”அரசாங்கத்தையே தட்டிக் கேட்பீர்களா? பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிப்பீர்களா? அநீதிகளை அரங்கேற்ற விடாமல் முட்டுக் கட்டை போடுவதா? எனில் உங்களை எங்களால் பழி வாங்க முடியும்! கெஞ்ச வைப்போம், கொந்தளிக்க வைப்போம், கையறு நிலையில் கதற வைப்போம் ..ஜாக்கிரதை” என நீதித் துறையோடு மோதும் பாஜக!
பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட எல்லா அமைப்புகளின் பொதுத் தன்மையையும் சிதைக்கும்படி தனக்கு சாதகமான நபர்களை உயர்பதவியில் அமர்த்தி, தான் நினைத்ததை சாதித்து வருகிறது. அதே போல, ‘நீதித் துறையிலும் தனக்கு சாதகமானவர்களை நீதிபதிகளாகக் கொண்டு வந்துவிட்டால், இனி கோர்ட்டாலும் தன்னை கட்டுபடுத்த வாய்ப்பில்லை. நாம் நினைத்ததை நடத்திக் கொண்டே போகலாம்’ என நினைக்கிறது.
அந்த வகையில் நீதிபதிகளின் நியமனங்கள் அரசியல் தலையீடுகள் இன்றி கொலிஜியம் முறையில் நடந்து கொண்டிருப்பதைக் குலைக்கும் வண்ணம் தேசிய நீதித் துறை நியமன ஆணையம் ஒன்றை ஏற்படுத்தினார்கள். ஆனால், அதை உச்ச நீதிமன்றம் நீதித் துறையில் அரசியல் தலையீடுகளை ஏற்க முடியாது எனக் கறாராக நிராகரித்துவிட்டது. அது முதலே கொலிஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளை நியமிப்பதில் அதீத காலதாமத்தை உருவாக்கி நீதித் துறையின் சமச்சீரான இயக்கத்திற்கு சவால் ஏற்படுத்தி வருகிறது பாஜக அரசு.
கொலிஜியம் என்பது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐவர் குழுவாகும். இவர்கள் தான் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை தொடர் கண்காணிப்பின் மூலமும், கள விசாரணையின் அடிப்படையிலும் நியமிக்கிறார்கள். அந்த வகையில் அவர்கள் பரிந்துரைத்த நீதிபதிகளை நியமிக்காமல் காலம் தாழ்த்துவது அல்லது பத்து பெயரை பரிந்துரைத்தால் அதில் குறிப்பிட்ட ஐந்தாறு நபர்களை மட்டும் நியமிப்பது, மற்றவர்களை தொங்களில் விட்டுவிடுவது, இதுமட்டுமின்றி இடமாற்றலைக் கூட உடனே நிறைவேற்றாமல் அலைக்கழிப்பது, கொலிஜியத்தை பொதுவெளியில் இழிவாகப் பேசுவது ஆகிய அணுகுமுறைகளை கடைபிடிக்கிறது பாஜக.
ஏனென்றால், பொது நலன் சார்ந்த நீதிபதிகள் பொறுப்புக்கு வந்துவிட்டால், தங்கள் அரசியல் அஜெண்டாக்களுக்கு தடையாக இருப்பார்கள். அரசை கேள்வி கேட்கிறார்கள். பாஜா சார்புள்ள வழக்கறிஞர்களை நீதிபதியாக்கிவிட்டால், நினைத்ததை சாதித்துக் கொண்டே போகலாம். மக்கள் நமது ஆட்சியின் செயல்பாடுகளை எதிர்த்து கோர்ட்டுக்கு போனாலும் பலன் இல்லாமல் செய்துவிடலாம் என்பதற்காகவே பல இம்சைகளை நீதித் துறைக்கு தருகிறது இந்த பாஜக அரசு. நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளை நிறைவேற்றாமல் துச்சமாக செயல்படுவதும் நடக்கிறது.
அந்த வகையில் கடந்த ஒன்பது ஆண்டுகளாகவே நீதித் துறையை நிம்மதி இழக்க செய்வதோடு, நீதிபதிகளை அரசிடம் எப்போதும் யாசகம் கேட்பவர்களாக, ”கேட்டாலும் தர மறுக்கிறீர்களே..” என புலம்ப வைப்பவர்களாக அலைக் கழிக்கிறது பாஜக அரசு. இதனால் நீதிபதிகளின் பணி இடங்கள் சுமார் 30 முதல் 39 சதவிகிதம் நிரப்பப்படாத நிலை தொடர்கிறது! நீதிமன்றங்கள் தோறும் லட்சக்கணக்கான வழக்குகள் ஆண்டுக் கணக்கில் தேங்கி உள்ளன.
அதுவும், குறிப்பாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் பொறுப்புக்கு வந்தது முதல் நிதித் துறையின் மரியாதையை விட்டுக் கொடுக்காதவராக இருப்பது பாஜக அரசுக்கு பெரும் கோபத்தை உருவாக்கி உள்ளது. சந்திர சூட் வளைந்து கொடுக்க மறுப்பவர் என முன்னமே தெரிய வந்ததால் தான், அவர் தலைமை நீதிபதியாக பதவி ஏற்கும் நிகழ்வைக் கூட, பிரதமர் மோடி புறக்கணித்தார். பொதுவாக தலைமை நீதிபதி நியமனத்தில் பிரதமர்கள் தவறாமல் கலந்து கொள்வது தான் மரபு. அந்த மரபையும் உடைத்தார் மோடி.!
கிரண் ரிஜ்ஜு என்ற ஒரு கிராதகப் பேர் வழியை சட்ட மந்திரியாக்கி, அவரது வரம்பு மீறிய பேச்சுக்களால் நீதித் துறையின் மாண்பையே நிலை குலைய வைத்தது பாஜக அரசு. சமீபத்தில் தான் அவர் மாற்றப்பட்டார். எனினும், புதிய சட்ட மந்திரி அர்ஜுன் ராம் மெஹ்வாலும் நீதிபதிகள் நியமனங்களில் இழுத்தடித்து கல்லூளி மங்கனாக கமுக்கம் காட்டுகிறார்.
இது தொடர்பாக நேற்றைய தினம் (செப்டம்பர் 26) பெங்களுர் வழக்கறிஞர்கள் சங்கமும், வழக்கறிஞர் பிரசாந்த் பூசனும் அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டதை விசாரித்த சஞ்சய் கிஷண் கவுல், சுதான்ஷு துலியா ஆகிய இருவர் பெஞ்ச் மத்திய அரசை கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டது.
”கொலிஜியம் பரிந்துரைகளை மூன்று அல்லது நான்கு வாரங்களுக்குள் நிறைவேற்றித் தர வேண்டும் என ஏரல் 2021 உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது. ஆனால், அந்தக் காலக்கெடுவைத் தாண்டி பத்து மாதங்களாக நீதிபதி நியமனங்களையும், இடமாற்றல்களையும் நிறுத்தி வைத்துள்ளீர்கள். இதனால் நீதிபதியாவதற்கு ஒப்புதல் தந்த வழக்கறிஞர்கள் சிலர் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ளும் நிலை தோன்றிவிடுகிறது.”
”இதனால் நல்ல சட்ட நிபுணர்கள், திறமையாளர்கள், நேர்மையாளர்களை நீதித் துறை இழக்க வேண்டிய சூழலை உருவாக்குகிறீர்கள். இது நீதித் துறையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக அதிகம் பேசலாம். ஆனால்,அட்டர்னி ஜெனரல் பதில் அளிக்க ஒரு வாரம் அவகாசம் கேட்டு உள்ளார். அதனால், எங்களைக் கட்டுப்படுத்திக் கொள்கிறோம். நாங்கள் அவகாசம் தருகிறோம். அதற்குள் பதில் வரவில்லை என்றால், பத்து நாட்களுக்கு ஒரு முறை கேள்வி எழுப்புவோம்…”என கறார்காட்டி நீதிபதிகள் பேசினர்.
சமீபத்தில் நீதிபதிகள் தொடர்பாக எழுப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் 2018 முதல் ஜுலை 2023 வரை உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட 604 நீதிபதிகளில் உயர்சாதியினர் 458, பிற்படுத்தப்பட்டவர்கள் 72, சிறுபான்மையினர் 34, மற்றவை பட்டியல் மற்றும் பழங்குடி உள்ளிட்ட இதர பிரிவினர் எனக் குறிப்பிட்டது கவனத்திற்கு உரியது. ஆக, மத்திய பாஜக அரசின் நீதிபதிகள் தேர்வு என்பது உயர்சாதி மற்றும் தங்களை ஆதரிக்கும் நபர்கள் என்பதாகவே உள்ளது என்பதை நாம் அறியலாம்.
சாதாரண மனிதனின் கடைசி புகலிடமாக உள்ள நீதித் துறையின் சார்பு நிலையற்ற அறப் பண்புகளை அழித்துவிட்டால் தான், தான் விரும்பும் அரசியலை இங்கு நிலை நாட்ட முடியும் என பாஜக அரசு மூர்க்கமாக செயல்பட்டு வருவது இதன் மூலம் தெரிய வருகிறது.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
ஜனநாயகத்தின் கடைசி புகலிடம் நீதிமன்றம். அதையும் தன் கைப்பாவையாக்கி விட்டால் தனது குறிக்கோளை பி.ஜே.பி. நிர்வாகத்தின் மூலம் எட்டிவிட்டது சுலபமாகும்.