சுவாமிநாதன் பசுமை புரட்சியாளரா? உண்மை என்ன?

-சாவித்திரி கண்ணன்

விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமி நாதன் மறைந்துவிட்டார். ஊடகங்களும், அரசியல் தலைவர்களும், வி.வி.ஐ.பிக்களும் அவருக்கு புகழாரம் சூட்டி வருகிறார்கள்! மறைந்த ஒருவரைப் பற்றி இழிவாகப் பேசுவது நமது மரபல்ல. ஆனால், அவரைப் பற்றிய பொய்யான பிம்பங்கள் கட்டமைக்கப் படுகின்றன. இதோ சில உண்மைகள்;

அவரைப்பற்றி கட்டமைக்கப்பட்ட ஒவ்வொரு பொய்யாக எடுத்துக் கொண்டு, அதற்கு மாற்றான உண்மைகளை விளக்குகிறேன்;

# இந்தியாவில் உணவு பஞ்சம் ஏற்பட்டது. ஆகவே, பசுமை புரட்சி இல்லாவிட்டால் பசி, பஞ்சம் தலைவிரித்து ஆடியிருக்கும்.

பசுமை புரட்சிக்கு முடிவெடுத்த நேரத்தில் நம் நாட்டில் உணவு உற்பத்தி 8.1 கோடி டன்களாக இருந்தது. நம் நாட்டின் தேவையோ 8.7 கோடி டன்கள். பற்றாகுறை என்பது 60 லட்சம் டன்களே! அதாவது பத்து சதவிகித பற்றாகுறை கூட இல்லை. ஆகவே தான், அன்றைய நிதி அமைச்சர் கிருஷ்ணமாச்சாரி, ”உணவு பற்றாகுறையை மிகைப்படுத்தாதீர்கள்” என்றார். ”ரசாயன உரங்களுக்கு பணத்தை செலவழித்தால் கஜானா தாங்காது. அதனால் வேண்டவே வேண்டாம்” என்றார்.

அவர் மட்டுமல்ல, அன்றைய நமது திட்டக் கமிஷன், ”உணவு பற்றாகுறையை சமாளிக்க சோசலிச கொள்கையின் படி கிராம பஞ்சாயத்துக்கள், கூட்டுறவு சங்கங்களை அழைத்துப் பேசி உணவு  உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கத்திடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் எனக் கேட்போம். அவர்களுக்கு உதவினாலே இந்தப் பற்றாகுறையை எளிதில் தீர்க்கலாம்” என யோசனை கூறியது. ஆனால், அன்றைய மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியமும், எம்.எஸ்.சுவாமி நாதனும் இந்த ஆக்கபூர்வமான யோசனைகளை புறக்கணித்து அமெரிக்க நிறுவனமான ராக்பெல்லரும், போர்டு பவுண்டேசனும் செய்த லாபிக்கு துணை போனார்கள்!

# எது எப்படியாயினும் அன்றைய உணவு பற்றாகுறையையும், பஞ்சத்தையும் போக்கியதற்கும், அபரிமிதமான உணவு உற்பத்திக்கும், இன்றைக்கு வெளிநாட்டிற்கே நாம் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கும் எம்.எஸ்.சுவாமிநாதன் தானே காரணம்!

அன்றைய உணவு பஞ்சத்திற்கான உண்மையான காரணங்கள் களையப்பட்டு இருந்தாலே அபரிமிதமான உற்பத்தி சாத்தியமாகி இருக்கும். முதலாவதாக அன்றைக்கு ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு உணவு தானியங்களை எடுத்துச் செல்வதற்கே பல தடைகள், கட்டுப்பாடுகள், லைசென்ஸ் முறைகள் இருந்தன. சுதந்திரமான வணிகம் அனுமதிக்கப்படாதது பற்றாக்குறைக்கு முக்கிய காரணம். அன்றைய விவசாயிகள் பல்லாண்டுகள் பண்ணை அடிமைத்தளையிலும், கொடூர வரிகளாலும் சிக்கி சீரழித்து விவசாயத்தை விட்டே வெளியேறி இருந்தனர். அவர்களை மீண்டும் விவசாயத்திற்கு இழுக்க முயற்சித்து இருக்க வேண்டும். நிலப் பங்கீட்டை செய்து சிறு, சிறுவிவசாய கூலிகளை நில உடமையாளர்களாக மாற்றி இருந்தாலே உற்பத்தி பல்கி பெருகி இருக்கும்.

மேற்குவங்கத்தில் நிலப்பகிரவை இடதுசாரி அரசு செய்ததினால் இன்று வரை இந்தியாவிலேயே அதிக நெல் உற்பத்தி செய்யும் மாநிலமாக அது திகழ்கிறது. இன்றைக்கு அபரிமிதமாக உற்பத்தி செய்து குடவுன்களில் பல லட்சம் டன்களை ஆண்டுக் கணக்கில் வைத்து சீரழித்து கீழே கொட்டுகிறார்கள். வெளிநாட்டுக்கு  ரசாயன உரங்களில் உற்பத்தியான உணவுப் பயிர்களை அனுப்பி பல முறை நிராகரிக்கப்பட்டு உள்ளோம். இயற்கை வேளாண் உணவு தானியங்களைத் தான் வெளிநாடுகள் அனுமதிக்கின்றன.

# விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனை ‘பசுமை புரட்சியின் தந்தை’என்கிறார்களே அது உண்மையா?

இது இந்தியாவில் தங்களின் வீரிய விதைகளையும், ரசாயன உரங்களையும் திணிக்க தங்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிய உலக அளவிலான கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டமைத்த பொய் பிம்பமாகும். வீரிய விதைகளையும், ரசாயன உரங்களையும் நம் நாட்டு மூத்த விஞ்ஞானிகளில்  மிகப் பெரும்பான்மையோர் எதிர்த்தனர்.

டாக்டர் ரிச்சார்யா என்ற மிக மூத்த விஞ்ஞானி தான் அன்றைய இந்திய வேளாண் கழகத்தின் தலைவராக இருந்தார். அவர் கடுமையாக எதிர்த்தார். அவர் நம் நாட்டு நெல் ரகங்களிலேயே அதிக விளைச்சலைத் தரும் குறுகிய கால நெல்ரகங்களை விவசாயிகளுக்கு தந்தாலே போதும். எதிர்பார்க்கும் விளைச்சலை பெறலாம் என உறுதியாக கூறினார். அவர் 17,000 வகை அரிய பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து வைத்திருந்தார். அவரை அந்தப் பதவியில் இருந்து தூக்கினார்கள். அவரது  பாரம்பரிய நெல் சேகரிப்பையும், ஆய்வுகளையும் அதிரடியாக அபகரித்து அன்னிய நாட்டுக்கு தந்தனர். இதற்கு சுவாமிநாதன் துணை போனார். உண்மையில் நாம் போற்றி வணங்க வேண்டிய விஞ்ஞானி டாக்டர் ரிச்சாரியா தான்!

பாரம்பரிய இய்ற்கை வேளாண்மையை காப்பாற்றப் போராடி பலியான மாபெரும் விஞ்ஞானி டாக்டர் ரிச்சாரியா!

இந்திய வேளாண் கழகத்தில் மூன்று தலைமைச் செயலாளர்களும் எதிர்த்தனர். அவர்களையும் வேலையில் இருந்து தூக்கிவிட்டு அமெரிக்க போர்டு பவுண்டேசனின் சிபாரிசில் ஒரு ஒற்றை நபரை செயலாளராக்கினார்கள்.

இந்திய வேளாண் விஞ்ஞானிகளில் ஒரு சிலர் இந்த பசுமைபுரட்சி பெருந்தீங்கு விளைவிக்கும் கூடவே கூடாது என எதிர்த்து போராடி தற்கொலை செய்த நிகழ்வுகளும் அரங்கேறின. அதிலும் குறிப்பாக 1972 ல் வினோத்கன்னா என்ற வேளாண் விஞ்ஞானி தன் தற்கொலைக்கு முன் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு கடிதம் எழுதி வைத்து தன்னை மாய்த்துக் கொண்டார். அதில்,

”ஐயா தாங்கள் பொய்கள், தவறான புள்ளி விபரங்கள், ஆகியவற்றால் மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களை உருவாக்குகிறீர்கள்! சுய சிந்தனை உள்ளவர்களையும், நாட்டுப்பற்று உள்ளவர்களையும் பலியாக்குகிறீர்கள்”

என எழுதி வைத்து உயிர் துறந்தார். அவரது தற்கொலை அன்றைய பாராளுமன்றத்திலும் அதிர்வலைகளை உருவாக்கியது.

இவ்வளவு எதிர்ப்புகளையும் மீறி, இந்திய மண்ணில் திணிக்கப்பட்ட வீரிய விதைகளாலும், அதை விளைவிக்க தேவைப்பட்ட ரசாயன உரங்களாலும், இயற்கைக்கு எதிரான பயிர்களால் பல்கி பெருகிய புதுப்புதுப் பூச்சிகளும், கேள்விப்பட்டிராத நோய்களும், அவற்றை சமாளிக்க அறிமுகமான பூச்சி கொல்லிகளும் நமது விவசாயத்தை பாழ்படுத்தி மக்கள் உடல் நலனை கெடுத்தன. மிக முக்கியமாக இன்றைக்கு இந்திய நிலங்களில் மூன்றில் ஒரு பங்கு நிலம் இந்த செயற்பாட்டால் மலடாகி விவசாயத்திற்கே தகுதியற்றதாகிவிட்டது. ஆகவே, நடந்தது பசுமை புரட்சியல்ல, பசுமை சூறையாடலே!

# இன்றைக்கு இந்திய விவசாயிகள் அனைவரும் ரசாயன உரத்தால் தான் விவசாயம் செய்கின்றனர். இயற்கை விவசாயத்தை ஏற்க மறுக்கின்றனர். இதில் இருந்து எம்.எஸ்.சுவாமிநாதன் தான் வெற்றிபெற்றுள்ளார் என்பது நிருபணமாகிறது அல்லவா?

ரசாயன உரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது நமது நாட்டு விவசாயிகள் அன்றைக்கு முற்ற முழுக்க அதை ஏற்க மறுத்தனர். அதை வெறுப்போடு பார்த்தனர். அவர்கள் மனம் பல நூற்றாண்டுகளாக மரபு வழியில் இயற்கையோடு பின்னி பிணைக்கப்பட்டு இருந்தது. அவர்களை ஏற்கச் செய்வதற்காக அன்றைய இளம் வேளாண் பட்டதாரி இளைஞர் படையை ரகசியமாக அனுப்பி இரவோடு இரவாக விவசாயிகளுக்கே தெரியாமல் அவர்களின் விளை நிலங்களில் யூரியாவை தெளித்துவிட்டு சிறிது காலம் சென்ற பின்பு, அந்தப் பயிர்கள் பச்சை பசேலென்று செழித்து வளர்ந்திருப்பதைக் காட்டி ‘தாங்கள் செய்த காரியத்தால் தான்’ எனக் கூறி, ”வங்களில் உரம் வாங்க மானியத்தில் கடன் கிடைக்கும்” என வலுயுறுத்தி சுமார் பத்து, பதினைந்து ஆண்டு போராட்டத்திற்கு பிறகு தான் ஏற்க வைக்க முடிந்தது! இன்றைக்கு இயற்கை உரத் தயாரிப்பையே மறந்து விவசாயிகள் ரசாயன உரங்களுக்கு பழக்கப்பட்டு ‘அடிக்ட்’ ஆகிவிட்டனர். எனவே, நடந்தது சூழ்ச்சி. வெற்றியல்ல. இன்று நிலங்கள் பாழ்பட்டு உள்ளன. ஆகவே, அந்த மாற்றத்தைப் போலவே, தற்போது இயற்கைக்கும் அவர்களை போராடித் தான் மாற்ற வேண்டும்.

ஆகவே. மறைந்த விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் இயற்கைக்கு மாறான வீரிய விதைகளையும், நிலத்திற்கும், உடல் நலத்திற்கும் கேடான ரசாயன மற்றும் பூச்சிக் கொல்லிகளையும் அன்னிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் திணிக்க துணை போனவர் என்பதே உண்மை.

இந்த ரசாயன உரங்களை, பூச்சி கொல்லி மருந்துகளை பல லட்சம் டன்கள் நாம் வெளி நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் இறக்குமதி செய்ய, உலக வங்கியிடமும், யு.எஸ்.ஏ.ஐ.டியிடமும் தொடர்ந்து கடன் வாங்கிய வகையில் 150 லட்சம் கோடி கடன்கார நாடாகி உள்ளது இந்தியா. முதலீடு இல்லாமல் பல நூற்றாண்டுகள் விவசாயம் செய்த விவசாயிகளையும் கடன்காரர்களாக்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கி, இது வரை சுமார் 30 லட்சம் விவசாயிகள் தற்கொலைக்கு காரணமாகி உள்ளார் விஞ்ஞானி சுவாமிநாதன்.

ஆக, கத்தியின்றி, ரத்தமின்றி படைகளின்றி, பீரங்களின்றி அரங்கேறிய வன்முறைக்கு தான் பசுமை புரட்சி என நாமகரணம் சூட்டி நம்மை ஏமாற்றி வருகிறது ஆதிக்க சமூகம்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time