சர்வதேச நாடுகளிடம் மோடிக்கு ‘சப்போர்ட்’ இல்லை!

-ச.அருணாசலம்

கனடாவின் குற்றச்சாட்டுகள் இன்று சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றதற்கும், இரு நாட்டு உறவுகள் சீர்குலைந்து  போனதற்கும் என்ன காரணம்? அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கனடாவை ஆதரிப்பது ஏன்? சர்வதேச மதிப்பீட்டில் இது இந்தியாவுக்கு சரிவா? இந்தியாவின் அணுகுமுறை மாறுமா..? உண்மைத் தேடலில் ஒரு அலசல்;

இப் பிரச்சினையின் அடிப்படை அம்சங்கள் இரண்டு தான்;

ஒன்று, உலக நாடுகள் தங்களிடையேயான ராஜ்ஜிய விவகாரங்களில் ( state affairs) உரிய – அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட – சர்வதேச விதிமுறைகளை, நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமா?  இல்லையா? என்பது தான்.

இரண்டாவது அம்சம் Transnational aggression என்று அழைக்கப்படும் எல்லை தாண்டிய ஆளுமையை எந்த நாடும் கையிலெடுப்பதை அனுமதிக்க முடியாது என்ற நிலைப்பாடுதான்.

”கனடா  மண்ணில் , அதன் குடியுரிமை பெற்ற குடிமகனை சட்டத்திற்கு புறம்பாக ஒரு அந்நிய நாடு கொலை செயவதை கனடா ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது, குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.’’என்பதே கனடா அரசின் அடிப்படை வாதம், குற்றச்சாட்டு எல்லாம்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக கருதப்படும் இந்தியா மீது விழுந்த கரும்புள்ளியாக இது உலகினர் கண்களில் தோன்றுகிறது.

ஆனால், இந்திய அரசோ இந்த குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதில் கூறாமல் – விசாரணைக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றோ, இந்தியாவிற்கு இதில் சம்பந்தம் இல்லையென்றோ நேரடியாக பதிலெதுவும் கூறாமல்,

இது “அபாண்டமான, அபத்தமான குற்றச்சாட்டு, கனடா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறது” என்று கூறி கனடா நாட்டு தூதரை இந்தியாவிலிருந்து வெளியேறுமாறு அதிரடியாக உத்தரவிட்டது.

கனடா எழுப்பிய கேள்வியை இந்திய அரசு கண்டு கொள்ளவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.

‘அபத்தமான குற்றச்சாட்டு’ என்று இந்திய அரசு கூறிய போதும், இந்துத்துவா கூட்டமும், “வாட்ஸ் அப்” வீர்ர்களும் இந்தியாவின் மகத்துவத்திற்கு கிடைத்த வெற்றி இது என கொண்டாடி வருவதை காண்கிறோம். இவர்கள் இந்தியாவின் பலத்திற்கு இந்தக் கொலையை ஒரு சான்றாக எண்ணுகின்றனர் . இவர்களது பார்வையில், ‘இந்திய உளவுத்துறைக்கு இக்கொலையில் பங்கு உள்ளது, அது போற்றப்பட வேண்டும்’ என்பதுதான்! இது இந்தியாவிற்கும், கனடாவிற்குமான வர்த்தக மற்றும் கலாச்சார உறவை கடுமையாக பாதிப்படையச் செய்யும்.


ஆனால், முன்னாள் அரசு அதிகாரிகள் , குறிப்பாக உளவுத்துறை மற்றும்  வெளி விவகாரத்துறை முன்னாள் அதிகாரிகளும் ஒருசில வெளிவிவகார “மேதாவி”களும் ”காலிஸ்தான் தீவிரவாதம் கனடாவில் தழைத்து வளர்கிறது. இது இந்தியாவிற்கு பேராபத்து. கனடா அரசு ‘இவர்களை’ கட்டுக்குள் வைக்கவில்லை. கனடா பிரதமர் வாக்கு வங்கி அரசியலுக்காக (Vote bank politics) இத்தகைய குற்றச்சாட்டை எழுப்புகிறார். அவரது செல்வாக்கு சரிந்த நிலையில் வரும் தேர்தலில் சீக்கியர்கள் ஆதரவு தமக்கு தேவை என்பதால், இத்தகைய பிரச்சினைகளை எழுப்புகிறார்” என்றெல்லாம் கூறுகின்றனர். மேலும், ”ட்ரூடோ எந்த ஆதாரமும் இல்லாமல் இந்தியா மீது குற்றஞ்சாட்டுகிறார்” என பேசுகிறார்களே ஒழிய, ”இந்திய உளவுத் துறைக்கு இக்கொலையில் சம்பந்தமுள்ளதா?” என்ற அடிப்படைக் கேள்விக்கு இவர்கள் யாரிடமும் பதிலில்லை, அதைப் பற்றி பேசவும் இவர்கள் தயாரில்லை. இது மட்டுமின்றி இவர்கள் கனடாவில் அமைதியாக வாழும் இந்தியர்களையும் கனடா அரசுக்கு எதிராகத் தூண்டி போராட வைக்கிறார்கள். இது கனடா அரசுக்கும், அங்குள்ள இந்தியர்களுக்குமான உறவில் விரிசலைத் தான் ஏற்படுத்தும்.

கனடாவில் இந்தியர்களை போராடத் தூண்டும் பாஜக அரசு!

காலிஸ்தான் காரணமா?

காலிஸ்தான் என்ற சீக்கிய தனிநாடு கோரிக்கையின் பின்னால்  பெரும்பான்மையான இந்திய சீக்கியர்கள் (பஞ்சாபில்) ஒரு போதும் திரண்டதில்லை. அனந்தபூர் சாகிப் தீர்மானத்திற்காக
1980 களில் சீக்கியர்கள் போராடிய போதும், பிந்தரன்வாலே காலத்திலும்கூட காலிஸ்தான்
கோரிக்கை  மிகக் குறுகிய மக்கள் மத்தியில் தான் செல்வாக்கு பெற்றது. வெளிநாட்டில் வாழும் சீக்கியர்களும் இந்தப் போக்கிற்கு விதி விலக்கல்ல. ஆனால், ஒருசில குழுக்களும், அமைப்பினரும் இந்த கோரிக்கையை தூக்கிப் பிடித்து சீக்கியர்களின் பிரச்சினைகளுக்கு எல்லாம் ஒரே தீர்வு காலிஸ்தான் தான் என பிரச்சாரம் செய்தனர். ஆனால் அந்த போராட்டம் 1990களில் பிசுபிசுத்து விட்டது.

ஆனால், அந்த கால கட்டத்தில் நடந்த இந்திய அரசின் அடக்குமுறைகளினாலும், சட்டத்தை மீறிய அரச பயங்கரவாத கொலைகளினாலும் (Extra judicial killings) லட்சக்கணக்கான சீக்கிய இளைஞர்கள் மாண்டனர்! காணாமல் போயினர்! இதனால் பெரும் திரளான சீக்கியர்கள் புலம் பெயர்ந்தனர். அவர்கள் மனத்தில் ஆறாத ரணம் இருந்தது. சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியல் நிலைமை 1990களில் சரியானாலும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும், கொடுமைகளுக்கும் கைமாறு செய்யும் விதத்தில் இந்திய அரசும், பாதுகாப்பு அமைப்புகளும் ஒரு சமாதான அரசியல் முடிவை பஞ்சாப் சீக்கிய மக்களுக்கு வழங்கவில்லை.

சீக்கியர்களிடம் அதுவும் புலம்பெயர்ந்த சீக்கிய குடும்பங்களிடையே இந்த ரணம் ஆறாது இருந்தாலும்,  அவர்கள் பொதுவாக சட்டத்துக்கு புறம்பான காரியங்களில் தாங்கள் வசிக்கும் நாடுகளில் ஈடுபடவில்லை.


பஞ்சாபிலும் காலிஸ்தான் கோரிக்கைக்கு சொல்லிக் கொள்ளும்படி எந்த ஆதரவும் மக்கள் மத்தியில் இல்லை.  இந்திய அரசும், காவல்துறையும் ஒருவரை தீவிரவாதி என்று கூறிவிட்டால்,
இந்திய நீதிமன்றங்கள் வேண்டுமானால் அத்தகைய குற்றச்சாட்டை உபா(UAPA) சட்ட அடிப்படையில் ஏற்றுக்கொள்ளுமே ஒழிய, மற்ற நாட்டு அரசுகள் இந்த குற்றச்சாட்டை அப்படியே ஏற்றுக்கொண்டு, ஒருவரை கைது செய்யாது. அவரது செயல்களை முடக்காது, நாடு கடத்தாது.

முறையான ஆதாரங்களும், முறையான நடைமுறைகளும் மேலை நாடுகளில் சட்ட வழிமுறைக்கு அடிப்படை தேவை. இதன் அடிப்படையில்தான் இந்தியாவின் கோரிக்கைகள் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் குறித்த இந்திய கோரிக்கைகள் கனடா அரசினால் – அவை வெறும் குற்றச்சாட்டுகள்தான்,  உரிய ஆதாரங்கள் ஏதுமில்லை – என நிராகரிக்கப்பட்டன.


என்கவுண்டர்களையும்,  எக்ஸ்டிரா ஜுடீஷியல் கொலைகளையும் பார்த்து பழகிவிட்ட இந்திய மக்களுக்கு இத்தகைய மனித உரிமை மீறல்கள் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வாகத் தோன்றலாம்! குறிப்பாக 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் மோடி அரசு 800 என்கவுண்டர்களை செய்துள்ளதாக பிரண்ட் லைன் கூறியுள்ளது கவனத்திற்கு உரியது. ஆனால், கனடா, அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் பேச்சுரிமையும், எழுத்துரிமையும், சுதந்திரமும் இந்தியாவை விட பன்மடங்கு நடைமுறையில் செயல்படுத்தப்படுகிறது, போற்றப்படுகிறது.

எனவே, ஒருவரை ‘காலிஸ்தான் தீவிரவாதி ‘ என இந்திய அரசும், இந்திய பாதுகாப்பு அமைப்புகளும் கூறியவுடன் மறுப்பேதும் இன்றி எந்த வெளிநாட்டு அரசும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

ஐந்து கண்கள் (Five Eyes)

‘பைவ் ஐஸ்’ என்றழைக்கப்படும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் பிரிட்டன் ஆகிய ஐந்து நாடுகளின் உளவு அமைப்புகளின் கூட்டமைப்பு தங்களிடையே  உளவு தகவல்கள் பரிமாற்றத்திற்கு வழிவகை செய்து தங்குதடையற்ற ஒத்துழைப்பை ஏற்படுத்த அமைக்கப்பட்டதாகும்.

இந்த ஐந்து கண்கள் நாடுகளில் ஒன்றான அமெரிக்கா தான் இக்கொலையில் இந்திய உளவுத் துறையின் பங்கை உளவுத் தகவலாக கனடாவிடம் கொடுத்துள்ளதாக ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டு உள்ளது. இதன் அடிப்படையில் தான் ஐந்து நாடுகளின் தலைவர்களும் இந்திய பிரதமர் மோடியிடம் இப்பிரச்சினை குறித்து ஜி20 மாநாட்டின் போது பேசியதாகவும் தெரிகிறது. இந்திய அரசின் பதில் உண்மைக்கு நெருக்கமாக இல்லை என்பதால், கனடா நாட்டு பிரதமர் கனடா பாராளுமன்றத்தில் இப் பிரச்சினையை போட்டு உடைக்க வேண்டியதாயிற்று.

கனடா பாராளுமன்றத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

எனவே, ஆதாரங்கள் இல்லாமலோ, உள் நாட்டு ஓட்டு வங்கிக்காகவோ இப்பிரச்சினை எழுப்ப படவில்லை. அனைத்து நாடுகளும் தங்களது ” இறையாண்மை” யை நிலை நாட்டவே இப்பிரச்சினையின் ஆழத்திற்கு சென்று உண்மையை நிலைநாட்ட முயல்கின்றனர்.

எனவே, பிரச்சினையை திசை திருப்புவதோ, ராஜ்ஜிய விவகாரங்களில் தடாலடியாக இறங்கி விசா மறுப்பதோ, தீவிரவாதிகளின் புகலிடம் கனடா என்று பேசுவதோ தீர்வு அல்ல. இவ்வாதங்களெல்லாம் சங்கிகளை ஏமாற்ற அல்லது முட்டுக் கொடுக்க உதவுமே அன்றி, உண்மையை உலகிற்கு எடுத்துரைக்க உதவாது.

சங்கிகளும், பக்த கோடிகளும் ஆளுபவர்க்கு சாமரம் வீசும் கோடி மீடியாக்களும் விலை போன அல்லது விவரமற்ற சில பத்திரிக்கையாளர்களும் பிரச்சினையை திசை திருப்பலாம் .

நிஜ்ஜார் கனடாவில் குருத்வாராவுக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்ட அன்று ட்விட்டரில் ஒருவர் ” காலிஸ்தானிகள் ஈக்களை போன்று வீழ்கின்றனர்” என ட்வீட் போட்டார். இதற்கு அர்த்தம் பாகிஸ்தானில் உள்ள லாகூரில் பரம்ஜிட் சிங் பஞ்வார் என்ற காலிஸ்தான் ஆதரவாளர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டதும், லண்டனில் பரமிங்ஹாமில் அவதார்சிங் கண்டா கொலை செய்யப்பட்டதும் இம்மூன்று கொலைகளுமே இந்திய உளவுத்துறையின் கைங்கரியமே என பாராட்டுவதுதான் .

‘ஸ்கின் டாக்டர்’   என்ற ட்விட்டர் கனடா நாட்டின் புதிய ஜனநாயக கட்சி தலைவர் ஜகமீத் சிங்கை மிரட்டும் வகையில் ஒரு ட்வீட் போட்டுள்ளது. நிஜ்ஜாரின் கொலைக்கு மோடிதான் காரணம் என்று ஜகமீத் சிங் பேசியதை கண்டித்து, மோடியை உன்னால் ஒருபோதும் ஒன்றும் செய்யமுடியாது, பாதுகாப்பாக இருந்து கொள் இல்லையெனில் நிஜ்ஜாரை நீ விரைவில் மேலுலகில்சந்திப்பாய் என மிரட்டல் ட்வீட் போடப்பட்டது.

குஜராத்தில் மோடி ஆட்சியில் , மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டதும், அவ்வழக்கு குளறுபடிகளால் இழுத்து மூடப்பட்டதும், சொராபுதீன் என்கவுண்டரில் தொடங்கி இஷ்ரத் ஜகான், கவுசர் பீ, பிரஜாபதி
என 40 நபர்கள் மோடியை கொல்ல வந்தவர்கள் என என்கவுண்டர் செய்யப்பட்டதும், இதில் இருந்து மோடியை காப்பாற்றியதும் ஜனநாயகத்திற்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் ஒரு போதும் உதவாது.


மேலும், இந்திய உளவுத்துறை கனடா அரசியல் தளத்தில் சில தலைவர்களை விலைக்கு வாங்குவதாகவும், சிலரை மடக்க பெரும் பணம் செலவழித்ததாகவும் கனடா காவல்துறை குற்றம் சாட்டிய வழக்கு கனடா உச்சநீதிமன்றம் வரை சென்றதும் கவனிக்கத்தக்கது.

இத்தகைய பின்னணியில் வெடித்துள்ள இந்த குற்றச்சாட்டு மூலம்இந்திய ஆட்சியாளர்கள் மீது கறை விழுந்துள்ளது. இதைக் களைய வேண்டிய பொறுப்பு நமது ஆட்சியாளர்களுக்கு உள்ளது.

அமெரிக்கா  இரட்டை வேடம் போடுவதை – அமெரிக்க சி ஐ ஏ நிறுவனத்தின் செயல்பாடுகளை- எப்படி நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதோ, அதே நிலைப்பாட்டை தான், அதே அளவு கோலைத் தான் இந்த விவகாரத்திலும் ஜனநாயக ஆர்வலர்கள் கடைபிடிக்க வேண்டும்.

சத்யமேவ ஜெயதே ‘வாய்மையே வெல்லும்’ என்ற கொள்கையை உயர்த்தி பிடிக்கும் இந்திய நாட்டிற்கு மற்ற நாடுகளின் இறையாண்மையை மதித்து நடக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.

ஒரு நாட்டினது பலம் அதனுடைய ராணுவ பலத்தில் மட்டும் இல்லை அதனுடைய நியாயமான நடத்தையிலும் கொள்கையிலுமே உள்ளது .
உண்மையை கண்டறிவதும், தவறு நடந்திருந்தால் திருத்திக் கொள்வதும் மனிதனுக்கு அழகு என்றால், அதே நிலையை நாட்டுக்கும் பொருத்திப் பார்த்து அணுகுவதே உண்மையான தேச பக்தி !

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time