பாஜகவின் அழித்தொழிப்பு அஸ்த்திரங்கள்!

-சாவித்திரி கண்ணன்

தலைமைப் பண்பு இல்லாதவர்களால் கட்சிகள் எவ்வளவு தடுமாற்றங்களை சந்திக்கும் என்பதற்கு இன்றைய அதிமுகவும், திமுகவுமே சாட்சி! அதிமுக சந்திக்கும் அவலங்களுக்கு அவர்கள் செய்த முறைகேடுகள் வழி சமைத்துள்ளன. அழிவை நோக்கி அதிமுகவை நகர்த்திக் கொண்டே, திமுகவுக்கு பக்கா கெட்ச் போட்டுள்ளது பாஜக!

நேற்று அரசியலுக்கு வந்த ஒரு கத்துக்குட்டித் தலைவர் அண்ணாமலையிடம் மிகப் பெரும் தொண்டர் பட்டாளம் உள்ள கட்சியான அதிமுக, அடிக்கடி குட்டு வாங்கிக் கொண்டு, டெல்லி எஜமானர்களிடம் போய் அழுது புலம்புவது அவலத்திலும் பேரவலம்! டெல்லி எஜமானர்களோ.., இங்கிருப்பவனை தூண்டி திட்ட வைத்து, அடிபட்ட அதிகவினர் அழுது வரும் போது, ”பார்க்கமாட்டேன் போ…” என கதவை சாத்தி அலைக்கழித்து…புலம்ப வைப்பது.. ஐயோ பரிதாபம்!

”ஊழல் செய்திருக்காங்க..அதை வச்சு அவங்க, இவங்கள ஊரறிய, உலகறிய அடிமைப்படுத்தி ஆட்டுவிக்கிறாங்க!’’ அப்படின்னு மக்கள் புரிஞ்சிகிட்டாலும். இப்ப திமுகவும் தான் அதிமுகவை மிஞ்சும் ஊழலை செய்யத் தான் செய்கிறது! இதோ செந்தில் பாலாஜி டாஸ்மாக்கிலே செய்துள்ள அனைத்தையும் ரெய்டு பண்ணி எடுத்து வச்சிருக்காங்க…!

மணல் கொள்ளையில் துரைமுருகன் சாதனை படைத்துக் கொண்டுள்ளார் என்பது தற்போதைய மணல் குவாரிகளில் செய்த ரெய்டுகளில் தெரிய வந்திருக்காதா?

கே.என்.நேரு அன்றைய வேலுமணியை மிஞ்சும் அளவுக்கு முறைகேடுகளில் ‘ரெக்கார்ட் பிரேக்’ செய்து கொண்டுள்ளார்.

மிகக் குறுகிய காலத்தில் ‘மதுரையில் தனக்கு மிஞ்சிய செல்வந்தர் இல்லை’ என மூர்த்தி வெற்றிகரமாக உலா வருகிறார்!

‘உயர்கல்வித் துறையை பொன்முடி பொன்முட்டையிடும் வாத்தாக’ பாவித்துக் கொண்டுள்ளார்…!

ஆனாலும், திமுகவினர் கெத்தாக பாஜகவையும், மோடியையும் விமர்சிக்க அனுமதிக்கிறாங்களே. பொதுவெளியிலும், நாடாளுமன்றத்திலும் கூட திமுகவினர் பாஜகவை நன்கு விமர்சிக்கிறார்களே..! பாஜகவை விமர்சிக்க, விமர்சிக்க திமுகவின் மதிப்பும், வாக்குவங்கியும் பலப்பட்டுக் கொண்டே வருகிறது…என்பது மறுக்க முடியாத உண்மை!

அதே சமயம் பாஜகவின் காலடியில் வீழ்ந்து மிதிபட்டும், சூடுசொரணை இல்லாமல் கெஞ்சிக் கொண்டிருக்கும் அதிமுகவின் வாக்கு வங்கி சரியாதா? அப்படி சரிந்து கொண்டிருக்கும் அதிமுகவின் வாக்கு வங்கியால் பலனடையப் போகும் கட்சியாக பாஜகவை கட்டமைக்க வேண்டும் என்பது தான் பாஜக மேலிடம் அண்ணாமலைக்கு தந்திருக்கும் அசைண்மெண்டாகும்.

பொதுவாக தொட்டவர்களை மோடி என்றென்றும் விட்டு வைத்ததில்லை.

திமுகவை தற்போது உயிர்ப்போடு வாழவிட்டு, அவர்கள் செய்யும் முறைகேடுகளை ரெய்டு நடத்தி அறிந்து கொண்டு, மறைமுக பேர அரசியலில் ஆதாயம் அடைகிறது பாஜக.

அந்த மறைமுக பேர அரசியல் என்பது இது தான்;

# போக்குவரத்து துறை, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் தொழிலாளர் விரோத சட்ட அமலாக்கங்கள்..!

# பழவேற்காடு தொடங்கி கன்னியாகுமரி வரை அதானியின் தொழிற் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது. அதானி எண்டர்பிரைசஸ் மிகப் பெரிய டேட்டா சென்டரை சென்னையில் துவக்கி தமிழகத்தை அங்குலம், அங்குலமாக விழுங்கி வருகிறது. இந்தியாவின் மிகப்பெரும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைத்துள்ளார் கவுதம் அதானி. அவரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதினாலேயே தமிழக மின்துறை பெரும் கடனாளியாகி உள்ளது.

தமிழகத்தை விழுங்கி வரும் அதானி குழுமம்

# நில ஒருங்கிணைப்பு மசோதாவை நிறைவேற்றி தமிழக விளை நிலங்களை, நீர் நிலைகளை கார்ப்பரேட்களிடம் அள்ளித் தருவது.

# மோட்டார் வாகன சட்டத்தை அமலாக்கி வாகன ஓட்டிகளிடம் அபரிமிதமான வசூல்வேட்டை நடத்துவது!

# ஒருபக்கம் சனாதன எதிர்ப்பை மேடையில் பேசிக் கொண்டு திமுக அரசு பதவி ஏற்ற பிறகு நடந்த சுமார் ஆயிரம் குட முழுக்கிலும் – நீதிமன்றத்தின்  தமிழ் மந்திரங்களையும் 50 சதவிகிதம் இணைத்து செய்ய வேண்டும் என்ற உத்தரவை மீறி – சமஸ்கிருத, சானாதன முறைப்படி மட்டுமே நிகழ்த்துவது!

# கல்வித் துறையில் தேசிய கல்விக் கொள்கையை முற்ற முழுக்க பின்பற்றி செயல்படுத்துவது. தமிழ் நாட்டிற்கான தனித்துவ கல்வி கொள்கைக்காக செயல்பட்ட ஜவஹர் நேசனை குழுவில் இருந்து வெளியேற்றியது..!

# தமிழக சட்டமன்றத்தில் சட்டப்படியான அதிமுகவிற்கு துணைத் தலைவர் பதவி வழங்காமல், வெறும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஒ.பி.எஸுக்கு பாஜகவின் நிர்பந்தத்தால் தந்தது!

இப்படியாக நிர்வாக ரீதியாக பாஜக அரசுடன் 100 சதவிகித ஒத்துழைப்பை வழங்கி வருவதால் இன்றைக்கு திமுக அரசு செய்யும் ஊழல் முறைகேடுகளை கண்டும் காணாமல் இருப்பது மட்டுமல்ல, கெத்தாக பாஜக எதிர்ப்பு அரசியலில் ஈடுபடவும் வாய்ப்பு தந்துள்ளது பாஜக. அப்படி பாஜகவை எதிர்த்து பேச அனுமதித்து உள்ளதால் தான் திமுக மீது மக்களுக்கு சந்தேகம் வராது என சகிப்புத் தன்மை காட்டுகிறது பாஜக.

திராவிட கட்சிகளின் ஊழல் முறைகேடுகளே பாஜகவின் அஸ்த்திரங்கள்! அன்றைக்கு அதிமுக ஆட்சி ஊழல்களை ஸ்டாலின் பட்டியல் போட்டு கவர்னர் வழியாக பாஜக கரங்களில் சேர்த்தார் ஸ்டாலின். எடப்பாடி அதே பாணியில் மோடி,அமித்ஷாவை பார்த்தே தந்துள்ளார். எடுத்து பழக்கப்பட்ட கையும், காட்டிக் கொடுத்து பகை தீர்க்கும் மனமும் திருந்துவதில்லை. இன்று நீ! நாளை நான்! அதாவது, எதிரியின் கொடுங்கரங்களில் இவர்கள் தாங்களாகவே வலிந்து சென்று தலைமயிரைத் தருகிறார்கள்!

இன்றைய அதிமுகவின் இழி நிலையை நாளை எதிர்கட்சியாக இருக்கும் போது திமுக சந்திக்க வாய்ப்புள்ளது. இன்று ஆட்சியில் இருக்கும் திமுகவை ஒரு காமதேனு போல பாவித்து பலனை அறுவடை செய்து கொண்டுள்ளது பாஜக. ஆட்சி முடிவுக்கு வரும் தருவாயில் நன்றாக வைத்து செய்வார்கள்! தப்ப முடியாது.

இரக்கம் காட்டவும் மாட்டார்கள்!

ஏனெனில், அவர்களின் நோக்கம் திராவிட கட்சிகளை அடிமைத் தளைக்குள் கொண்டு வருவது தான். முதலில் ஒரு திராவிட கட்சியை ஒழித்து விட்டுத் தான் அடுத்த கட்சி மீது கைவைக்கும் பாஜக. இன்று அதிமுக! நாளை திமுக!

இன்னும் ஐந்து, பத்து ஆண்டுகளில் தமிழக அரசியல் சூழல் எப்படி இருக்க வேண்டும் எனத் தெளிவாக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது பாஜக. யார் எதை விதைத்தார்களோ அது தான் முளைக்கும். அதைத் தான் அறுவடை செய்ய வேண்டும். இதை இன்றைய திமுக தலைமை உணர மறுக்கிறது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time