எம்.ஜி.ஆரின் சத்யா ஸ்டுடியோ தற்போது எம்.ஜி.ஆர்.ஜானகி மகளிர் கலைக் கல்லூரியாக மாற்றமடைந்து சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கும் எளிய குடும்பத்து பெண்களின் கல்விக் கோவிலாக திகழ்கிறது! பல்லாயிரம் மாணவிகள் பயிலும் இந்தக் கல்லூரிக்கு ஒரு தீராத சுகாதார பிரச்சினை ஆண்டுக்கணக்கில் தொடர்கிறது.
எம்.ஜி.ஆரின் சத்யா ஸ்டுடியோ பிரைவே லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த இடத்தின் ஒரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதில் மாநகராட்சியின் அனுமதியின்றி சுமார் 50 க்கு மேற்பட்ட மாடுகளைக் கொண்ட ஒரு மாட்டுப் பண்ணை இயங்கி வருகிறது. நகரத்தின் மையப் பகுதியில் அந்தக் கால முறைப்படி ஓலைவேய்ந்த குடிசையில் மாடுகளை வரிசையாக கட்டி வைக்கப்பட்டு இது நடத்தப்படுகிறது. இவ்வளவு பிரம்மாண்ட மாட்டுப் பண்ணை எனும் போது எந்தளவுக்கு சாணம் மற்றும் மாட்டின் மூத்திரக் கழிவுகள் வெளியாகும் எனச் சொல்லத் தேவையில்லை.

இதுவே ஒரு விவசாய நிலத்தை சார்ந்து நடத்தப்படுமானால், அந்த நிலமே மாடு தரும் இயற்கை உரத்தால் செழித்து திளைக்கும்.சத்தான உணவுப் பயிர்களும் கிடைக்கும். ஆனால், கல்லூரியை ஒட்டி நடத்தப்படும் மாட்டுப் பண்ணையினால் இந்தக் கழிவுகள் நிலத்தை ஊடுருவி நிலத்தடி நீரை கெடுத்துவிடுகின்றன. மாசுபட்ட நிலத்தடி நீரால் கல்லூரியில் மாணவிகள் பயன்படுத்தும் கிணற்று நீரில் துர்நாற்றம் ஏற்பட்டு, மாணவிகள் குடிநீரை பயன்படுத்த முடியாத அவல நிலை தோன்றியுள்ளது. இது மாணவிகளின் உடல் நலத்திற்கு கேடு ஏற்படுத்தக் கூடியது. மாட்டுப் பண்ணையால் அப்பகுதியில் கொசு பெருக்கம் அதிகமாகியுள்ளதாகவும் சொல்கிறார்கள்!
மேலும் இந்த மாட்டுப் பண்ணையின் கழிவு அடையாற்றிலும் சட்டவிரோதமாக குழாய் மூலம் கலக்கப்படுகிறது. இதனால் அடையாறு கால்வாயும் பாழாகிறது. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகத்திலும், பட்டிணப்பக்கம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். மாநகராட்சியும் சம்பந்தப்பட்ட மாட்டுப் பண்ணையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டு விட்டுவிட்டது. இந்த நோட்டீஸை மாட்டுப் பண்ணை நடத்துபவர்கள் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.
சம்பந்தப்பட்ட பிரச்சினையில் அரசு தலையிட்டு ஆயிரக்கணக்கான இளம் மாணவிகளின் கல்வியும், ஆரோக்கியமும் பாதிப்படைவதை தடுத்திட வேண்டும் என்பது கல்லூரி நிர்வாகத்தின் கோரிக்கையாக உள்ளது. செல்வாக்கான முன்னாள் முதல்வரும், கொடை வள்ளலுமான எம்.ஜி.ஆரின் பெயரிலான கல்விப் பணிக்கு உறுதுணையாக அரசு நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Leave a Reply