இன்றைய இந்தியாவில் ஆங்கிலோ-இந்தியர்கள் நிலை!

-பீட்டர் துரைராஜ்

ஆங்கிலேயர்கள், இந்தியர்கள் என இரு தரப்பிலும்  புறக்கணிக்கப்பட்டவர்களே ஆங்கிலோ இந்தியர்கள்! இந்தியாவிற்கான இங்கிலாந்தின் பிணைக்கைதிகளாக உழன்றவர்கள்! ”இங்கிலாந்து எங்கள் தந்தையர் பூமி எனில், இந்தியா எங்களது தாய்நாடு” எனக் கூறும் ஆங்கிலோ இந்தியர்கள் மீது பாஜக அரசுக்கு ஏனிந்த கோபம்?

ஐரோப்பிய ஆணுக்கும், இந்தியப் பெண்ணுக்கும் பிறந்த வம்சத்தில் வந்தவர்களை ‘ஆங்கிலோ இந்தியர்கள்’ என அழைக்கிறோம். தற்போது இந்தியாவில், ஆங்கிலோ இந்திய சமூகம் அருகி வரும் சமூகமாக உள்ளது. உள்நாட்டு மக்களுக்கு ஆங்கில மொழி, மேற்கத்திய இசை மற்றும் நடனம் கற்றுத் தருகிறவர்களாக இவர்கள் அறியப்படுகிறார்கள்! மிகவும் சுய மரியாதை உள்ளவர்களாகவும், எளிமையான நடுத்தர வாழ்க்கை முறை உள்ளவர்களாகவும் உள்ளனர்.

‘ஆடுகளம் படத்தில் தப்சி, ஒரு ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடித்திருப்பார். நடிகை ஆண்ட்ரியா ஆங்கிலோ இந்திய இனத்தைச் சார்ந்தவர் தான். பல்லாவரம், பரங்கிமலை, பெரம்பூர் என சென்னையை ஒட்டியுள்ள இடங்களிலும், மதுரையில் இரயில்வே காலனியிலும், கோயமுத்தூர் போதனூர் ரயில்வே காலனியிலும் ஆங்கிலோ இந்தியர்களின் குடியிருப்புகள் உள்ளன. விடுதலைக்குப் பிறகு ஆங்கிலோ இந்தியர்கள் இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு இடம் பெயர்ந்து போனார்கள். எஞ்சியவர்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர்.

வியாபாரம் செய்ய இந்தியாவிற்கு ஆங்கிலேயர்கள் தங்கள் மனைவியரை அழைத்துவர  கட்டுப்பாடுகள்  இருந்தன. ஆறு மாத கடற்பயணம், ஆபத்து, செலவு போன்ற காரணங்களால் ஆங்கிலேயப்  பெண்கள் வருவதும் குறைவு.  இதனால் ஆரம்பகாலங்களில்,  (மொகலாயப்) போர்களினால் தங்கள் கணவரைப் பறிகொடுத்த விதவைகளையும், தாசிப் பெண்களையும் மணந்துகொண்டனர். கிழக்கிந்திய கம்பெனி இத்தகைய திருமணங்களை ஊக்குவித்தது. அப்போதுதான் தாங்கள் மீண்டும் இங்கிலாந்து திரும்ப வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கும். ஆங்கிலேயர்கள் இங்குள்ள மொழியைக் கற்பதை விட, இந்தியப் பெண்கள் ஆங்கிலம் கற்பது எளிதாக இருந்தது.

இந்தியாவில் வாழும் ஆங்கிலோ இந்தியர்கள்!

 

சட்டைக்காரி என்றும், ஆப்பக்காரி என்றும் பேச்சுவழக்கில் குறிப்பிடப்படும் ஆங்கிலோ இந்தியர்களை பற்றியச் சித்திரம் ஒவ்வொருவருக்கும் ஒருவிதமாகத் தோன்றும். இந்த சமூகத்தைப் பற்றி, அதைச் சார்ந்த ஒருவர் எழுதியுள்ள நூல் தான் “இந்தியாவின் பணையக் கைதிகள்”. ஹெர்பர்ட் ஸ்டாக் எழுதிய Hostages to India  என்ற நூல், ஜெ.நிர்மல்ராஜ், அனுராதா ரமேஷ் என்பவர்களின் மொழிபெயர்ப்பில் ‘இந்தியாவின் பிணைக்கைதிகள் – ஆங்கிலோ இந்திய சமூகத்தின் ஒரு சரித்திர ஆவணம்’  என்ற பெயரில் வந்துள்ளது.

தந்தை வழிச் சமூக மனநிலையினால்,  ஆங்கிலேயர்களின் நலனை தங்கள் நலனாக அவர்கள் நினைத்துக் கொண்டார்கள். சிப்பாய்க் கலகம் என்று ஆங்கிலேயர்களால் வருணிக்கப்பட்ட முதல் இந்திய விடுதலைப் போரில் (1857), ஆங்கிலோ இந்தியர்கள் கிழக்கிந்திய கம்பனிக்கு ஆதரவாக போராடாமல் இருந்திருந்தால், ஆங்கிலேயர்கள் தோல்வி அடைந்திருப்பார்கள். அவர்களுடைய ஒற்று, உளவு  ஆங்கிலேயர்களின் வெற்றிக்கு உதவியிருக்கின்றன. அதேபோல பிரெஞ்சு நாட்டிற்கு எதிரான போரிலும், ஆங்கிலேயர்களோடு இணைந்து போராடி வெற்றி பெற்றார்கள்.

இந்தியாவில் பிறந்த காரணத்தால் இங்குள்ள தட்பவெப்பநிலை அவர்களுக்கு ஒத்துக் கொண்டது. உள்ளூர் மொழி, சந்தை நிலவரம், உள்ளூர் நிலமை (என்ன பொருள் வாங்குவது, எப்போது வாங்குவது/விற்பது போன்றவை)  அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இது ஆங்கிலேயர்களுக்கு உதவிகரமாக இருந்தது. வியாபாரத்திலும் உதவி செய்தார்கள். கோட்டைகளில் அடுத்த கப்பல் வரும் வரை சேமிக்கப்படும்  சரக்குகளை பாதுகாத்தார்கள். இவர்கள் நகரத்தை ஒட்டியே வாழ வேண்டும் என்ற விதியும் இருந்தது. ஆனால், இவர்களை தங்களைச் சேர்ந்தவர்களாக இங்கிலாந்து நடத்தவில்லை என்கிறது இந்த நூல்.

ஆங்கிலேயர்களாலும், இந்தியர்களாலும் ஒருசேர  புறக்கணிக்கப்பட்ட ஆங்கிலோ இந்தியர்களைப் பேசுகிறது இந்த நூல். இதனைப் படித்தால்,  அவர்களைப் பற்றிய நமது கண்ணோட்டம் மாறும். அவர்கள் மீது அனுதாபமான பார்வை நமக்கு வரும். பிறரைச் சாராதிருத்தல், அவர்களுடன் புகுத்தப்பட்டு வளர்க்கப்பட்டது என்கிறார் ஆசிரியர்.

இந்த நூல், 1926 ஆம் ஆண்டு  வெளியானது. இது,  செவ்விலக்கியமாக ஆங்கிலோ இந்தியர்களால் கொண்டாடப்படுகிறது. மலபார் (கோவா) கடற்கரையில் இறங்கிய போர்த்துக்கீசியர் காலத்தில் இருந்து அவர்களது வரலாறு, சமூக வாழ்க்கையை இது பேசுகிறது. இதில் பல்வேறு சட்டதிட்டங்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன.

கிழக்கிந்திய கம்பெனியில் வேலை செய்தால் வசதி பெருகும். ஆனால் அங்கு ஆங்கிலோ இந்தியர்கள் பணிபுரிய அனுமதி மறுக்கப்பட்டது. அதே போல நெருக்கடி காலத்தில் உதவி செய்த இவர்களுக்கு இராணுவத்திலும்  அதிகாரிகளாக பணிபுரிய அனுமதி மறுக்கப்பட்டது. அரசில் வேலை மறுக்கப்பட்டது. ஆங்கிலேயத் தந்தை தன் மகனை படிக்க வைக்க இங்கிலாந்திற்கு அனுப்பலாம். ஆனால், தந்தை இறந்தால் அவன் மகன் அங்கு செல்ல முடியாது. ஆங்கிலோ இந்தியர்கள் இலண்டனுக்கு வந்தால் அங்குள்ள தமது கலாச்சாரம் பாதிப்படையும் என்று அங்குள்ளவர்கள் நினைத்தார்கள்.

இவர்களின் குறைகளை முறையீடு செய்வதற்காக, இலண்டன் சென்று, பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க அவர்களின் பிரதிநிதியாக டெரேசியா 1829 ல் இலண்டன் செல்கிறார். அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

நகரத்தைச் சார்ந்தே இருக்க வேண்டும். நிலம் வாங்குவது அவர்களுக்கு தடை செய்யப்பட்டு இருந்தது. எனவே அவர்கள் விவசாயத்தில் ஈடுபடவில்லை. வேறு கைத்தொழில்களையும் கற்றுக் கொள்ளவில்லை. வியாபாரமும் செய்யவில்லை. இதனால் அவர்கள் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இராணுவம் அல்லாத, அரசு வேலை அல்லாத  இரயில்வே, தபால் தந்தி, சுங்கம்  போன்ற துறைகளில் அவர்களுக்கு அடிமட்ட  வேலை கிடைத்தது. இவர்களது சமூக வரலாறு பல தலைப்புகளில் பேசப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு ஆய்வேடு போல இந்த நூல் உள்ளது.

சமையல்காரர்களாக, வீட்டுப் பணியாளர்களாக,   ஆங்கிலேயர்களிடம்  அடிமைகளாக இருந்த இந்தியர்களும், அடிமை முறை முடிவுக்கு வந்தவுடன் (1883), தமக்கு முதலாளிகளாக இருந்த ஆங்கிலேயர்களின் பெயர்களை தங்கள் வாரிசுகளுக்கு நன்றியறிதலுடன்  சூட்டி அவர்களும் ஆங்கிலோ இந்தியச்  சமூகத்தோடு இணைந்து கொண்டனர்.

வரலாற்று தேவைகளினால் உருவான ஒரு இனம் புறக்கணிப்புக்கு ஆளான வரலாறு இது. இவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், தங்களை மிஞ்சி விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவும்  ஆங்கிலோ இந்தியர்களுக்கு தடைகள் விதிக்கப்பட்டன. உள்ளூர் மக்களிடையே இவர்களுக்கு இருக்கும் செல்வாக்கையும் ஆங்கிலேயர்கள் விரும்பவில்லை. ஜெ. நிர்மல் ராஜ், அனுராதா ரமேஷ் ஆகிய இருவரும் நன்றாக மொழிபெயர்த்துள்ளனர். ஐநூறு ஆண்டு கால வரலாறு, நூறு பக்கங்களில் சொல்லப்பட்டுள்ளது.

சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் தங்களுக்கான பிரதி நிதித்துவம் விலக்கிக் கொள்ளப்பட்டதை எதிர்த்து போராடும் ஆங்கிலோ இந்தியர்கள்!

நாங்கள் இங்கிலாந்தின் இந்தியாவிற்கான பிணைக்கைதிகள். பிணைக் கைதிகளை தருபவரும், பெறுபவரும் அவர்களை ஒரு பொறுப்புறுதியாக கருத வேண்டும் என்கிறது நூலின் பின் குறிப்பு. தங்கள் இனம் வெட்கம் அடையும்படி எந்தத் தவறையும் இழைக்கவில்லை என்ற குறிப்போடு முடிக்கிறார் ஆசிரியர்.

நம்மை ஆட்சி செய்த இங்கிலாந்து நாட்டிற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வர முடிகிற அளவுக்கு ஐரோப்பிய அரசியல் நெகிழ்வுத் தன்மையுடன் உள்ளதை நாம் கவனத்தில் கொள்ளும் நிலையில், இங்கோ பல தலைமுறைகளைக் கண்ட ஆங்கிலோ இந்தியர்களின் நாடாளுமன்ற, சட்டமன்ற  பிரதி நிதித்துவத்தை  நாம் பறித்துக் கொண்டிருக்கிறோம்.

விடுதலை அடைந்த இந்தியாவில்,  நாடாளுமன்றத்திற்கு  இரண்டு ஆங்கிலோ இந்திய  உறுப்பினர்களை அரசு   நியமிக்கும். அதேபோல, மாநில சட்டமன்றங்களில் ஒரு இடமும் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது. அதனை பாஜக அரசு 2019 ல் நீக்கிவிட்டது என்பது ஒரு வருத்தமான செய்தியாகும். எந்த விதத்திலும் அச்சுறுத்தலாக கருத முடியாத – நம்மைச் சார்ந்து வாழும் இந்த எளிய சமூகத்திற்கான ஒரு சமூக அங்கீகாரத்தை ரத்து செய்திருக்க வேண்டியதில்லை என்பது பரவலான கருத்தாக உள்ளது.

சுமார் 300 ஆண்டுகாலம் நமது நாட்டை ஆட்சி செய்த ஆங்கிலேயேர்கள் இந்திய சமூகத்தில் பல முற்போக்கான முன்னெடுப்புகளை செய்தவர்கள். கல்வியிலும்,வேலை வாய்ப்பிலும் அனைத்து தரப்பு இந்தியருக்குமான வாய்ப்புகளை வழங்கியவர்கள். அவர்கள் நம்மைவிட்டுச் சென்ற போது இங்கு விட்டுச்சென்ற நினைவுச் சின்னங்கள் ஏராளம்! இதில் ஆங்கிலோ இந்தியர்கள் உயிருள்ள நினைவுச் சின்னமாக நம்மிடையே வாழ்ந்து கொண்டுள்ளனர். இவர்களை தனிமைப்படுத்திவிடாமல் நம்முடன் அரவணைத்துச் செல்வதே  நவீன நாகரீக இந்திய சமூகத்தின் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

– பீட்டர் துரைராஜ்

நூல்; இந்தியாவின் பிணைக் கைதிகள்

சந்தியா பதிப்பகம்/

சென்னை –83/044- 24896979/

பக்கம் 111/ ரூ.100.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time