில்லை. சோனியாகாந்தி, ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, மாயாவதி என சர்வஅதிகாரமுள்ள பெண் தலைவர்கள் கட்சிக்கு தலைமை தாங்கும் கட்சிகளில் கூட இதை தாங்களே அமலாக்க முன்வரவில்லை என்பது கவனத்திற்கு உரியதாகும்.

இதனால் தான் இந்த மகளீர் இட ஒதுக்கீடு மசோதா 1996, 1998, 1999, 2005, 2008 என பல கட்டங்களில் முயற்சிக்கப்பட்டு அரசியல் கட்சிகளின் இரட்டை நிலைபாடு கபட நாடகத்தினால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது! கடைசியாக மன்மோகன் சிங் ஆட்சியில் நிறைவேற்ற முயற்சித்த போது பாஜக தடுத்தது. பிறகு தானே அரியணை ஏறிய நிலையிலும் ஒன்பதாண்டுக்கும் மேலாக கிடப்பில் போட்டுவிட்டு பதவிகாலம் முடியும் தருவாயில் காய் நகர்த்தி உள்ளது. இது எப்போது நடைமுறைக்கு வரும் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
அப்படி நிறைவேறும் பட்சத்தில் இன்றைக்கு நாடாளுமன்ற அவையில் 78 ஆக இருக்கும் பெண்களின் பிரதிநிதித்துவம் 179 ஆக உயரும். மாநிலங்கள் அவையில் 11 லிருந்து 81 ஆக உயரும்.
Also read
நீண்ட காலமாக கிடப்பிலிருக்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை வரும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வலியுறுத்தி பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 47 கட்சி தலைவர்களுக்கு தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகளும், பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்தவருமான கவிதா தனித்தனியே கடிதம் எழுதி இருந்தார் என்பது கவனத்திற்கு உரியதாகும். ஆனால், அவரே தன் கட்சியில் அப்பாவிடம் அதை நடைமுறைப்படுத்த நிர்பந்திக்கவில்லை. இந்த கடிதத்தின் பின்னணியில் பாஜக இருக்கலாம் என அப்போதே பேசப்பட்டது.
அரசியல் என்ற அதிகார இரும்புக் கதவு பல வருட போராட்டங்களுக்கு பிறகே சாத்தியமாகியுள்ளது. எப்படியோ இது வரை மறுதலிக்கப்பட்டு வந்த மகளீர் இட ஒதுக்கீடு நாடாளும்ன்றத்தில் தாக்கலாகிவிட்டது. இந்த வாய்ப்பை அறிவும், ஆற்றலும், அர்ப்பணிப்புமுள்ள பெண்களுக்கு முறையாக தர முன்வர வேண்டும் அரசியல் கட்சிகள். வீட்டுப் பெண்களுக்குள்ளேயே இதை பங்கிட்டு கொடுக்கும் அணுகுமுறையை அரசியல் கட்சித் தலைமைகள் தவிர்க்க வேண்டும். அரசியலில் வரும் பெண்களை கண்ணியமாக நடத்தும் பண்பாட்டையும் சேர்த்தே வளர்க்க வேண்டும். கட்சிப் பதவிகளிலும் இட ஒதுக்கீட்டை படிப்படியாக அமல்படுத்துங்கள்! அப்போது தான் இந்த மகளீர் இட ஒதுக்கீடு வெற்றி பெற்றதாக அர்த்தமாகும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கட்சிகளின் நிலை சிறப்பான கட்டுரை. தங்கள கட்சிகளின் பொறுப்புகளில் மகளிர் நிலை , இதில் எல்லா கட்சிகளும் ஒன்று தான்.அருமை.