கனடா குற்றச்சாட்டு; இந்தியா கொலைகார அரசா?

-சாவித்திரி கண்ணன்

ஒரு தனி நபரின் கொலை இரு நாட்டு உறவுகளில் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. காலிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட கனடாவின் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் இந்திய அரசுக்கு சம்பந்தம் உள்ளது என கனடா பிரதமரே தெரிவித்துள்ள நிலையில், இந்திய அரசின் இமேஜ் சர்வதேச அளவில் ஆட்டம் கண்டுள்ளது!

சீக்கியர்கள் அதிகமாக வாழும் ‘பஞ்சாப்’ மாநிலத்தை இந்தியாவில் இருந்து தனியாக பிரித்து, ‘காலிஸ்தான் நாடு’ உருவாக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் சில சீக்கிய இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவுக்கு அடுத்தபடியாக அதிக சீக்கியர்கள் வாழும் நாடான கனடாவில் ’காலிஸ்தான்’ தனிநாட்டிற்கான முழக்கங்கள், செயல்பாடுகள் அதிகமாக உள்ளன! சீக்கியர்கள் கனடாவில் நூற்றாண்டுகளுக்கும் மேலாக உள்ளனர். கனடா அரசியலில் ஆதிக்கம் மிகுந்த சிறுபான்மை சமூகமாக சீக்கிய சமூகம் உள்ளது கவனத்திற்குரியது. சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை அந்நாட்டு அரசியலில் பெரும் பேசுபடு பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

பஞ்சாப் காவல்துறை ஆவணங்களின்படி, ஜலந்தரின் ஃபில்லூர் பகுதியில் உள்ள பார்சிங் புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார்! தனது வாழ்வாதாரத்திற்காக 1996ஆம் ஆண்டு கனடாவுக்குச் சென்ற அவர் அந்நாட்டு குடியுரிமை பெற்று பிளம்பராக தனது வாழ்கையை தொடங்கினார். அவரது சீக்கிய இன ஒற்றுமை குறித்த செயல்பாடுகள் அங்கு பெரும் செல்வாக்கு உள்ளவராக அவரை மாற்றிவிட்டது. நல்ல பேச்சாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் குருநானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராகவும், காலிஸ்தான் தனி நாடுக்காக போராடி வரும் நீதிக்கான சீக்கியர் அமைப்பிலும் (Sikhs for Justice) தொடந்து செயல்பட்டு வந்தார்! இந்த இரண்டு அமைப்புகளுமே இந்தியாவில் தடை செய்யப்பட்டு தீவிரவாத இயக்கங்களாக அறிவிக்கப்பட்டவை.

இச்சூழலில், ஹர்தீப் சிங் அவர் வசித்த கனடாவின் சுரே நகரின் குருத்துவரா அருகில் அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்களால் கடந்த ஜுன் 18 இல் சுட்டுக் கொல்லப்பட்டார்! முன்னதாக இந்திய அரசு இவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து இருந்தது என்பதும், இவரை கைது செய்ய உதவுபவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு என தேசிய புலனாய்வு அமைப்பு அறிவிப்பு வெளியிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஹர்தீப் சிங் கொலைச் சம்பவம்  நடந்து 3 மாதங்கள் கடந்த நிலையில், அவரது கொலையில் இந்தியாவின் பங்கு இருக்க வாய்ப்புள்ளதாக குற்றச்சாட்டு வலுப்பெற்று, நாளொரு போராட்டமும், கருத்தரங்குகளுமாக வெளிநாடுகளில் உள்ள சீக்கிய சமூகம் கொந்தளிப்பில் உள்ளது. இந்த வகையில் பிரிட்டிஷ், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்களும் கூட அங்குள்ள சீக்கிய அமைப்புகளால் முற்றுகை இடப்பட்டு வருவதும் கவனத்திற்கு உரியது.

கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி  ”எங்கள் நாட்டின் குடியுரிமைப் பெற்ற முக்கிய பிரமுகர் ஒருவரின் கொலையில் இந்திய அரசின் உளவுத்துறை முகவர்கள் தொடர்பிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் இன்று நாங்கள் இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரியை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டிய நிலைக்கு ஆளாகி இருக்கிறோம். கொலையில் சம்பந்தப்பட்டவர் இந்தியாவின் வெளிநாடு புலனாய்வு அமைப்பின், ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பிரிவின் (RAW) தலைவராகச் செயல்பட்டவர் என்ற வகையில் அவர் மீது எங்கள் சந்தேகம் படிந்துள்ளது” எனத் தெரிவித்திருக்கிறார்.

சீக்கியர்களின் பொற்கோவிலில் கனடா பிரதமர் !

இத்துடன், கனடாவின் பிரதமர் ட்ரூடோ சீக்கிய சமூகத்தின் மீது அன்பும், பெருமதிப்பும் கொண்டவர். அவர் இந்தியா வந்த போது கூட சீக்கியர்களின் தங்க கோவிலுக்கு சென்று ஒரு சீக்கியரை போல வழிபட்டார். இந்தச் சூழலில் அவர் தனது புகாரில், ”இந்தியவை கோபப்படுத்தவோ, பதற்றத்தை அதிகரிக்கவோ இந்தக் குற்றச்சாடை நாங்கள் வைக்கவில்லை. இந்தக் கொலை விவகாரத்தை அலட்சியப்படுத்தாமல் இந்திய அரசு தீவிர கவனம் வைக்க வேண்டும். எங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தியத் தூதரகத்தின் அதிகாரி பவன்குமார் ராய் உடனடியாக இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும்’’ என உத்தரவிட்டார்! இப்படி ஒரு தூதரக அதிகாரி பெயரை பகிரங்கமாக பொதுவெளியில் சுட்டுவது பொதுவாக இதுவரை மரபல்ல. ஒரு வகையில் உலக அளவில் இந்தக் குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

 வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

”இந்தக் குற்றச்சாட்டு அலட்சியப்படுத்த தக்கதல்ல, நாம் இதை பகிரங்கமாக கண்டிக்க வேண்டும். அது தான் ஜனநாயகத்திற்கு வலுவூட்டும்” என அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நட்பு நாடுகளையும் கனடா கேட்டுக் கொண்டுள்ளது என செய்தி வெளியிட்டு உள்ளது வாசிங்டன் போஸ்ட்!

இந்த கொலை குற்றச்சாட்டை உடனடியாக மறுத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ”இது மிகவும் அபத்தமானது, உண்மைக்கு புறம்பானது, இந்தியா சட்டங்களுக்கு  கட்டுப்பட்ட நாடு என்று  தெரிவித்திருந்தார். இத்துடன், இந்தியா மீது அபாண்டமாக பழி சுமத்தும் கனடா,  இந்தியாவுக்கு எதிரான காலீஸ்தான் தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கிறது” எனக் குற்றம் சுமத்தினார்.

இதற்கு பதில் அளித்த கனடா பிரதமர் ட்ரூடோ, ”நாங்கள் சீக்கியர்களின் தனி நாடு கோரிக்கைக்கு எப்போதும் ஆதரவு தந்ததில்லை. அதே சமயம் கனடாவின் ஜனநாயக மரபை பேணும் கடமை எங்களுக்கு உள்ளது. அவர்களின் பேச்சு உரிமையை தடுக்க எங்கள் நாட்டு சட்டங்கள் அனுமதிக்கவில்லை” என்றார்.

ஏனென்றால், ஹர்தீப்சிங் கொலைக்கு பின் அவரது ஆதரவாளர்களில் ஒருவரும், சிக்ஸ் பார் ஜஸ்டிஸின் முக்கியத் தலைவருமான குர்பத்சிங் பன்னு என்பவர், இந்தியத் தலைவர்களுக்கு வெளிப்படையாக வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதில் அவர், ‘பிரதமர் மோடி, வெளி உறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், உள்துறை அமைச்சர் அமித்ஷா… உங்களுக்காக நாங்க வருகிறோம்!’ என பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தார்.

கனடாவின் இந்திய அதிகாரி வெளியேறும் மீதான உத்தரவிற்கு மத்திய  பாஜக அரசும் பதிலடி கொடுத்துள்ளது. இதில், டெல்லியிலுள்ள கனடா நாட்டின் முக்கிய அதிகாரியான ஒலிவியர் சில்வர்ஸ்டரை ஐந்து நாட்களுக்கு இந்தியாவை விட்டு வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இப்படி பதிலுக்கு பதில் கோபத்தை வெளிப்படுத்துவதற்கு மாறாக, இந்த விவகாரத்தின் உண்மைத் தன்மையை இந்தியா பகிரங்கப்படுத்துவதே இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும்.

சீக்கிய அமைப்புகள் வைக்கும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறது என்பது ஆதாரபூர்வமாக நிருபணம் ஆகும்பட்சத்தில், இந்திய அரசுக்கு சர்வதேச அரங்கில் பெரும் அவப் பெயர் ஏற்பட்டுவிடும். உண்மை வெளியாகும் வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time