ஜனநாயகத்தின் பெயரிலான வாக்கு முறை பற்றி கள ஆய்வு செய்து பல அதிர்ச்சி தரத்தக்க உண்மைகளை வெளிக் கொண்டு வந்துள்ளார் இளந்திருமாறன்! தஞ்சை தரணி தான் சொந்த ஊர்! ஆனால்,அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக 15 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு தமிழகத்தில் ஏதாவது. அரசியல் மாற்றம் வேண்டும் என்பதற்காக எம்.எஸ்.உதயமூர்த்தியின் மக்கள் சக்தி இயக்கம்,சகாயம் ஐ.ஏ.எஸ்சின் மக்கள் பாதை இயக்கம் (மாநில ஒருங்கிணைப்பாளர்) ஆகியவற்றிலும் தீவிரமாக பணியாற்றியவர்! தற்போதுள்ள மோசடிகளை தவிர்க்கவும், வாக்களிக்க வரமுடியாதவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கத்தக்க வகையிலும் ஒரு சாப்ட்வேர் உருவாக்கியுள்ளார்!
ஜனநாயகத்தை விட இன்னொரு ஆரோக்கியமான வழிமுறை உலகில் இல்லை..இதில் என்ன குறை காண்கிறீர்கள்?
ஜனநாயக வழிமுறை என்பது தான் ஆகச் சிறந்த வழிமுறை என்றாலும் அந்த ஜனநாயகத்தை அமல்படுத்துவதில் காட்டும் அலட்சியத்தால், அதிகபட்ச மக்களால் நிராகரிக்கப்படுவர்களிடம் ஆட்சியை தூக்கி கொடுக்கிறோம். இங்கு பெரும்பான்மை மக்கள் வாக்களிப்பதேயில்லை. குறைந்த அளவிலான மக்களின் ஓட்டுக்களை வாங்கியவர்களிடம் ஆட்சியும்,அதிகாரமும் வழங்கப்பட்டுவிடுகிறது என்பது தான் சோகம்!
ஓவ்வொரு தேர்தலிலும் சராசரியாக 60% முதல் 70% வரை வாக்குகள் பதிவாவதாக தேர்தல் ஆணையம் சொல்வதெல்லாம் பொய்யா ?
அது பொய்யும் அல்ல, உண்மையும் அல்ல . அதாவது தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் உள்ள மக்களைக் கணக்கில் கொண்டு மட்டுமே இந்த சதவிகித கூறுவார்கள். உண்மையில் 18 வயது நிரம்பி வாக்களிக்கத் தகுதி பெற்ற , ஆனால் வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள் அவர்கள் கணக்கில் வராது!
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலின் போது நடந்த ஒட்டுப் பதிவின் அதிகாரப்பூர்வமான தகவல் இது.
இந்திய அரசின் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கு மற்றும் ஏற்ற விகிதாச்சார அடிப்படையில் தமிழ் நாட்டின் தற்போதைய மொத்த மக்கள் தொகை சுமார் 8.2 கோடி. இதில் 18 வயது நிரம்பியவர்கள் சுமார் 6.5 கோடி. ஆனால் வாக்காளர் பட்டியலின் மொத்த எண்ணிக்கை 5.93 கோடி தான். கிட்டத்தட்ட 57 லட்சம் பேர் பட்டியலில் இடம் பெற வில்லை. இவர்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம், கடவுச் சீட்டு, ரேஷன் அட்டை உள்ளிட்ட பல ஆவணங்கள் இருந்தாலும், இவர்கள் வாக்காளர் அடையாள அட்டை மட்டும் வாங்கவில்லை. காரணம், வாக்காளர் அடையாள அட்டையால் ஒட்டு போடுவது தவிர வேறு எதற்கும் பயனில்லை என்பதும் பொதுவாக வாக்களிக்கப் போவதே இல்லை பிறகு எதற்கு இதற்கு அலைய வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
வாக்குச் சாவடிக்கு ஒட்டுப் போட செல்லும் பொது மேற்கண்ட ஏதாவது ஒரு ஆவணம் இருந்தால் போதும். வாக்காளர் அட்டை தான் வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் இவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை என்றால், எந்த ஒரு ஆவணத்தையும் வைத்து ஒட்டுப் போட முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சென்ற 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் 4,35,56,184 பேர் வாக்களித்துள்ளனர்.
இதில் வெற்றி பெற்ற அதிமுக தனித்து வாங்கிய மொத்த வாக்குகள் ; 1,78,06,490 (40.88%)
எதிர் கட்சியான திமுக தனித்து வாங்கிய மொத்த வாக்குகள் 1,36,70,511 (31.39%)
கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்துப் பார்த்தால் கணக்கு சரியா இருக்கிறது. அப்புறம் என்ன ?
இங்கேதான் இருக்கு சூட்சுமம். இது வாக்களித்தவர்களை மட்டும் கணக்கில் கொண்டதாகும். வாக்களிக்காதவர்களையோ, வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்களையோ கணக்கில் கொண்டு தருவது இல்லை.
அவர்களையும் சேர்த்தோமேயானால்,
அதிமுக வாங்கிய சதவிகிதம் (1.78 கோடி / 6.5 கோடி) = 27.38%
திமுக வாங்கிய சதவிகிதம் (1.37 கோடி / 6.5 கோடி) = 21.07 % மட்டுமே.
அதாவது தமிழகத்தை ஆளும் வாய்ப்பு பெற்ற கட்சிக்கு மொத்த மக்களில் சுமார் கால்வாசியினர் தான் ஓட்டளித்துள்ளனர்! இதுவும் கூட பணம் கொடுத்து வாங்கிய ஓட்டுக்கள் மற்றும் கள்ள ஓட்டுக்களையும் சேர்த்தேயாகும். ஆக,இவர்கள் எட்டரைக் கோடி தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல!
இது எப்படி ஜனநாயகம் ஆகும் ? எங்கே போகிறது நம் ஜனநாயகம் ? சரி இதற்கு என்ன தீர்வு சொல்கிறீர்கள் இளமாறன்?
தற்போது“மவுனப் பெரும்பான்மை” (Silent Majority) என்ற சூழலில் நாம் இருக்கிறோம் ! அரசியல் அறிஞர் பிளாட்டோ கூறிய “நீங்கள் அரசின் மீதோ அல்லது அரசியல் அமைப்பின் மீதோ அக்கறையும், பங்களிப்பும் செய்யவில்லை என்றால் உங்களைவிடக் கேவலமானாவர்களால் நீங்கள் ஆளப்படுவீர்கள்” என்ற கருத்தின் ஆழத்தை நாம் உணர வேண்டும்.நம்மில் பெரும்பாலோர் அனைத்து அரசியல்வாதிகள் மீதும் நல்ல அபிப்ராயம் இல்லாமல் வெறுத்து ஒதுங்கும் சூழ்நிலையே உள்ளது. அதாவது பாதிக்கும் அதிகமான எந்த அரசியல் வாதியும் நேர்மை இல்லை, இவர்கள் யாருமே வேண்டாம் என்று தான் கருதுகின்றனர். ஆனால்,அதற்காக அவர்களை புறக்கணிக்க தங்களுக்குக் கிடைக்கும் வாக்கு என்ற ஆயுதத்தை கூட பயன்படுத்த மறுக்கிறார்கள்!
மக்கள் வாக்களிக்காமல் விடுவதன் காரணங்கள் என்னென்ன?
என் ஒரு ஓட்டு எதையும் மாற்றப் போவதில்லை, எல்லோரும் அயோக்கியர்கள் தான் நான் எதற்கு ஓட்டுப்போட வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தும் நிலைமை மாறப் போவதில்லை…இது போன்ற எண்ணங்கள் தான்! இந்தியத் தேர்தலில் சில தொகுதிகளில் சில நேரங்களில் வெறும் பத்து, இருபது வாக்கு வித்தியாசம் கூட வெற்றி, தோல்விகளைத் தீர்மானித்துள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Also read
இதற்கான தீர்வாக உங்களிடம் ஏதேனும் செயல்திட்டங்கள் உள்ளனவா?
இதற்கான தீர்வாக நான் இரண்டு விதமான செயல்திட்டங்களைக் கண்டறிந்துள்ளேன்..
- எல்லோரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை இந்தியா முழுவதும் ஏற்படுத்துவது.
- விழிப்புணர்வோடு நின்று விடாமல் அதற்கான வழிமுறைகளையும் ஏற்படுத்தித் தருவது.
இதில் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்திய வாக்காளர் பெருமன்றம் (Voters Association of India – www.votersassociation.org) என்ற அமைப்பினைத் தோற்றுவித்து, அதன் மூலம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து கூட்டம் நடத்தி வருகிறேன். வாக்களிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகத் தேர்தல் களத்தை மையப்படுத்தி “இணைய தலைமுறை” என்ற திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து வெளியிட்டுள்ளேன்.
அதே சமயம் எவர் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் வாக்களிக்கும் வசதி செய்து கொடுக்க ஒரு மென்பொருள் மாதிரி (Software Application Design) ஒன்றை நானே கண்டுபிடித்துள்ளேன். இதை முன்னாள் Deputy Election Commissioner திரு. அலோக் சுக்லா அவர்களை சந்தித்து விளக்கினேன். அதை வெகுவாகப் பாராட்டிய அவர்,இதை இந்தியாவில் அமல்படுத்த நீங்கள் இன்னும் தொலைதூரம் பயணிக்க வேண்டும் என்றார்.
இதிலும் கூட தப்பு செய்ய நினைப்பவர்களுக்கு வாய்ப்பு இருக்குமே..?
நான் தயாரித்த இந்த Software Application Design தற்போதைய EVM போல் இல்லை! இதை தவறாகப் பயன் படுத்தவோ அல்லது ஊடுருவல் (hack) செய்யவோ முடியாது. மிகவும் அதி நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ள (கை ரேகை, முக ஒற்றுமை, கண் ரேகை மற்றும் Block-Chain எனப்படும் சங்கேத பாதுகாப்பு முறை) ஒரு சிறந்த மென்பொருள் கருத்துருவாக்கம் கொண்டு கட்டமைத்துள்ளேன்.
இதைக் கொண்டு எங்காவது ஓட்டெடுப்பு நடத்தி, நிரூபித்துள்ளீர்களா?
இப்படிக் கேட்பவர்களுக்காக நான் உருவாக்கியது தான் www.SecuredVoting.com என்ற வலை தளம் மூலம் வாக்களிக்கும் செயலி. இந்தச் செயலி மூலம் எந்த ஒரு சங்கம், கூட்டமைப்பு, சமூகம், குடியிருப்போர் நலச் சங்கம் , வணிக நிறுவனங்கள் தங்களின் உறுப்பினர்களை மட்டும் வைத்து 3 விதமான வாக்குப் பதிவுகள் செய்து கொள்ள முடியும்.
அவை,
- பொதுத்தேர்தல் (தலைவர், துணை தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற பொறுப்புகளுக்கானது)
- நிறுவனதீர்மானங்கள் நிறைவேற்றும் வாக்குப் பதிவு (Corporate Resolutions Voting)
- பொதுக்கருத்துக் கணிப்பு வாக்களிப்பு (General Survey)
இந்த செயலியானது அரசு தேர்தலுக்கானது அல்ல. மாறாக அனைத்து விதமான சங்கங்களும் பயன் படுத்திக் கொள்ளலாம். அதிக பட்ச பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுள்ள இந்த செயலியைத் தவறாகப் பயன் படுத்தவே முடியாது.
உறுப்பினர்களின் மின்னஞ்சல் அல்லது அலைபேசி எண்ணிற்கு சங்கேத வாக்கியம் கூடிய சொடுக்கு (Click ink) அனுப்பி வைக்கப் படும். இது ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனி சங்கேத வாக்கியம் கொண்டிருக்கும். தேர்தல் நேரம் தவிர மற்ற நேரத்தில் பயன்படுத்த முடியாது. ஒரு முறை பயன்படுத்தி விட்டால் மீண்டும் பயன்படுத்த முடியாது. இரண்டாம் கட்ட பாதுகாப்பு அம்சமாக ஒரு முறை பயன்படும் கடவுச் சொல் (OTP) முறையும் செயல் படுத்தப்பட்டுள்ளது. வலை தளம் மூலம் வாக்களிக்க வாய்ப்பு இல்லாதவர்கள் வாக்குச் சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்கவும் வசதி செய்யப் பட்டுள்ளது. உறுப்பினர்கள் தவிர வேறு எவரும் எந்த வகையிலும் வாக்களிக்க முடியாது.
எல்லாம் சரி, இதை மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்களா?
நான் இந்த செயலியைக் கொண்டு ஆயிரத்திற்கும் அதிகமான தேர்தலை நடத்தி கொடுத்துள்ளேன். இந்த செயலியை இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இந்தோனேஷியா, சிங்கப்பூர், சீனா மற்றும் பெரும் பான்மையான ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் அதிக பட்சமாகப் பயன் படுத்தி வருகின்றனர்.
அதுவும் கொரோனா காலத்தில் மட்டுமே சுமார் 250 தேர்தல்களை பல்வேறு அமைப்புகளுக்காக நான் நடத்திக் கொடுத்துள்ளேன். தற்போது இந்த சேவையை உலகம் முழுக்க விரிவுபடுத்தியுள்ளேன். குறிப்பிட்ட சில நிறுவனங்களைச் சொல்ல வேண்டும் என்றால்,Crown Realtech Pvt Ltd,Saper Paper India Ltd,Saber Paper Boards India Ltd,Three-C Projects Pvt Ltd, Skyhigh Infra Projects Pvt Ltd, Greatech India Pvt Ltd, Greenworld ,Dalmia Health Care Ltd,Boulevard Projects Pvt Ltd, Universal Buildwell Pvt Ltd, One-World Travels Pvt Ltd, Newage Satellite Technologies Ltd, Net4 India Ltd, Ratandeep Infrastructure Pvt Ltd AVP Buildtech Pvt Ltd,Aastha Surgimed Pvt Ltd, HFCL Satellite Communication Ltd , Madurai Union Club – Madurai, Indian Radiological and Imaging Association, Delhi Chapter, New Delhi, Univeristy of Padjajaran – Indonesia’ ,HEMP Colorodo, Denver CO, USA’ ,INQAAHE – International Network for Quality Assurance Agency in Higher Education – Amsterdam, Lincoln Park CERT 2021 Board of Directors Election – USA, York Region Soccer Association, Concord, ON, Canada
மிகக் குறைந்த செலவில் உச்ச பட்ச பாதுகாப்புடன் எவர் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் வாக்களிக்கும் இந்த செயலியை வடிவமைத்து செயல் படுத்தி வருவதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
காகிதப் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப் படுவதால் மரங்களைக் காத்து இயற்கைக்குப் பேருதவியாக இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு.
உங்களுக்குத் தேர்தல் அரசியலில் நேரடி அனுபவம் உண்டா?
உண்டு! நான் கடந்த 2006 -ம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் தொகுதியில் லோக்பரித்திரான் என்ற கட்சியின் சார்பில் போட்டியிட்டேன். இது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு அனுபவம்.
அரசியலில் நிறையப் பாடம் கற்றுக் கொண்ட சிறப்பானதொரு தருணம் அது. தேர்தலில் நான் வெற்றி பெறவில்லை என்றாலும், களத்தில் நான் பெற்ற அனுபவங்கள் என் வாழ்வை முற்றிலும் மாற்றி அமைத்து விட்டது .
2006- ஆண்டு, திருவல்லிக்கேணியின் ஒரு சில பகுதிகள் சேப்பாக்கம் தொகுதியின் எல்லையின் கீழ் இருந்தது. அங்கு நிறைய வெளியூர் இளைஞர்கள் விடுதிகளில் (mansion) தங்கிப் படித்தும், வேலை செய்தும் வந்தனர். அவர்களுக்கு இந்த விடுதிகள் நிரந்தர முகவரி கிடையாது. அவர்களுக்கான வாக்குச் சீட்டு அவர்களின் சொந்த ஊரில் உள்ள முகவரியிலேயே இருந்தது. அவர்கள் அனைவரும் எனக்கு வாக்களிக்க விருப்பமும் ஆர்வமும் உள்ளது என்று கூறினர். ஆனால் வாக்குரிமை சொந்த ஊரில் இருந்ததால் எனக்கு வாக்களிக்க முடியவில்லை என்று மனம் வருந்தினார். மேலும் நான் ஒரு மென்பொருள் வல்லுநர் என்பதால் எவர் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் வாக்களிக்கும் வசதி செய்து தர முடியுமா என்று கேட்டார்கள். அவ்வாறு இருந்தால் கண்டிப்பாக எனக்கே வாக்களிப்பதாகவும் உறுதி கூறினார்கள்.
நான் வீதிகளில் வாக்கு சேகரிக்கச் சென்ற போது வாடகை வீட்டில் வசிப்போர் மட்டும் அல்லாது நிரந்தரமாகச் சொந்த வீட்டில் வசிப்பவர்களில் பலரும் வாக்காளர் அட்டை வாங்கவில்லை என்ற செய்தி என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்களில் பெரும்பான்மையானோர் எனக்கு வாக்களிக்க விரும்பிய போதும், அதற்கான அடிப்படைத் தகுதி இருந்த போதும், வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத காரணத்தால் அவர்களின் வாக்கை என்னால் பெற முடியவில்லை.
இதையெல்லாம் வைத்து நான் ஒரு சிறிய பகுப்பாய்வு செய்தபோது..அப்படியே படிப்படியாக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தேன். தற்போது தொழில்நுட்ப ரீதியாக ஒரு தீர்வை தந்துள்ளேன்.
பெ. இளந்திருமாறன்
+91 98844-64996
1 Comment