வாச்சாத்தி தீர்ப்பு – வெற்றியா? தோல்வியா?

-சாவித்திரி கண்ணன்

அதிகார வர்க்க மூர்க்கத்தின் சாட்சியம் தான் வாச்சாத்தி சம்பவம்! வார்த்தைகளில் சொல்ல இயலாத துயரங்களை அனுபவித்த எளிய பழங்குடிகளுக்கான நீதி, 31 ஆண்டுகள் இழுத்தடிப்புக்கு பிறகே சாத்தியமாகியுள்ளது – இருதரப்பிலும் பலர் உயிருடன் இல்லாத நிலையில்! எனினும், இந்த கண்ணீர் வரலாற்றில் கிடைத்த படிப்பினைகள் பற்பல;

தருமபுரி மாவட்டம் அரூர் அரிகிலுள்ள சித்தேரி மலையடிவாரம் கிராமமே வாச்சாத்தி. மலைவாழ் பழங்குடி மக்கள் வாழும் இந்த கிராமம், தண்ணீர் பற்றாகுறையுள்ள இடம் என்பதால் மானாவாரி சிறுதானியப் பயிர்களே இவர்களின் வாழ்வாதாரமாகும். வறியவர்களிலும் வறியவர்களான இந்த மக்கள் நுகர்வு கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்கள்!

வாச்சாத்தியை ஒட்டி இருக்கும் சித்தேரி மலைப்பகுதி காடுகளில் அதிக அளவில் சந்தன மரங்கள் அன்றைய தினம் இருந்தன. அவை அவ்வப்போது காணாமல் போயின! அவை களவாடப்படுவதற்கு வாச்சாத்தி பழங்குடி மக்கள்தான் காரணம் என்று சொல்லி அடிக்கடி சோதனை என்ற பெயரில் வனத்துறையினர் இவர்களை வாட்டி வதைத்தனர்!

உண்மையில் அன்றைய அரசியல் செல்வக்குள்ள பிரமுகர்கள் தான் வனத்துறையில் உள்ள சில ஊழல் அதிகாரிகள் உதவியுடன் இந்த பெரும் பணம் புழங்கும் சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்தனர். அதே சமயம் இந்தப் பழியை சுமப்பதற்கான சில பலி ஆடுகள் அவர்களுக்கு தேவைப்பட்டது. அப்படி அவர்கள் தேர்ந்தெடுத்த கிராமமே வாச்சாத்தி.

சந்தன மரக் கடத்தலில் ஈடுபடுவதாக சொல்லப்பட்ட அவர்களின் வீடுகள் ஓலை வேயப்பட்ட காரைவீடுகளாக காட்சியளித்தன. கிழிந்த பாய்கள், கொஞ்சம் சிறுதானியங்கள், ஒரு சில அலுமினிய பாத்திரங்கள்… என ஒரு காய்கறிக்கான தள்ளுவண்டியில் மொத்த குடும்பத்தின் பொருள்களையும் வைக்கதக்க அளவிலான இந்த எளிய மக்களை பெரும் கிரிமினல்களாக சித்தரிக்க, அதிகார வர்க்கம் எடுத்த முயற்சி தான் வாச்சாத்தி சம்பவம்.

வாச்சாத்தி கிராமத்தின் எளிய நிலை

சரியாக சொல்வதென்றால், 1992 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி காலையில் ஆய்வுக்காக வாச்சாத்தி கிராமத்துக்குள் நுழைந்த அந்தப் பகுதி வனத்துறையினர் ஒரு விவசாயியின் களத்து மேட்டுக்கு அருகில் ஒரு சில சில சந்தன கட்டைகள் கிடந்ததை வைத்து, அந்த இடத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த நபரை அழைத்து விசாரணை செய்திருக்கிறார்கள். அந்த சந்தனக் கட்டையின் மதிப்பு தெரிந்திருந்தால் அதை அவர் எடுத்து பத்திரப்படுத்தி அல்லவா வைத்திருப்பார். அதனால், தனக்கு எந்த விபரமும் தெரியவில்லை எனக் கூறவும், ஆத்திரத்திற்கு உள்ளான வனத்துறை அதிகாரி செல்வராஜ் என்பவர், அந்த விவசாயியை கன்னம் பழுத்து சிவக்கும் அளவுக்கு கடுமையாகத் தாக்கிவிடுகிறார். இதை அறிந்த கிராம மக்கள் இதற்கு நியாயம் கேட்க, ”அதிகாரிகளை கேள்வி கேட்கும் அளவுக்கு உங்களுக்கு துணிச்சல் வந்துவிட்டதா?” என கூடுதலாக வன்முறையை வனத் துறையினர் பிரயோகிக்கவும், கிராமத்தினர் அதிகமாக இருந்ததால், திருப்பி அந்த அதிகாரியை அடித்து அனுப்பிவிட்டனர்.

இந்த ஒரு சம்பவம் அவர்கள் வாழ்க்கையையே சூறையாடி தலை கீழாக மாற்றப் போகிறது என்பதை பாவம் அவர்கள் ஒரு சிறிதும் அறிந்திருக்கவில்லை.

‘அதிகாரி மீது கைவைக்க துணிந்துவிட்ட அந்த கிராமத்தை விட்டு வைப்பதா? நம் அதிகாரத்தின் வலிமையை அவர்கள் வலிக்க, வலிக்க உணர்த்த வேண்டாவா?’ என திட்டமிட்டனர் வனத்துறையினர்!

ஜூன் 20 ஆம் தேதி அன்றைய மாலைப் பொழுதிலேயே 155 வனத்துறை அலுவலர்கள், 108 காவல்துறையினர், 6 வருவாய் அலுவலர்களை உள்ளடக்கிய  ஒரு பெரும் படை அந்த கிராமத்திற்குள் நுழைந்தது. பகை நாட்டுக்குள் நுழைந்த ராணுவ வீரர்களைப் போல, அவர்கள் கிராமத்தில் எதிர்ப்பட்டவர்களை எல்லாம் பயங்கர கொலை வெறியோடு தாக்கியுள்ளனர். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைந்து, அவர்களின் பொருட்கள் அனைத்தையும் சூறையாடி உள்ளனர்! அதே சமயம் அவர்கள் வளர்க்கும் ஆடுகள், கோழிகளைப் பிடித்து தாங்கள் கொண்டு வந்த லாரியில் எடுத்துக் கொண்டனர்! வீட்டு ஓலைகளை  பிய்த்துப் போட்டனர். சிறிது நேரத்திலேயே அந்த கிராமத்தை மயான பூமியாக்கும் வண்ணம் அழுகுரல்களால் அதிர வைத்தனர். மலை வாழ் மக்கள் அவர்களின் காலில் விழுந்து கெஞ்சிய போதும் அவர்களுக்கு இரக்கமே பிறக்கவில்லை.

அடுத்த கட்டமாக காவல்துறையும், வனத்துறையும் சேர்ந்த அந்த அதிகார கூட்டம் கிராமத்தில் தங்கள் கைகளில் மாட்டிய ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமியர்கள் என 217 பேரை  அங்கே இருந்த ஒரு சடை விரிந்த ஆலமரத்தின் கீழ் மொத்தமாக நிற்க வைத்து அடித்து நொறுக்கியுள்ளது.

அதன் பிறகு அந்த கூட்டத்தில் இருந்த 13 வயது சிறுமியில் இருந்து எட்டுமாத கர்ப்பிணி வரையிலான 18 பெண்களை மட்டும் தேர்ந்தெடுத்து, ”சந்தன மரம் இருக்கிறதா? காட்டுங்கள்” எனக் கூறியவாறு,  கொஞ்ச தூரம் தள்ளி இருந்த புதர் மண்டிய ஒரு ஏரிப் பகுதிக்கு மாட்டு வண்டியில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர். அதில் அங்கிருந்த ஆண்களை முற்றாகத் தவிர்த்து உள்ளனர். அங்கு வைத்து தான் வனத்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்த சிலர், 18 பெண்களையும் நிர்வாணப்படுத்தி, கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். பல மணி நேரங்களுக்கு கதறக் கதற அது நடத்தப்பட்டு உள்ளது. அப்படி நடந்த அந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு, தொடர் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

வனத்துறை மற்றும் காவல்துறையின் வன்கொடுமை வெறியாட்டத்திற்குப் பிறகு அந்த பதினெட்டு பெண்களும் ஆலமரத்தடிக்கு அழைத்து வரப்பட்ட போது, ஆடைகள் கிழிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு தலைமுடிகள் விரிந்த கோலத்தில், அழுதபடி வந்ததை பார்த்து, ஆலமரத்தடியில் பிணைக் கைதிகளாக நின்ற அவர்களது உறவினர்கள் கதிகலங்கித் துடித்திருக்கிறார்கள்.

அதற்குப் பிறகு பிணைக் கைதிகளாய் நின்ற அந்த மக்கள் அனைவரையும் அரூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற வனத்துறை அதிகாரிகள் அந்த மக்களை வனத்துறை அலுவலகத்தில் வைத்து, சாப்பிடக் கூட எதும் தராமல், தண்ணீர் கூடத் தராமல், மீண்டும் செய்த பாலியல் வன் கொடுமைகள் மனித குலமே வெட்கி தலை குனிய வேண்டிய  உச்சபட்ச வக்கிரங்களாகும்.

இந்த நிலையில் 1992 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் நாள் ‘தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்குவதற்காக மலைவாழ் மக்கள் சங்க பிரதிநிதிகள் பலர் ஒன்று கூடி சித்தேரி மலைப் பகுதியில் ஒரு மாநாட்டை நடத்திய போது, வாச்சாத்தி வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிலர் அதில் கலந்து கொண்டு, தங்களுக்கு நடந்த அநீதியை கண்ணீர் மல்க கூறிய போது, உண்மையில் மாநாட்டிற்கு வந்த அனைவரையும் அது உலுக்கிப் போட்டது.

மலைவாழ் மக்கள் சங்க அமைப்பின் தோழர்கள் பெ. சண்முகம், என். கிருஷ்ணமூர்த்தி, பாஷா ஜான் ஆகியோர், பாதிக்கப்பட்ட வாச்சாத்தி மக்களுக்காக அப்போது அரூரில் ஒரு கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தி முதன் முதலாக இந்த மாபெரும் அநீதியை வெளி உலகத்திற்கு சிறிய அளவிலேனும் கொண்டு வந்தனர். ஆர்ப்பாட்ட முடிவில் அவர்கள் அரூர் வட்டாட்சியரிடம் புகார் மனு கொடுத்த போது, பாவம் அவர்களுக்கு தெரியாது, அந்த அரூர் வட்டாட்சியரே பழங்குடி மக்களின் மீது தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்தவர் தான் என்பது!

வாச்சாத்தி மக்களுக்காக தமிழ்நாடு மலைவாழ் சங்கத்தினரும், சி,பி.எம்மும் நடத்திய ஆர்ப்பாட்டம்.

அந்தக் கொடூரம் அரங்கேறி 25 நாட்களுக்குப் பிறகுதான் மலைவாழ் சங்க கம்யூனிஸ்ட் தோழர்கள் கிராமத்துக்குள் சென்றுள்ளனர். ஊரே வெறிச்சோடி ஆள் நடமாட்டமின்றி இருந்துள்ளது. ஊரில் யாருமே இல்லை. வீடுகள் யாவும் சேதப்படுத்தப்பட்டு அவலமாய் காட்சி தந்துள்ளன! இவையே அங்கே ஒரு கொடூர தாண்டவம் நடந்திருப்பதன் சாட்சியானது.

ஒரு சந்தில், ஒரே ஒரு பெண் மட்டும் நடமாடியதைப் கண்டு ஆறுதல் அடைந்து விசாரித்த போது, அவர் சத்துணவு ஆயா என்பதை அறிந்தனர். அவர் மூலம் காட்டுக்குள் 25 நாட்களாக ஒளிந்திருந்த ஊர் மக்கள் சுமார் 40 பேரை அழைத்து பேசி, உண்மையை தெரிந்து கொண்டனர்.

கைதாகியுள்ள ஊர் மக்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அந்தப் பெண்களைப் பார்க்க தோழர்கள் சிறைக்குச் சென்றபோது, அங்கிருந்த நியாய உள்ளம் கொண்ட பெண் வார்டன் மனம் பொறுக்காமல் நடந்த கொடுமைகளை அவர்களிடம் விவரித்துள்ளார்.

அதன் பிறகு சிறையில் இருந்த 133 பாதிக்கப்பட்ட மக்களையும் பிணையில் எடுத்த மலைவாழ் மக்கள் சங்க அமைப்பினர், பிறகு வாச்சாத்தி மக்களுக்கான நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தை அயராது நடத்தி வந்தனர்.

மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதில் தன்னை இணைத்துக் கொண்டது. பிறகு கட்சியும், மலைவாழ் மக்கள் சங்கமும் இணைந்து 18 பெண்களின் பாலியல் வன்புணர்வுக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் மனு தருவது காவல்துறையிடம் புகார் தருவது போன்ற ஆரம்ப கட்ட நடவடிக்கைளை செய்துள்ளனர்.

ஆனால், அன்றைக்கு வனத்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் குற்றவளிகளுக்கு சாதகமாக, ”வாச்சாத்தி மக்கள் தான் வனத்துறையினர் மீது தாக்குதல் நடத்தினார்கள்” என்று அறிக்கை வெளியிட்டார். இதனால், இதில் மிகப் பெரிய தேக்க நிலை ஏற்பட்டது. ஆட்சியாளர்களே வனத்துறைக்கு ஆதரவாகச் செயல்பட்டதால், மலைவாழ் மக்கள் சங்க அமைப்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை பதிவு செய்தது.

அந்த காலகட்டத்தில் பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதி பத்மினி ஜேசுதுரை அவர்கள், ”மக்கள் பணியில் இருக்கும் அரசின் உயர் அதிகாரிகள் இதுபோன்ற செயல்களைச் செய்திருக்க வாய்ப்பில்லை” என்று சொல்லி மலைவாழ் மக்கள் சங்கத்தின் பொதுநல வழக்கை உரிய கவனம் தராமலே தள்ளுபடி செய்தது தான் இதில் நடந்த பெரும் கொடுமையாகும்.

பிறகு அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஏ. நல்லசிவன் அவர்கள் தன் பெயரில் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கை ஏற்றுக் கொண்ட உச்சநீதி மன்றம் உடனே விசாரிக்கும்படி 1992 செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இதையடுத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தென் மண்டல ஆணையர் பாமதி தலைமையிலான குழுவினர் வாச்சாத்தி கிராமத்தில் நேரடி விசாரணை நடத்தினார்கள். அதன் அடிப்படையில் விசாரணை அறிக்கை தயார் செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால்,  ‘இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்’ என்று வாச்சாத்தி மக்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டதால், பிப்ரவரி 1995 ல் வாச்சாத்தி வழக்கில் உயர்நீதி மன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

சிபிஐ விசாரணை அறிக்கையை ஏப்ரல் 1996-ல் உயர் நீதிமன்றத்திற்கு அளித்தது. இதன்படி வாச்சாத்தி வன்புணர்வு சம்பவத்தில் வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 269 பேர் மீது குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டது. சேலம் சிறை மைதானத்தில் அணி வகுப்பு நடத்தப்பட்ட முயன்ற போது, வனத் துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு தரமறுத்தனர். பிறகு ஐம்பது, ஐம்பது பேராக வரவழைக்கப்பட்டனர். சம்பவம் நடந்த நான்காண்டுகள் கடந்த நிலையில், குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிரமங்கள் இருந்தது. பிறகு அதே ஆண்டில் இந்த வழக்கின் விசாரணை கிருஷ்ணகிரி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

நீதிமன்றத்தில் துணிச்சலாக வந்து தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை பேசிய பெண்கள்

2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. ஒவ்வொரு முறையும் வழக்கிற்கு வந்து செல்ல போக்குவரத்திற்கான பணம் கூட இல்லாமல் பழங்குடியினர் தவித்த நிலையில், அந்த பொறுப்பை கம்யூனிஸ்ட் தோழர்கள் ஏற்றனர். நீண்ட காலம் நடந்த இந்த வழக்கில் குற்றவாளிகள் தரப்பு வழக்கை முடிந்தவரை இழுத்தடித்தனர்.  வனத்துறை, காவல்துறை அதிகாரிகள் விசாரணைகளுக்குச் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. ஆனாலும், பாதிக்கப்பட்ட வாச்சாத்தி மக்கள் தங்களின் அத்தனை வாழ்வாதாரப் பிரச்சனைக்கு மத்தியிலும் மிகுந்த நம்பிக்கையோடு நீதிக்கான போராட்டத்தில் தொடர்ந்து உறுதிகாட்டியது தான் இந்த வழக்கின் சிறப்பம்சமாகும்.

இப்படி பத்தொன்பது ஆண்டுக் காலம் அலைக்கழிக்கப்பட்ட இந்த வழக்கில் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி தீர்ப்பு வந்தது. ‘வாச்சாத்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேரும் குற்றவாளிகள்’ என்றும், ‘அனைவருக்கும் சிறைத் தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டிருந்தார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குமரகுரு. குற்றவாளிகளில் 12 பேருக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மீதமுள்ள அனைவருக்கும் அவர்கள் செய்த குற்றத்தின் அடிப்படையில் 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பு வெளியானபோது, குற்றவாளிகளில் 54 பேர் இறந்துவிட்டிருந்தனர். அதே போல பாதிப்புக்கு உள்ளானவர்களில் 20 பேர் நீதி கிடைக்காமலே மரணித்து இருந்தனர். மீதமுள்ள 215 பேர் மட்டுமாவது இந்தத் தீர்ப்பால் தண்டிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீன் பெற்று விட்டனர். அவர்களின் மேல்முறையீட்டு விசாரணை கடந்த 12 வருடங்களாக நடந்த  நிலையில், கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி வாச்சாத்தி கிராமத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஆறுமாதம் எடுத்துக் கொண்டு விரிவான தீர்ப்பை தந்துள்ளார்.

30 ஆண்டுகள் கடந்த நிலையில் வாச்சாத்திக்கு சென்ற நீதிபதி!

‘பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா பத்து லட்சம் தர உத்திரவிட்டு’ உள்ளார். சென்ற முறை 15,000 உத்திரவிட்ட போதே, அந்த சிறிய தொகையை விடுவிக்கவே மூன்று வருடம் அலைக்கழித்தது அரசு. அத்துடன் குற்றவாளிகள் உச்ச நீதிமன்றம் போகவிருப்பதால், இறுதி தீர்ப்புக்கும், நீதி நடைமுறைப்படுத்தப்படவும் இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டுமோ..? எளிய மக்களுக்கான நீதி என்பது, அரசு மற்றும் நீதித் துறையின் மெத்தன போக்குகள் மாறும் போதே  சாத்தியப்படும்.

அன்றைய ஜெயலலிதா ஆட்சி பழங்குடி மக்களுக்கு கருணை காட்டி இருந்தால் 31 ஆண்டுகால நெடிய போராட்டம் தேவைப்பட்டிருக்காது. மூன்றே ஆண்டுகளில் குற்றவாளிகள் தண்டனை பெற்று இருப்பர்! ஆட்சியாளர்களும், நிர்வாக அமைப்புகளும் குற்றவாளிகளுக்கு துணை போனாலும், நீதித் துறை மூலம் உண்மையை நிலை நாட்ட முடியும் என்பது வாச்சாத்தி சம்வத்தின்  முக்கிய படிப்பினையாகும். அத்துடன் எளிய பழங்குடிகளுக்கு இந்தப் போராட்டம் அதிகார வர்க்கத்தின் அநீதிகளை எதிர்த்து போராட முடியும் என்ற நம்பிக்கையை பெற்றுத் தந்துள்ளது.

இந்த வெற்றியை சாத்தியப்படுத்த தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், குறிப்பாக தோழர் பெ.சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நக்கீரன் இதழின் புனாய்வு செய்திகள், ஊதியம் பெறாமல் உழைத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், வைகை, இளங்கோ, சம்கிராஜ்,சுப்புராம் ஆகியோரின் அர்ப்பணிப்பு முக்கிய காரணமாகும்.

‘நீதி ஒரு நாள் நிச்சயம் வெல்லும்’ என்பது மகிழ்ச்சி அளித்தாலும், 2011 ஆம் ஆண்டு தீர்ப்பு வெளியானபோதே, குற்றவாளிகளில் 54 பேர் இறந்துவிட்டிருந்தனர். அதே போல பாதிப்புக்கு உள்ளானவர்களில் 20 பேர் நீதி கிடைக்காமலே மரணித்து இருந்தனர். 12 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிலைமை! தற்போது இன்னும் எத்தனை பேர் இறந்திருப்பரோ! இப்படி இருதரப்பிலும் சம்பந்தப்பட்ட பலர் இந்த 31 ஆண்டுகளில் மரணித்து விட்ட நிலையில், ‘காலம் கடந்த நீதி’ என்பது மறுக்கப்பட்ட நீதியாகாதா..?

ஒரு வகையில் இது வெற்றியும், தோல்வியும் கலந்தது என்று தான் தோன்றுகிறது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time