பாஜகவை அதிமுக உதறியதன் பின்னணி என்ன?

-சாவித்திரி கண்ணன்

‘பாம்புக்கு பால் வார்த்தாலும் அது கொத்தத் தான் செய்யும். பாஜகவுடன் நட்பு என்பது தற்கொலையை தவிர வேறில்லை.. என அதிமுக உணர்ந்திருந்தாலும், அதிமுக – பாஜக கூட்டணி முறிவு தற்காலிகமா? நிரந்தரமா? அதிமுகவை நிம்மதியாக விட்டுவைக்குமா பாஜக ? எப்படி இந்த முடிவுக்கு வந்தார்கள்..? எனப் பார்க்க வேண்டியுள்ளது;

கூட்டணி முறிவை ஒட்டுமொத்தக் கட்சித் தொண்டர்கள் எழுச்சியுடன் ஆதரிக்கிறார்கள்! ஆனால், தலைவர்கள், நிர்வாகிகள் சிலரிடம் தடுமாற்றங்கள் இருக்கின்றன. தொண்டர்களின் எழுச்சியை, வரவேற்பை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொள்ள முடியுமா? பாஜக பழிவாங்கும் படலத்தை தொடங்கினால் தாக்குபிடிக்க முடியுமா..? சிறைக்கு செல்லும் துணிச்சல் நம்மில் எத்தனை பேருக்கு உள்ளது..? என்ற கலக்கங்கள் உள்ளன!

இந்த கேள்விகளுக்கு விடை தேடும் முன்னர் நாம் பாஜகவின் அரசியல் கலாச்சாரத்தை புரிந்து கொண்டு முன்னேறுவது தான் சரியாக இருக்கும். பாஜகவானது தன்னைத் தவிர எல்லா கட்சிகளையும் அழிக்கும் நோக்கம் கொண்டது. ஒரே நாடு, ஒரே கட்சி என்ற இலக்கை முன்னெடுத்துச் செல்பவர்கள்! அந்த வகையில் தாங்கள் கூட்டணியில் சேர்ந்த எல்லா கட்சிகளையும் அவர்கள் தேய்பிறையாக்கி, தங்களை வளர்பிறையாக உருவாக்கிக் கொள்ளும் கலையை வெகு காலமாக செய்து வருகிறார்கள்!

யாருடனும் அவர்களால் நட்பு தொடர்ந்து பாராட்ட முடியாது! வெறுப்பு பேச்சுக்கள், வன்மத்தை தூண்டும் வார்த்தை பிரயோகங்கள் ஆகியவற்றின் மூலம் மட்டுமே கட்சியை வளர்ப்பவர்கள்! அந்த வகையில் திராவிட வெறுப்பு, திராவிடத்தின் மீதான வன்மத்தை வளர்த்தெடுப்பதே அவர்களின் முதல் இலக்கு! அந்த அஜெண்டாபடி தான் அண்ணாமலை பேசி வருகிறார். பெரியாரையும், அண்ணாவையும் இன்னபிற திராவிடத் தலைவர்களையும் மக்கள் மனதில் மோசமாக சித்தரிப்பதன் மூலமே இங்கு பாஜகவை வலுவாக காலூன்ற வைக்க வேண்டும் என்பது அவர்களின் மாற்றிக் கொள்ள முடியாத தீர்மானமாகும். இதற்கு அண்ணாமலை ஒரு கருவி! அவ்வளவே!

பிரச்சினை என்னவென்றால், அதிமுக தரும் ஐந்து அல்லது ஆறு பாராளுமன்ற தொகுதிகள் அவர்களை திருப்திபடுத்த முடியாது. காரணம், தரும் இடத்தில் அதிமுக இருப்பதையே பாஜக  தலைமையால் ஜீரணிக்க முடியவில்லை.

அதனால் தான் சென்ற முறை எடப்பாடி பழனிச்சாமியை அமித்ஷா அழைத்து பேசிய போது, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 15 தொகுதிகளை எடுத்துக் கொண்டு, மற்றுமுள்ள 25 தொகுதிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தந்துவிட வேண்டும். அந்த 25 தொகுதிகளில் இங்கிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு நாங்கள் பங்கு தருவோம் என்றது. இதை ஏற்காததால் தான் அண்ணாமலையை தாறுமாறாகப் பேச வைத்தனர்.

அதுமட்டுமின்றி, சிவசேனாவில் இருந்து ஏக்நாத் சிங்கை தூக்கியது போல, தேசியவாத காங்கிரஸில் இருந்து அஜித்பவாரை தூக்கியது போல, ஜக்கிய ஜனதா தளத்தில் இருந்து ஆர்.சி.பி.சிங்கை தூக்கியது போல அதிமுகவில் இருந்து வேலுமணி, தங்கமணி, தம்பிதுரை ஆகியோரை தூக்க பேரம் பேசி வருகிறது பாஜக தலைமை.

இதனால் தான் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூட்டி பாஜக கூட்டணி குறித்த கருத்துக்களை கேட்டறிகிறார். இதன் மூலம் இந்தக் கட்சியின் தொண்டர்கள், பெரும்பாலான நிர்வாகிகள் பாஜக உறவை விரும்பவில்லை. ஆகவே, தொண்டர்களின் விருப்பப்படி பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என அறிவித்து தன் தலைமையை கட்சிக்குள் கேள்வியில்லாமல் உறுதி செய்கிறார்.

அதாவது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகும் முடிவு என்பது அண்ணாமலையின் பேச்சால் எடுக்கப்பட்ட முடிவு மட்டுமல்ல, அதைவிட கட்சியில் தன் தலைமையை கேள்விக்கில்லாமல் உறுதிபடுத்துவதற்காக எடுக்கப்பட்ட முடிவு என்பதை நாம் உணரவேண்டும்.

பாஜகவுடன் உறவு இல்லை என கே.பி.முனுசாமி அறிவித்த போது அங்கிருந்த அத்தனை அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்த போது முகத்தில் எந்தவிதச் சலனமும் இன்றி எடப்பாடி அமைதி காத்தார். அதாவது, தான் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது கூட பாஜக தலைவர்களின் மனதை புண்படுத்தி, விளைவுகள் விபரீதமாகலாம் என அவர் நினைத்திருக்கக் கூடும்.

அதிமுகவை தனித்து நிற்க வைப்பதன் மூலம் தன் கூட்டணியில் உள்ள ஒ.பி.எஸ், தினகரன் அணிகளை அவர்களுக்கு எதிராகக் களம் இறக்கி அதிமுகவை தோற்கடிக்க எல்லா முன்னெடுப்புகளையும் செய்யும் பாஜக.

பீகாரில் தன் தோழமை கட்சித் தலைவராக இருந்த நிதிஸ்குமாரை பலவீனப்படுத்த பாஜகவின் நெருங்கிய கூட்டாளியான லோக் ஜன்சக்தி தலைவர் சிராக் பாஸ்வானின் வேட்பாளர்களை ஜனதா தளம் நிற்கும் தொகுதிகளில் நிற்க வைத்து, 30 தொகுதிகளில் ஜனதா தளத்தை தோற்க வைத்தது பாஜக என்பதை நாம் நினைவில் நிறுத்திப் பார்த்தால், அதிமுகவை பலவீனப்படுத்துவது என்ற ஒற்றை நோக்கத்தில் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை பாஜக.

எனவே, பாஜகவை எதிர்க்கத் துணிவற்ற நிலையில் தான் தற்போதும் அதிமுக தலைவர்கள் உள்ளனர். இந்தக் கூட்டணி விரிசலுக்கு பிறகு அதிமுக தலைவர்கள் மீது அமலாக்கத் துறை ரெய்டுகள் பாயலாம். அல்லது திமுகவிற்கு சிக்னல் கொடுத்தாலே கூட போதும் திமுக இதுவரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஊழல் விவகாரத்தில் அமைதி காத்த திமுக தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புத்துயிர் தந்துவிடும்.

அதிமுக பாஜகவுடன் உறவை முறித்ததற்கு நியாயப்படி வாழ்த்து சொல்லி வாழ்த்தி இருக்க வேண்டும் திமுக தலைமை!. பாஜக தமிழகத்தில் பலவீனப்படுவது நல்லது என்பது மட்டுமல்ல, சக திராவிடக் கட்சி அடிமைத் தளையை உதற முன் வந்ததையும் இணைத்தே இதற்கு வாழ்த்து சொல்லி இருக்கலாம் திமுக.

உண்மையில் அதிமுகவை போலவே திமுகவும் பாஜகவுக்கு அடிமையாகத் தான் உள்ளது. அதனால் தான் பேரறிஞர் அண்ணாவை இழிவுபடுத்தி அண்ணாமலை பேசிய விவகாரத்தில் திமுக தலைவர்கள் அதிமுக தலைவர்கள் அளவுக்கு சரியாக எதிர்வினை ஆற்றவில்லை. ஆர்.எஸ்.பாரதியை மட்டும் வழக்கம் போல அறிக்கை தர வைத்துவிட்டு, கட்சியின் மூத்த தலைவர்களை ‘கப்சிப்’ ஆக்கிவிட்டார் ஸ்டாலின்.

பாஜகவின் கட்டளைப்படி தான் 62 உறுப்பினர்களைக் கொண்ட அதிமுகவிற்கு சட்டமன்றத்தில் எதிர்கட்சித்துணைத் தலைவர் பதவி தராமல் பன்னீர் செல்வத்திற்கு தந்து அழகு பார்க்கிறார் ஸ்டாலின். இனி வருங்காலத்தில் பாஜகவின் கட்டளைப்படி அதிமுகவை ஒடுக்கும் வேலைகளை எந்தத் தடையும் இல்லாமல் செய்வார் ஸ்டாலின்.

பாஜக நினைத்தால் மீண்டும் அதிமுகவை கூட்டணிக்குள் இழுத்துக் கொள்ளக் கூடிய சூழல் தான் தற்போதைய அரசியலை கணிக்கும் போது நம்மால் வர முடிகிறது! அப்படி மீண்டும் பாஜகவுடன் அதிமுக சேருமானால் அது அடிமட்டத் தொண்டர்களும், ஆதரவாளர்களும் அதிமுக தலைமையிடம் இருந்து அன்னியப்பட்டு வேறு இயக்கத்தை நாடும் நிலைக்கு கொண்டு செல்லும். மீண்டும் பாஜகவுடன் கூட்டணியை புதுப்பிப்பது எடப்பாடி எடுக்கும் தற்கொலை முடிவுக்கு சமமாகும்.

அதே சமயம் அதிமுகவை பிளக்கவும், சிதைக்கவும் பாஜக சாம,பேத, தான தண்ட அணுகுமுறைகள் அத்தனையையும் கையாளும். எந்த மாதிரியான பிளாக்மெயில் அரசியலையும் ராஜதந்திரத்தின் பெயரால் கையாளத் தயங்காது. இதையெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதற்கு காலம் தான் விடை சொல்லும்.

பாஜக எதிர்ப்பை வெளிப்படையாக எடப்பாடி பழனிச்சாமி பேச முன் வரும் பட்சத்தில் அது திமுக கூட்டணியில் அதிர்வுகளை உருவாக்க வாய்ப்புண்டு. அப்போது தான் இழந்த அதிமுகவின் செல்வாக்கை மீட்கவும் முடியும். அதிமுக தன் தன்மானத்தை மீட்க கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை அது நழுவவிட்டால், பிறகு வரலாற்றில் அதற்கு வீழ்வதைத் தவிர விடிவே இல்லை.

திமுக அரசின் மறைமுக பாஜக ஆதரவு போக்குகளாலும், தொழிலாளர் விரோத செயல்பாடுகளாலும், கட்டுக் கடங்கா ஊழல், இயற்கை வளக் கொள்ளைகள் ஆகியவற்றால் அதிருப்தியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க, காங்கிரஸ், இஸ்லாமியக் கட்சிகள் அதிமுக அணிக்கு மாற வாய்ப்பு உள்ளது.

ஆனால், அந்த வாய்ப்பை பெறுவதற்கு அதிமுக தன்னை தகுதிபடுத்திக் கொள்ளுமா? எனத் தெரியவில்லை. ஏனெனில், பாஜகவை வீழ்த்த, அதிமுக தலைவர்களில் ஒரு சிலரேனும் தங்களை பலிகடாவாக்கியேனும் இந்த இயக்கத்தை கட்டிக் காக்க வேண்டும் என முன்வர வேண்டும். அப்படி ஒருவரைக் கூட அந்தக் கட்சியில் இது வரை பார்க்க முடியவில்லை என்பது தான் துர்அதிர்ஷ்டமாகும். ஆம், தானே சிறை செல்ல நேர்ந்தாலும் பரவாயில்லை என தனக்கு பதிலாக கட்சியைக் கட்டிக் காக்க அர்ப்பணிப்புள்ள சில நிர்வாகிகளை உருவாக்கி நிலை நிறுத்த வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி. இல்லையென்றால், அதிமுக அழிவதை யாராலும் தடுக்க முடியாது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time